World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Large demonstration in India against Sri Lankan war

இலங்கை யுத்தத்திற்கு எதிராக இந்தியாவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்

By Arun Kumara
2 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

தென்னிந்திய மாநிலமான சென்னையில் சனிக்கிழமை நடந்த முத்துக்குமாரின் எட்டு மனித்தியால மரண ஊர்வலத்தில் சுமார் 20,000 பேர் பங்குபற்றினர். அயலில் உள்ள இலங்கையில் நடக்கும் இனவாத யுத்தத்தை கண்டனம் செய்து கடந்த வியாழக் கிழமை நகரில் உள்ள மத்திய அரசாங்க அலுவலக கட்டிடத்தின் முன்னால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளைஞரே கே. முத்துக்குமாராவார்.

இந்த ஆர்ப்பாட்டம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடத்தும் யுத்தத்தை எதிர்த்து இந்தியாவிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பு இயக்கங்களின் ஒரு பகுதியாகும். தீவின் வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பிரதேசத்தின் மீது அரசாங்கத் துருப்புக்கள் கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதல்களையும் குண்டு வீச்சுகளையும் நடத்துகின்ற நிலையில், குறைந்தபட்சம் 200,000 பொது மக்கள் சிக்குண்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மரண ஊர்வலத்தில் பெருந்தொகையான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதே போல் பலவித தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்குபற்றினர். தென்னிந்நிய மாநிலத்தில் இழிநிலையில் உள்ள அகதி முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ள பல இலங்கை தமிழர்களும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதை தடுக்கும் முயற்சியாக, திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான (தி.மு.க.) தமிழ் நாட்டு அரசாங்கம், அடுத்த அறிவித்தல் விடுக்கப்படும் வரை மாநிலம் பூராவும் உள்ள கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் தங்குமிடங்கள் அனைத்தும் மூடப்படும் என சனிக்கிழமை அறிவித்தது. ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்களை இந்தச் செய்தி சென்றடைந்தவுடன், அவர்கள் முத்துக்குமாரின் பூதவுடலை எடுத்துச் சென்ற வாகனத்தை நிறுத்தி, அவரது குறிக்கோளை அடையும் வரை அவரது உடல் தகனம் செய்யப்படக் கூடாது என வலியுறுத்தினர்.

ஊர்வலத்தை தொடர வேண்டும் என வலியுறுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் நடந்தது. ஒரு தகவலின்படி, வி.சி.க. உறுப்பினர்கள் மாணவர்களை தாக்கி வாகனத்தின் கட்டுப்பாட்டை தம் கைக்குள் கொணர்ந்தனர். "பல சமாதான உடன்பாட்டின் பின்னர்" மாணவர்களின் உடன்பாட்டுடன் சனிக்கிழமை இரவு இறுதியாக அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இலங்கை யுத்தத்திற்கு இந்தியாவின் இராணுவ உதவியையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சமநிலைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. புலிகளின் பிரிவினைவாத கோரிக்கைகள் இந்தியாவில் அத்தகைய இயக்கங்களை ஊக்குவிக்கலாம் மற்றும் பிராந்திய எதிரிகளும், குறிப்பாக பாகிஸ்தான் இலங்கையில் தனது செல்வாக்கை பெருக்க இராணுவ உதவியை பயன்படுத்துகிறது என்ற கவலையில், ஒரு புறம் புது டில்லி புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரிக்கின்றது. மறுபக்கம், இலங்கையின் வடக்கில் மனிதப் பேரவலத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நெருக்கும் மத்திய ஆளும் கூட்டணியின் பங்காளியான தி.மு.க. யின் அழுத்தத்தையும் இந்திய அரசாங்கம் எதிர்கொள்கின்றது.

ஜனவரி 27, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவதை எதிர்த்து தமிழ் நாட்டு சட்ட சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்த மாணவர் குழுவொன்றை பொலிஸ் கைது செய்தது. இலங்கைக்கு யுத்த டாங்கிகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என தமிழ் நாட்டு பத்திரிகையில் வந்த செய்தியை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த விடயம் இன்னமும் நிரூபிக்கப்படாத அதே வேளை, இந்திய இராணுவமானது பயிற்சி, புலனாய்வு தகவல்கள், ராடர் மற்றும் ஏனைய வடிவிலான இராணுவ உதவிகளை வழங்குகிறது.

சனிக்கிழமை சுமார் 1,000 பேர் தென் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் விமானப் படை தளத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வட இலங்கையில் உள்ள பலாலி விமானப் படை தளத்துக்கு மரணம் ஏற்படுத்தும் மற்றும் மரணம் ஏற்படுத்தாத ஆயுதங்களை அனுப்ப தஞ்சாவூர் விமானப் படைத் தளம் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை கோருமாறு இந்திய அரசாங்கத்தை தூண்டுவதன் பேரில், புதன் கிழமை தமிழ் நாடு பூராவும் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற கூட்டணி அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை மாநில அரசு இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என அறிவித்த போதிலும், ஆதரவு அதிகரித்து வருகின்றது. தமிழ் நாட்டு அரசாங்க ஊழியர் சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் அரசியல் எதிர்ப்பை தணிக்கும் முயற்சியாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசாங்கம் கடந்த வாரம் வெளி விவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பியிருந்தது. பொதுமக்கள் உயிரிழப்பது குறைக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ முகர்ஜிக்கு உறுதியளித்திருந்தார். கடந்த வியாழன், தனது கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களை "விடுதலை செய்யுமாறு" புலிகளுக்கு அவர் 48 மணித்தியால இறுதி நிபந்தனை ஒன்றை விடுத்ததோடு அவர்களுக்கு "பாதுகாப்பு வலயம்" ஒன்றையும் அங்கீகரித்தார்.

தமிழ் நாட்டில் தி.மு.க. வும் எதிர்க் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அ.இ.அ.தி.மு.க.) இந்த பெறுமதியற்ற உறுதிமொழியை உடனடியாக வரவேற்றன. கடந்த வாரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு "பாதுகாப்பு வலயத்தின்" மீது இலங்கை இராணுவம் குண்டு வீசியதில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பொது மக்களின் விருப்பத்துக்கு எதிராக அவர்களை புலிகள் "மனிதக் கேடயங்களாக" வைத்திருக்கின்றனர் என்ற இராஜபக்ஷவின் கூற்று வெறும் போலியானதாகும். அங்கு சிக்கி இருப்பவர்கள் முன்னரங்கு பகுதிகளை கடக்கும் போது தாம் எதிர்கொள்ளக் கூடிய சரீர ஆபத்து பற்றி விழிப்புடன் இருப்பதோடு மட்டுமன்றி, அரசாங்க கட்டுப்பாட்டிலான பிரதேசத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்தால் அவர்கள் ஏறத்தாழ தடுப்பு முகாம்களுக்குள் சிறை வைக்கப்படுவார்கள் என்பதையிட்டும் விழிப்புடன் உள்ளனர்.

தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. வும் இலங்கையில் யுத்தத்துக்கு எதிராக கண்டனம் செய்ய அண்மைய மாதங்களில் ஒரு தொகை பகட்டு வித்தைகளை அரங்கேற்றின. முதலமைச்சர் மு. கருணாநிதி, இரண்டு வாரங்களில் இந்திய அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தாவிடில், ஒரு பலத்த அடியாக நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் நாட்டு உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்வார்கள் என பிரகடனம் செய்யும் ஒரு தீர்மானத்தை கடந்த ஆண்டு நடத்திய அனைத்துக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றினார். புது டில்லி ஒரு கனிவான இராஜதந்திர செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பியதை அடுத்து அவர்கள் உடனடியாக பின்வாங்கினர்.

வி.சி.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) மற்றும் தமிழ் தேசிய இயக்கம் (த.தே.இ.) போன்ற ஏனைய தமிழ் நாட்டுக் கட்சிகள் புலிகளையும் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் "ஈழம்" என்ற தனியான முதலாளித்துவ அரசுக்கான புலிகளின் கோரிக்கையையும் ஆதரிக்கின்றன. அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் விரோத பாரபட்சங்களுக்கு முடிவுகட்ட பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண எடுத்த முயற்சிகள் தோல்வி கண்ட காரணத்தால், ஒரு தனி அரசுக்கான கோரிக்கையைத் தவிர வேறு பதிலீடுகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கிடையாது என பிரகடனம் செய்தார்.

எவ்வாறெனினும், புலிகளின் வீழ்ச்சியானது வெறுமனே இராணுவத் தோல்வியில் அன்றி அவர்களது வங்குரோத்து அரசியல் முன்நோக்கில் இருந்து தோன்றுகிறது. ஒரு தனியான தமிழ் அரசுக்கான அதன் கோரிக்கை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அன்றி தமிழ் முதலாளித்துவ தட்டின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்வதோடு, சர்வதேச ரீதியில் பெரும் வல்லரசுகளுக்கு ஆதரவு கோரி அழைப்புவிடுப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலங்கையிலும் மற்றும் பிராந்தியம் பூராவும் முழு தொழிலாள வர்க்கத்துக்கும் அழைப்பு விடுக்கும் இயலுமை புலிகளுக்கு இல்லை என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பொதுவில் சிங்கள மக்களை அது கண்டனம் செய்வதும் மற்றும் சிங்கள பொது மக்கள் மீதான அதன் தாக்குதல்களும் கொழும்பில் உள்ள சிங்கள மேலாதிக்கவாதிகளின் தேவைக்கு நேரடியாகப் பயன்படுகின்றது.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் ஒரு புதிய முன்நோக்கை நோக்கி திரும்ப வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் மாகாண சபை தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி சகல விதமான இனவாத மற்றும் தேசியவாதங்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்வதோடு தொழிலாள வர்க்கத்தை அவர்களது சொந்த வர்க்க நலன்களுக்காக போராட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை சூழ அணிதிரட்டுகின்றது. தொடர்ச்சியாக யுத்தத்தை எதிர்க்கும் மற்றும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை பாதுகாப்பு படைகளை உடனடியாக திருப்பியழைக்க கோரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும். தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான அதன் அழைப்பு, கடந்த அரை நூற்றாண்டாக அடுத்து அடுத்து அழிவுகளை ஏற்படுத்தியுள்ள வகுப்புவாத, இனவாத மற்றும் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தும் இந்த பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.