World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Hundreds dead as Sri Lankan military creates humanitarian disaster

இலங்கை இராணுவம் மனிதப் பேரழிவை உருவாக்குகின்ற நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்

By Sarath Kumara and K. Ratnayake
28 January 2009

Back to screen version

பிரிவினைவாத தமிழீழ விடுலைப் புலிகளை அழிப்பதை இலக்காகக் கொண்ட இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள், நூறாயிரக்கணக்கான மக்கள் மோதலில் சிக்குண்டுள்ள நிலையில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. முன்னரங்கப் பகுதிகளுக்கு நிருபர்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ள அதே வேளை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பது, பலர் காயமடைவது மற்றும் அவசர மருத்துவ தேவைகள் பற்றிய செய்திகள் வடிகட்டி வெளியிடப்படுகின்றன.

ஞாயிற்றுக் கிழமை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிய பின்னர், புலி போராளிகளை சூழ தனது பொறியை இராணுவம் இறுக்கியுள்ளது. இப்போது புலிகள் சுமார் 25 கிலோமீட்டருக்கு 10 கிலோமீட்டர் என சிறிய பிரதேசத்துக்குள் நகரின் வடக்குப் பக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 மாதங்களாக தொடர்ந்த முன்னைய மோதல்களில் செய்தது போலவே, இராணுவம் புலிகளை பலவீனப்படுத்தவும் உள்ளூர் மக்களை பயங்கர பீதிக்குள்ளாக்கவும் கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களை நாடியுள்ளது.

அண்மைய நாட்களில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் உள்ள சடலங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே செஞ்சிலுவைச் சங்கம் இந்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது. தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்நுழைவது மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழிந்தவர்களின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக இருக்கக் கூடும். நேற்று கடும் காயமடைந்த 200 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு இராணுவம் அனுமதி தர மறுத்துவிட்டது என தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அவசர சிகிச்சைகள் வழங்காவிட்டால் அவர்கள் உயிரிழந்து விடுவர் என்றும் எச்சரித்திருந்தது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜக்குயிஸ் டி மாயோ ஊடங்களுக்குத் தெரிவித்ததாவது: "மக்கள் மோதல்களில் அகப்பட்டுள்ளனர், ஆஸ்பத்திரிகளும் அம்புலன்ஸ்களும் செல் தாக்குதல்களில் சிக்கியுள்ளன, காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தும் போது பல தொண்டர்களும் காயமடைந்துள்ளனர். தூசிகள் தணிந்த பிறகு எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் மோசமான மனிதப் பேரவலத்தையும் நாம் காணலாம்."

சிக்கியுள்ள பொதுமக்கள் பற்றிப் பேசிய டி மாயோ தெரிவித்ததாவது: "அவர்கள் தாக்குதல்களுக்குள் அகப்பட்டுள்ளதோடு ஆபத்தான நிலையில் உள்ளார்கள். மருத்துவ சிகிச்சைக்கான வசதி தற்போதைய நிலைமையில் ஏறத்தாழ இல்லவே இல்லை. அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு தங்குமிடம் தேவை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு பாதுகாப்பு தேவை." மோதல்களில் பெரும்பகுதி "உண்மையில் யுத்த சட்டங்களின் அடிப்படை விதிகளை முழுமையாக மதிப்பதற்கு நேர்மாறாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.

முல்லைத் தீவு மாவட்டத்தில் "பாதுகாப்பு வலயம்" ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இராணுவத்துடனும் புலிகளுடனும் செஞ்சிலுவைச் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும், அந்த பிரதேசம் தாக்குதல்களில் பாதிக்காமல் இருக்கவில்லை. பாதுகாப்பு வலயம் ஏற்கனவே இரு தடவை தாக்கப்பட்டுள்ளதாக த இன்டிபென்டன்ட் இன்று செய்திவெளியிட்டிருந்தது. அங்கு சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

நேற்று கொழும்பில் இருந்து பேசிய ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்ததாவது: "இது கடுமையான நெருக்கடியாகும். எங்களது ஊழியர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு வலயத்தில் இருந்தார்கள், அங்கும் ஆட்டிலறி ஷெல்கள் விழுந்துகொண்டிருந்தன. இந்த ஷெல்களால் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கடைசியாக திங்களன்று காலையில் 10 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர். இதை அவர்கள் நேரடியாக கண்டனர்."

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஷெல்கள் விழுந்து வெடித்ததை அடுத்து "பாதுகாப்பு வலயத்தில்" உள்ள தமது தொண்டு ஊழியர்களால் ஐ.நா. வுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தியில் இருந்து இன்றைய நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது. "இலங்கை இராணுவத்திடம் இருந்து ஷெல்கள் வந்து விழுந்ததை களத்தில் உள்ள எங்களது குழு உறுதிப்படுத்திக் கொண்ட போதிலும், அது புலிகளின் ஷெல்லுக்கு பதிலடியாக வீசப்பட்டது என்பது வெளிப்படையானது. அவர்களைச் சூழ படுகொலை செய்யப்பட்ட மக்களின் சடலங்கள் கிடந்தன. அவர்கள் ஐ.நா. வுக்கு பக்கத்தில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூட நினைத்திருக்கலாம். ஆனால் கவலைக்கிடமாக அன்றிரவு அந்த நினைப்பு தவறாய்ப் போனது," என அது வலியுறுத்தியிருந்தது.

நெருக்கடி பற்றிய ஊடக செய்திகள் குறைவானதாகும். 2006 ஜூலையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்ததில் இருந்து, அரசாங்கமும் இராணுவமும் மோதல் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்கள் செல்வதை தடுத்ததோடு இராணுவத்தின் தாக்குதல்களுக்கு சாதகமற்ற அனைத்து செய்திகளையும் இருட்டடிப்புச் செய்வதற்கு சமமான ஒரு நிலையை அமுல்படுத்தியது. இராணுவத்தையும் அரசாங்கத்தையும் மெல்லியதாக விமர்சித்த ஊடகவியலாளர்கள் கூட இராணுவ அனுசரணையிலான கொலைப் படைகளால் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.

அட்டூழியங்களுக்கான குற்றச்சாட்டுக்களை மறுப்பதை இராணுவம் வழமையாகக் கொண்டுள்ளதோடு, இஸ்ரேல் ஆயுதப் படைகள் கூறுவது போல், பொதுமக்களை "மனிதக் கேடயமாக" பயன்படுத்துவதாக புலிகளைக் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை என்ற அதன் மறுப்புக்கள் அனைத்தும் ஒருபுறமிருக்க, இராணுவம் தமிழர்-விரோத பேரினவாதத்தில் ஆழமாக ஊறிப்போயுள்ளதோடு ஒட்டு மொத்த தமிழ் சிறுபான்மையினரையும் எதிரிகளாக கருதுகிறது. இராணுவம் மோதல் பிரதேசத்தை சூழ தடுப்பு வேலி ஒன்றை ஸ்தாபித்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேற முற்படும் எவரையும் விசாரணை செய்து, புலி சந்தேக நபர் என கருதப்படும் எவரையும் தடுத்துவைப்பதோடு மருந்து உட்பட அடிப்படை மனிதாபிமான விநியோகங்கள் அங்கு செல்வதை தடுத்து வைத்துள்ளது.

ஏனைய செய்திகள் பெரும் அழிவுகளை சுட்டிக்காட்டுகின்றன. சனிக்கிழமை, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது பிரதான நிர்வாக அதிகாரியான இமெல்டா சுகுமார், கடந்த வியாழக்கிழமை தான் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் செல் தாக்குதல்களில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர் என பி.பி.சி. க்கு தெரிவித்திருந்தார். பழிவாங்கல் பற்றி விழிப்புடன் இருந்த அவர், இதற்கு இராணுவமே பொறுப்பு என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டினார். இராணுவம் பொறுப்பு என்பதை மறுத்த ஒரு இராணுவப் பேச்சாளர், சுகுமார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததையும் கண்டனம் செய்தார்.

திங்களன்று வெளியான டெயிலி மிரர் பத்திரிகை, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவை அதிகாரி டாக்டர் டி. வரதராஜா விடுத்த அவசர வேண்டுகோளை வெளியிட்டிருந்தது. பல்குழல் ஏவுகணைகளால் வீசப்பட்ட எரிகணைகளால் 300 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவசர மருத்துவ விநியோகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அரசாங்க சுகாதார அலுவலர் டாக்டர் டி. சத்தியமூர்த்தி, உடையார்கட்டு கிராமத்தில் தான் அமைத்திருந்த தற்காலிக ஆஸ்பத்திரி மீது ஞாயிற்றுக்கிழமை ஷெல் வீசப்பட்டதாக இன்றைய நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்திருந்தார். இந்த ஆஸ்பத்திரி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகும் போது சுமார் ஆயிரம் இடம்பெயர்ந்த பொதுமக்கள் அங்கிருந்தனர். நான்கு பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்குள் 33 சடலங்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டதோடு மூன்று நோயாளிகள் இரத்தம் வெளியேறியதால் உயிரிழந்தனர். இங்கு அறுவை மருத்துவர்கள் கிடையாது.

தன்னிடமுள்ள 100 காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழப்பர் என டாக்டர் சத்தியமூர்த்தி எச்சரித்தார். "நாங்கள் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் எங்களால் செயற்பட முடியும். தாக்குதல்கள் துரதிஷ்டவசமாக இன்னமும் தொடர்கின்றன. நாங்கள் பீதியான நிலைமையில் இருக்கின்றோம். நாங்கள் உதவியற்ற நிலைமயில் இருக்கின்றோம்," அவர் அந்த செய்தித் தாளுக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.

வட இலங்கையில் கட்டவிழ்ந்துகொண்டிருக்கும் மனிதப் பேரழிவு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவையும் கவலையை வெளிப்படுத்த தள்ளப்பட்டுள்ளது. திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி-மூன், "இலங்கையில் வன்னிப் பிராந்தியத்தில் நடக்கும் உக்கிர மோதல்களில் சிக்குண்டுள்ள பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் பற்றி தான் மிகவும் அக்கறை செலுத்துவதக" பிரகடனம் செய்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்துடனும் பேசுவதற்காக நேற்று கொழும்பு வந்திருந்தார். "பொதுமக்களுக்கு உதவுவதற்கும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்" அடிப்படை முயற்சிகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக அவர் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அயலில் உள்ள இலங்கையில் தமிழர்களின் தலைவிதி தொடர்பாக வெகுஜன ஆதரவு குவிந்துவரும் தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தனது அரசியல் பங்காளிகளிடமிருந்து எழும் பெரும் அழுத்தங்களுக்கு இந்திய அரசாங்கம் முகங்கொடுத்துள்ளது.

இந்த சகல அறிக்கைகளும் முற்றிலும் பாசாங்குத் தனமானதாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக 2002 யுத்த நிறுத்தத்தை மீறவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் "சர்வதேச சமூகம்" அரசாங்கத்துக்கு மெளனமாக அனுமதியளித்தது. ஜனாதிபதி இராஜபக்ஷ யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து, எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையையும் நிராகரித்ததோடு புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க சபதம் கொண்டபோது, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதன் அனுசரணையாளர்கள் எவரும் ஒரு கண்டன வார்த்தையை கூட வெளியிடவில்லை. புலிகளுடன் மோதுவதற்கு புலனாய்வு தகவல்கள், பயிற்சி மற்றும் ஆயுதங்களையும் வழங்கி இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை இராணுவத்துக்கு உதவின.

தனது இனவாத யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுக்க பெரும் வல்லரசுகளின், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவின் ஆதரவு உள்ளது என்பதை இராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். 2006ல் இராணுவ நடவடிக்கைகளை புதுப்பித்ததை அடுத்து, இராணுவம் முதலில் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றியதோடு பின்னர் வடக்கில் கவனம் செலுத்தியது. மாதக் கணக்காக தொடர்ந்த கசப்பான மோதல்களை அடுத்து ஜனவரி 2 புலிகளின் நிர்வாக தலைமையகம் இருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவம், வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான நுழைவாயிலான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவையும் பின்னர் முல்லைத் தீவையும் விரைவாக கைப்பற்றுவதில் வெற்றிகண்டது.

"பயங்கரவாதிகளிடம்" இருந்து வடக்கை "விடுவித்தால்" ஜனநாயகமும், சமாதானமும், சுபீட்சமும் வரும் என இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார். எவ்வாறெனினும், கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தமிழ் சிறுபான்மையினரதும் மற்றும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் செலவில் சிங்களத் தட்டுக்களின் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை காக்க 25 ஆண்டுகளாக யுத்தத்தை முன்னெடுத்தன. இராணுவ வெற்றிகள் தீவின் "இனப் பிரச்சினை" என சொல்லப்படுவதன் அல்லது தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கு முடிவுகட்ட ஒருபோதும் பங்களிப்பு செய்யாது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் பொது மக்களின் உயிர் மோசமாக அலட்சியம் செய்யப்படுவதைப் போலவே அரசாங்கப் படையினரதும் உயிர் அலட்சியம் செய்யப்படுகின்றது. வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை காரணமாக இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டுள்ள நாட்டின் சிங்களவர்கள் வாழும் தெற்கில் உள்ள கிராமப்புற இளைஞர்கள், மூன்று மாத பயிற்சியின் பின்னர் புலிகளின் முன்னரங்குகளை அழிப்பதற்கு பீரங்கிக் குண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

தனது ஊடக தணிக்கையின் ஒரு பாகமாக, இராணுவம் கடந்த ஆண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்தியது. ஆனால் எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டுக்களின் பிரதிபலனாக, 2008ல் கடைசி மூன்று மாதங்களில் நிலைகொண்டிருந்த 50,000 படையினரில் 3,000 பேர் கொல்லப்பட்டனர் என்பதை பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டார். பலர் காயமடைந்துள்ளதோடு முடமாகியுமுள்ளனர்.

இந்த வாரம் தனது வெற்றியை இராணுவம் பத்திரிகையாளர்களுக்கு காட்டிய போது மோதல்களின் பண்பு அம்பலத்துக்கு வந்தது. இராணுவம் முல்லைத் தீவை பிசாசுகளின் நகரமாக மாற்றியிருந்தது. இராணுவம் முன்னேறிய போது அங்கிருந்த 37,000 குடியிருப்பாளர்கள் வெளியேறிவிட்டதோடு பல கட்டிடங்கள் ஷெல் தாக்குதலால் சேதமாகியிருந்தன. இராணுவ நடவடிக்கையின் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த, பிரதேசம் பாழாக்கப்பட்டுள்ளதை மறந்து, தனது துருப்புக்களின் வெற்றிகளை பறைசாற்றியவாறு நகரில் செருக்கு நடைபோட்டார்.

புலிகள் தமது பின்னடைவுகள் பற்றி சில அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். கடந்த வாரம் பேச்சாளர் பி. நடேசன் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "விடுதலைக்கான போரில் ஒரு படை பிராந்தியத்தை இழப்பதும் அதை மீண்டும் கைப்பற்றுவதும் மற்றும் சுதந்திரத்தை அடைவதும் சாதாரணமானதாகும்... கடந்த காலத்தில் நாம் பல தடவை பின்வாங்கியிருக்கின்றோம் மற்றும் பெரும் வெற்றிகளை அடைவதற்கு மீண்டும் பாய்ந்திருக்கிறோம்." எவ்வாறெனினும், புலிகள் தமது பிரதான கோட்டைகள் அனைத்தையும் இழந்துவிட்டனர். தமது உட்கட்டமைபபு மற்றும் கனரக ஆயுதங்கள், அதே போல் தென்னிந்தியாவுக்கும் மற்றும் ஆசியாவில் வேறு இடங்களுக்குமான விநியோகப் பாதைகளையும் இழந்துவிட்டனர்.

எவ்வாறெனினும், புலிகளின் தோல்வியானது இராணுவக் காரணங்களில் அன்றி அடிப்படையில் அரசியல் காரணங்களால் தோன்றியதாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் அதன் முன்நோக்கு, தமிழ் தொழிலாளர்களின் விவசாயிகளின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்வதோடு, பெரும் வல்லரசுகளின் ஆதரவுக்கு வேண்டுகோள் விடுப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். "சர்வதேச சமூகத்தால்" தனிமைப்படுத்தப்பட்ட புலிகள், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும். மாறாக, அது கொழும்பு அரசியல் ஸ்தாபனம் முன்னெடுக்கும் குற்றவியல் யுத்தத்துக்காக சிங்கள தொழிலாளர்களை குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களை அவர்களது பொது நலன்களைச் சூழவும் யுத்தத்துக்கு முடிவுகட்டவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்குமான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துக்காகவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த தற்போது மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தெற்காசியா ஐக்கிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கான அரசியல் முன்நிபந்தனையை ஸ்தாபிப்பதன் பேரில், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகின்றது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்தை எதிர்க்கும் அனைவரையும் சோ.ச.க. பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved