World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Britain: Tamils demonstrate outside parliament

பிரிட்டன்: பாராளுமன்றத்திற்கு வெளியே தமிழர்கள ஆர்ப்பாட்டம்

By Paul Mitchell
5 February 2009

Back to screen version

கிட்டத்தட்ட 5,000 தமிழர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே கடுமையான குளிர் நிறைந்த செவ்வாய் மாலையில், இலங்கையின் 61வது சுதந்திரதின நிறைவு விழாவன்று, இலங்கை அரசாங்கம் நடத்தும் போருக்கு எதிராகவும் அது தோற்றுவித்துள்ள மனிதாபிமானமற்ற பேரழிவிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்ட "இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சோசலிச முன்னோக்கு - இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!, ''இலங்கை சுதந்திரம்: 60 ஆண்டுகள் வகுப்புவாதம், சமூக அழிவு மற்றும் போர்" என்னும் அறிக்கைகளின் பிரதிகளை விநியோகித்தனர்.

இத்துண்டுப் பிரசுரங்கள் பல தசாப்தங்களாக நீடித்துள்ள இனவாத யுத்தம் எப்படி சுதந்திரத்திற்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிற்போக்கு அரசின் தமிழர்-எதிர்ப்பு பிரச்சாரத்தின் விளைவு என்பதை விளக்கின. ஆரம்பத்தில் இருந்தே, இலங்கையின் ஆளும் உயரடுக்கு வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம், சிங்கள தொழிலாள வர்க்கத்தை பிரித்த வகையில்தான் தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றுள்ளது.

இந்த அறிக்கைகள், சமீபத்திய மக்கள் எதிர்ப்புக்கள் உண்மையான மக்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கையில், அவ்வியக்கங்களின் தலைவர்கள் இவற்றை மேலை நாடுகள் மீதும் இந்தியா மீதும் அழுத்தம் கொடுத்து இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர் என்று வாதிட்டுள்ளன. இத்தகைய முன்னோக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிரந்தரமாக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ, இராஜதந்திர ஆதரவை கொடுக்கும் மற்றும் போருக்குக் காரணமாக இருக்கும் அதே ஏகாதிபத்திய சக்திகள் மீது நப்பாசைகளைத்தான் வளர்க்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் 1968ல் நிறுவப்பட்ட அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் மற்றும் அனைத்துவித தேசியவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றையும் எதிர்த்து, கடினமான சூழ்நிலையில் போருக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகள் பரந்த அளவில் தாக்குதலுக்குள்ளாவதற்கு எதிராகவும், வாழ்க்கைத் தரங்கள் மீது தாக்குதல்களுக்கும் எதிராகவும் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் போராடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் சிறீலங்கா, ஈழ சோசலிசக் குடியரசு என்னும் வேலைத்திட்டம் ஒன்றுதான், தெற்கு ஆசிய சோசலிச ஐக்கிய குடியரசின் ஒரு பாகமாக, இனவாத, வகுப்புவாத பூசல்கள் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவைக் கொடுத்து வரும் இலங்கையிலும், துணைகண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமான ஒரு முற்போக்கான பாதையை காட்டுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்வத்துடன் துண்டுப்பிரசுரங்களை வாங்கிக் கொள்ளக் கூடினர்; ஜனவரி 31, 100,000 பேர் குழுமியிருந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த அறிக்கையை வாசித்தவர்கள் இதை வினியோகிக்கவும் முன்வந்தனர். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு பற்றி மேலதிக வாதங்கள் தேவை என்றும் பலர் கேட்டுக் கொண்டதுடன், ஏனையோர் நம்முடைய நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியின்போது, சோசலிச சமத்துவ கட்சியின் தமிழ் ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் சூழப்பட்டு துண்டுப்பிரசுரத்தை வினியோகிப்பதை நிறுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். ஒரு பிரிட்டிஷ் சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர் குறுக்கிட்டு என்ன நடக்கிறது எனக் கேட்டபோது, ஒரு டசின் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களை சூழ்ந்து நின்று துண்டுப் பிரசுரங்களை கைப்பற்றினர். ஒரு வயதான நபர் தன்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து என்ன செய்வது என்று அறியப்போவதாக கூறினார். சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர்கள் இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் கூட்ட அமைப்பாளர்களின் மேசைக்கு சென்றனர்; அங்கு மூன்று, நான்கு பேர் இருந்தனர்.

அமைப்பாளர்களில் ஒருவர் சோசலிச சமத்துவக் கட்சி துண்டுப்பிரசுரம் தமிழ் சமூகத்தை பிளவுபடுத்துவதாகவும், தமிழர்களில் 90 சதவிகிதம் தமிழ் புலிகளுக்கும் தனிநாட்டிற்கும் ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார்.

இத்தகைய கருத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது, கிட்டத்தட்ட 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நின்று விவாதத்தை கேட்டனர். அவர்கள் அங்கிருந்து நகருமாறும் சோசலிச சமத்துவக் கட்சி கூறுவதைக் கேட்காமல் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் பலரும் சோசலிச சமத்துவக் கட்சி உடன் தங்கள் உடன்பாட்டைத் தெரிவித்தனர்; ஒருவர் துண்டுப்பிரசுரம் "ஒரு சிறந்த அறிக்கை" என்றார். மஞ்சள் மேலணி அணிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் தனக்கு இரு பிரதிகளை எடுத்துக் கொண்டார்.

ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியின் தமிழ் ஆதரவாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் தள்ளி நகர்த்தப்பட்டபோதும், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்கப்பட்டபோதும், குழுவினர் அங்கிருந்து நகர்ந்துவிடுவது நல்லது என்று முடிவெடுத்தனர். இத்தகைய அச்சுறுத்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் குழுவினர் பல தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பேட்டி கண்டனர். சிறீ கூறினார்: "இது ஒன்றும் போர் அல்ல; இனவழியில் படுகொலை நடக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்று கூறிக்கொண்டு அவர்கள் தமிழ் மக்களை கொலை செய்கின்றனர். இலங்கையின் இராணுவம் "பாதுகாப்புப் பகுதிக்கு செல்லுக" என்று கூறிய பின் மக்கள் மீது குண்டு போட்டது. இலங்கையில் எந்த இடத்திலும் ஜனநாயகம் இல்லை. அவர்கள் நிரபராதிகளை கொல்லுகின்றனர்."

இலங்கையின் 61வது சுதந்திரதின விழாவைப் பற்றி கேட்கப்பட்டதற்கு சிறீ கூறினார்: "இப்படி சுதந்திரம் என்றும் சொல் உள்ளது; ஆனால் மக்கள் எவரும் அதை அனுபவிக்கவில்லை; பெரும்பான்மையினரும் கூடத்தான் [சிங்களவரும்] கூலிக்காக அவர்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

"இலங்கையில் அரசாங்கம் அதன் இராணுவத்தைத்தான் கூடுதலாக நம்பியுள்ளது. கிராமங்களுக்குள்கூட போலீசார் AK 47 இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அனைவரையும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர். இலங்கையின் அனைத்து மக்களின் -- சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்-- உயிர்களும் இப்போரினால் அழிக்கப்பட்டுள்ளன."

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரான கமல், தமிழர்களும் சிங்களவர்களும் சுதந்திரத்திற்காக ஒன்றாக இணைந்து போராடினர்; ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் சிங்கள மொழி அரசாங்க மொழியாக செயல்படுத்தப்பட்டது. "சிறிது, சிறிதாக அவர்கள் சிங்கள இனவெறியை கட்டியெழுப்பினர்" என்று கூறினார். பின்னர் அவர்கள் முற்றிலும் தமிழர்கள் உரிமைகளை அடக்கத் தொடங்கினர், அதுதான் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழிவகுத்தது.

"முதலில் நாம் போரை நிறுத்த வேண்டும்; பின்னர் தீர்வு பற்றி சிந்திக்கலாம். பாதுகாப்பு பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளையும் மருத்துவமனைகளையும் எதற்காக அரசாங்கம் குண்டுவீச்சு நடத்தித் தாக்குகிறது என்று எவரும் கேட்கவில்லை. 61 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் மக்கள் இன்னமும் கொல்லப்படுவதுடன் நாய்களைவிடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்." என ஆவர் மேலும் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved