World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The rising tide of economic nationalism

பொருளாதாரத் தேசியவாதம் அலைபோல் எழுச்சி

By Peter Symonds
30 January 2009

Back to screen version

உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய பொருளாதார தேசியவாதத்தின் துர்நாற்றும் எழுச்சி பெற்றுள்ளது. வீழ்ச்சியடையும் தொழில்துறை மற்றும் வேலை இழப்புக்களினால் ஏற்படும் பெருகிய சீற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் அரசாங்கங்கள் "உங்கள் அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்குக" என்ற கொள்கை 1930 களில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுத்தது என்றாலும் அதே பாதுகாப்புவாத நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

நவம்பர் மாத மத்தியில் நடைபெற்ற G-20 மாநாட்டில் உலகின் மிகப் பெரிய பொருளாதார வலிமை பெற்ற நாடுகளின் தலைவர்கள் வணிகம், முதலீடு ஆகியவற்றிற்கான தடைகளை ஒரு வருடத்திற்கு உயர்த்துவதில்லை என்று உறுதியளித்திருந்தனர்; உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் தடைகளை கூட விதிக்கவில்லை என்று கூறினர். அக்கூட்டறிக்கை உலக வணிகத்திற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தோல்வியுற்ற டோஹா பேச்சுவார்த்தை சுற்றுக்களை மீண்டும் தொடர வேண்டும் என்ற உறுதிமொழியையும் கொண்டிருந்தது.

ஆனால், "ஓராண்டிற்கு கையெழுத்திட்ட நாடுகளை கட்டுப்படுத்தம் எனக் கூறிய தீவிர உறுதிமொழி, ரஷ்யா, கார்களை பொறுத்தவரையிலான தனது திட்டமிட்டுள்ள பாதுகாப்பு வரிகள் அதிகரிப்பை செயல்படுத்த இருப்பதாக அறிவித்ததுடன் 36 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மாஸ்கோ இப்படி உறுதிமொழியை மீறியது மற்ற G20 நாடுகளான இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, ஆர்ஜென்டினா போன்றவற்றையும் பாதுகாப்பு வரித் திட்டத்தை அதிகரிப்பதற்கு தள்ளியது" என்று இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பாதுகாப்புவரி நடவடிக்கைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் பல வடிவமைப்புக்களில் செயல்படுத்தப்படுகின்றன.

டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரையில், WTO இயக்குனர் தலைவரான பஸ்கால் லாமி கடந்த மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாரிப்பு நடத்தும் திட்டமிட்டிருந்த மந்திரிகள் கூட்டத்தை இரத்து செய்துவிட்டார்; "மிக அதிக அளவு ஏற்கமுடியாத தன்மையை கொண்ட தோல்வி இம்முயற்சியில் ஏற்படும், அது பேச்சுவார்த்தைகளை சுற்றுக்கள் மட்டும் இல்லாமல் WTO முறையையே பெரிதும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக" அவர் அறிவித்தார். இந்த வாரம் சற்றே நம்பிக்கை கொடுக்கக்கூடிய விதத்தில் லாமா கருத்துக் கூறினார். பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் பேச்சுச் சுற்று முடிவு என்பது "பறித்துக் கொள்ளக்கூடிய உயரத்தில் இருக்கும் பழம் போல்" என்றும் திட்டத்தில் 80 சதவிகிதம் தயாரிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார். ஆனால் "எஞ்சியிருக்கும் 20 சதவிகிதம் பற்றி கடுமையான கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவைதான் கடந்த ஆண்டுத் தோல்விக்கும் காரணமாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

புதிய ஒபாமா நிர்வாகம் பாதுகாப்பு வரிகள் என்னும் எழுச்சி பெற்றுள்ள அலைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள டிம் கீத்னர் சீனா தன்னுடைய ஏற்றுமதியை அதிகரிக்க நாணய மதிப்பை திரிக்கிறது என்று குற்றம் சாட்டிய வகையில் கூறினார். "நாணயத் திரித்தல் செய்யும் நாடு" என்று பெய்ஜிங்கை குற்றம் கூறுவது அமெரிக்க வணிகச் சட்டத்தின்கீழ் ஒரு பரந்த வகையிலான தண்டனைமுறை, பாதுகாப்பு வரிகள் மற்றும் பொருளாதாரத் தண்டனைகளை சீனாவிற்கு எதிராக கொண்டுவர வெள்ளை மாளிகையை அனுமதிக்கும்.

பிரதிநிதிகள் மன்றத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்யிசினர் ஒரு படி மேலே சென்று ஒபாமாவின் புதனன்று ஏற்கப்பட்டுள்ள $825 பில்லியன் ஊக்கப் பொதியில் "அமெரிக்க பொருட்களை வாங்குக" என்ற விதியை சேர்த்துள்ளனர். இந்த விதியின்படி உள்கட்டுமான திட்டங்கள், ஊக்கப்பொதியால் நிதியம் பெறுபவை அமெரிக்காவில் தயாரிக்கப்படும எஃகு, இரும்பு ஆகியவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. இது ஐரோப்பிய எஃகுத் தயாரிப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. ஜனநாயகக் கட்சி செனட்டரான பைரன் டோர்கன செனட் வாக்கெடுப்பிற்கு இந்த பொதி தொடர்பான சட்டம் வரும்போது பெரும்பாலான வெளிநாட்டுத் தயாரிப்பு பொருட்களை ஒதுக்குவதற்கான பரந்த நடவடிக்கையை திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் பதிலடியைத் தூண்டுதல், ஒரு முழு வணிகப் போரைத் தூண்டுதல் ஆகியவற்றை அச்சுறுத்தலாக கொண்டுள்ளன. அமெரிக்க ஏடான Foregin Policy ல் வந்துள்ள கருத்து ஒன்று ஊக்கப் பொதியில் உள்ள "வெளிப்படையான பாதுகாப்பு வரிக் கருத்து வார்த்தை பிரயோகம், உலகின் மற்ற பகுதிகளில் ஒரு தீய அடையாளமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். இந்தியா அல்லது இந்தோனேசியா பாதுகாப்பு வரிக் கொள்கை என்றால் உலகம் அதைச் சமாளிக்க கூடியதாக இருக்கும். ஆனால் அமெரிக்கான தன்னுடைய மரபாரந்த தலைமைப் பங்கை கைவிட்டு இவ்வாறு செய்தால் வணிக முறைக்கு பெரும் தொந்திரவு ஏற்படும்." என்று எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு வரிக்கு எதிராக பெருகி வரும் எச்சரிக்கைகள் ஏற்கனவே இந்த வார டாவோஸ் பொருளாதார உச்சிமாநாட்டில் கொடுக்கப்பட்டன; அதைக் கூறியதில் சீன, ரஷ்ய பிரதமர்களும் இருந்தனர். ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெட்வடேவின் மூத்த ஆலோசகர் ஒருவரான ஈகோர் யூர்கன்ஸ், மாஸ்கோ மற்ற தலைநகரங்களின் கடுமையான கசப்பின் சில பிரிவினருக்கு குரல் கொடுக்கும் வகையில் அமெரிக்க மீட்புத் தொகுப்பு பலவற்றின் பாதிப்பு பற்றியும் பேசினர். "சீன அல்லது ரஷ்யர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களை [அமெரிக்காவின் பாரிய பற்றாக்குறைக்கு நிதி அளிக்க] வாங்க வேண்டும் என்று திரு. ஒபாமா எதிர்பார்க்கிறார். ஆனால் இத்தகையது, தத்துவரீதியாக பாதுகாப்புவாதம் மட்டுமல்லாது அக்கருத்து அற்பத்தனமாக தன்னலத்தைக் கொண்டிருக்கிறது." என்றார்.

அடிக்கு பதிலடி போன்ற வணிக நடவடிக்கைகள் மற்றும் சட்டபூர்வ சவால்கள் ஆகியவை பெருகிவருகின்றன. WTO விற்கு முன் வந்துள்ள இரண்டாம் வழக்கில், சீனா இந்த வாரம் அமெரிக்க நடவடிக்கைகளான எஃகுக் குழாய்கள், டயர்கள், பின்னப்பட்ட சாக்குகள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக புகாரைக் கொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெய்ஜிங் இந்த பூசல் பற்றிய பிரச்சினையை எழுப்பியபின், வாஷிங்டன் அரச மானியம்பெறும் சீனப்பொருள்களுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கையை தொடங்கியது. ஜேர்மனிக்கு அடுத்தாற்போல் உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக இருக்கும் சீனாவுக்கு எதிராக WTO இல் 7 விசாரணைகள் உள்ளன. இவை அனைத்தும் அமெரிக்காவுடன் தொடர்புடையவை ஆகும்.

1930களின் மந்த நிலைக்கு ஒப்பாக உலகப் பொருளாதாரத்தை தள்ளிவிடக் கூடிய திறன் பாதுகாப்பு வரி முறைக்கு உள்ளது என்பது பற்றி கடுமையான எச்சரிக்கை விடுக்கும் பொருளாதார வர்ணனையாளர்களுக்கு குறைவு இல்லை. சர்வதேச வணிகம் வியத்தகு அளவில் குறைந்து கொண்டிருக்கிறது; இந்த வாரம் உலகப் பொருளாதார மொத்த வணிகம் 2009ல் 2.8 சதவிகிதம் இருக்கும் என்று சர்வதே நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது; கடந்த ஆண்டு இது 4.1 சதவிகிதம் சுருங்கியது என்றும் அது கூறியுள்ளது. ஆயினும்கூட, உலகப் பொருளாதாரம் சுருங்குகையில், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடியின் பாதிப்பை சர்வதேசப் போட்டியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கத்தான் முயலுகின்றன.

1930TM Smoot-Hawley வரிச்சட்டத்தின் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை பலர் முன்கூட்டியே அறிந்திருந்தனர்; இது கிட்டத்தட்ட 900 அமெரிக்க இறக்குமதி வரிகளை அதிகமாக்கியது. 1,028 அமெரிக்கப் பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவரை இச்சட்டவரைவை ஒரு சட்டமாக்குவதற்கு கையெழுத்திடக்கூடாது என்று ஒரு மனுவைக் கொடுத்தனர். The Economist ஏடு சமீபத்தில் JP Morgan ல் பங்குதாரராக இருக்கும் Thomas Lamont ன் கருத்துக்களை மேற்கோளிட்டது; அவர் நினைவுகூர்ந்ததாவது: "இந்த வரிச்சட்டத்தில் தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கையழுத்து இடாதீர்கள் என்று கிட்டத்தட்ட ஹெர்பர்ட் ஹூவரின் கால்களில் விழுந்து கெஞ்சினேன். அந்தச் சட்டம் உலகம் முழுவதும் தேசியவாதத்தை தீவிரப்படுத்தியது." ஆயினும் கூட ஹூவர் சட்டத்தில் கையெழுத்திட்டார்; இது சூறாவளியென எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது; உலக வணிகச் சரிவை ஏற்படுத்தியதுடன் மற்றும் எதிரிடையான நாணய முறை முகாம்களை ஏற்படுத்தியது. அவை இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன."

வங்கியாளர்கள், நிதியமைப்பாளர்கள் மற்றும் உலகரீதியான மூலதனத்தின் போட்டிமிக்க பிரிவுகளுக்காக "தடையற்ற வணிகத்தை" முன்னெடுப்போர் பேசுகையில், போட்டித் தன்மை குறைந்த தொழில்துறைகளில் பாதுகாப்பு வரிக்கான ஆதரவு உறுதியாக உள்ளது. பொருளாதார தேசியவெறியைத் தூண்டிவிட்டிருப்பது வேலை இழப்புக்கள் மற்றும் வாழ்க்கைத்தர சரிவுகளின் தீவிரம் இவற்றிற்கு எதிரான தொழிலாளர் மக்களின் சீற்றத்தை திசை திருப்பும் சிந்தனாவாதத்திற்கு உதவுகின்றது; ஆனால் உண்மையில் இலாபமுறை என்று நெருக்கடிக்கு ஆதாரமான முறைக்கு எதிராக இது இயக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்திடம் இத்தகைய பிற்போக்குத்தன விசத்தினை ஊட்டுபவர்கள் தொழிற்சங்கத்தினரும் அவற்றின் கூட்டுக்களான பல மத்தியதர தீவிரவாத அமைப்புக்களும்தான். வேலைகள், பணிகள் ஆகியவற்றை காப்பதற்குப் பதிலாக, பொருளாதார தேசியம் என்பது தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து வறிய நிலையில் தள்ளுவதற்குத்தான் உதவும். அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ அல்லது எந்த நாட்டிலோ, இத் தொழிற்சங்க அதிகாரத்துவம், கடந்த மூன்று தசாப்தங்களாக உற்பத்தித் தொழில்துறை தாக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு தலைமை தாங்கியவர்களாவர். இப்பொழுது அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களை காப்பதற்காக பாதுகாப்புவாத ஊக்கப் பொதிகளின் ஒரு பகுதியாக இன்னும் ஊதியக் குறைப்புக்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றை தியாகம் செய்யவேண்டும் என்று ஆதரவு கொடுக்கின்றனர்.

அமெரிக்க கார்த் தொழிலுக்கு பிணை எடுப்புத் திட்டம் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆதரவை பெற்றுள்ளது; ஆனால் பிணையெடுப்பு காட்டுமிராண்டித்தனமான முறையில் தொழில்துறை மறுசீரமைக்கப்பட்டு ஆலைகள் மூடல், பணிநீக்கங்கள், முறையாக ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை வேண்டும் என்று கூறுகிறது. பிரான்ஸ், ஜேர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடனும் பெருநிறுவனங்களுடன் "தங்கள்" கார்த் தொழில்களை காக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன; அதிக பணிநீக்கங்கள் நடைபெற்றுவிடும் என்று கூறிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தை தமது வழிக்குகொண்டுவர முயல்கின்றனர். நாயை நாய் உண்ணும் என்ற போட்டியில் வர்க்க ஒத்துழைப்பின் தர்க்கவியல்தான் பொருளாதார தேசியவாதமாகும். இது ஒரு நாட்டில் இருக்கும் தொழிலாளர்களை உலகெங்கிலும் இருக்கும் மற்ற நாடுகளில் இருக்கும் அவர்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நிறுத்தி வைக்கும். இதன் இறுதி விளைவு வணிகப் போரும், இராணுவ மோதலுமாகும்.

தன்னுடைய நலன்களை பாதுகாப்புவரி முறை அல்லது "தடையற்ற வணிகம்" என்ற பதாகைகளின்கீழ் தொழிலாள வர்க்கம் பாதுகாக்க முடியாது. வேலைகள் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரங்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான உண்மையான போராட்டங்களுக்கான முன்னிபந்தனை அனைத்துவித முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளிடம் இருந்தும் தொழிலாளர்கள் அரசியல் சுயாதீனம் பெறுவது ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் உள்ள தொழிலாளர்களுக்கு இயல்பான நட்புடைய பிரிவுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள குறைவூதிய தொழிலாளர் பிரிவினராகும்; அவர்கள்தான் பயங்கரமான இலாபமுறையை இல்லாதொழித்து, அதனை உலகரீதியாக திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் பிரதியீடு செய்யும் பொது வர்க்க நலனில் பங்கு கொண்டவர்கள். இந்த முன்னோக்கைத்தான் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்வைக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved