World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP campaigns in Puttalam

புத்தளத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்கள்

By W. A. Sunil
11 February 2009

Back to screen version

பெப்ருவரி 14ம் தேதி மாநிலத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக SEP வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சில நாட்களை கொழும்பிற்கு வடக்கே இருக்கும் புத்தளம் மாவட்டத்திலுள்ள தொடுவாவா மற்றும் இரனவிலா கிராமங்களில் கழித்தனர். இந்த பிராந்தியத்தில், கட்சி 19 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலைக் கொண்டுள்ளது; மத்திய மாகாணத்தில் நுவாரா எலியா மாவட்டத்தில் மற்றும் ஒரு 19 பேர் அடங்கிய பட்டியலைக் கொண்டுள்ளது.

இலங்கையில் உள்ள மிக வறிய மாவட்டங்களில் புத்தளமும் ஒன்றாகும்; இங்கு அடிப்படை வசதிகளும், பணிகளும் கூட கிடையாது. தொடுவாவா மற்றும் இரனவிலா ஆகியவை கொழும்பில் இருந்து 65 கி.மீ. தொலைவில்தான் உள்ளன; ஆனால் அங்கு செல்வதற்கு அரசாங்க மற்றும் தனியார் பஸ்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பிடிக்கும்.

தண்ணீர் என்பது இங்கு பெரிய பிரச்சினை ஆகும்; ஏனெனில் குழாய் நீர்த்திட்டம் இல்லை. சில குடியிருப்பவர்கள் தங்கள் நிலத்தில் கிணறுகளை வெட்டியுள்ளனர்; ஆனால் நீரின் தரம் மிக மோசமானதாகும். வடக்கு தொடுவாவாவில் கிட்டத்தட்ட 150 வீடுகளில் குடி தண்ணிரே கிடையாது; மக்கள் குடிநீருக்காக பெரும் தொலைவு அலைய வேண்டியுள்ளது.

இப்பகுதி முழுவதிலும் ஒரே ஒரு பாடசாலைதான் உள்ளது. பல்கலைக் கழக நுழைவு தரத்திற்கான உயர்தர வகுப்புக்கள் உள்ளன; ஆனால் இது கலைத்துறை பாடங்களில்தான். இப்பொழுது பள்ளியில் 14 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதை மாணவர்கள் SEP க்குச் சுட்டிக்காட்டினர். சிலாபத்தில் உள்ள அடிப்படை மருத்துவ மனை இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது; ஆனால் சற்றே கடுமையான நோய்கள் கவனிப்பிற்கு, நோயாளிகள் இன்னும் தொலைதூரம் செல்ல வேண்டும்.

LTTE க்கு எதிரான அரசாங்கத்தின் வகுப்புவாதப் போருக்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பு நன்கு அறியப்பட்டதுதான். கட்சி உறுப்பினர்கள் இப்பகுதியில் உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை பாதுகாப்பதற்கு போராடியதிலும் மக்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம், அடக்குமுறை ஆகியவற்றை எதிர்ப்பதிலும் குறிப்பாக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இயக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவவதில் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் ஆவர்.

புத்தளத்தில் SEP வேட்பாளர்கள் பட்டியலில் முதலில் இருக்கும் நிஹால் கீக்கியான்கே இப்பகுதியில் வசிக்கிறார். அவருடைய சகோதரர் 1989ல் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) அதன் போர் ஆதரவுக் கொள்கையை பாசிசப் பிரச்சாரத்தை எதிர்த்தவர்களை படுகொலை செய்யும் குழுக்கள் மூலம் கொன்ற மூவரில் ஒருவர் ஆவார். நூற்றுக்கணக்கான இளைஞர்களும் உள்ளூர் மீனவர்களும் JVP அச்சுறுத்தல்களை மீறி அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு மீனவர் வலைகளைத் தயார் செய்கிறார்

LTTE யை இராணுவம் தோற்கடித்துவிட்டால் அது அமைதியையும் வளமையையும் கொண்டுவந்துவிடும் என்னும் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷவின் கூற்றுக்களுக்கு உள்ளூர் மீனவர்களிடையே பரந்த சந்தேகமும் எதிர்ப்பும்தான் உள்ளது என்பதை SEP பிரச்சாரகர்கள் கண்டனர். இப்போர், மீன்பிடிக்கும் திறனில் கடுமையான தடைகளைக் கொண்டு வந்துள்ளதுடன் உயர்ந்துவரும் பணவீக்கம், பணிகள் இல்லாமை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இடர்பாடுகளளையும் அதிகரித்துள்ளது.

WSWS இடம் பேசிய ஒரு மீனவர் அரசாங்கத்தின் அறிவிப்புக்களையும் உறுதிமொழிகளையும் வெளிப்படையாக நிராகரித்தார். "கிழக்கில் என்ன நடந்தது என்று பாருங்கள். அரசாங்கம் கிழக்கை விடுவித்துவிட்டதாக அறிவித்தது. ஆனால் இப்பொழுது அது அரசாங்கத்தின் ஆதரவுடன் பிள்ளையன் குழுவினால் ஆளப்படுகிறது [அதாவது இழிபுகழ்பெற்ற துணை இராணுவக் குழு ஒன்று]. வடக்கு கைப்பற்றப்பட்ட பின்னரும் இதுதான் அங்கும் நடைபெறும். தமிழ் அல்லது சிங்கள மக்களுக்கு ஜனநாயகமோ அமைதியோ கிட்டாது" என்று அவர் கூறினார்.

"போருக்கு முன்பு நாங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மீன்பிடிக்கச் செல்வதுண்டு. அப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் தெற்கே வருவர். எங்களிடையே நெருக்கமான உறவுகள் இருந்தன. இப்பொழுது அவ்வாறு செய்ய இயலாது. ஒரு புறம் கடற்படையினாலும் மற்றொரு புறம் LTTE யினாலும் மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்."

இவருடைய மனைவியும் சேர்ந்து கொண்டார்; அடிப்படைப் பொருட்களான அரிசி போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டது என்று விளக்கினார். ஒரு கிலோ சம்பா அரிசி 50 ரூபாயாகிவிட்டது [40 அமெரிக்க சென்ட்டுகள்]; கடந்த வாரம் இது 70 ரூபாயாக இருந்தது, இந்த வாரம் 75 ரூபாயாகிவிட்டது. பல கிராமவாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறு பொதுநல உதவித் தொகைகளை கூட அரசாங்கம் அவர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர் எனக் காரணம் காட்டி குறைத்துவிட்டது பற்றி அவர் கோபம் காட்டினார். அது உண்மைல்ல என்றும் அவர் கூறினார்.

"ஒரு தேர்தல் நெருங்கும்போது, அரசியல்வாதிகள் ஒரு மீன்பிடி வசதி நிலையம் கட்டுவதாக உறுதிமொழி கொடுக்கின்றனர்; இப்பகுதிக்கு அது மிகவும் தேவையாகும். JVP ஐச் சேர்ந்த சந்திரசேனா விஜசிங்கே மீன்துறை மந்திரியாக இருந்தபோது, அவர் அது கட்டப்படும் என்று உறுதியளித்தார். நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவும் அதே உறுதிமொழி கொடுத்தார்; ஆனால் இவற்றினால் பலன் ஏதும் விளையவில்லை. எதிர்த்தரப்பு ஐக்கிய தேசிய கட்சியும் அவர்கள் பதவியில் இருந்தபோது இதைத்தான் செய்தனர். இக்கட்சிகள் எதையும் நாங்கள் இப்போது நம்புவதில்லை."

மற்றொரு மீனவர் ஜூட் போர் மக்களுடைய வாழ்வைப் பல விதங்களிலும் பாதித்துவிட்டதாக விவரித்தார். "போருக்கு முன்பு எங்கள் பகுதியில் இருந்து பலர் வடக்கு, கிழக்கில் இருக்கும் குளங்களில் மீன் பிடிப்பர். 1983ல் கிளிநொச்சியில் நான் மீன்பிடித்துள்ளேன். அப்பொழுது நாங்கள் தமிழ்மக்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல்தான் வசித்தவந்தோம். எனக்கே ஒரு தமிழ்ப் பெண்மீது காதல் வந்தது. மொழி என்பது எங்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் போர் தொடங்கிய பின், நாங்கள் அங்கு செல்ல முடியவில்லை.

"இப்போர் ஒன்றும் முடியும் என்று நான் நினைக்கவில்லை; ஏனெனில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் இவ்விதத்தில் தீர்க்கப்பட முடியாதவை. தமிழர்கள் அனைவரும் "புலிகள்" (LTTE ) என்று அழைக்கப்படுவதை நான் ஏற்கவில்லை. அவர்களும் நம் மக்கள்தான். சிங்கள, தமிழ் இளைஞர்கள் இப்பொழுது ஒருவரோடு ஒருவர் போரிடுகின்றனர். இப்போர் நமக்குத் தேவையில்லை."

"பல அநீதிகள் தமிழ் மக்களுக்கு நடந்துவிட்டன. சிங்களம் ஒன்றுதான் அரசாங்க மொழி, பெளத்தம் ஒன்றுதான் நாட்டு சமயம் என்று மக்களைப் பிரிக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பெளத்தர்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் இடையே ஒரு பூசல் வந்தது. இவை ஆட்சியாளர்களுக்குத்தான் உதவும்."

அந்தோனி (வலதுபுறம்) மற்றும் அனில் WSWS தேர்தல் குழுவுடன் பேசுவது

35 வயதான அந்தோனி தொடுவாவாவில் ஒரு மீன்பிடிக்கும் தொழிலாளியாக உள்ளார்; இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்வை சுருக்கமாக அவர் உரைத்தார்; "என்னுடைய குழந்தைப் பிராயத்தில் இருந்து இவ்வேலையைச் செய்து வருகிறேன். அதாவது 14 வயலில் இருந்து. இப்பொழுது என்னுடைய குடும்பத்திற்கு தேவையான பணத்தைச் சம்பாதிப்பது கடினமாக உள்ளது. கடலில் மூன்று வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை தங்க வேண்டியிருக்கும். போதுமான மீன்கள் பிடிக்கவில்லை என்றால் இன்னும் சற்று கூடுதலான காலம் இருப்போம்."

"படகுச் சொந்தக்காரர் விற்பனையில் (பிடித்த மீன்கள்) படகு வாடகைக் கட்டணம், பராமரிப்புச் செலவுகளுக்காக 10 சதவிகிதம் எடுத்துக் கொள்ளுவார். இதன் பின் எரிபொருள், உணவு, ஐஸ், மீன்களை சந்தைக்கு எடுத்துச் -செல்லும் வண்டி வாடகை போன்றவை உள்ளன. எஞ்சியிருப்பதில் அவர் பாதி எடுத்துக் கொள்ளுகிறார். மீதி இருப்பது குழுவில் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ளப்படும். ஒரு பெரிய படகில் ஐந்து தொழிலாளர்கள் இருப்பர். பலநேரமும் 10,000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் கிடைக்கும் (அமெரிக்க $88); அபூர்வமாக 15,000 முதல் 20,000 வரை ஒரு மாதத்தில் கிடைக்கும். மீன்கள் கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு ஒன்றும் கிடையாது. அது எங்களை நிரந்தரமாக முதலாளிகளிடம் (வணிகர்களிடம்) கடனில் ஆழ்த்திவிடும். அடுத்த முறை நாங்கள் மீன்பிடித்து வரும்போது இரக்கமில்லாமல் அனைத்து பணமும் அவரால் எடுத்தக் கொள்ளப்பட்டுவிடும்."

ஒரு படகுக் குழுவின் தலைவரான பாட்ரிக் விளக்கினார்: "இப்பொழுதுள்ள விதிமுறைகளின் கீழ் மீன்பிடித்தல் கடினமாகும். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை மீன்கள் கடலுக்கு அருகே இருக்கும். ஆனால் கடற்படையினர் பெரிய படகுகளை அப்பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. பலநேரமும் இந்திய கடற்படையினரால் இந்திய நீர்ப்பகுதிக்கு வந்துவிட்டதாக மீனவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். கடந்த செப்டம்பரில் இருந்து பெப்ருவரி வரை கிட்டத்ட்ட 200 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அரசாங்கம் சர்வதேச நீர்ப்பகுதியுடன் நின்றுவிடுமாறு கூறுகிறது. ஆனால் அதற்கு எங்களிடம் கூடுதலான எரிபொருள் வேண்டும்; இப்பொழுள்ள எண்ணெய் விலையில் நாங்கள் அவ்வளவு வாங்க முடியாது."

இந்தியாவில் பிடித்து வைக்கப்பட்டுள் மீனவர் H.B.Rodni Fernando வின் குடும்பம்.

H.B. ரோட்னி பெர்னான்டோவின் மனைவி அவருடைய கணவரும் நான்கு மற்ற மீனவர்களும் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள் என்று விவரித்தார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன; வருமானம் ஏதும் கிடையாது. அவருடைய சகோதரர் உதவி செய்து வந்தார், ஆனால் இப்பொழுது அவருக்கு வேலை போய்விட்டது. இவரும் இவருடைய குழந்தைகளும் ஒரு சிறிய குடிசையில் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved