World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Dozens of civilians killed as Sri Lankan army continues its onslaught

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்கின்ற நிலையில் டசின்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்

By Sarath Kumara
7 February 2009

Back to screen version

இலங்கை பாதுகாப்புப் படைகள், வளர்ச்சிகண்டுவரும் சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தொடர்கின்றன. கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களால் கடந்த ஐந்து நாட்களுக்குள் டசினுக்கும் மேலான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட கால் மில்லியன் மக்கள் போதுமான உணவு, தங்குமிடம் அல்லது மருந்து இன்றி அந்தப் பிரதேசத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

செவ்வாய் கிழமை மாத்திரம் 52 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 80 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் அசோசியேடட் பிரஸ்ஸுக்குத் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வெளியில் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதாகத் தோன்றிய போதிலும், இலங்கை அரசாங்கம் யுத்தப் பிராந்தியங்களுக்கு பத்திரிகையாளர்களை அனுமதிக்காததால் செய்திகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கடைசியாக எஞ்சியுள்ள மருத்துவ வசதியான புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியும் ஞாயிற்றுக் கிழமை முதல் மீண்டும் மீண்டும் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளானதால் மூடப்பட்டது. வைஸ் குறிப்பிட்டதன் படி, 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக நடந்த ஆட்டிலறித் தாக்குதலால் அந்தப் பிரதேசம் பொடியாக்கப்பட்டதை அடுத்து புதன் கிழமை 15 ஐ.நா. அதிகாரிகளும் 81 குடும்ப உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

ஆஸ்பத்திரிக்கு சற்றே வெளியில் குளூஸ்டர் குண்டு விழுந்த செய்தியை பெற்றுக்கொண்டதாக வைஸ் தெரிவித்தார். இந்தக் குண்டுகளைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகும். குளூஸ்டர் குண்டுகளை வைத்திருப்பதை அல்லது பயன்படுத்தியதை உடனடியாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மறுத்தார். இப்போதைய நிலையில் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ன, காயமடைந்த சுமார் 500 சிவிலியன்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறினார். கடற்கரைக்கு அருகே புதுமலன் என்ற இடத்திற்கு புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இடம்மாற்றப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரைப் பெற்றுக்கொள்வது பெரும் பிரச்சினை என விஜேரட்ன தெரிவித்தார்.

புலிகள் பொது மக்களை அவர்களது விருப்பதற்கு எதிராக "மனிதக் கேடயங்களாக" வைத்திருப்பதாக அரசாங்கமும் இராணுவமும் குற்றஞ்சாட்டுகின்றன. எவ்வாறெனினும், அதே சமயம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பல்ல என இந்த முற்பகுதியில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏனைய பிரதேசங்களில் இடம்பெறுவது போலவே, இராணுவத்தின் இலக்கு தெளிவானதாகும்: அது மக்களை கிலிகொண்டு ஓடச் செய்து முழுப் பிரதேசத்தையும் சுதந்திரமாக தாக்குதல் நடத்தும் வலயமாக மாற்றுவதாகும்.

மக்கள் வெளியேறுவதை தடுப்பதாக புலிகளை விமர்சித்துள்ள அதே வேளை, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் பேச்சாளர் பிரட் அடம்ஸ் அரசாங்கத்தின் போக்கையும் கண்டனம் செய்துள்ளார். "தற்போதைய மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் நன்கு அறியும். தமது பாதுகாப்பில் அரசாங்கம் கவனமெடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கக் கூடாது என கூறுவதன் மூலம் அரசாங்கம் மோசமாக அலட்சியம் செய்கின்றது," என அவர் தெரிவித்தார்.

சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறவும் நிவாரண விநியோகங்கள் கிடைக்கச் செய்யவும் தற்காலிக மனிதாபிமான யுத்த நிறுத்தம் செய்து மனிதாபிமான வெளியேறும் வாசல்களை உருவாக்க சர்வதேச மன்னிப்புச் சபை இந்தவாரம் அழைப்பு விடுத்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெளியில் இருந்து கிடைக்கும் உதவியில் முழுமையாக தங்கியிருக்கின்றனர். கடைசியாக அந்தப் பிரதேசத்துக்கு ஜனவரி 29 அன்றுதான் பொருட்கள் போய் சேர்ந்தன.

சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் யொலன்டா போஸ்டர் தெரிவித்ததாவது: "வன்னியில் உள்ள சிவிலியன்களின் நிலைமை எற்றுக்கொள்ள முடியாததாகும். உயிரிழந்த உறவினர்களின் சடலங்களை எடுக்கக் கூட மக்களால் நகர முடியவில்லை, காயமடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரி இல்லை. கால் மில்லியன் மக்கள் தம் மீது ஷெல்கள் பொழிந்துகொண்டிருக்கும் நிலையில் போதுமான உணவு மற்றும் தங்குமிடம் இன்றி துன்பப்படுகின்றனர். மோதல்களில் இருந்து தப்பிக்கொள்ள முடிந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போதுமான ஆஸ்பத்திரி சிகிச்சை கிடைக்கவில்லை."

