World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Twenty members of the LTTE convicted in France

பிரான்சில் இருபது விடுதலைப் புலி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்

By Athiyan Silva
9 December 2009

Back to screen version
 

பிரான்சில் அண்மையில் 20 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது குற்றத்தீர்ப்பு வழங்கி சிறைவைக்கப்பட்டமை ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலாகும். இது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினர் மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறையையும் ஊக்குவிக்கின்றது.

நவம்பர் 23 அன்று பிரெஞ்சு நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில், பிரான்ஸ்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (சி.சி.டி.எப்ஃ) என்ற புலிகள் ஆதரவு அமைப்பின் தலைவர் நடராஜா மதீந்திரனும் அடங்குவார். அவருக்கு ஏழு ஆண்டுகள் மிக நீண்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் வாழும் சுமார் 75,000 புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் சுமார் 5 மில்லியன் யூரோக்களை (7.4 மில்லியன் டொலர்) சேகரித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இரு விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு நான்கு ஆண்டுகளும் இன்னுமொருவருக்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதே வேளை, ஏனையவர்களுக்கு மூன்றரை வருடங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரதிவாதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது புலிகளின் ஒரு முன்னணி அமைப்பு என தீர்ப்பளித்த நீதிமன்றம் அதை கலைத்துவிடுமாறு கட்டளை பிறப்பித்தது. சி.சி.டி.எப்ஃ 1983ல் இருந்தே பிரான்சில் சட்டப்பூர்வமாக இயங்கி வந்துள்ளது.

தமது ஆதரவாளர்கள் முதலில் கைதுசெய்யப்பட்ட போதோ அல்லது அவர்களுக்கு இரக்கமற்ற தண்டனைகள் விதிக்கப்பட்டபோதோ, தமது ஆதரவாளர்கள் மீதான பிரெஞ்சு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகளின் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் எந்தவொரு கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை. நவம்பர் 27 அவர்கள் பாரம்பரியமாக செய்யும் மாவீரர் தின பிரகடனத்தில், இந்த தண்டனையளிப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பிரெஞ்சு ஊடகங்களிலும் இந்த தண்டனைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. "இடதுகளின்" பிரசுரங்களிலும் கூட அந்தச் செய்தி வெளிவரவில்லை.

எவ்வாறெனினும், புலிகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு தமது அடிபணிவை வலியுறுத்துவதற்காக மாவீரர் நாள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டனர். தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் "எமது சமுதாயத்தை பராமரிக்கும் சர்வதேச நாடுகளின் அக்கறைக்கும் கருத்துக்கும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்த அமைப்பின் ஊடாக சர்வதேச சமூகத்தின் ஆதரவை அணிதிரட்டிக்கொண்டு உலகம் பூராவும் எமது உரிமைக்கான போராட்டத்தை பலப்படுத்த வேண்டும்," என அவர்கள் பிரகடனம் செய்தனர்.

இந்த வழக்குகள், தெற்காசியாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் கட்டுண்டுள்ளன. கடந்த ஏப்பிரலில், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்களான டேவிட் மிலிபன்ட் மற்றும் பேர்னாட் குஷ்னரும், யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் பொதுமக்கள் மீது "மனிதாபிமான அக்கறை" காட்டும் சாக்குப் போக்கின் கீழ் இலங்கைக்கு பயணித்திருந்தனர். உண்மையில், இது இலங்கையுடன் இராணுவ உறவுகளை அதிகரித்துக்கொள்ளவும் சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை எதிர்க்கவும் எடுத்த முயற்சியை மறைக்கும் ஒரு கலப்படமற்ற அரசியல் போர்வையாகும். அண்மையில் உரையாற்றிய பிரான்சுக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டதாவது: "பிரெஞ்சு கடற்படை கப்பலான 'லூ வாருக்கு' அண்மையில் கொழும்பில் விடுக்கப்பட்ட அழைப்பு, இரு நாடுகளதும் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது."

சமாதான முன்னெடுப்புகளுக்கான பிரான்சின் ஆதரவு எப்போதும் ஒரு தந்திரோபாய பிரச்சினையாகவே இருந்துள்ளது. இலங்கையில் நடந்த யுத்தம், தெற்காசியாவில் குறிப்பாக பிரெஞ்சு பொருளாதார மூலோபாய நலன்கள் அதிகரித்துவரும் இந்தியாவில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் ஆற்றல்கொண்டிருந்ததால், சார்க்கோசி அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த ஆரம்பத்தில் அக்கறை காட்டியது. பிரான்சும் இந்தியாவும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு விடயத்தை உள்ளடக்கியவாறு ஒரு "மூலோபாய கலந்துரையாடலை" நடத்துகின்றன. இரு நாடுகளும் 2012 அளவில் 6.5 பில்லியன் யூரோ முதல் 12 பில்லியன் யூரோ வரை இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளன.

2004ல் ஆசிய சுனாமியின் பின்னர், இலங்கையில் அப்போதிருந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துடன் 2005 அக்டோபரில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் ஏஜன்சி 64 மில்லியன் யூரோ கடன் வழங்கியது. பின்னர் இது பிரான்ஸ் இலங்கைக்கு கொடுத்த வாக்குறுதியின் கீழ், முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் உட்பட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 112 மில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டது.

2006 ஆகஸ்ட் 4 அன்று, பாரிஸை தளமாகக் கொண்ட அக்ஷன் ஃபாம் சர்வதேச மனிதாபிமான முகவரமைப்பில் வேலை செய்த 17 இலங்கை தொண்டு ஊழியர்கள் (16 தமிழர்கள் ஒரு முஸ்லிம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வரிசையாக கொல்லப்பட்டுக் கிடந்தனர். இலங்கை கண்காணிப்புக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, "இலங்கை பாதுகாப்பு படைகள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளிகள் என பரந்தளவில் உறுதியாக மற்றும் நிலையாக கருதுவதாக தெரிவித்தது. இந்த மனிதாபிமான தொண்டர்கள் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக பிரெஞ்சு ஆளும் கும்பல் கண்டனம் செய்யவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அத்துடன், இத்தகயை நடுங்க வைக்கும் படுகொலைகளுக்கு மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் பொறுப்பாளியாக்கப்படவோ அல்லது கேள்விக்குள்ளாக்கப்படவோ இல்லை.

இலங்கை அரசின் ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்தால் வெளியேறத் தள்ளப்பட்ட மிகப்பெரும் தமிழ் சமுதாயம் வாழும் நாடுகளில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதுடன் சேர்த்தே 2007 ஏப்பிரலில் பிரான்சில் புலி ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை தொடங்கியது. 2006ல் புலிகள் அமைப்பு பிரான்சிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்டது. இது உலகம் பூராவும் மற்றும் விசேடமாக ஐரோப்பா பூராவும் புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கான இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் மறு பக்கமாக இருந்தது. 2007ல் கைது செய்ததன் மூலமே பிரெஞ்சு அதிகாரிகள் புலிகளுக்கு எதிராக மிகவும் வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் அல்லது பயங்கரவாதத்துக்கு நிதி வழங்க அச்சுறுத்துதல் போன்ற குற்றவியல் சூழ்ச்சிகளை செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே 2007ல் கைதுசெய்யப்பட்டனர். இழிபுகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி ஜோன்-லூயிஸ் புரூகுரேயினால் பிறப்பிக்கப்பட்ட சட்ட கட்டளையின் அடிப்படையில் "பயங்கரவாத எதிர்ப்பு குழுவின்" படைகளால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் சார்க்கோசியின் (வெகுஜன இயக்கத்துக்கான சங்கம்) யூ.எம்.பி. சார்பில் பாராளுமன்றத்துக்காக நின்றார்.

தெற்காசியாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பூகோள நலன்களுக்கு சேவையாற்றுவதற்கும் அப்பால், புரூகுரேயின் நடவடிக்கையானது, நிக்கோலா சார்க்கோசியினால் ஒன்றிணைக்கப்பட்ட பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அரசியல் வேலைத் திட்டத்தின் பாகமாக அரசின் அதிகாரங்களை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்தகைய அதிகாரங்கள், பிரான்ஸ் பெரும் வர்த்தகர்களின் இலாபம் மற்றும் போட்டித் திறனை அதிகரிப்பதற்காக திணிக்கப்பட்ட வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பயன்படுத்தப்படும். அந்த ஆண்டு மே மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோன்-மரி லூ பென்னிடம் இருந்து சார்க்கோசிக்கு அதி-வலதுசாரி வாக்குகளை வெற்றிகொள்வதையும் இலக்காகக் கொண்டே கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

2007ல் சார்க்கோசி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீது ஆழமான தாக்குதல் தொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் குதிக்கத் தள்ளப்பட்டனர். புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் இத்தகைய அபிவிருத்திகளின் பாகமாகும். (பாடசாலைகளில் முஸ்லிம்கள் பர்தா அணிவதற்கும் மற்றும் இப்போது புர்கா கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது உட்பட) சிறுபான்மையினருக்கு எதிரான, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான மற்றும் குறிப்பாக வதிவிட பத்திரம் இல்லாதவர்களுக்கு எதிரான மற்றும் அவர்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்குபவர்களுக்கு எதிரான சார்க்கோசியின் ஆகவும் அதிகமான ஒடுக்குமுறை சட்டங்கள், தமிழர்களை பாதித்துள்ளதோடு தாய்நாட்டுக்கு திரும்பி செல்லவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீதான ஒடுக்குமுறையை கண்டனம் செய்வதானது அவர்களது வங்குரோத்து முன்நோக்கை ஆதரிப்பதாகாது. 2009 முற்பகுதியில், புலிகளின் முதலாளித்துவ தேசியவாத வேலைத் திட்டம் பொறிந்து போனதோடு, புலிகளின் இராணுவத் தோல்விக்கும் வழிவகுத்தது. பிரான்ஸ் உட்பட ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் இராஜபக்ஷவால் இழிவான நிலைமைகளின் கீழ் 250,000 க்கும் மேலான தமிழ் பொது மக்கள் முகாங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள்.

புலிகளும் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புக்களும், சோசலிச சமத்துவக் கட்சியினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட அரசியல் எதிரிகளுக்கு எதிராக சரீர ரீதியான வன்முறைகளை பிரயோகித்துள்ளனர். பல சமயங்களில், தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கைப் பரிந்துரைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த தொழிலாளர்கள் மீதும் புலி ஆதரவாளர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

பிரான்ஸ்-தமிழர் ஒருங்கிணைப்பு குழுவானது, பிரெஞ்சு முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தமது வர்க்க சகோதர சகோதரிகள் மற்றும் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்துடன் பிரான்சில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒன்றிணைவதை தடுப்பதன் பேரில், பலாத்காரமாக துண்டுப் பிரசுரங்களை பறிந்தெறிந்து வன்முறை மற்றும் அச்சுறுத்தலை கையிலெடுத்தது. எவ்வாறெனினும், ஒருங்கிணைப்புக் குழு தமது கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுக்கு உரையாட அழைப்பு விடுத்தது.

2009 மே மாதம் புலிகள் தமது வர்க்கப் பண்பை தெளிவாக வெளிக்காட்டிக் கொண்டனர். இலட்சக்கணக்கான பிரெஞ்சுத் தொழிலாளர்கள் சார்க்கோசியின் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்த போது, அதே ஊர்வலத்தில் பங்குபற்றிய புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள், "எங்களுக்கு உதவுங்கள்" என்ற பதாகைகளையும் சார்க்கோசியினதும் ஒபாமா மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் போன்ற ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகளின் பெரிய படங்களையும் சுமந்து சென்றனர்.

ஐரோப்பாவிலும் மற்றும் வேறெங்கிலும் உள்ள தமிழ் புலம்பெயர் தொழிலாளர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இதயமான உலக சோசலிச வலைத் தளமும் அபிவிருத்தி செய்துள்ள அனைத்துலக சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தாம் வாழும் நாடுகளில் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved