World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US Senate report proposes a more "robust" policy toward Sri Lanka

அமெரிக்க செனட் அறிக்கை இலங்கை தொடர்பாக மிகவும் "மூர்க்கத்தனமான" கொள்கையை பிரேரிக்கின்றது

By Wije Dias, SEP presidential candidate
22 December 2009

Back to screen version

அமெரிக்க செனட் குழு டிசம்பர் 7 அன்று வெளியிட்ட அறிக்கையொன்று, இலங்கை தொடர்பாக குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தீவின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தம் மே மாதம் முடிவடைந்ததை அடுத்து, கொழும்பில் அமெரிக்க செல்வாக்கை பெருக்கிக்கொள்வதையும் மற்றும் சீனாவை எதிர்ப்பதையும் இலக்காகக் கொண்டதாகும்.

"இலங்கை: யுத்தத்தின் பின்னர் அமெரிக்க மூலோபாயத்தை மீண்டும் வரைதல்" என தலைப்பிடப்பட்டிருந்த இந்த இரு கட்சி அறிக்கை, பிராந்தியம் பூராவும் வளர்ச்சிகண்டுவரும் பூகோள-அரசியல் பகைமையின் மத்தியில் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்கி, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை உக்கிரமாக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து, ஈரானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல்களையும் கட்டுப்பாடு அச்சுறுத்தல்களையும் விடுக்கின்ற நிலையிலேயே கொழும்பில் தமது முயற்சிகளை பெருக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க மூலோபாயத்துக்கு எரிசக்தி வளம் மிக்க பிராந்தியங்களான மத்திய கிழக்கும் மத்திய ஆசியாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அதே வேளை, வாஷிங்டன் ஆசியா முழுவதும் சீனாவுக்கு எதிராக மிகவும் பரந்தளவில் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றது. 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் பொருளாதார பலம் சரிந்து வருவதையும் மற்றும் அதன் கவனம் எழுச்சிபெறும் சக்தியான சீனாவின் பக்கம் அழுத்தமாக பதிந்திருப்பதையுமே கோடிட்டுக் காட்டுகிறது. அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது போல், இந்த போட்டி சக்திகளுக்கு இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க களமாகும்.

"இலங்கையில், பூகோள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்காவின் நலன்களை அதன் கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள்" என சுட்டிக்காட்டிய பின்னர், "அமெரிக்கா இலங்கையை 'இழப்பதற்கு' இடமளிக்க முடியாது" என அந்த ஆவணம் எச்சரிக்கின்றது. இலங்கை தீவானது, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை சீனாவுடனும் ஆசியாவின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் இந்து சமுத்திரத்தில் தீர்க்கமான கடல்சார் வர்த்தக பாதையின் பிணைப்பில் அமைந்துள்ளது," என அது விளக்குகிறது. இலங்கையிலான ஸ்திரமின்மை, கடல் மார்க்கங்களுக்கு அப்பால், இப்போது அமெரிக்காவின் பிரதான மூலோபாய பங்காளியான இந்தியாவின் தென்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அறிக்கையின் பிரதான அக்கறை, இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமான வாஷிங்டனின் விமர்சனத்தின் விளைவுகளுடன் இணைந்ததாகும். "யுத்தம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் கையாண்ட முறை தொடர்பாக மேற்கத்தைய நாடுகள் மேலும் மேலும் விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், [ஜனாதிபதி] இராஜபக்ஷ தலைமைத்துவமானது பர்மா, சீனா, ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறது. மேற்கத்தைய நாடுகளைப் போல் அன்றி, சீனா எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி இராணுவக் கடன்கள், உட்கட்டமைப்பு கடன்கள் மற்றும் இலங்கையில் துறைமுக அபிவிருத்தி ஊடாக இலங்கையில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது," என அது தெரிவிக்கின்றது.

இலங்கை இராணுவம் ஆயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தமை, இரண்டரை இலட்சம் தமிழர்களை அடைத்து வைத்திருந்தமை, கொலைப் படைகளின் செயற்பாடு மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான அமெரிக்காவின் விமர்சனங்கள், எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் பாசாங்குத் தனமானவையாகவுமே இருந்தன. அமெரிக்கா இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு தொடர்ச்சியாக இராணுவ புலனாய்வு தகவல்களையும் உதவிகளையும் வழங்கியதுடன் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் நிபந்தனையின்றி சரனடைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தது. மிகவும் அத்தியாவசியமான 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதிய கடனை அங்கீகரிப்பதில் அமெரிக்கா தாமதித்ததோடு யுத்தக் குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கும் அது வேண்டுகோள் விடுத்தமையானது, சீனாவின் செலவில் கொழும்பில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கை பெருக்கிக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும்.

"இலங்கை மேற்கில் இருந்து அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தனிமைப்பட்டுள்ள" நிலையில் இந்த தந்திரோபாயம் தோல்வியடைந்து விட்டது என்பதை செனட் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. "பிராந்தியத்தில் அமெரிக்க பூகோள மூலோபாய நலன்களை" குறைத்து மதிப்பிட்டு "ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மட்டும் இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையால் செல்வாக்கு செலுத்த முடியாது," - அதாவது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட திட்டம்- என அந்த அறிக்கை பிரகடனம் செய்வதானது உறைய வைக்கும் ஒன்றாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இராஜபக்ஷ அரசாங்கத்தின் துஷ்பிரயோகங்கள் பற்றி முன்னைய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட காத்திரமற்றதாக ஆக்க வேண்டும் என்பதாகும்.

இலங்கையிலும் மற்றும் மிகவும் பரந்தளவில் பிராந்தியத்திலும் சீனாவின் இலக்குகளை விவரிக்கும் காங்கிரஸ் ஆய்வு சேவையின் (சி.ஆர்.எஸ்) ஆவணத்தை, அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. "வர்த்தக வசதிகளை ஏற்படுத்தவும் சீனாவின் எரிசக்தி இறக்குமதியை தக்கவைத்துக்கொள்ளவும் ஹோர்மஸ் ஜலசந்தி மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் மேற்குத் தொங்கலில் இருந்து மலாக்கா நீரினை வரை அதன் கடல்வழி தொடர்பை காத்துக்கொள்ள இலங்கை போன்ற நாடுகளுடன் நட்புகொள்ள முயற்சிப்பதாகவே பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகள் தோன்றுகின்றன," என சி.ஆர்.எஸ். ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.

2007ல் இலங்கையில் தென் நகரமான ஹம்பந்தொட்டையில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை அமைக்க சீனா இலங்கையுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை சி.ஆர்.எச். சுட்டிக் காட்டியுள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ், சீனா 2008ல் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. "2009ல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 34 மைல் தூரத்தில் உள்ள மீரிகமவில் ஒரு பரந்த முதலீட்டு வலயம் ஒன்று சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது," என அது தெரிவிக்கின்றது. "ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஊடாக போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்தும் மேற்கத்தைய நாடுகளின் தலைமையிலான முயற்சிகளை" தடுப்பதன் மூலமும் மற்றும் "இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்குவதன் மூலமும்" இராஜபக்ஷவுடன் நெருக்கமான அரசியல் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள சீனா முயற்சிக்கின்றது எனவும் சி.ஆர்.எஸ். அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

"அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுக்கு இலங்கையில் உள்ள மூலோபாய முக்கியத்துவமானது, புதிய 'மாபெரும் போட்டி' என குறிப்பிடப்பட்டு வரும் பிரமாண்டமான பூகோள அரசியல் உந்துதலின் ஒரு பிரதான பகுதியாக சிலரால் நோக்கப்படுகிறது," என செனட் அறிக்கை குறிப்பிடுகிறது. "புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிக்க, மேலைத்தேய சக்திகள் இலங்கைக்கு உதவ மறுத்துவிட்டதால்" தனது அரசாங்கம் "ஏனைய நாடுகளை நாடத் தள்ளப்பட்டது" என இலங்கை அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதை அது மேற்கோள் காட்டியுள்ளது. "இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த கணிப்பீடுகள் இந்து சமுத்திரத்தில் நீண்டகால அமெரிக்க மூலோபாய நலன்களை அச்சுறுத்தும்," என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

"இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களையும் மற்றும் அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலன்களின் சரியாக மதிப்பீட்டுடன் ஒரு பரந்த மற்றும் மிகவும் ஆற்றல் மிக்க அனுகுமுறையை இலங்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்" என செனட் குழு அழைப்பு விடுக்கின்றது. "ஒரு குறுகிய கால மனிதாபிமான அக்கறைகளால்" மட்டும் இயக்கப்படாத "பல அளவீடுகளுடனான" மூலோபாயத்தை செனட் குழு பரிந்துரைக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், "நாட்டின் சகல பிரதேசங்களுக்கும், விசேடமாக, [சிங்கள] தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு" அமெரிக்க பொருளாதார உதவிகளை விரிவுபடுத்தவும் மற்றும் அமெரிக்கா இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கும் அது வேண்டுகோள் விடுக்கின்றது.

ஒபாமா நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்கனவே காணக்கூடியதாக இருக்கின்றது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணை செயலாளர் ரொபட் பிளேக் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தமிழ் கைதிகளை "மீளக் குடியமர்த்தியதையும்" மற்றும் இன்னமும் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் வைக்கப்பட்டுள்ள மெனிக் பார்ம் பிரதான தடுப்பு முகாமின் "மிகச் சிறந்த" நிலைமையையும் பாராட்டினார்.

செனட் குழு அறிக்கையின் முக்கியத்துவம் அதன் சிபார்சுகளுக்கும் அப்பால் செல்கின்றது. இலங்கை மற்றும் தெற்காசியாவில் தனது இன்றியமையாத பூகோள-அரசியல் நலன்களை போராட்டமின்றி சீனாவுக்கோ அல்லது ஏனைய பகைவர்களுக்கோ விட்டுக்கொடுக்காது என்ற உண்மையை அது கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நடக்கும் யுத்தங்கள் தெளிவுபடுத்தியுள்ளது போல், கையை முறுக்குதல் மற்றும் பொருளாதார இலஞ்சங்களை வழங்குதல் போன்றவை வெற்றி பெறாவிட்டால், அமெரிக்கா இராணுவ வழிமுறைகளை பயன்படுத்த தயங்காது.

தடுத்து நிறுத்த முடியாத பகைமை மற்றும் யுத்தத்தை நோக்கிய நகர்வை தடுக்கும் வல்லமை படைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமேயாகும். யுத்தத்தை தோற்றுவிக்கும் இலாப அமைப்பையும் தேசிய அரச அமைப்பையும் தூக்கி வீசி, மனித குலத்தின் சமூகத் தேவைகளை அடைவற்கான ஒரு திட்டமிட்ட உலக பொருளாதாரத்தை பதிலீடு செய்வதில் இந்திய துணைக் கண்டத்திலும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் ஒரு பொது நலனை பங்கிட்டுக்கொள்கின்றனர். தற்போதைய இலங்கை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி அபிவிருத்தி செய்யும் அனைத்துலக சோசலிச முன்நோக்கு அதுவேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved