WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
Gloom, perplexity, divisions dominate World Economic Forum in Davos
டாவோஸ் இல் நடைபெற்ற உலகப் பொருளாதார அரங்கில் இயக்கமின்மை, பெரும் குழப்பம்
மற்றும் பிளவுகள் ஆதிக்கம் செலுத்துகின்றது
By Barry Grey
31 January 2009
Use this
version to print | Send
this link by email | Email
the author
அரசாங்க தலைவர்கள் 41 பேர், பல அமைச்சரவை
மந்திரிகள் உட்பட உலகின் வணிக, அரசியல் உயரடுக்கின் கிட்டத்தட்ட 2,500 பிரதிநிதிகள் புதனன்று சுவிஸ் நாட்டு
ஆல்பைன் சுற்றுலா நகரமான டாவோஸில் கூடிய வருடாந்த உலகப் பொருளாதார அரங்கில் கலந்து கொள்ளுகின்றனர்.
இந்த ஆண்டின் அரங்கம், உலக நிதியக் கரைப்பு மற்றும் பொருளாதாரச் சரிவின் பின்னணியில் நடக்கும் கூட்டம்,
"சுதந்திர வர்த்தக அமைப்பின்" மேன்மை பற்றி நிலவியிருந்த உயர் கருத்தை சிதைத்துள்ளதுடன், உலக முதலாளித்துவ
தலைவர்களிடையே இருக்கும் ஆழ்ந்த நெருக்கடி, சீர்குலைவு ஆகிய சித்திரத்தை அளிக்கிறது.
பல விதங்களிலும் காணக்கூடிய உணர்வான இயக்கமின்மை மற்றும் வருங்காலம் பற்றிய
திகைப்பையும்தான் காட்டுகிறது. பெரு மந்த நிலைக்கு பின்னர் மிகத் தீவிர பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுகிறோம்
என்ற உணர்வு பங்கு பெறுபவர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், இங்கு கூறப்படும் உரைகள்,
நடத்தப்படும் விவாதங்கள் ஆகியவை நெருக்கடியின் அடிப்படைக் காரணங்கள் பற்றி எந்த உடன்பாடு இல்லை
என்பதையும், இதைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றி ஒருமித்த உணர்வையும் காட்டவில்லை என்பதே
அடிக்கோடிட்டு காட்டுகிறது.
செய்தி ஊடகப் பிரபுவான ருப்பேர்ட் மேர்டோக் பங்கு பெறுபவர்கள் "மன உளைச்சலிலும்,
பெரும் அதிர்ச்சியிலும்" உள்ளனர் என்று கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது; மேலும்
நெருக்கடியின் பின்னர் "$50 டிரில்லியன் தனியார் செல்வம்" இல்லாதுபோயுள்ளதுடன், அமெரிக்க முதலீட்டு வங்கி
லெஹ்மன் பிரதர்ஸ் கடந்த செப்டம்பரில் சரிந்ததை அடுத்து மேலும் மோசமடைந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
தனியார் முதலீட்டு நிதியத்தின் மேலாளரான பில்லியனர் ஜோர்ஜ் சோரோஸ்,
"1930களில் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினையை விட இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையின் தனம்மை
மிகப் பெரியது" என்று கூறியதாகவும் போஸ்ட் எச்சரித்தது.
உலகப் பொருளாதார அரங்கு, அதன் நிறுவனரும் இன்றுவரையும் தலைவராக
இருக்கும் சுவிஸ் பொருளாதார வல்லுனரும் வணிகருமான கிளவுஸ் ஸ்வாப்பினால் (Klaus
Schwab) 1971ம் ஆண்டு முதலில் ஆரம்பிக்கப்பட்டது; அந்த
ஆண்டு பெருகிய பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் பிரெட்டன் வூட்ஸ் முறை என்னும்
அமெரிக்க டாலர்-தங்க மாற்றீட்டு முறை முடிவுக்கு வந்தது; அதுதான் போருக்கு பிந்தைய நிதிய சர்வதேச
வடிவமைப்பின் விரிவாக்கத்திற்கு அதுவரை ஆதாரமாக இருந்தது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் அரங்கு ஒரு பகுதி
உத்தியோகபூர்வ கூட்டமாக வணிகத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரால் கருதப்பட்டது; அதில்
சர்வதேசப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
இன்னும் சமீபத்திய காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர், "சுதந்திர
வர்த்தக அமைப்புமுறை" வெற்றி பெற்றதாக கூறப்பட்ட தன்மையை உறுதிபடுத்தும் ஒரு அரங்காக அது விளங்கியது;
அமெரிக்க முதலீட்டு வங்கியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்; இவர்களை சுற்றி பொருளாதார வல்லுனர்கள்,
செய்தி ஊடகத்தினர் என்ற சிறிய படையே இருந்தது; அதைத்தவிர திரைப்பட நட்சத்திரங்களும் மற்ற
புகழ்வாய்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.
ஓராண்டிற்கு முன்பு, அமெரிக்க வீடுகள் சந்தை சரிவு மற்றும் கடன் நெருக்கடி
வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, உலகம் முழுவதும் எவருமே கிட்டத்தட்ட எதிர்பார்க்காத நிகழ்வுகளான இவற்றின்
கவலை தரும் போக்குகள் பற்றி அரங்கில் கவனம் தெரிவிக்கப்பட்டன. அமெரிக்க வங்கியாளர்களும்
அரசியல்வாதிகளும் இக்குழப்பம் விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் மிக மோசமாக போனால் அமெரிக்க
மந்தநிலை ஆழமற்றதானதாகவும், குறுகியகாலத்திற்கே நீடிக்கும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். அமெரிக்க
நிதியச் சந்தைகளில் ஏற்பட்ட இப்பிரச்சினைகள் ஐரோப்பாவிற்கு அல்லது ஆசியாவிற்கு பரவாது என்னும் கருத்துதான்
படர்ந்து இருந்ததுடன் இவற்றிற்கு இடையே "தொடர்பு இல்லை" என்ற நிலைப்பாடே காணப்பட்டது.
அரங்கின் முக்கிய பணிகள் அலுவலரான ரோபர் க்ரீன்ஹில் இந்த ஆண்டு அரங்கு
நடவடிக்கைகள் பற்றிய ஆரம்ப அறிக்கையில்: "1970 களில் நிலவிய பிளவு, உறுதியற்ற தன்மை என்ற பின்னணியில்
அரங்கு தொடங்கியது; இந்த ஆண்டு அது மீண்டும் அந்த வேர்களுக்கு திரும்புகிறது. ஒரு தீவிர நெருக்கடியில் இருந்து
தப்பி வெளிப்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதற்கு பல நிகழ்வுகளில் இருந்து ஒப்புமை காண பலர்
முற்பட்டுள்ளனர்."
எந்த அளவிற்கு தீவிரமாகவும் படர்ந்ததாகவும் நெருக்கடி உள்ளது என்பது அரங்கின்
முதல் நாளில் சர்வதேச நாணய நிதியத்தின் 2009ம் ஆண்டு பற்றிய உலகப் பொருளாதார வளர்ச்சியின்
திருத்தப்பட்ட மதிப்பீடு அடிக்கோடிட்டுக் காட்டியது. இது வெறும் 0.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் அதில்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் பெரும் சுருக்கங்கள் அடங்கும் என்றும்
கூறப்பட்டுள்ளது. முந்தைய வாரம் சர்வதேச நாணய நிதியம் உலக வணிகத்தின் அளவு 2009ல் 2.8 சதவிகிதம்
குறையும் என்று கூறியதை அடுத்து இக்கருத்து வந்துள்ளது. மேலும் புதன்னறு சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த
ஆண்டு 51 மில்லியன் வேலைகள் இழக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு அரங்கில் இரு மேலாதிக்கம் செலுத்தும் ஒன்றுடன் ஒன்றுதொடர்புடைய
விஷயங்களான பொதுவான அதிர்ச்சித் தன்மையும், பொருளாதார நடவடிக்கைப் புதுப்பிக்கவும் வங்கிகளை
செயல்படுத்தவும் மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களும் எடுத்த முயற்சியையும் தவிர்க்க முடியாத வகையில்
விரைவான நெருக்கடி பற்றியுள்ள பீதியையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள்
கடன்கள், உத்தரவாதங்கள், பண உட்செலுத்துதல்கள் என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இதைத்தவிர
அமெரிக்காவின் கெளரவமும் நம்பகத்தன்மையும் பேரழிவுதரக்கூடிய இழப்பிற்கு உட்பட்டுள்ளன.
புதனன்று பைனான்ஸியல் டைம்ஸ் எழுதியது: "மிகவும் குறிப்பிடத்தக்க
வகையில், பூகோளமயமாக்கல், நிதிய புதுக் கண்டுபிடிப்புகள், தடையற்ற சந்தை போட்டி ஆகியவை ஒரு சிறந்த
நிதிய முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வங்கிகளின் இழப்பு உச்சநிலையில் இருக்கையில் உதிர்ந்துவிட்டது.
எனவே இப்பொழுது டாவோஸில் ஆண்டுக் கூட்டத்தில் எழுந்துள்ள முக்கியமான வினா, "இந்த வழிவகைக்கு
மாற்றீடாக ஏதும் செய்யப்படாலாமா?" என்பதாகும்.
இதே போன்ற விதத்தில், நியூ யோர்க் டைம்ஸும் வெள்ளியன்று ஜேம்ஸ்
ரோசன்பெல்ட் என்னும் கேம்ப்ரிட்ஜ் விசை ஆராய்ச்சிக் குழுவின் இணை நிறுவனர், "இந்த பெரிய, ஒருங்கிணைந்த
நிதிய முறையை நாம் அனைவரும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது சரிந்தால் என்ன ஆவது என்று
நாம் நினைத்தும் பார்க்கவில்லை" என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைமையைப் பொறுத்தவரையில், அரங்கின் முதல்நாள் சீனப்
பிரதமர் வென் ஜியாபோ மற்றும் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின், இருவரும் அமெரிக்காவை
கடுமையாகச் சாடினர்; தங்கள் தாக்குதல் இலக்கின் பெயரை அவர்கள் நேரடியாகக் கூறவில்லை என்றாலும்,
உலக நெருக்கடியைத் தோற்றுவித்ததற்கு அதுதான் பொறுப்பு என்றும் உலக நிதியச் சந்தைகளில் அமெரிக்க
மேலாதிக்கம் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.
"சர்வதேச நிதிய அமைப்புமுறை ஒழுங்கமைக்கப்படுவது பரந்தளவில் செய்யப்பட
வேண்டும், முக்கிய நாணய இருப்புக்களின் மீதான மேற்பார்வை குறிப்பாக வலியுறுத்தப்பட வேண்டும்" என்று வென்
வலியுறுத்தினார். நிதிய நெருக்கடி, "சில நாடுகள் பெரிய அளவில் உரிய தேசிய, பிராந்திய பொருளாதார
கொள்கைகளை பின்பற்றாததை அடுத்து வந்துள்ளது" என்றும் "அந்த பொருத்தமற்ற கொள்கையின் மாதிரி
அபிவிருத்திக்கு உரியது அல்ல என்றும், நீண்ட காலமாக குறைந்த சேமிப்புக்கள், அதிக நுகர்வு மற்றும்
இலாபத்திற்காக குருட்டுத்தனமாக நிதிய அமைப்புக்கள் கூடுதலான விரிவாக்கத்தை கொண்டதே காரணம்" என்றும்
அவர் கூறினார். "நிதிய மேற்பார்வை தோற்றுவிட்டது" என்றும் அவர் கண்டித்தார்.
ஏதேனும் கூறவேண்டும் என்றால் புட்டின் இதையும் விட பகிரங்கமாக கண்டித்தார்
எனலாம். "ஒருமுனை உலகம் " என்ற கருத்தை அவர் தாக்கினார்; அமெரிக்க டாலர் உலகின் முக்கிய இருப்பு
நாணயமாக சலுகை கொண்டு இருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்றும் கூறினார். "ஓராண்டிற்கு முன்பு
இதே அரங்கில் பேசிய அமெரிக்கப் பிரதிநிதிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை உறுதித்தன்மை அதன்
மேகமூட்டமற்ற வருங்காலம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினர். இன்று முதலீட்டு வங்கிகள், வோல்ஸ்ட்ரீட்டின் பெருமித
அமைப்புக்கள், கிட்டத்தட்ட செயல்படாத தன்மைக்கு வந்துவிட்டன. கடந்த 12 மாதங்களில் கடந்த 25
ஆண்டுகளில் பெற்ற இலாபத்தைவிட அதிகமாக இழப்பைக் காட்டின" என்று அவர் கூறினார்.
பிரின்ஸ்டன் பொருளாதார வல்லுனரும் முன்னாள் மத்திய வங்கி கூட்டமைப்பின் துணைத்
தலைவருமான ஆலன் பிளைண்டர், "வருந்தத்தக்க விஷயம் சிறிது காலம் முன்பு இந்நிலை பற்றி எள்ளி
நகையாடியிருக்கக்கூடும். ஆனால் உலகத்தை கீழ்நோக்கி இழுத்துச்செற்றுவிட்டோம் என்பதுதான் உண்மை." என்று
கூறினார்.
தன்னுடைய பங்கிற்கு ஒபாமா நிர்வாகம் சர்வதேச ஒருங்கிணைந்த செயல் அல்லது
நிதிய ஒழுங்கமைப்பு பற்றி தீவிர அக்கறையின்மையைத்தான் அடையாளம் காட்டியதுடன், தமது உயர்மட்ட அதிகாரி
எவரையும் அரங்கிற்கு அனுப்பவில்லை. ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன்
பிரெளன், ஜப்பானிய பிரதமர் டாரோ அசோ போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்தும் உயர்ந்த அரசாங்கத்த
தலைவர்கள் பங்கு பெற்ற நிலையில், குறிப்பிடப்பட்டிருந்த அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முக்கிய
பொருளாதார ஆலோசகர் லாரன்ஸ் சம்மர்ஸ், நிதி மந்திரி டிமோதி கீத்னர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், அமெரிக்க மையக் கட்டுப்பாட்டின் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் என்று எவரும்
வரவில்லை.
அமெரிக்கா இப்படி கிட்டத்தட்ட உத்தியோகபூர்வமாக அரங்கைப் புறக்கணித்தது
அரங்கின் இராஜதந்திர கெளரவத்தின் அடித்தளத்தில் இருந்த கசப்பான அழுத்தங்கள், பிளவுகள் ஆகியவற்றை
அடிக்கோடிட்டுக் காட்டியது. டாவோஸ் மாநாட்டில் பொது அறிக்கைகள் பாதுகாப்புவரி முறையை கைவிட
வேண்டும் என்று கூறியபோதும், அத்தகைய அரசியல் இருந்தால் உலகில் ஏற்படக்கூடிய பேரழிவுகள் பற்றிய
எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட போதிலும்கூட, அமெரிக்க நிதி மந்திரி கீத்னர் சீனாவிற்கு எதிராக வணிகத்
தடைகள் வரலாம் என்ற தூண்டுதல் தன்மை நிறைந்த அச்சுறுத்தலை வெளியிட்டார்; சீனா தன் நாணயத்தை
"திரிக்கிறது" என்றும் அமெரிக்காவிற்கு எதிராக பெறக்கூடிய வணிக ஆதாயத்திற்காக இவ்வாறு செய்கிறது என்றும்
அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Morgan Stanley Asia வின்
Stevan Roach
டாவோஸில், "பொருளாதார தேசியவாதம் அலைபோல் எழுச்சி" பற்றிப் பேசினார். அபிவிருத்தியடையும்
நாடுகள் என அழைக்கப்படுபவற்றின் பிரதிநிதிகள் ஒபாமாவின் ஊக்கப் பொதித் திட்டம், வங்கிகள் பிணை எடுப்பில்
இருந்து விளையும் பாரிய அமெரிக்கப் பற்றாக்குறைகள் உலகச் சந்தைகளில் கிடைக்கக்கூடிய தனியார் கடன்
வசதியை விழுங்கிவிடும் என்று குறைகூறினர்.
"பெரிய நாடுகள் சர்வதேச மூலதனச் சந்தைகளை தங்களுக்கு பயன்படுத்திக்
கொள்ளுகின்றன" என்று தென்னாபிரிக்காவின் நிதி மந்திரியான
Trevor Manuel
கூறினார். 1994ல் அந்நாட்டின் நிதியக் கரைப்புக் காலத்தில் அதிகாரத்தில் இருந்த முன்னாள் மெக்சிகோ
ஜனாதிபதி Ernesto Zedillo,
"நிதிய நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதை அமெரிக்கா காட்ட வேண்டும்.
அபிவிருத்தியடையும் நாடுகள் என்ற முறையில் நாங்கள் மூலதனச் சந்தையில் இருந்து ஒதுக்கிவிடப்பட மாட்டோம்
என்பதை அறிய வேண்டும்; ஏற்கனவே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது." என்றார்.
Britain's Financial Services Authority
இன் தலைவரான ஆடேர் டர்னர் பிரபு, இதே போன்ற கவலைகளுக்கு குரல்
கொடுக்கும் வகையில், "புதிய வணிக முறையின் ஆபத்து" பற்றி பேசி, வணிகத்தை விட கடன் கிடைப்பதுதான் அதன்
முக்கிய பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.
இந்த அழுத்தங்கள் வியாழனன்று பகிரங்கமாக வெடித்தன; அப்பொழுது துருக்கிய
பிரதம மந்திரி Tayyip Erdogan
இஸ்ரேலிய ஜனாதிபதியுடன் காசா நெருக்கடி பற்றிய குழுவிவாதத்தின்போது இஸ்ரேலிய ஜனாதிபதி சீமோன் பெரஸ்
உடனான சீற்றமான கருத்துப் பறிமாற்றத்தின் பின்னர், அடுத்து அரங்கில் இருந்து கோபமாக வெளியேறினார். இஸ்ரேலுடன்
நெருக்கமான அரசியல் இராணுவத் தொடர்புகளை கொண்டிருக்கும் அரசாங்க தலைவரான எர்டோகன் பெரஸிடம்
"கொலை என்று வந்தால் எப்படி நன்கு கொலை செய்வது என்று உங்களுக்கு தெரிந்துள்ளது." என கூறினார்.
டாவோஸ் அரங்கம் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, முதலாளித்துவ
வடிவமைப்பிற்குள் இருக்கும் தனிச்சொத்துமை, உற்பத்தி முறைக்கள், நிதி முறை மற்றும் போட்டி நாடுகள் இடையே
உலகம் பிளவடைந்திருக்கையில் ஒரு பகுத்தறிவார்ந்த, ஒருங்கிணைந்த சர்வதேச கொள்கையின் அடித்தளத்தில் சாத்தியமற்றது
என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ முறையின் பாதுகாவலர் என்ற முறையில் பேசிய புட்டின் கடந்த
மூன்று தசாப்தங்களில் நிதியப் பிரபுத்துவம் பாரிய முறையில் செல்வக் குவிப்பு பெறுவதற்கு கொண்டிருந்த நிதிய
ஒட்டுண்ணித்தனத்தை பற்றி கூறினார். "இதனால் பிரமிடுகள் போன்ற எதிர்பார்ப்புக்கள் பின்னர் என்பதைவிட
முன்னரே சரிந்துவிட்டன" என்றார்; மேலும் இச்சரிவிற்கு எவர் விலை கொடுப்பது என்றும் சுட்டிக் காட்டினர்;
"இது சம்பாதிக்கப்படாத செல்வம் என்பதற்கு ஒப்பாகும்; வருங்காலத் தலைமுறைகள் இக்கடனைத் திருப்பிக் கட்ட
நேரிடும்" என்றும் அவர் கூறினார்.
தற்போதுள்ள பொருளாதார, அரசியல் அமைப்பு முறைக்குள் உள்ள ஒரே எதிர்கால
தோற்றம் பெருகிய வறுமை மற்றும் தேசிய முரண்பாடுகள் பெருகுதல் மற்றும் அடக்குமுறை ஆகியவைதான். இவை
தவிர்க்க முடியாமல் கடந்த பெரு மந்த நிலைக்கு பின்னர் உலகப் போர் என்ற கொடூரத்தை தோற்றுவித்தன.
டாவோஸை அச்சுறுத்தும் பேய் என்னவெனில், தனியார் இலாபத்தை கருதாமல்,
மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சோசலிச சமூகத்தை கட்டியமைத்து முதலாளித்தவத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் வெளிப்பட்டுவிடுமோ என்பதுதான். உலகப்
பொருளாதாரத்தின் வீழ்ச்சி, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம்
ஒன்றுபட்டுப் போராடுவதற்கு பெரும் அத்தியாவசியம் ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது. |