WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
The danger of Bonapartist rule in Sri Lanka
இலங்கையில் பொனபாட்வாத ஆட்சியின் ஆபத்து
By Wije Dias
8 December 2009
Use this
version to print | Send
feedback
இலங்கையில் ஜனவரி 26 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத்
பொன்சேகாவின் பிரவேசம், தீவில் பொலிஸ்-அரச ஆட்சிக்கான முன்கூட்டிய தயாரிப்புகள் பற்றி தொழிலாள
வர்க்கத்துக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது. ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில்,
உழைக்கும் மக்கள் மீது புதிய பொருளாதார நெருக்கடிகளை திணிக்கும் வழிமுறையாக, ஆளும் தட்டின் சக்திவாய்ந்த
பகுதியினர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான பொன்சேகாவை ஆதரிக்கின்றனர்.
கடந்த மாதம் இராஜினாமா செய்வதற்கு முன்னர், பொன்சேகா இலங்கையின் உயர்
மட்ட ஜெனரலாக இருந்தார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ், அவர் கடந்த மே மாதம் தோல்வி
கண்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்தார்.
கடைசி மாத மோதல்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான
குண்டுத் தாக்குதல்களால் 7,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் தோல்விகண்ட
பின்னர் ஆண்கள், பென்கள் மற்றும் சிறுவர்களுமாக 250,000 க்கும் மேற்பட்ட பொது மக்களை இராணும் "நலன்புரி
முகாங்களுக்குள்" அடைத்தது. அங்கு அவர்கள் டிசம்பர் 1ம் திகதி வரை சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
யுத்தத்தின் முடிவில், ஆளும் அரசியல்-இராணுவ குழுவில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்த
பொன்சேகா இராஜபக்ஷவிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக் கொண்டது, அவர்கள் கூட்டாக இழைத்த
யுத்தக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினையினால் அல்ல, மாறாக யுத்த வெற்றியின் புகழ் யாருக்கு சேரவேண்டும்
என்ற பிரச்சினையினாலேயே. இராஜபக்ஷ தனது ஆட்டங்கண்ட ஆளும் கூட்டணிக்கு முட்டு கொடுக்கவும் தொடர்ச்சியாக
நடந்த மாகாண சபை தேர்தல்களில் வெற்றி பெறவும் யுத்த வெற்றியின் சிற்பியாக தன்னை முன்னிலைப்படுத்த முயற்சித்ததன்
மூலம், அவர் இராணுவ அதிகாரிகள் மத்தியில் ஆழமான சீற்றத்தை தூண்டிவிட்டார். பொன்சேகா இராணுவத் தளபதி
என்ற நிலையில் இருந்து பெருமளவில் பெயரளவிலான பதவியான பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் என்ற நிலைக்கு
மாறியதை அடுத்தே அவர் இந்த கசப்புனர்வுகளின் ஊதுகுழலானார். அவர் எதிர்க் கட்சிகளுடன் இரகசியமாக நடத்திய
பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் பகிரங்கமாயின. இராஜபக்ஷ முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அறிவித்த
போது, பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக பிரவேசித்தார்.
பொன்சேகா எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர் அல்ல. அவர்
சந்தேகத்துக்கிடமின்றி ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியுடனும் (ஜே.வி.பி.)
தேர்தல் உடன்படிக்கைகளை செய்துகொண்டிருந்தாலும், அவர் தேர்வு செய்யப்பட்டால் அவர் அந்த கட்சிகளின்
விதிகளுக்கோ அல்லது கொள்கைகளுக்கோ கட்டுப்பட்டவராக இருக்க மாட்டார். இந்த நிலைமையானது
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய அரசியலில் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காததோடு பாராளுமன்ற அரசியலின்
ஆழமான சீரழிவை கோடிட்டுக் காட்டுகிறது. தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை நடத்தி மற்றும் சந்தை சார்பு
மறுசீரமைப்புகளை செய்த பின்னர், இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளான யூ.என்.பி. மற்றும் இராஜப்கஷவின்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) பரந்தளவில் நம்பிக்கையீனத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளன.
சிங்கள பேரினவாத ஜே.வி.பி., வெகுஜனங்களின் அதிருப்தி மற்றும் அந்நியப்படுதலை சமாளிக்கும் ஒரு அரசியல்
பாதுகாப்பு வாயிலாக செயற்பட்ட பின்னர், 2004ல் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணியில் இணைந்துகொண்ட பின்னர்
துரிதமாக ஆதரவை இழந்தது.
பாராளுமன்ற ஆட்சியின் விதிமுறைகள் ஏற்கனவே காலங்கடந்து விட்டது. இராஜபக்ஷ
கையாளுவதற்கு எளிதற்ற 17 கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கின்றார். அனைத்து கட்சிகளும் உலகின்
பிரமாண்டமானவற்றில் ஒன்றாக உள்ள அமைச்சரவையில் ஏதாவது ஒரு பதவியை கொண்டுள்ளன. இதன் விளைவாக,
மேலும் மேலும் அமைச்சரவையையும் பாராளுமன்றத்தையும் ஓரங்கட்டி, தனது சகோதரர்கள், நெருங்கிய அரசியல்
நன்பர்கள், நம்பிக்கைக்குரிய அதிகாரத்துவவாதிகள் மற்றும் ஜெனரல்கள் உள்ளடங்கிய ஒரு குழுவின் ஊடாக
இயங்குகிறார். அவரது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் பரந்த அதிகாரங்கள் விசாரணையின்றி கைது
செய்ய, தணிக்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்க அனுமதிக்கும் தற்போதைய அவசரகால
விதிகளால் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. அவரது அரசாங்கம் பல சமயங்களில் அரசியலமைப்பை
அவமதித்துள்ளதோடு நாட்டின் உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் நிராகரித்துள்ளது.
தனது பிரச்சாத்தை ஆரம்பித்தபோது, இராஜபக்ஷவை "தரங்குறைந்த
சர்வாதிகாரி" என வகைப்படுத்திய பொன்சேகா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை
தூக்கிவீசுமாறு யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இந்த
வாக்குறுதியிலோ அல்லது ஜெனரலுக்கு ஜனநாயக ஆடை உடுத்தும் எதிர்க் கட்சிகளின் முயற்சிகளிலோ நம்பிக்கை
வைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் தாம் எதிர்க் கட்சியில் இருக்கும் போது வழமையாகவே நிறைவேற்று
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளிப்பார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை
மீறிவிடுவார்கள். இராஜபக்ஷவுக்கு முன்பிருந்த சந்திரிகா குமாரதுங்க, 1994ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால், 2004ல் தேர்தலில்
தெரிவுசெய்யப்பட்ட யூ.என்.பி. அரசாங்கத்தை எதேச்சதிகாரமாக பதவி விலக்க அதன் முழு அதிகாரத்தையும்
பயன்படுத்தினார்.
எவ்வாறெனினும், முன்னைய இலங்கை ஜனாதிபதிகளுக்கு இருந்தது போல்,
பொன்சேகாவுக்கு அரசியல் கட்சியோ அல்லது அவருக்கென்று சொந்தமான அரசியல் பின்னணியோ கிடையாது.
அவர் தேர்வு செய்யப்பட்டால், போட்டியிடும் அரசியல் சக்திகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும்
நிலையில், அவர் தனது ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தத் தள்ளப்படுவார். அவரது பிரதான அங்கம்,
அவரை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகளோ மற்றும் நிச்சயமாக வாக்காளர்களோ அல்ல. அவர் எல்லாவற்றுக்கும்
மேலாக அரச இயந்திரத்தின், குறிப்பாக நாட்டின் பிரமாண்டமான இராணுவத்தின் அதிகாரிகள் தட்டினரதும் மற்றும்
தமது பொருளாதார திட்டங்கள் தடைப்பட்டுள்ளதையிட்டு மேலும் மேலும் அதிருப்தி கண்டுள்ள ஆளும் கும்பலின்
பகுதியினரதும் ஊதுகுழலாவார். பொன்சேகா ஒரு சிறந்த பொனபாட்வாத புள்ளியாக தோன்றியுள்ளார்.
பொன்பாட்வாதி என்றால், அரசியல் சச்சரவுகளில் இருந்து மேலெழும்புபவராக தோன்றும், தேசத்தின்
நன்மைக்காக கொள்கைகளை அமுல்படுத்துவதாக கூறிக்கொள்ளும், மற்றும் வெளிப்படையான இராணுவ
சர்வாதிகாரத்துக்கு படிக்கல்லாக விளங்கும் ஒரு பலம் வாய்ந்த நபராவார்.
1930களில் ஜேர்மனியில் நாசிக்களுக்கு முதன்மையாக இருந்த அரசாங்கங்கள் பற்றிய
லியோன் ட்ரொட்ஸ்கியின் கூர்மையான ஆய்வுகளில், நிச்சயமான நிலைமைகளின் கீழ் மட்டுமே பொனபாட்டிசம்
தோன்றும் என விளக்கியுள்ளார். "இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள், சுரண்டுபவர்கள் மற்றும்
சுரண்டப்படுபவர்கள் ஆகிய இரு சமூக தட்டுக்களுக்கிடையிலான போராட்டம் அதன் உச்ச பதட்ட நிலைமையை
அடையும்போது அதிகாரத்துவம், பொலிஸ் மற்றும் இராணுவம் மேலாதிக்கம் செய்வதற்கான நிலைமை ஏற்படும்.
அரசாங்கம் சமுதாயத்தில் இருந்து 'சுயாதீனமடையும்'. நாம் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம்:
தக்கையொன்றில் இரு முள் கரண்டிகளை ஒரே சீரான அமைப்பில் குத்தினால், தக்கையை ஊசி முனையில்
வேண்டுமானாலும் நிறுத்த முடியும். இதுவே துல்லியமாக பொனபாட்டிசத்தின் திட்டமாகும்," என ட்ரொட்ஸ்கி
எழுதினார். அதன் உண்மையான பண்பின்படி, அத்தகைய முறையிலான ஆட்சி ஸ்திரமற்றதும் தற்காலிகமனதுமாகும்.
இன்று இலங்கையில், அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் பழைய
தலைமைத்துவங்களின் துரோகத்தின் விளைவாக, வர்க்க முரண்பாடுகள் இன்னும் வெளிப்படையான அரசியல் வடிவத்தை
எடுக்கும். பிரதான முதலாளித்துவ கட்சிகளைப் போல், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியும் மோசமாக சீரழிந்துள்ளதோடு, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு விசுவாசமான
தட்டினருக்கும் கொஞ்சம் அதிகமாகவே விசுவாசமாக செயற்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தங்களும்
ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ள போதிலும் அவை தொழிற்சங்க தலைமைத்துவத்தால் உடனடியாக
காட்டிக்கொடுக்கப்பட்டு வந்துள்ளன.
எவ்வாறனெனினும், அரசியல் ஸ்தாபனம் நனங்கு விழிப்புடன் இருப்பதைப் போல்,
தீவின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியானது தீவிரமான சமூக பதட்ட நிலைமையை
தோற்றுவிக்கின்றது. எண்ணிலடங்கா பொருளாதரா மற்றும் மனித விலை கொடுத்தே இராஜபக்ஷ தனது இராணுவ
வெற்றியை அடைந்தார். இராஜபக்ஷவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பாதுகாப்பு செலவு 629 பில்லியன்
ரூபாய்களை (5.5 பில்லியன் அமெரிக்க டொலர்) அல்லது மொத்த அரசாங்க வருமானத்தில் 25 வீதத்தையும்
தாண்டியுள்ளது. தீவின் மொத்தக் கடன் இந்த ஆண்டு 4,023 பில்லியன் ரூபாய்கள் அல்லது மொத்த தேசிய
உற்பத்தியில் 90 வீதத்துக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இராஜபக்ஷ தனது யுத்தத்துக்கு செலவிடுவதில், குறைந்த வட்டிக்கு சர்வதேச
சந்தையில் கடன் வாங்குவதில் தங்கியிருந்தார். ஆனால் இப்போது பூகோள நிதி நெருக்கடியை அடுத்து அதுவும்
காய்ந்து போய்விட்டது. சர்வதேச பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஏற்றுமதியையும் பாதித்ததனால்,
கூர்மையான அந்நிய செலாவணி நெருக்கடியையும் தோற்றுவித்தது. இதனால் அரசாங்கம் சர்வதேச நிதி
நிறுவனத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது. கடன்
வழங்கும்போது விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளில், இந்த ஆண்டு வரவு செலவு துண்டு விழும் தொகையை
மொத்த தேசிய உற்பத்தியில் 9 முதல் 7 வீதம் வரையும் அடுத்த ஆண்டு மேலும் 2 வீதத்தால் குறைக்க வேண்டும்
எனவும் கோரியுள்ளது.
இராஜபக்ஷ கடந்த மாதம் முன்வைக்க வேண்டிய 2010ம் ஆண்டுக்கான வரவு
செலவுத் திட்டத்தை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைப்பதன் மூலம், அரசாங்கத் துறை தொழில்கள், சம்பளம்
மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான தவிர்க்க முடியாத கடும் வெட்டுக்களை தாமதப்படுத்தியுள்ளார். அதே
சமயம், அவர் அரசாங்கத் துறையில் சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைத்துள்ளதோடு, துறைமுகம் மற்றும் அரசுக்கு
சொந்தமான மின்சார சபை, தண்ணீர் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை
சட்டவிரோதமாக்குவதன் பேரில், அத்தியவசிய சேவைகள் கட்டளையை பிறப்பிப்பதற்காக அவர் முதல் தடவையாக
தனது அவசரகால அதிகாரங்களை அண்மையில் பயன்படுத்தினார். சகல தொழிற்சங்கங்களும் உடனடியாக வளைந்து
கொடுத்து தமது பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டன.
வர்த்தகர்களின் சில பகுதியினர் அரசாங்க செலவுகளை கடுமையாக குறைக்குமாறு
கோருகின்றனர். கடந்த வாரம் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின்
தலைவர் அனுர ஏகனாயக்க, "அடிப்படையில் அரசாங்கத் துறையின் திறமையின்மை காரணமாக உற்பத்திச்
செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக" கசப்புடன் முறைப்பாடு செய்ததோடு "மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புத்
தொகைகளை வழங்கும் அர்த்தமற்ற நடவடிக்கைகளை" நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய
நடவடிக்கைகள், யுத்தத்தின் முடிவு வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிவதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளது என ஏற்கனவே
வெறுப்பும் சீற்றமும் அடைந்துள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் போராளிக்குணத்தை தவிர்க்க முடியாமல்
உருவாக்கும்.
கொழும்பில் உள்ள ஆளும் தட்டு, தேர்தலின் பின்னர் பெரும் தாக்குதலுக்கு
தயாராகின்றது. சில தட்டினர் தொடர்ந்தும் இராஜபக்ஷவை ஆதரிக்கும் அதே சமயம், ஏனையவர்கள் தொழிலாள
வர்க்கத்துக்கு எதிராக அரச இயந்திரத்தை கையாள்வதற்கும், தேவைப்படும் போது, அரசியல் கட்சிகளையும்
பாராளுமன்றத்தையும் நிராகரிக்கக் கூடிய ஒரு பலம்வாய்ந்த மனிதனாக பொன்சேகாவை ஆதரிக்கின்றனர்.
பாதுகாப்பு இயந்திரத்தின் ஆதரவைக் கொண்ட இரக்கமற்ற இராணுவத் தளபதி என்ற அவரது நிரூபிக்கப்பட்ட
சாதனை, அவரை ஸ்திரமற்ற பாராளுமன்ற கூட்டணியில் தங்கியிருக்கும் இராஜபக்ஷவில் இருந்து வேறுபடுத்திக்
காட்டுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பொன்சேகா, மோசடியை துடைத்துக்
கட்டல், பாதாள உலகத்தை துப்புரவு செய்தல் மற்றும் சமுதாயத்தில் "ஒழுக்கத்தை" ஸ்தாபித்தல் என தனது
திட்டங்களை வலியுறுத்த தனது தேர்தல் அறிவிப்பை பயன்படுத்திக்கொண்டார்.
சகல பிரதான அரசியல் கட்சிகளும், இராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான
போட்டியில் ஏதாவதொரு பக்கம் சார்ந்து நிற்கின்றன. முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய
சோசலிச கட்சியும் பெயரளவில் பொன்சேகாவை எதிர்க்கும் அதே வேளை, இராஜபக்ஷவுக்கான மாற்றீடாக அவர்கள்
யூ.என்.பி. யை ஆதரிப்பது, அதே வழியில் ஜெனரலை முன்வைப்பதற்கு இந்த இந்த வலதுசாரி முதலாளித்துவ
கட்சிக்கு உதவியுள்ளது.
தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பெரும் ஆபத்து எதுவெனில், அது முற்றிலும்
அரசியல் ரீதியில் தயாரில்லாமல் இருப்பதேயாகும். தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அதே
போல் தொழிற்சங்கங்கள் தொடர்பான அலட்சியமும் பகைமையும், பொலிஸ்-அரச ஆட்சி தோன்றுவதற்கு எதிராக
போராடுவதற்கான அரசியல் வேலைத் திட்டமாகவும் தலைமைத்துவமாகவும் தானாகவே மாற்றம் பெறாது. முதலாளித்துவத்தின்
சகல பகுதியினருக்கும் எதிரான ஒரு சோசலிச பதிலீட்டைச் சூழ தொழிலாளர்களை அணிதிரட்டவும் அவர்களுக்கு கல்வியூட்டவும்
அடுத்து வரும் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடும்.
பொன்சேகாவின் பிரவேசமானது, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள
தொழிலாள வர்க்கத்துக்கு பரந்த உட்பொருளைக் கொண்டுள்ளது. இலங்கையில் அபிவிருத்தியடைந்து வரும்
நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் சகல அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகள், முன்னேறிய தொழிற்துறை
நாடுகள் உட்பட உலகம் பூராவும் குறைந்த அல்லது அதிக அளவுக்கு அடிநிலையில் இடம்பெறுகின்றன. மோசமடைந்துவரும்
பொருளாதார நிலைமைகள், ஆழமடைந்துவரும் சமூக துருவப்படுத்தல், தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் இருந்து
மக்கள் தனிமைப்படுதல், பாராளுமன்ற அரசியலின் சீரழிவு மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகள் மேலும் மேலும் பயன்படுத்தப்படுவதும்,
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என சொல்லப்படுவனவற்றில் மட்டும் பிரத்தியேகமாக இடம்பெறுபவை அல்ல.
கடந்த காலத்தில் போலவே, இந்த சிறிய தீவில் இடம்பெறும்
நிகழ்வுகள், தொழிலாள வர்க்கத்துக்கு சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நிலைமைகள் பற்றிய எச்சரிக்கையாகும். |