World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குMass arrests in Copenhagen கோப்பன்ஹேகனில் ஏராளமானவர்கள் கைது Stefan Steinberg சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு (COP15) உலகம் வெப்பமயமாகும் பிரச்சினை பற்றி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைதியாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், ஏராளமான கலகப்பிரிவு போலீஸாரால் எதிர்கொள்ளப்பட்டனர்; கூட்டத்தின் ஒரு பிரிவினர் அணிவகுப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, 1,000 பேருக்கும் மேலானவர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டனர். டேனிஷ் அரசாங்கம் பயன்படுத்திய இந்த மிருகத்தனமான நடவடிக்கைகள் சுதந்திரமாகக் கூடும் உரிமை என்னும் ஜனநாயக உரிமையை டேனிஷ் போலீசார் அப்பட்டமாக மீறியதைக் காட்டுகிறது. இது ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கும் சர்வதேச அளவில் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பங்களையும் கொண்டிருந்த இந்த அணிவகுப்பு பெரும் ஆயுதமேந்திய போலீஸ் பிரிவுகளால் சிதைக்கப்பட்டது; போலீசார் "தொல்லையின் இருப்பிடம்" என்ற தந்திரோபாயங்களை கையாண்டு எதிர்ப்புக் குழுக்களை பொறியில் கொண்டுவந்து காவலில் வைத்தனர். பெரும்பாலும் இளவயதினராக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கைவிலங்கிடப்பட்டு உறையவைக்கும் குளிரில் நடைபாதைகளில் பல மணி நேரம் உட்கார வைக்கப்பட்டு பின்னர் கூண்டில் அடைக்கப்பட்டனர். இத்தகைய தடுப்புக்காவலை ஒரு எதிர்ப்பாளர் விவரித்தார்: "ஒரு குளிர்ந்த தரையில் அமர்த்தப்பட்டு, நான்கு கம்பிவலைச் சுவர்களும் மேற்பகுதியும் இருந்தன. வெளியே போலீஸார் நாய்களுடன் காவல் காத்தனர்." "கைது செய்யப்பட்டவர்கள் முன்னால் இருந்தவர்கள் இருவர் மீது கால்களைப்போட்டு உட்கார வேண்டும்; பின்னால் உள்ளவர்மீது சாய்ந்திருக்க வேண்டும்; கைகள் விலங்கிடப்பட்டு பின் புறம் கட்டப்பட்டிருந்தன. பின்னால் இருப்பவருக்கும் வலி தாங்காது, முன்னால் இருப்பவரால் இவருக்கும் வலி தாங்காது. பார்த்தால் குவண்டநாமோ (Guantanamo) போல்தான் இருக்கும்." கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுடைய புகைப்படங்கள், சொந்தத் தகவல்கள் போலீசால் பதிவு செய்யப்பட்டபின் விடுவிக்கப்பட்டனர். திங்களன்று கிட்டத்தட்ட 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களில் 13 பேர் மட்டும்தான் காவலில் இருந்தனர். ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டதற்கு முன் வெள்ளியன்று சில பேரைத் தேர்ந்தெடுத்து காவலில் வைத்த செயற்பாடு இருந்தது; போலிசார் "எமது காலநிலை--உங்களுடைய வேலையல்ல" என்ற குழுவைச் சேர்ந்த 68 உறுப்பினர்களை அவர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தில் கைது செய்தனர். ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில் மக்களைக் கைது செய்ய டேனிஷ் போலீசிற்கு கோபன்ஹேகன் மாநாடு தொடங்குவதற்கு முன்பு இயற்றப்பட்ட ஒரு டேனிஷ் பாராளுமன்றச் சட்டம் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. ஞாயிறன்று, போலீஸார் 257 ஆர்ப்பாட்டக்காரர்களை "தொல்லையின் இருப்பிடத்திற்கு" பின்னர், அவர்களில் ஒரு பிரிவை Osterport நிலையத்திற்கு அருகே கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். "தொல்லையின் இருப்பிடம்" என்னும் தீவிர தந்திரோபாயம் மற்றும் எதிர்ப்பாளர்களை ஏராளமாகக் கைது செய்தல் என்பது புதிதல்ல. சமீபத்தில் உலகெங்கிலும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் இது பெருகிய முறையில் கையாளப்படுகிறது--குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் G20 உச்சிமாநாட்டை எதிர்த்த ஆர்ப்பட்டக் குழுவை சுற்றிவிளைத்துப் பிடித்த விதத்தில். லண்டன் போலீஸ் வளைத்துப் போட்டிருந்த பகுதியில் ஒரு எதிர்ப்பாளர் இறந்து போனார். ஆனால் சனிக்கிழமைதான் முதல்தடவயையாக "பொறுத்தக் கொள்ளுவதற்கு இல்லை" (zero tolerance) என்ற போலீஸ் தந்திரோபாயம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் முதல் தடவையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இப்படி முற்றிலும் தூண்டுதலற்ற போலீஸ் நடவடிக்கை COP 15 உச்சி மாநாடு இரண்டாம் வாரத்தில் நுழையும்போது அனுப்பப்படும் தெளிவான அடையாளம் ஆகும். இந்த வாரம் 110 அரசாங்கங்களின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள். டேனிஷ் அதிகாரிகள் மாநாட்டு மையத்தின் அருகே எந்த எதிர்ப்பும் பொறுத்துக் கொள்ளப்பட முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட விரும்பினர். அரங்கத்திற்குள்ளே நடக்கும் செயற்பாடுகள் உலகெங்கிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய கவலைகளை பிரதிபலிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களால் "தடைக்கு உட்படக்கூடாது"--மக்களோ உலகத் தலைவர்கள் உலகம் வெப்பமயமாதலுக்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கும் எந்த உடன்பாட்டிற்கு ஒத்துவராத நிலைபற்றி பெரும் பீதி அடைந்துள்ளனர். முதலாளித்துவத்தின் வடிவமைப்புக்குள் மற்றும் உலகம் போட்டியிடும் தேசிய அரசுகளாக வளர்ச்சி பெறும் நாடுகள் என்ற விதத்தில் பிளவுற்றுள்ள தன்மையில், ஒரு பகுத்தறிவார்ந்த, சர்வதேசிய ஒருங்கிணைக்கும் கொள்கைகளைக் கொண்டு உலகம் பெருகும் கார்பன் வெளிப்பாடுகளின் பேரழிவு தரும் திறனுடைய விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட இயலாமற் போகக்கூடும் என்ற படிப்பினையைத்தான் மாநாடு காட்டுகிறது. அமெரிக்காவின் தலைமையில் பிரதான ஏகாதிபத்திய சக்திகள், வறிய, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது கார்பன் வெளியீடுகள் வரம்பை மீறினால் பொருளாதாரச் சுமைகள் கொடுக்கப்டும் என்று அச்சுறுத்தும் காட்சியைத்தான் மாநாடு கொடுத்துள்ளது. மேலும் முக்கிய வணிக முகாம்களுக்கு இடையே --அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா என்ற விதத்தில் உள்ள-- நாடுகளுக்கு இடையே பெருகியுள்ள அழுத்தத்தை இன்னும் அதிகமாக மாநாடு வெளிப்படுத்தியுள்ளது. இந்த முகாம்களின் உயரடுக்குகளும், தனி நாடுகளும் காலநிலை மாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சொந்த நிதிய மற்றும் மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்கத்தான் முயல்கின்றன. கூடியிருந்த நாடுகளின் மாநாட்டின் பிரதிநிதிகள் சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர்க்கும் வகை பற்றி தமக்கிடையே மோதலில் இருக்கும் அதே நேரத்தில், காலநிலை ஆர்வலர்களுக்கும் மற்றும் ஒன்றுகூடி எதிர்ப்பையும் ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த விரும்பும் சாதாரண மக்களுக்கும் எதிராக அரசுகள் முழு சக்தியை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கைகள் வேண்டும் என்பதில் அவர்கள் தமக்கிடையே உடன்பட்டுள்ளனர். கோபன்ஹேகனில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இயக்கப்பட்ட அடக்குமுறை உலகம் முழுவதும் ஜனநாயக, சமூக உரிமைகளுக்கு எதிராக முதலாளித்துவ அரசாங்கங்களும் ஐரோப்பிய முதலாளித்துவமும் நடத்தும் பெருகிய தாக்குதலின் வெளிப்பாடுதான். போருக்குப் பிந்தைய காலத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனி, டென்மார்க் உட்பட ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்றவை, உலகிற்கு தங்களை தடையற்ற பேச்சுரிமை, ஜனநாயகத்தின் கோட்டைகள் என்று காட்டிக் கொண்டன. ஸ்காண்டிநேவிய நாடுகளுள் உலகின் மிகப் பழமையான முதலாளித்துவ ஜனநாயக முறைகள்தான் ஏராளமாக உள்ளன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது எப்பொழுதுமே குறைந்த வரம்பும், நிபந்தனைகள் நிறைந்ததுமாகத்தான் இருந்து வந்துள்ளது. ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் அவற்றின் அடிப்படை நலன்கள் தொழிலாள வர்க்கத்தின் சவால்களால் அச்சுறுத்தப்படக்கூடும் என்று உணரும்போதெல்லாம், அவை அவற்றை போலீஸ் அடக்குமுறை, பெரும் பாதிப்பை ஏற்படுத்துதல் என்ற முறையில் எதிர்கொள்ளுகின்றன. கடந்த சில தசாப்தங்கள் --போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றம் முடிவடைந்து, பொருளாதார நெருக்கடித் தீவிரம் மற்றும் சமூக சமத்துவமின்மை பெருகிய நிலையில்-- ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பதையும், அரசின் போலீஸ் அதிகாரங்கள் தீவிரமாக்கப்படுவதையும் கண்டுள்ளன. இப்பொழுது ஐரோப்பா போரில் ஈடுபடுகிறது. பரந்த மக்கள் எதிர்ப்பு இருக்கையில், ஜேர்மனி, பிரான்ஸ் இன்னும் பல ஸ்காண்டிநேவிய நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்காவுடன் சேர்ந்து படைகளை அனுப்பியுள்ளன. தங்கள் ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொள்ள இப்பொழுது இவை முயல்கின்றன. ஒரு வாரம் முன்புதான், ஐரோப்பாவின் உயரடுக்கு, ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு அவருடைய முடிவிலாப்போர் மற்றும் நவ காலனித்துவ வெற்றி பற்றிய தகவலைப் பிரச்சாரப்படுத்த நோபல் சமாதானப் பரிசு என்ற அரங்கை அமைத்துக் கொடுத்தது. 2006ல் இனவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் டேனிஷ் செய்தித்தாளில் முகம்மது பற்றிய கேலிச்சித்திரங்களில் வெளியிடப்பட்டதற்கு டேனிஷ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆதரவை முக்கிய அரசியல் புள்ளிகள் கொடுத்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், இஸ்லாமிய-எதிர்ப்புப் பிரச்சாரம் ஐரோப்பாவில் புதிய நுழைவாயிலைக் கண்டுள்ளது; சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தின் மசூதிக் கோபுரங்கள் எழுப்புவதற்கு வந்துள்ள தடை இதற்குச் சான்றாகும். போர், இனவெறி, வாழ்க்கைத் தரங்கள், சமூகத் தரங்கள் ஆகியவற்றின்மீது இடைவிடாத் தாக்குதல்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளுடன் பொருந்ததாது. இந்தப் பட்டியலில் இப்பொழுது காலநிலை பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையை சேர்ப்பதும் தேவையாகிறது. ஒவ்வொருவிதத்திலும் பொதுமக்கள் தங்கள் வேறுபாடுகளை அந்தந்த அரசாங்கங்களுக்கு எதிராக வெளிப்படுத்தும்போது, அரசாங்கங்கள் "சிறிதும் பொறுத்தக் கொள்ள முடியாது" என அடக்குமுறையில்தான் ஈடுபடுகின்றன. ஜனநாயக உரிமைகளைக் காத்து ஒரு முற்போக்கான தீர்வை உலகம் வெப்பமயமாதல் என்ற அச்சுறுத்தலுக்காக காண்பதற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்ப்பது ஒன்றுதான் வழியாகும். |