World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
Global crisis threatens to break up the Eurozone உலக நெருக்கடி யூரோப்பகுதியை உடைக்க அச்சுறுத்துகின்றது By Ulrich Rippert சர்வதேச பொருளாதார நெருக்கடி ஐரோப்பா மீது கூடுதலான பேரழிவுத் தாக்கத்தை கொண்டுள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனியின் நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் (சமூக ஜனநாயக கட்சி-SPD) ஒரு நிதிய நெருக்கடி அமெரிக்காவை மற்றும் மையம் கொண்டிருக்கிறது என கூறிக்கொண்டிருந்தார். அப்பொழுதில் இருந்து இந்த நெருக்கடி ஒரு உலகம் படர்ந்த மந்த நிலையாக மாறி விட்டதுடன், தொழில்முறைக்கும் வேலைகளுக்கும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் ஒருவேளை திவாலாகிவிடக்கூடும் என்பதற்கான எச்சரிக்கைகள் கடந்தவார ஆரம்பத்தில் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து 16 நாடுகள் அடங்கிய யூரோப் பகுதி உடைந்துவிடக்கூடிய சாத்தியப்பாட்டை கொண்டுள்ளதுடன், ஐரோப்பிய நாணயமான யூரோ குலைவடையக்கூடும் என்பதற்கான பெருமளவிலான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. Der Spiegel ஏட்டின் இந்த வார பதிப்பு "யூரோப் பகுதி உடையக்கூடிய வாய்ப்பு நிதியச் சந்தைகளில் எரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது." என எச்சரிக்கிறது. ஜனவரி 29ம் தேதி Die Zeit "யூரோ நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளை நெருக்கடி அதிகப்படுத்தியுள்ளது. தீவிர பொருளாதார வல்லுனர்கள் எந்த நாடு முதலில் திவாலாகும் என சிந்திக்கின்றனர். அதைத் தொடர்ந்து நாணய ஒன்றியம் சரியும் பேரழிவிற்கு ஒரு சிறிய அடிதான் முன்னுள்ளது'' என கூறியது.ஐரோப்பிய நாணயம் அவ்வாறு சரிவுறுதல் சாத்தியமே; ஏனெனில் அது ஐரோப்பிய நாணய ஒன்றியத்தின் அடிப்படைப் பிரச்சினையை நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது: அதாவது யூரோவை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் பொதுவான பொருளாதர கொள்கை எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. யூரோப்பகுதியில் தனிப்பட்ட நாடுகளின் பொருளாதார நிலைமை பெரும் ஏற்றத் தாழ்வுகளை கொண்டுள்ளது. 1990 களின் தொடக்கத்தில் "உறுதிப்பாடு உடன்படிக்கை" என்னும் உடன்பாடு ஜேர்மனியின் வற்புறுத்தலின்பேரில் ஏற்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டபோது நிதியக் கொள்கைகள் தொடர்பான உறுதியான நிபந்தனைகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டது. இணையும் ஒவ்வொரு நாடும் கடுமையான வரவுசெலவுத்திட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட வேண்டும். நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை அதிகபட்சம் 3 சதவிகிதம் என்றும் மொத்தக் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 60% இற்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முதலும் முக்கியமானதுமாக ஜேர்மனிதான் யூரோவின் உறுதியைத் தக்கவைக்கும் வழிவகை என்று இந்த விதிமுறைகளை ஏற்கும் கட்டாயத்தை வலியுறுத்தியது. அமெரிக்க டாலருடன் போட்டிபோடுவதற்கு யூரோ வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மட்டும் இல்லாமல், ஐரோப்பாவில் ஜேர்மனிய பொருளாதாரத்தின் மேலாதிக்கைத்தை உறுதிப்படுத்துவதற்கும் பயன்பட்டது; ஏனெனில் முக்கிய ஏற்றுமதி நாடு என்னும் விதத்தில் அது உறுதியான நாணய முறையினால் பெரும் நலன்களைப் பெற முடியும். ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனியின் நிதி மந்திரி உறுதிப்பாட்டு உடன்படிக்கையை காப்பதற்கு இன்னமும் முயன்று கொண்டிருந்தார். அதிக செலவு கொடுக்கும் பொருளாதார ஊக்கப்பொதி திட்டங்களுக்கு அவர் காட்டிய எதிர்ப்பு பிரான்ஸ், பிரிட்டிஷ் அரசாங்கங்களுடன் கடுமையான விவாதங்களுக்கும் மோதலுக்கும் உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து நெருக்கடி உறுதிப்பாட்டு உடன்படிக்கையை பெரிதும் தகர்த்துவிட்டது. ஜேர்மனி உட்பட ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கமும் தன்னுடைய தொழிற்துறையையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் பெருமுயற்ச்சி எடுக்கின்றன. ஜனவரி 27ம் தேதி கூட்டாட்சி மந்திரிசபை 18 மில்லியன் யூரோவைக்கொண்ட ஒரு துணை வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. வரிவருமானங்களினால் வரக்கூடிய பற்றக்குறையை ஈடு செய்வதற்கும் பெருகிய செலவினங்களை சமாளிப்பதற்கும் இது தயாரிக்கப்பட்டது. இதில் இரண்டாம் பொருளாதார ஊக்கப் பொதிக்கு முதலீடு என்ற வகையில் சிறப்பு வழிவகை உள்ளது. இவை 21 பில்லியன் யூரோக்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்ட கடனில் இருந்து கொடுக்கப்படும். ஏற்கனவே வரவு செலவுத் திட்டதில் திட்டமிட்டிருந்த 18.5 பில்லியன் யூரோக்களுன் சேர்ந்து, புதிய பொதி மொத்தக் கூடுதல் கடனை 2009 ம் ஆண்டில் 50 பில்லியனுக்கும் மேலாகக் கொண்டு செல்லும். ஜேர்மனிய அரசாங்கம் இதற்கு முன்னால் இத்தகைய பெரும் கடன் தேவைகளுக்கு ஒருபோதும் நிதியச் சந்தைகளை அணுகியதில்லை. மற்ற நாடுகளில் கடன் இன்னும் வேகமாகப் பெருகிக் கொண்டு வருகிறது. பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் நிதிய வல்லுனர்கள் யூரோப் பகுதியில் இருக்கும் 16 நாடுகளின் பற்றாக்குறைகள் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் என அதிகமாகும் எனவும், அடுத்த ஆண்டு 4.4 சதவிகிதம் என ஆகும் எனவும் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட அன்றாடம் திருத்தப்படுகின்றன. உறுதிப்பாட்டு உடன்படிக்கை விதித்திருந்த 3 சதவிகித உயர்ந்த பட்சம் கடன் என்பது எல்லா யூரோப்பகுதி நாடுகளிலும் மீறப்பட்டுவிட்டது. இதன் விளைவாக கடன் பெறுவதற்கான போட்டி தொடங்கிவிட்டது. இது ஐரோப்பாவிற்குள் விரோதப் போக்கை தீவிரப்படுத்தியுள்ளது; ஐரோப்பிய பகுதியை முறியும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஒற்றை நாணயம்தான் என்று இருந்தபோதிலும்கூட, வெவ்வேறு நாடுகளில் அரசாங்க பத்திரங்கள் பரந்த மாறுபட்ட மதிப்புக்களை நிதியச் சந்தைகளில் பெறுகின்றன. ஸ்பெயின், போர்த்துகல், கிரேக்கம் போன்ற நாடுகள் கூடுதலான வட்டிவிகிதத்தை கொடுக்கின்றன; ஏனெனில் அவற்றின் கடன்தகமை பற்றி பெருகிய சந்தேகங்கள் உள்ளன. இத்தாலியின் தேசியக் கடன் உலகில் மூன்றாவது அதிகமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 106 சதவிகிதமாக இருக்கிறது. தேசிய திவால்தன்மை என்ற அச்சுறுத்தலின் விளிம்பில் நிற்கையில் ரோமில் இருக்கும் அரசாங்கத்திற்கு நிதிய ஆதரவாளர்களைப் பெறுவது மிகக் கடினமாக உள்ளது. ஜனவரிமாத நடுவில் வெளியிடப்பட்ட நிலைத்த வட்டி கொடுக்கும் அரசாங்கப் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதத்தை உயர்த்திய பின்னரே வாங்குபவர்களுக்கு ஈர்க்ககூடியதாக இருந்தது. வரவிருக்கும் இரு ஆண்டுகளில் கிரேக்கம் குறைந்தது 48 பில்லியன் யூரோக்களையாவது தன்னுடைய பழைய கடன்களை தீர்ப்பதற்கு தேவை என்ற நிலையில் உள்ளது. இதைத்தவிர, அதன் சமீபத்திய வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கும் அது நிதியளிக்க வேண்டும். தரம் மதிப்பிடும் நிறுவனங்கள் (Rating agencies) "சிக்கல் வாய்ந்த நாடுகளின்" பொருளாதார அந்தஸ்து பற்றி கீழ்நோக்கிய வகையில் மறு மதிப்பீடு செய்துள்ளன; இதன் விளைவாக அத்தகைய நாடுகள் தாங்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியுள்ளது. கிரேக்கத்தின் 10 ஆண்டு அராசங்கப் பத்திரங்கள் இப்பொழுது 5.75 சதவிகிதம் கொடுக்கின்றன; அயர்லாந்து 5.25 சதவிகிதம், ஸ்பெயின் 4.21 சதவிகிதம். ஜேர்மனியின் 10 ஆண்டு பத்திரங்களைப் பார்த்தால் அவை 3 சதவிகிதம்தான் கொடுக்கின்றன; இது எந்த அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. கிரேக்க, அயர்லாந்து விகிதங்களுக்கு எதிரிடையான வகையில் ஜேர்மனிய அரசாங்கம் 2.21% குறைவாக 2.66% வட்டிக்கு கடன் வாங்க முடிகிறது. இத்தகைய மாறுபட்ட போக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை வீழ்ச்சியடையும் கடன் மதிப்புத் தரம் உடைய நாடுகள் தங்கள் நாணயங்களின் மதிப்பை குறைத்து முக்கிய வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளன; இதனால் அவை ஏற்றுமதிகளுக்கு நல்ல சாதகமான வாய்ப்புக்களை கொடுப்பதின்மூலம் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன. யூரோப்பகுதி நாடுகளில் இது இனி முடியாது. "சில நாடுகள் இக்குழுவை விட்ட அகல வேண்டும் என்பது போல் உள்ளது" என்று Der Spiegel எழுதியுள்ளது. இத்தகைய நிலைமையை எதிர்கொண்டுள்ள நிலையில், லக்சம்பெர்க்கின் பிரதம மந்திரியும், நிதி மந்திரியுமான Jean-Claude Juncker 16 யூரோப் பகுதி நாடுகளும் பொதுக்கடன் பத்திரங்கள் அல்லது "யூரோ பத்திரங்கள்" என்பவற்றை வெளியிட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றன; ஆனால் பேர்லின் அதிபர் அலுவலகம் இதைக் கடுமையாக எதிர்த்துவிட்டது. யூரோப் பத்திரங்கள் "பிறருடைய இழப்பில் கடனின் மூழ்குவதற்கான வெற்றுப்பத்திரம் போன்றது" என்று ஆஸ்திரிய நிதி மந்திரி Josef Pröll குறிப்பிட்டிருக்கையில், ஜேர்மனிய நிதி மந்திரி ஸ்ரைன்பேர்க், வங்கிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க ஒவ்வொரு நாடும் அதனதன் நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று கூறிவிட்டார். பெருகிய பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் ஐரோப்பிய ஒருங்கிணைப்புத் திட்டம் சரிந்து நாடுகளில் தன்னலத் தன்மை மேலோங்கி நிற்கும் சூழ்நிலைதான் வெளிப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியச் சரிவு என்பது அதிர்வு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். திவால் ஆகும் நாடுகளும் மற்றும் யூரோ குழுவை விட்டு அகலுபவையும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். அவற்றின் கடன் நிலைமை இன்னும் சரிவதுடன் அதிக வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு போகும். பழைய கடன்கள் யூரோக்களில் திருப்பக் கொடுக்கப்பட வேண்டும். நாணய மதிப்பு சரிவுற்ற நாணயங்களில் இது இன்னும் கூடுதலான செலவு என்ற பொருளைத் தரும். இதன் தவிர்க்க முடியாத விளைவாக மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், 1930 களில் ஏற்பட்டது போல் ஒடுக்குமுறை ஆணைகளை பிறப்பித்தல் ஆகியவாகவே இருக்கும். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாத்தலும் மற்றும் ஒற்றை நாணய முறையை பாதுகாத்தலும் இதற்கான தீர்வு ஆகாது. நெருக்கடியில் ஆழ்ந்துள்ள பல அங்கத்துவ நாடுகளுக்கு இடைக்காலக் கடன்கள் என்பது ஏற்கனவே மிகக் கடுமையான நிதிய நிலை, சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. இது ஏற்கனவே கலகங்களையும் தெருமோதல்களையும் சில கிழக்கு ஐரோப்பிய தலைநகரங்களில் தோற்றுவித்துள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதார ஆணையரான Joaquin Almunia கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தொழிலாளர் சந்தையிலும், சமூகநல திட்டங்களிலும் மிகக்கடுமையான வேதனை தரக்கூடிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரினார். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருக்கும் அழுத்தங்கள் இருந்தபோதிலும்கூட, அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியின் சுமையை பொதுமக்கள் தலையில் மாற்றுவதற்கு முயலுகின்றன. இதை அடைவதற்காக பிரஸ்ஸல்ஸ் ஒரு போலீஸ் அரசிற்கான அஸ்திவாரங்களைப் இட்டுவருகிறது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கட்டுப்பாட்டை அகற்றுதல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை தகர்ப்பதற்கு மறுபெயர் போல் ஆகியுள்ளது. சமூக, பிராந்திய விரோதப்போக்குகளுக்கு இடையே சமரசம் காண்பதற்குப் பதிலாக, இது அவற்றை அதிகப்படுத்துகிறது. மாபெரும் எண்ணிக்கையில் உள்ள அதிகாரத்துவம், மிக அதிக ஊதியம் பெறும் 40,000 அலுவலர்கள், ஜனநாயகக் கட்டுப்பாடு ஏதுமின்றி, செல்வாக்கு செலுத்துவோர் கூட்டத்திற்கு உடந்தையாக இருந்து, தன்னை இன்னும் வெளிப்படையாக முக்கிய ஐரோப்பிய சக்திகள் மற்றும் சக்தி வாய்ந்த பெருநிறுவன நலன்களின் கருவியாக வெளிப்படுத்திக் கொள்ளுகிறது. ஒரு பாரிய சமூக அரசியல் மோதலுக்கு தன்னை தொழிலாளர் வர்க்கம் தயாரித்துக் கொண்டு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்; அதுதான் அதிகரித்துவரும் பொருளாதார தேசியம் மற்றும் பாதுகாப்புவரி முறை போன்றவற்றை எதிர்த்து ஐரோப்பாவை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்த முடியும். |