World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe capitalist market and Obama's stimulus plan முதலாளித்துவச் சந்தையும் ஒபாமாவும் ஊக்கத் திட்டமும் By Jerry White அடுத்த இரு ஆண்டுகளில் 3 முதல் 4 மில்லியன் வேலைகளை தோற்றுவிக்கும் அல்லது பாதுகாக்கும் சாதனையை வெள்ளை மாளிகை அடைந்தாலும் கூட, 2010க்குள் அதையும் விட இரு மடங்காக பெருகிவிடக்கூடிய மிகப் பெரிய எண்ணிக்கைக்கு இது போதுமானதாக இராது. வேலைக்குறைப்புக்களின் வேகம் ஏற்கனவே 2008 இறுதியில் இருந்து விரைவாகிவிட்டது --அந்த ஆண்டு 2.6 மில்லியன்கள் வேலை இழப்புக்களை கண்டது; அது 1945ம் ஆண்டிற்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கை ஆகும். ஒபாமாவின் திட்டத்தின் முக்கியமான கூறுபாடு அமெரிக்க நிதிய உயரடுக்கின் செல்வம் மற்றும் பெரும் உரிமைகளைப் பாதிக்கும் எதுவும் செய்யப்பட மாட்டாது என்பதாக உள்ளது. "சுதந்திரச் சந்தையை", "செல்வத்தை தோற்றுவித்து சுதந்திரத்தை பரப்புவதில் இதன் சக்திக்கு இணையில்லை" என்று அவர் ஆரம்ப உரையில் கூறியதன் மூலம் அதைத் தெளிவுபடுத்தி விட்டார். இதற்கிடையில், புதிய ஜனாதிபதி செல்வந்தர்களுக்கு புஷ் கொடுத்த வரிக் குறைப்புக்கள் மாற்றப்படும் என்ற தன் பிரச்சார உறுதியைப் பற்றி எந்தக் குறிப்பும் கூறுவதில்லை. "21ம் நூற்றாண்டின் புதிய உடன்பாடு" என்று பேணப்பட்டாலும், $825 பில்லியன் பொதுவில் அரசாங்கப் பொதுப் பணித் திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை; மில்லியன் கணக்கானவர்கள் இழந்துள்ள வேலைகளைப் பற்றியும் எந்தப் பேச்சும் இல்லை. புதிதாகத் தோற்றுவிக்கப்பட உள்ள வேலைகளில் 90 சதவிகிதம் தனியார் துறையில்தான் இருக்கும். பெரு நிறுவனங்கள் ஏற்கனவே வரிசையில் நின்று உமிழ்நீர் ஊறும் வகையில் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய பெரும் இலாபங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன; அரசாங்க நிதியில் வரும் திட்டங்களில் தனியார் ஒப்பந்தக்காரர்கள் என்ற முறையில் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் பார்க்கின்றனர். இப்பொதியில் மூன்றில் ஒரு பங்கு வரிக்குறைப்புக்களுக்குப் பயன்படுத்தப்படும்; அதில் பாதி பெரு வணிக நலன்களுக்கு இருக்கும். சட்டவரைவில் $7.7 புதுப்பிக்கக்கூடிய விசையில் முதலீடு செய்பவர்களுக்கான மானியத்தை உள்ளடக்கும்; அதேவேளை செனட் நிதிக்குழு மன்னிக்கப்பட்ட கடன்கள் மீது நிறுவனங்களுக்கு வரி விலக்கு கொடுப்பதற்கு ஒரு விதியைப் புகுத்தியுள்ளது; அந்த நடவடிக்கைக்கு அமெரிக்க வணிகக் குழுவும் Harrah's Engertainement ம் பெரும் ஆதரவைச் செலுத்தின. திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக --சாலைகளுக்கு $30 பில்லியன், போக்குவரத்து, இரயில் ஆகியவற்றிற்கு $10 மில்லியனையும் சேர்த்தது-- உள்கட்டமான மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும்; நாட்டின் பொறிந்து கொண்டிருக்கும் பாலங்கள், சாலைகள், பள்ளிகள் "மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரப்படுவதற்கு" குறைந்தது $1.6 பில்லியன் தேவைப்படும் என்று American Society of Civil Engineers மதிப்பிட்டுள்ளது. 1929ம் ஆண்டில் இருந்து நியூயோர்க் பெருநகரப் பகுதியில் மக்கள் தேவைத் திட்டங்களுக்கு வழிகாட்டி வரும் Regional Plan Association இன் தலைவரான Robert Yaro, உள்கட்டுமானத்திற்கான திட்டச் செலவு "ஒரு வாளி தண்ணீரில் ஒரு துளி நீருக்கு ஒப்பாகும்" என்று நியூயோர்க் டைம்ஸிடம் கூறியுள்ளார். வீடுகள் முன்கூட்டி விற்க வேண்டிய நிலையிலிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு எந்த உதவியும் இல்லை --இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 10.2 மில்லியனை அடுத்த நான்கு ஆண்டுகளில் அடையக்கூடும் என்று Credit Suisse மதிப்பிட்டுள்ளது; மேலும் பெருமந்த நிலைக்குப் பின்னர் வீடுகள் விலை தீவிரமாக சரிந்ததை அடுத்து பெரும் இழப்பிற்கு உள்ளாகியிருக்கும் பல மில்லியன் மக்களுக்கும் எந்த உதவியும் கொடுக்கப்படவில்லை. இன்னும் பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் 401(K) ஓய்வூதியத் திட்டத்தின் மதிப்பு குறைந்ததால் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்; அவர்களுக்கும் எந்த வித உதவியும் கொடுக்கப்படவில்லை. ஊக்கப் பொதி வேலை இல்லாதவர்களுக்கு மிகக் குறைந்த உதவியைத்தான், விரிவாக்கப்பட்ட வேலையின்மை நலன்கள் மூலம் கொடுக்கிறது; அதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துக் காப்பீட்டிற்கு ஒதுக்கப்பட்ட பணமும் மிகக் குறைவுதான். இதைத்தவிர, வறியவர்களுக்கு மருத்துவ, சுகாதாரப் பாதுகாப்பு காப்பீட்டிற்கு கூடுதலாக கொடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு உதவ $87 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் எதுவும் நெருக்கடிக்கு ஒரு தீர்வு இல்லை; ஏனெனில் நெருக்கடியின் ஆதாரத்தை இவை தொடவில்லை; அதாவது அமெரிக்க மூலதனம் பல தசாப்தங்களாக சரிந்துள்ளது மற்றும் பெருநிறுவனங்கள், நிதிய உயரடுக்குகள் தொழில்துறையை பட்டினி போட்டது, அடிப்படை உள்கட்டுமானத்திற்கான முதலீட்டை இல்லாமல் செய்தது போன்றவற்றின் மூலம் நிதிய ஊக வழிவகை ஒட்டுண்ணித்தனத்தில் பெரும் பில்லியன்களை ஈட்டிவிட்டனர். ஊக்கப் பொதித் திட்டம் நாட்டின் சுருங்கிவிட்ட தொழில்துறை தளத்தை மறுகட்டமைக்கும் நடவடிக்கை எதையும் உள்ளடக்கவில்லை என்பது வியப்பு ஆகும். நிதிய பிரபுத்துவத்தின் தேவைகளுக்கு ஏற்ப திட்டம் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் மற்றொரு அடையாளம் ஆகும் இது. நிதிய உயரடுக்கிற்கு அடிப்படை தொழில்துறையை மறுகட்டமைக்கும் ஆர்வம் கிடையாது; ஏனெனில் அவை நிதிய ஊகத்தின் மூலம் அடிப்படை உற்பத்திக் கவனத்தைவிட கூடுதலாக சம்பாதிக்கலாம்; அதே நேரத்தில் பெரும் வேலையின்மையை இது பயன்படுத்தி திவால் செய்வோர் எனப் பயமுறுத்தி ஊதியங்களை குறைத்தல், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அதிகப்படுத்துதல் என்ற உந்துதலைக் கொண்டுள்ளன. மேலும், நெருக்கடிக்கு தேசியத் தீர்வு என ஒன்றும் கிடையாது; இது உலக முதலாளித்துவ முறையில் பேரழிவு தரும் தோல்வியாகும். 1930 களில் புதிய உடன்பாட்டு நடவடிக்கைகள் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டால் எடுக்கப்பட்டபோது, அது கிட்டத்தட்ட 4 மில்லியன் வேலையில்லாத தொழிலாளர்களை சாலைகள், பாலங்கள், அணைகள், பள்ளிகள், மற்ற பொதுத் திட்டங்கள் கட்டுவதற்கு உதவியது. ஆனால் இந்த நடவடிக்கைகள் கூட --இணையற்ற தொழில்துறை, நிதிய இருப்புக்கள் இருந்த ஒரு நாட்டில்தான் முடியும்-- பெருமந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. ஓரளவு மீட்பு முயற்சிகூட 1937ல் சரிந்தது; வேலையின்மை மீண்டும் எழுச்சி பெற்றது. ஒரு உலகப் போரும் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்கள் உயிரிழப்பும்தான் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்கவும் போருக்குப் பிந்தைய ஏற்ற நிலையைக் கொண்டுவரவும் உதவின. 1930களைப் போலன்றி, அமெரிக்க ஒன்றும் எழுச்சி பெற்று வரும் பொருளாதார மேலாதிக்க நிலையில் இப்பொழுது இல்லை; உலகின் பெரும் கடனாளி நாடாக உள்ளது. மேலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் --கடந்த கால சீர்திருத்தங்களை முறையாக மூன்று தசாப்தங்களாக அகற்றியதின் மூலம் தன்னை அதிகாரத்தில் இருத்திக் கொண்டது-- தன்னுடைய அதிகாரம், செல்வம் இவற்றை எதுவும் பாதிக்க அனுமதிப்பதில்லை. ஊக்கப் பொதியின் மிக அதிக பணம் பெரிய நிதிய இல்லங்கள், பெருநிறுவனங்கள், மக்கள் தொகையில் உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்குதான் செல்லும். அப்படியானால் ஊக்கப் பொதியின் பின்னணியில் இருக்கும் உந்துதல்கள் யாவை? முதலில் நுகர்வோர் செலவினம் முற்றிலும் சரிவதைத் தடுத்து, பணப்புழக்க தளர்ச்சிநிலை ஏற்படுவதை தவிர்க்கவும் முற்படுகிறது; இவை முழு அளவு மந்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. இரண்டாவது பொருளாதார இடர்பாடுகளை எதிர்கொண்டிருப்பவர்களுக்கு ஓரளவு உதவி அளிப்பது போல் காட்டிக் கொள்ளுதல்; இதையொட்டி பேரழிவு பற்றிய சமூக அதிருப்தி பெருகுதல் குறைக்கப்படலாம்; ஆனால் அப்பேரழிவோ பெரும் செல்வந்தர்களின் பொறுப்பற்ற தன்மை பேராசை ஆகியவற்றால் விளைந்தவை ஆகும். இறுதியாக இந்த நடவடிக்கைகள் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் மற்றொரு இன்னும் மகத்தான வோல்ஸ்ட்ரீட், வங்கிகளுக்கான பிணை எடுப்பைத் தொடக்குவதற்கான தயாரிப்பை நடத்துவதற்கு அரசியலில் திரை ஒன்றைக் கொடுக்கும். இந்த ஊக்கப் பொதி ஏற்கனவே கடன்கள், மானியங்கள், வங்கிகளுக்கு நிதிய உத்தரவாதங்கள் என்று கொடுக்கப்பட்ட $8 டிரில்லியனோடு ஒப்பிடும்போது மங்கலாகக் காணப்படும்; அவை பொது இருப்புக்களை பயன்படுத்தி நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் கடன் வசதியைக் கூடுதலாகக் கொடுக்கவில்லை; வங்கிக் கடன்கள் உண்மையில் குறைந்துவிட்டன; மாறாக அவை பல பெரிய நிறுவன இணைப்புக்களை ஏற்படுத்தி, பொருளாதாரத்தின்மீது பெருநிறுவன, நிதிய அமைப்புக்களின் ஏகபோக உரிமைகளின் பிடியை இறுக்கியுள்ளன. பிணை எடுப்பின் செலவு அல்லது விலையோ அமெரிக்கப் பொதுமக்களால் கொடுக்கப்படுகிறது; ஒபாமா மற்றும் அவருடைய ஆலோசகர்கள் முக்கிய சமூக நலத்திட்டங்களான சமூகப் பாதுகாப்பு, மருத்துவ வசதி போன்றவற்றில் வெட்டுக்கள் வேண்டும் என்று பகிரங்க அழைப்ப விடுத்துள்ளனர். செய்தி ஊடகத்தில் ஒபாமா நிர்வாகம் வங்கிகளை "தேசியமயமாக்கும்" கட்டாயத்திற்கு உட்படும் என்று பெருகிய முறையில் ஊகம் வந்துள்ளது. இது நடத்தப்பட்டால், அந்த நடவடிக்கை ஒன்றும் வோல் ஸ்ட்ரீட் மீது இருக்கும் பொதுக் கட்டுப்பாட்டுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்காது. மாறாக, வரி செலுத்துபவர்கள்தான் பெரு வங்கி நிறுவனங்கள் வைத்திருக்கும் பயனற்ற சொத்துக்களுக்கு முழுப்பொறுப்பை ஏற்க நேரிடும்; அதையொட்டி வங்கிகள் தங்கள் கணக்கில் இருந்து இந்த நஷ்டங்களை அகற்றி மீண்டும் இலாபம் காட்டத் தொடங்கும். அரசாங்க இயக்கத்தில் தற்காலிகமாக இருந்தபின், இவை மீண்டும் தனியார் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படும்; அவர்கள் பெரும் டாலர்கள் இலாபம் அடைவதற்கு வசதியான முறையில் அற்பத் தொகையில் பங்குகளை வாங்குவர். திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது போல், "அரசாங்கம் வங்கிகளை நடத்துகிறது என்ற உணர்வு ஏற்பட்டால், நிர்வாகத்திற்கு பெரும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டு, முன்கூட்டிக் கடன் மூடல்கள், நகரங்களிலும் மாநிலங்களிலும் நலிவுற்றிருக்கும் திட்டங்களுக்கு கடன் கொடுத்தல் போன்றவற்றை செய்ய நேரிடும் என்பதை திரு ஒபாமாவின் ஆலோசகர்கள் நன்கு உணர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்; அத்தகைய நிலை மலை உச்சியில் இருந்து வங்கிகளை காக்கும் முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வங்கிகள் பிணை எடுப்பை போலவே, ஊக்கப் பொதித் திட்டமும் முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளின் இலாப நலன்களைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்பொழுதுள்ள பொருளாதார, அரசியல் முறையின் வடிவமைப்பின் கீழ் இந்த நெருக்கடிக்கு அறிவார்ந்த, சமூக முன்னேற்றமான தீர்வு ஏதும் இருக்க முடியாது. தங்கள் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு, தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருடன் முறித்துக் கொண்டு, ஒபாமா நிர்வாகத்திற்கு எதிரான தங்கள் வலிமையைத் திரட்ட வேண்டும். தொழிலாளர் அரசாங்கம் தோற்றுவிப்பது ஒன்றுதான், உண்மையான ஜனநாயக ஆட்சியை பெரும்பான்மையை கொண்டு நிறுவது ஒன்றுதான் நிதிய பிரபுத்துவத்தின் சக்தியை உடைத்து, சமூகம் முழுவதிற்குமான தேவைகளை பொருளாதார வாழ்வு கொடுக்கும் வகையில் சீரமைக்க முடியும். வங்கிகள் தேசியமயமாக்கப்படல் மற்றும் அடிப்படைத் தொழில்கள் பொதுவுடைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் ஆகியவை சோசலிசக் கொள்கையிலேயே அடங்கும்; இதில் பொருளாதார முடிவு எடுத்தலில் தொழிலாளர்களின் கருத்துக்கள் இணைக்கப்படும்; மேலும் தொழிலாளர்களின் வேலைகள், வீடுகள் காப்பாற்றப்படுவதற்கும், பணி நேரங்களை குறைப்பற்கும் வீடுகள் முன்கூட்டி விற்பனைக்கு வருதல், வீட்டில் இருந்து வெளியேற்றப்படுதலை தவிர்த்தல் ஆகியவையும் அதில் அடங்கும். |