ஐ.நா. வின் உலக உணவுத் திட்டம், வன்னியில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்கடி குறித்து நேற்று எச்சரிக்கை விடுத்தது. உலக உணவுத் திட்ட தொடரணி வியாழக் கிழமை இப்பிரதேசத்துக்குள் நுழையவிருந்த போதிலும், தேவையான அனுமதியை வழங்க அரசாங்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இன்னுமொரு முறை முயற்சி செய்ய மேலும் ஒரு வாரமாகும் என அதன் பேச்சாளர் எமிலா கசெல்லா தெரிவித்தார். "எங்களிடம் மேலும் விநியோகிப்பதற்கு [பிரதேசத்துக்குள்] கையிருப்பு கிடையாது, மற்றும் தற்போதைய சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஊழியர்கள் ஒழிந்திருப்பது தேவையாக உள்ளது," என அவர் கூறினார்.

மனிதப் பேரவலம் குறித்து வன்னியில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்து கசிந்த மட்டுப்படுத்தப்பட்ட செய்திகள் தொடர்பாக சிங்கள அதிதீவிரவாதிகள் மூர்க்கத்தனமாக பிரதிபலித்தனர். அரசாங்கத்தின் பங்காளியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரை புலிகளின் அனுதாபி என குற்றஞ்சாட்டி அவரை வெளியேற்றுமாறு நேற்று கோரினார். நேற்று மாலை, ஆர்ப்பாட்டக்கார கும்பல் ஒன்று, செஞ்சிலுவைச் சங்க தலைமையகத்தின் மீது கற்களை எறிந்து இதே கோரிக்கையை விடுத்தது.

அமெரிக்கா போன்ற தனது சர்வதேச ஆதரவாளர்கள் உட்பட ஏனையவர்களும் யுத்த நிறுத்தத்துக்காக விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும் அரசாங்கம் நிராகரித்தது. இலங்கையில் சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதன் அனுசரணையாளர்களான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் வியாழனன்று புலிகளை சரணடையுமாறு கோரியதோடு சரணடைவதற்கான வழிமுறைகளை கலந்துரையாடுவதற்காக யுத்த நிறுத்தத்துக்கு உடன்படுமாறு அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுத்தன.

பாதுகாப்புச் செயாலளர் கோடாபய இராஜபக்ஷ மோதலை எந்தவிதத்திலும் நிறுத்த மறுத்தார். வியாழக்கிழமை ஐலண்ட் பத்திரிகைக்கு அவர் தெரிவித்ததாவது: "இது போன்ற கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது... ஆயுதங்களுடனும் உறுப்பினர்களுடனும் [புலிகளின்] நிபந்தனையற்று சரணடைவது வன்னி களமுனையில் தாக்குதல்களுக்கு முடிவைக் கொண்டுவராது."

பொதுமக்களை முழுமையாக அலட்சியம் செய்தவாறு இராஜபக்ஷ தெரிவித்ததாவது: "புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இப்போது சிக்கியுள்ள சுகயீனமுற்றுள்ள மற்றும் காயமடைந்துள்ளவர்களை அப்புறப்படுத்துவதற்காக இணைத் தலைமை நாடுகள் முன்வைக்கும் 'தாக்குதல் அற்ற' காலகட்டம் என சொல்லப்படுவது, பயங்கரவாதத்தை துடைத்துக் கட்டும் இலங்கையின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும்."

கடந்த சில நாட்களாக, விஸ்வமடு மற்றும் சாலை போன்ற புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்தது. முல்லைத் தீவுக்கு அருகில் அமைந்துள்ள சாலை, கடல் நடவடிக்கைகள் மற்றும் படகு விநியோகங்களுக்கு பயன்பட்ட கடற்புலிகளின் பிரதான தளமாக இருந்தது. புலிகளின் கடைசி விமான ஓடு பாதைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும் இராணுவம் கூறிக்கொள்கின்றது. கடும் மோதல்கள் நடப்பதாக தெரியவந்தாலும், இராணுவம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.

சிக்கியுள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் மோசமான விளைவுகளை கருத்தில் கொள்ளாது புலிகளை முழுமையாக அழிக்க இராணுவம் எண்ணுகின்றது என்பதை பாதுகாப்புச் செயலாளரின் கருத்து தெளிவுபடுத்துகின்றது. அப்பாவிப் பொதுமக்கள் பற்றிய அத்தகைய இரக்கமற்ற அலட்சியம், சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு யுத்தக் குற்றமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved