World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP campaigns in a Sri Lankan fishing village

ஒரு இலங்கை மீனவர் கிராமத்தில் சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரம்

By our correspondents
10 February 2009

Back to screen version

பெப்ருவரி 14 இலங்கை மாகாணத் தேர்தல்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) குழு ஒன்று வடமேற்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவாட்டத்தில் ஒரு ஒதுங்கிய மீனவர் கிராமமான உடப்புவிற்குச் சென்றிருந்தது. மத்திய மாகாணத்தில் உள்ள நுவாரேலியா மாவட்டத்திற்கும், புத்தளம் மாவாட்டத்திற்குமாக SEP இரு வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது; ஒவ்வொன்றிலும் 19 வேட்பாளர்கள் உள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கப் போரை கொள்கை அடிப்படையில் எதிர்த்து நிற்பதின் விளைவாக இக்கட்சி உடப்புவில் நன்கு அறியப்பட்டுள்ளது; அதேபோல் தீவின் தமிழ் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு எதிரான SEP பிரச்சாரத்தாலும் அது நன்கு அறியப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 15,000 பேர் ஆகும்; இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஏழை வம்சாவளியினர் ஆவர்.

உடப்புவை அடைவதற்கு கொழம்பு-புத்தளம் முக்கிய சாலையில், சிலாபத்திற்கு வடக்கே பட்டுலுவோயாவில் இருந்து ஒரு சிதைந்த 4 கி.மீ.தூரமுள்ள சாலை வழியே வரவேண்டும். சாலைக்கு இரு புறத்திலும் கைவிடப்பட்ட வயல்களும் இரால்மீன் பண்ணைகளும் உள்ளன; இங்கு கிராமப் பெண்கள் வேலை செய்வதைக் காண முடியும். இப்பகுதியில் இருக்கும் ஒரே போக்குவரத்து வசதி சிலாபத்திற்கும் உடப்புவிற்கும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்லும் பஸ் ஆகும்.

பெண்கள் நீரெடுத்துச் செல்லுதல்

உடப்பு ஒரு அடக்கமான கிராமம் ஆகும்; இதில் ஆண்டிமுனை, செல்வபுரம் மற்றும் ஆறு சிறு தொகுதிகள் அடங்கிய எட்டு பிரிவுகள் உண்டு. பெரும்பாலான மீனவர்கள் வறியவர்கள் ஆவர். அவர்களுடைய வீடுகள் மரச் சுவர்கள், ஓலைக் கூரை ஆகியவற்றைக் கொண்ட குடிசைகள் ஆகும். நாங்கள் சென்றிருந்தபோது பல வீடுகள் சாய்ந்து, சரிந்துவிடும் அபாயத்தில் இருந்தன. அவற்றில் சுகாதார வசதிகளோ, குடிநீர் வசதியோ கிடையாது. கிராமமக்கள் ஒரு டிராக்டரில் கொண்டுவரப்படும் குடிநீரை ஐந்து ரூபாய்க்கு 15 லிட்டர் என்ற கணக்கில் வாங்க வேண்டியுள்ளது. சிலர் தொலைதூரம் சென்று கிணற்றில் இருந்து நீரை வாளிகள் அல்லது பானைகளில் கொண்டுவருவர். ஆனால் கிடைக்கும் நீரோ உப்புத் தண்ணீராக இருக்கும்.

உள்நாட்டுப் போருக்கு அருகில் உள்ள பகுதிகளிலேயே உடப்பு இல்லாவிடினும்கூட, வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் அப்பூசல் சென்றடைந்துள்ளது. தமிழர்கள் என்ற முறையில் மீனவர்கள் இயல்பாகவே பாதுகாப்புப் பிரிவினரால் LTTE ஆதரவாளர்கள் போல் நடத்தப்பட்டு கடத்தல் தொடர்பான சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்களுடைய மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன; இதையொட்டி அவர்கள் வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளது. உள்ளூர் மக்கள் தொடர்ந்து போலீஸ், இராணுவ அதிகாரிகளால் கொடுமைக்கு ஆளாகின்றனர்; கிராமத்தில் பல முறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டில் பல கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர்--அநேகமாக இராணுவ ஆதரவிற்குட்பட்ட கொலை செய்யும் குழுக்கள் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது தீவு முழுவதும் "காணாமற்போய்விட்ட" நூற்றுக்கணக்கானவர்களில் சிலராகப் போயிருக்கவும் கூடும்.

மீனவர்கள் கடலுக்குப் பயணிக்கப் புறப்படுகின்றனர்

கிட்டத்தட்ட 4,000 குடும்பங்கள் தங்கள் வருமானத்திற்கு மீன்பிடித்தலை நம்பியுள்ளன. மிக வறிய மீனவர்கள் மரக் கட்டைகள்,கண்ணாடி இழை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சிறு படகு போன்ற தெப்பம் என்பதைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சிறிய கடற்படை முகாம் உடப்புவில் நிறுவப்பட்டுள்ளது; இது ரோந்து சுற்றுதலுக்கு ஒரு தளம் ஆகும். கடற்படையின் படகுகளுக்கு அருகே வருவதற்கு மீனவர்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளனர். கடலில் இருந்து இரவு 9 மணிக்குள் அவர்கள் திரும்பிவிட வேண்டும். சமீபத்தில் படகுச் சொந்தக்காரர்கள் மீது அடையாள அட்டை வாங்க வேண்டிய நிபந்தனை சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த உரிமத்தை இன்னும் 70 கி.மீ. வடக்கில் இருக்கும் கல்பிட்டிய கடற்படை முகாமில் இருந்து பெற வேண்டும். இந்த உரிமம் இல்லாமல் கடலுக்குப் போனால் அவர்கள் சரீரரீதியாக தாக்கப்படுவர்.

53 வயதான செல்வா கூறினார்: "ஜனாதிபதி போர் முடிந்துவிட்டது என்று கூறுகிறார். போருக்கு உரிய காரணம் இருக்கும் வரை அது எப்படி இப்பொழுதே முடிந்துவிடும்? இந்த நாட்டில் அமைதி வராது என்றுதான் நான் நினைக்கிறேன். நிலைமை இன்னும் மோசமாகப் போகக் கூடும். இந்த வெற்றிக்குப் பின்னர் வகுப்புவாத நலன்களைக் கொண்டுள்ள கூறுபாடுகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வந்து தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு முடிவு கட்டினால்தான் அமைதியும், வளமும் வரும்."

செல்வாவின் மருமகன் கடந்த மார்ச் மாதம் ஒரு வெள்ளை வாகனத்தில் வந்த ஆயுதமேந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார் --இந்த வாகனம் மரணம் செலுத்தும் குழுக்களின் அடையாள முத்திரை ஆகும். ஆனால் அவர் எப்படியோ தப்பி வந்துவிட்டார். தன்னுடைய உயிர் பறிபோகும் என்று அச்சப்பட்டு அவர் இந்தியாவிற்கு ஓடிச் சென்றுள்ளார். செல்வா தொடர்ந்தார்; "சமீபத்தில் சில மீனவர்கள் கடற்படை முகாமிற்கு அருகே சென்றபோது, அவர்களுடைய படகுகள் நிறுத்திவைக்கப்பட்டது; அவர்கள் பல மணி நேரம் மண்டியிட்டு நிற்க நேர்ந்தது; அனைவரும் பல முறை தண்ணீரில் முழுகி எடுக்கப்பட்டனர். மீன்பிடிக்கும் இடங்களில் கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் நாங்கள் மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடமுடியவில்லை."

லெட்சுமணன்

மற்றொரு மீனவரான லெட்சுமணன் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் நடக்கும் போருடன் உடப்பு நிலையை ஒப்பிட்டார். "சாதாரண பகுதியான இங்கு ஒரு சிறிய கடற்படை அதிகாரிகள் இருக்கும் இடத்தில் எங்களுக்கு எவ்வளவு தொந்திரவுகள்? அப்படியானால் ஒரு போர்ப்பகுதியில் ஏராளமான இராணுவத் துருப்புக்கள் போரிட்டுக் கொண்டு இருக்கும் பகுதியில் மக்களுக்கு எவ்வளவு அவதி இருக்கும்?'

தன்னுடைய குடிசைக்குள் ஒரு பெண்மணி தன்னுடைய ஒரு வயது மகனுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நாங்கள் அவரிடம் பேசினோம். அழுது கொண்டே அவர் விளக்கினார்: "கடந்த செப்டம்பர் மாதம் இருவர் வந்தனர், எங்கள் கதவைத் தட்டி என் கணவரை வெளியே அழைத்தனர். காற்சட்டையும் ஜாக்கெட்டுக்களும் அணிந்திருந்த அவர்கள் வேறு ஒருவர் வீட்டைப் பற்றிக் கேட்டனர். நானும் என்னுடைய கணவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். என்னை தீக்குச்சிகள் கொண்டுவருமாறு கூறினர். நான் உள்ளே சென்றபோது அவர்கள் சுடத் தொடங்கினர். நான் திரும்பிப் பார்த்தபோது என்னுடைய கணவர் தரையில் இறந்து விழுந்து கிடந்தார். உடனே தங்கள் மோட்டார் சைக்கிளில் ஒரு சோதனைச் சாவடிக்குச் சென்றுவிட்டனர்."

"இதைத் தொடர்ந்து போலீசார் என்னுடைய கணவரின் சடலத்தை மருத்துவ சோதனைக்கு எடுத்துச் சென்றனர். அதற்குப் பின் ஒன்றும் நடக்கவில்லை. நானும் என்னுடைய மகனும் வீடு வீடாக உணவிற்கு அலைகிறோம். எங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. போலீஸ், பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிற்கு தெரிந்துதான் என்னுடைய கணவர் கொல்லப்பட்டார்" என்று அவர் கூறினார்.

கிராமவாசிகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) பற்றியும் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிக் கட்சி (UNP) பற்றியும் பொதுவாக இகழ்வுடனும் கோபத்துடனும் உள்ளனர். இவர்களுடைய வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் வாக்குகள் பெறுவதற்கு வெற்று உறுதிமொழிகளுடன் மீண்டும் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர்.

UPFA வேட்பாளரான ரியஸ் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷ "வளர்ச்சித் திட்டங்களை" நடத்திவருவதாகவும் அதே நேரத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிராக"போரிட்டு வருவதாகவும் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளார். புத்தளத்தில் முக்கிய UNP வேட்பாளரான எல்.எம். அவுப்கான் ஒரு குழு உறுப்பினர் என்ற முறையில் கல்வி, போக்குவரத்து, மின்வசதி, சுகாதாரம், சுய வேலைவாய்ப்பு வசதிகள் ஆகியவற்றை இப்பகுதிக்கு கொண்டுவந்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆனால் கிராமவாசிகள் தங்களுக்கு எதுவும் வரவில்லை என்றுதான் கூறுகின்றனர். இந்த அரசியல் வாதிகளையே முதல் தடவையாக மூன்று ஆண்டுகளுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல்கள் நேரத்தில்தான் தாங்கள் பார்த்ததாகக் கூறுகின்றனர். 2006 வகுப்புவாத யுத்தத்தை ராஜபக்ஷ மறுபடியும் தொடக்கியதில் இருந்து இவர்களுடைய வாழ்க்கைத் தரங்கள் இன்னும் மோசமாகிவிட்டன.

SEP உறுப்பினர் கருணாநிதி கிராமவாசிகளிடம் பேசுதல்

உள்ளூர் மீனவவரும் SEP வேட்பாளருமான வி. கருணாநிதி உடப்புவில் மீனவர் குடும்பங்களில் அன்றாட வாழ்க்கை எப்படி என்று விளக்கினார்; "நேரம் இல்லாததாலும், பொருளாதாரச் சுமைகளினாலும் எங்கள் குடும்பங்கள் ஒரு நேரம்தான் சமையல் செய்கின்றன -- அரிசியும் ஒன்று அல்லது இரண்டு கறிகளும்; அதுதான் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எல்லாவற்றிற்கும் பயன்படுத்தப்படும். பலவித உணவுகளை எப்பொழுதாவதுதான் நாங்கள் உண்கிறோம். நாங்கள் பிடிக்கும் விலை உயர்ந்த மீன்களை எங்களுக்காக சமைப்பதில்லை. இவற்றை விற்று குறைந்த விலை மீன்களையே நாங்கள் உண்பதற்கு வாங்குகிறோம். பொதுவாக நாங்கள் மீனும் ஓரிரு மலிவான காய்கறிகளையும் சாப்பிடுகிறோம்."

"அதிகாலையிலேயே நாங்கள் 3 அல்லது 4 மணிக்குப் மீன்பிடிக்கப் புறப்பட்டுவிடுவோம். மீண்டும் நாங்கள் ஒன்பது மணி அளவிற்கு கரைக்கு வரும்போது எங்கள் மனைவிமார்கள் உதவிக்கு வருவர். மீன்களை அகற்றவும், வலையில் இருந்து தூசுகளை அகற்றவும் உதவுவர். அதன் பின்னர் வலைகளைச் சரி செய்து வைப்போம். சில நாட்கள் வருமானம் இருக்கும்; சில நாட்கள் ஏதும் இராது. வெள்ளிக்கிழமை எங்களுக்கு விடுமுறை தினம் ஆகும்.

"இந்த கிராமத்தில் இருந்து பலர், பெரும்பாலானவர்கள் பெண்கள், மற்ற பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. சில சமயம் அவர்கள் கிழக்கே அங்கு மீன்பிடிக்கும்போது கணவர்களுடன் செல்வர். முழு வாழ்வையும் கடலுக்கே அர்ப்பணிப்பதால் அவர்கள் குடும்பத்துடன் வெளியே செல்லுதல், கேளிக்கைச் சுற்றுலா போன்ற மகிழ்ச்சிகளை அனுபவித்ததில்லை."

மற்றொரு மீனவர் கூறினார்: "என்னிடம் படகு கிடையாது; எனவே பல படகுச் சொந்தக்காரர்களுக்காக நான் உழைக்கிறேன். பொதுவாக மீன்பிடிக்கும் காலத்தில் எனக்கு 250 முதல் 500 ரூபாய் கிடைக்கும் [அமெரிக்க $2.15 - $4.38]. அடிப்படை உணவுப் பொருட்களின் விலையோடு ஒப்பிடும்போது இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சிறிய அளவு பொருட்கள் வாங்கமுடியும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். கடலுக்குப் போனாலும் நாங்கள் தேசிய அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும்; இதைத்தவிர மீன்பிடிக்கும் அனுமதியையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அனுமதி பெறுவதற்கு பல நாட்கள் சம்பாத்தியம் இல்லாமல் காத்துக் கிடந்து பெற வேண்டும்."

மகளிர் மீன்களை காயவைத்தல்

போரினால் விளைந்துள்ள மனித பேரிடர் நெருக்கடியைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறினார்: வன்னியில் உள்ள தமிழ் மக்கள் நெருப்பில் இருந்து கொதிக்கும் தட்டில் விழுந்துள்ளனர். முன்பு UNP மற்றும் அதன் தலைவர் ரனில் விக்கிரமசிங்க சமாதானம் பற்றிப் பேசினர். இப்பொழுது அவர்களும் போருக்கு தெளிவாக ஆதரவு கொடுக்கின்றனர்."

தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் உடப்பு மீனவர்கள் தீவைக் கடந்து கிழக்குக் கரைக்கு, குறிப்பாக திருகோணமலைக்கு மீன்பிடிக்கச் செல்லுவர். அங்கு ஆறு மாத காலம் தற்காலிக கூரைக் குடிசைகளில் வாழ்வர். போர் தீவிரமாகியுள்ளதால் அவர்கள் கிழக்கே செல்ல பல தடைகளைப் பெருகிய முறையில் காண்கின்றனர். இப்பொழுது கடலில் இருந்து ஐந்து மைல் தள்ளி மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வரம்பை கடந்தால், கடற்படை அவர்களைச் சுட்டுக் கொல்லக்கூடும்.

ஒரு இளவயது மீனவர் பிரச்சினைகளைப் பற்றி விவரித்தார்; "திருகோணமலைக்குச் செல்வதற்கு எங்களுக்கு 30,000 முதல் 40,000 வரை தேவைப்படும் [அமெரிக்க $263 -350]. மீன்பிடிக்கத் தேவையானவை அனைத்தையும், உணவிற்காகவும் லாரியில் எடுத்துச் செல்லவும் வேண்டும். ஒரு படகுச் சொந்தக்காரருக்காக வேலை செய்தால் அவருக்கு 20,000 ரூபாய்கள் முன்பணம் கொடுக்க வேண்டும். கடன்களை எல்லாம் கொடுத்த பின்னர் குடும்பத்திற்கு மீதியைக் கொடுத்துவிட்டு பழையபடி புறப்படுவோம். ஆறு மாத காலத்திற்கு அதை வைத்து அவர்கள் வாழவேண்டும்."

உடப்புவில் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் குறைவு; மூன்று பள்ளிகளும் ஒரு மருத்துவமனையும், அரசாங்கம் அல்லாத அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன. பல மாணவர்களும் பணம் இல்லாத காரணத்தால் சாதாரண அளவு கூட படிக்காமல் படிப்பை விட்டுவிட நேரிடுகிறது.

ஒரு தந்தை விளக்கினார்; "மாணவர்கள் வீட்டில் இருந்து நீர் எடுத்துச் செல்ல வேண்டும்; பள்ளியில் நீர் வசதி கிடையாது. ஆண்டு ஒன்றுக்கு 450 ரூபாய் பள்ளிக் கட்டணமாகக் கொடுக்கிறோம். அரசாங்கம் தானே முன்வந்து கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காததால் பெற்றோர்களே பணத்தை வசூல் செய்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் மருத்துவ மனையில் ஒரு டாக்டர்தான் உள்ளார். மீன்பிடிக்கும்போது விபத்திற்கு உள்ளான ஒரு நபரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம் டாக்டர் அங்கு இல்லை. சிலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் அந்த மீனவர் இறந்துவிட்டார்."

ஒரு வெளிப்புறக் கூட்டத்தில் கிராமவாசிகள்

SEP குழு இரண்டு நாட்கள் உடப்புவில் பிரச்சாரம் செய்தது; அதன் பின் பெப்ருவரி 6ம் தேதி ஒரு வெளிப்புறக் கூட்டத்தை நடத்தியது. பேச்சாளர்களைச் சுற்றி கிட்டத்தட்ட 50 பேர் கூடினர்; இன்னும் பல நூறு பேர் தொலைவில் இருந்து கேட்ட வண்ணம் நின்றிருந்தனர்; மிக அருகில் வந்தால் SEP உடன் அடையாளம் காணப்படலாம் என்ற அச்சம் கொண்டிருந்தனர். டபுள்யூ ஏ சுனில், வி. கருணாநிதி, கபிலா பெர்னான்டஸ், ஏ. சாந்த குமார் --அனைவரும் SEP வேட்பாளர்கள்-- கூட்டத்தில் பேசினர். சிங்களப் பேச்சாளர்களின் உரை தமிழாக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டு நடந்த பல கொலைகள் கடத்தல்கள் பற்றிப் பேசும் தைரியம் இருந்ததற்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் குரல் கொடுத்தார். இவர்களுடைய உரைகள் கணிசமான விவாதத்தைத் தூண்டின; பல மக்கள் இது ஒன்றுதான் போரைப் பற்றியும் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமை பற்றியும் உண்மையைக் கூறும் கட்சி என்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved