World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama's program of war ஒபாமாவின் போர்த் திட்டம் By James Cogan அதிகாரத்திற்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே, ஆப்கானிஸ்தானிய மக்களை அடக்குவதற்கு தான் போரைத் தீவிரப்படுத்துவது, பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் இலக்குகளை அமெரிக்க இராணுவம் தாக்குவது தீவிரப்படுத்தப்படல் மற்றும் ஈராக்கை காலவரையற்று ஆக்கிரமிப்பது என்பவற்றை ஒபாமா நிர்வாகம் மிகத் தெளிவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ வன்முறை மூர்க்கத்தனமாக அதிகரிப்பதற்கும், அப்பகுதி முழுவதும் பரந்த போர் விரிவாக்கத்திற்குமான தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முப்படைத் தலைவர்களுடன் இரண்டு மணி நேரம் பேசிய பின்னர் அமெரிக்கா நடத்தும் போருக்கு இராணுவம் "போதுமான வழங்களையும் ஆதரவையும்" பெறும் என்ற உத்தரவாதத்தை ஒபாமா அளித்தார். "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை சுற்றி நாம் எடுக்கவிருக்கும் சில கடின முடிவுகளைப் பற்றி" விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த முடிவுகளின் சாராம்சம் செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றங்களின் இராணுவக் குழுக் கூட்டத்தில் செவ்வாயன்று பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸின் சாட்சியத்தில் குறிப்புக் காட்டப்பட்டது. பிரச்சாரகால வனப்புரையினால் அமெரிக்க மக்களிடையே இருந்த பரந்த போர்எதிர்ப்பு உணர்விற்கான அழைப்பை புதிய ஜனாதிபதி தெளிவாக நிராகரித்ததுதான் ஒபாமா கேட்ஸை நியமித்ததில் வெளிப்படையாயிற்று. இதே பதவியில் கடந்த இரண்டு ஆண்டுகள் கேட்ஸ் புஷ் நிர்வாகத்திற்காக பணி புரிந்து 2007 ஆரம்பத்தில் இருந்து 2008 ஆரம்பம் வரை ஈராக்கில் போர் பெருகுவதற்கு இயக்கம் கொடுத்தார். செனட்டர்களிடம் கேட்ஸ் கூறியதாவது: "இப்பொழுது நமக்கு மிகப் பெரிய இராணுவச்சவால் ஆப்கானிஸ்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. உங்களுக்கு தெரிந்தபடி, சமீப மாதங்களில் அமெரிக்க மத்திய ஆசியா மீது கூடுதலான கவனத்தைக் காட்டியுள்ளது. ஜனாதிபதி ஒபாமா நம்முடைய முதன்மை இராணுவ முன்னுரிமையாக ஆப்கானிஸ்தானிய களம் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்." ஆப்கானிஸ்தான் போர் "நீடித்து, கடினமாக இருக்கும்" என்று அவர் சேர்த்துக் கொண்டார். குறைந்த பட்சம் 2014 வரையிலாவது, அதாவது ஐந்து ஆண்டுகளுக்காவது போர்க்காலம் இருக்கும் என்றும் அவர் கூறினார். முன்னாள் தாலிபான் ஆட்சி விசுவாசிகள் மற்றும் ஆப்கானிய இஸ்லாமிய இயக்கத்தினர், ஆக்கிரமிப்பு எழுச்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் அதிகமாகும்போது அமெரிக்கத் துருப்பு இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் கூடும் என்றும் அவர் கூறினார். புதிய நிர்வாகம் மத்திய ஆசியாவில் இராணுவ நடவடிக்கையை அதிகரிக்கையில், ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கேட்ஸ் வலியுறுத்தினார். ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக எதிர்ப்பு மீண்டும் வெடிக்கக்கூடும் என்று எச்சரித்த அவர், "நம்முடைய துருப்புக்களுக்கு கடினமான காலம் காத்துள்ளது." என்றும் கூறினார். நம்முடைய "போரில் ஈடுபட்டுள்ள" துருப்புக்கள் ஒபாமா தேர்தல் காலத்தில் உறுதியளித்தது போல் 16 மாத கால அட்டவணைப்படி திரும்பப் பெறப்பட்டாலும், கணிசமான துருப்புக்கள் அங்கு நிலையாக இருக்கும் என்றும், "ஈராக்குடன் சிலமட்டத்தில் பல ஆண்டுகள் தொடர்பைக் கொண்டிருக்க நேரும்" என்றார். செனட் குழுவிடம் ஒபாமா கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புக்கள் மிக விரைவில் ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்புவார் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அமெரிக்க நேட்டோ பிரிவுகளின் ஆப்கானிஸ்தான் தளத்தில் தலைவரான தளபதி டேவிட் மக்கிர்னன் கோரிய நான்கு படை பிரிகேடுகளில் முதலாவது ஏற்கனவே ஆப்கானிஸ்தானத்தின் தலைநகராக காபூலுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ளது என்றார். 10 வது மலைப் பிரிவில் இருந்து 3,500 துருப்புக்கள் வார்டாக், லோகர் மாநிலங்களில் செயற்பாடுகளைத் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார். வசந்த காலத்தில் நடுப்பகுதியில் ஒபாமா, 2வது மரைன் சிறப்பு படைப்பிரிவை ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்படும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர். மற்றொரு மரைன் படைப்பிரிவு கோடை நடுவில் ஈடுபடுத்தப்படும். இறுதி கூடுதல் படைப்பிரிவு ஆண்டு இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். தீவிர மோதல்கள் ஆப்கானிஸ்தானுடன் நின்றுவிடாது. இனக்குழுரீதியாக மேலோங்கியுள்ள பஷ்டூன் ஆப்கானிய எழுச்சியாளர்கள் பாக்கிஸ்தானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடி பகுதியில் (FATA) ஆதரவையும் புகலிடத்தையும் கொண்டுள்ளனர். இதன் விளைவாக அமெரிக்க, நேட்டோ படைகள் தெற்கு ஆப்கானிய முழுப்பகுதியில் இருந்து அன்றாடத் தாக்குதல்கள் நடத்துவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேபோல் அப்பிரிவுகளின் தொண்டர்கள், ஆயுதங்கள் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. FATAவின் மீது மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள், மேலும் கூடுதலாக பாக்கிஸ்தானுள் ஆழமான தாக்குதல்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானை அமெரிக்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற ஒபாமாவின் உறுதிப்பாட்டின் தர்க்கரீதியான விளைவு ஆகும். ஆனால் இப்பொழுது இவற்றிற்கு இடையே எல்லை இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானையும் பாக்கிஸ்தானையும் பிரித்தல் "இயலாது" என்று கேட்ஸ் கூறினார். அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்களை தொடரும் என்றும், பாக்கிஸ்தான் மக்கள், அரசாங்கம் ஆகியவை இதை எதிர்த்தாலும் தொடரும் என்றும் அவர் கூறினார்; இதற்குக் காரணம் இந்த இலக்குகள் அல் கொய்தாவுடன் தொடர்புடையவை என்ற போலிக்காரணத்தையும் கூறினார். ஆப்கானிஸ்தானின் மீது 2001ல் படையெடுத்ததின் முக்கிய நோக்கம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அல்ல, எண்ணே வளம் கொழிக்கும் மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளில் அமெரிக்கச் செல்வாக்கை உறுதிப்படுத்த ஒரு தளம் அமைப்பது என்பதே. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ஈராக்குடன் அமெரிக்கத் துருப்புக்கள் ஈடுபட்டது ரஷ்யா, சீனா ஆகியவை மத்திய ஆசியாவில் அதிக அரசியல் பொருளாதார செல்வாக்கை உருவாக்க உதவியது என்ற கருத்தை உடைய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் கருத்தை பிரதிபலிப்பவராக ஒபாமா இருந்தார். ஆப்கானிஸ்தான் பற்றி மறு வலியுறுத்தல், இப்போக்கை மாற்றும் நோக்கத்தைக் கொண்டது ஆகும். கூடுதலான அமெரிக்க இராணுவப் படைகளுக்கு தளவாடங்களை அனுப்பும் பாதை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற மறைப்பில், மத்திய ஆசிய நாடுகளான காஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் கடந்து செல்லும் உரிமைகள், இராணுவ தளங்கள் ஆகியவற்றை நிறுவ தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க, நேட்டோ படைகளுக்கான விநியோகங்களில் பெரும்பகுதி FATA எல்லை கணவாய்கள் மூலம் செல்லுகின்றன; அங்கு அவை அதிகரித்தளவில் எழுச்சியாளர்களின் தாக்குதலுக்கு உட்படுகின்றன. திங்களன்று ஒரு நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ரஷிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க, நேட்டோ பிரிவுகளுக்கு பொருட்களை அனுப்ப தன்னுடைய தரைப்பகுதி, வான்வழி ஆகியவை பயன்படுத்த அனுமதிக்கப்டும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஜனாதிபதி ஹமித் கர்ஸாயின் தலைமையில் அது இருத்தியுள்ள கைப்பாவை அரசாஙக்கத்திற்கும் உறவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கேட்ஸின் சாட்சியம் குறித்தது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போருடன்", புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் "ஜனநாயகம்", "அபிவிருத்தி", "மனித உரிமைகள்" போன்றவை ஆப்கானிய மக்களுக்கு கொடுக்கப்படுவது பற்றி இடைவிடாமல் பேசி வந்தது. இத்தகைய கூற்றுக்களை ஒபாமாவின் சார்பில் கேட்ஸ் மறுத்து செனட்டர்களிடம் பின்வருமாறு கூறினார்: "ஒருவித மத்திய ஆசிய Valhalla நகரத்தை அங்கு நிறுவும் நோக்கத்துடன் நாம் இருந்தால், நாம் தோற்றுவிடுவோம்; ஏனெனில் நேர்மையாக விடை கூறுவது என்றால், உலகில் எவருக்கும் அந்த அளவு நேரமோ, பொறுமையோ அல்லது பணமோ கிடையாது." ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை பற்றி ஒரு உண்மையான, மிருகத்தனமாக வரையறை இது. கர்ஸாயின் அரசாங்கம் அடிக்கடி அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வட்டங்களில் அதன் எல்லையற்ற ஊழல், ஆப்கானிய மக்களிடையே ஆதரவின்மை ஆகியவற்றிற்காக எள்ளி நகையாடப்படுகிறது. கர்ஸாயின் ஆட்சிக்கு அமெரிக்க உற்சாகம் குறைந்திருப்பதற்கு மற்றொரு காரணம் அது அமெரிக்க விமானத் தாக்குதல்களை, ஆப்கானிய குடிமக்களை இலக்கு கொண்டு கொல்லுவதைக் குறைகூறுதல் ஆகும். ஒபாமா நிர்வாகமோ குருதி சிந்துதுதலைப் பெருக்கத்தான் விரும்புவதுடன், தனது கைப்பவை ஆட்சியில் இருந்து எவ்வித குறுக்கீட்டையும் விரும்பவில்லை. புதனன்று நியூயோர்க் டைம்ஸ் இந்த ஆண்டு பிற்பகுதியில் நாட்டில் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து கர்ஸாயியை அகற்றும் நோக்கத்திற்கு ஒபாமா ஆதரவு கொடுக்கக்கூடும் என்று அறிவித்தது. ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சிகளுக்கு ஒரு மாற்றீடு ஈராக் மாதிரியிலான "கூடுதல் படை அதிகரிப்பாகும்". இப்பொழுது அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவரும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகளின் தலைவரான டேவிட் பெட்ரீயஸ் அவருடைய அதிகாரிகளை, குறிப்பாக ஈராக்கின் சில பகுதிகளில் இருப்பவர்களை கிளர்ச்சித் தலைவர்கள் கட்சி மாற இலஞ்சம் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளார்; இதற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்குப் பணமும் உள்ளூர் ஆட்சியில் ஒரு பங்கும் கொடுக்கப்படும். இதேபோன்ற விதத்தில், ஒபாமா நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் டைம்ஸிடம் "மத்திய அரசாங்கத்திற்கு ஒரு மாற்றீடு போல் மாநிலத் தலைவர்களுடன் நிர்வாகம் செல்படும் இது ஐரோப்பிய நண்பர்களிடம் பொருளாதார வளர்ச்சி, தேசக் கட்டமைப்பு ஆகிய பொறுப்புக்களைக் கொடுக்கும்; இதையொட்டி அமெரிக்கப் படைகள் எழுச்சியாளர்களுடம் போர்புரிவதில் கவனத்தை செலுத்த முடியும்." இக்கொள்கையின் விளைவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே கூடுதலான அழுத்தம் என்ற வரக்கூடும். தன்னுடைய சாட்சியத்தின்போது கேட்ஸ் நேட்டோ உறுப்பு நாடுகளும் "கூடுதல் உதவிக்கு வரவேண்டும்" என்றும், ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்குக் கூடுதலான படைகளையும் வளங்களையும் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். அதிகமான 30,000 அமெரிக்கத் துருப்புக்கள் வந்தாலும், ஆக்கிரமிப்பு படைகள் கடுமையான ஆள்பற்றாகுறைவில்தான் இருக்கும். ஈராக்கில் நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு இடையில், செனட்டில் கேட்ஸ் "ஏற்கனவே தளபதி மக்கிர்னன் கோரிய படைகளை விட அதிகமாக அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட முடியுமா என்பது பற்றி தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை" என்று கூறினார். புஷ்ஷின் கீழ் நேட்டோ நாடுகள், குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, துருக்கி ஆகியவை ஆப்கான் போரில் அவை கூடுதலான ஊக்கத்தைக் காட்டி வியத்தகு வகையில் படைகளை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளை பல முறையும் நிராகரித்தன. இப்பொழுது அவை வெள்ளை மாளிகையில் உள்ள ஒபாமாவிற்கு என்ன விடையிறுப்பது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.. BBC நிருபர் ஒருவர் செவ்வாயன்று கூறினார்: "நேட்டோ நட்பு நாடுகள் இப்பொழுது உதவவில்லை என்றால், ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவைப் பிரிப்பதில் உள்ள நீண்டகால தாக்கங்கள் கடுமையாகவிடும்... இப்பிரச்சினைதான் ஏப்ரல் ஆரம்பத்தில் நடக்க இருக்கும் நேட்டோவின் 60வது ஆண்டு விழாவில் பிரச்சனையாக உருவாகும் வகையில் வெளிப்படக்கூடும்."புஷ் ஆண்டுகளில் இருந்த இராணுவவாதம் மற்றும் புதிய காலனித்துவ தலையீடுகளில் இருந்து உறுதியான மாற்றம் செயல்படுத்தப்படும் என்ற போலித்தோற்ற நினைப்பில்தான் ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வாக்களிக்கும் நிலைக்கு ஊக்குவிக்கப்பட்டனர். மாறாக, இவர்கள் புஷ்ஷின் நிர்வாகத்தைப் போலவே மிருகத்தனமான இராணுவ சக்தியைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க முற்படும் நிர்வாகத்தைத்தான் கொண்டுள்ளனர். கணக்கிலடங்கா ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்தானிய உயிர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களும் இந்த வழிவகைக்கு தியாகம்செய்யப்படும். அமெரிக்க "ஜனநாயகத்தின்" இழிந்த தன்மையை மட்டும் இல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சி முறையுடன் முறித்துக் கொள்ள வேண்டியதன் தேவையையும் ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்ட அடிப்படை மறுதகவமை தொழிலாள வர்க்கத்திற்கு தேவை என்பதையும் அந்த உண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |