WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Right-wing Sri Lankan leader thanks ex-lefts for
services rendered
இலங்கையின் வலதுசாரி தலைவர் முன்னாள் இடதுகள் வழங்கிய சேவைக்காக அவர்களுக்கு
நன்றி கூறுகிறார்
By Wije Dias
11 December 2009
Use this version
to print | Send
feedback
இலங்கையில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) தலைவர்
ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஆற்றிய உரையொன்றில், தொழிலாள வர்க்கத்தை பிரதான முதாலளித்துவ கட்சிகளுடன்
கட்டிவைத்திருப்பதிலும் மற்றும் அதன் மூலம் முழு முதலாளித்துவ ஆட்சிக்கும் முண்டு கொடுப்பதிலும் மத்தியதர வர்க்க
முன்னாள் தீவிரவாதிகள் ஆற்றிய வகிபாகத்தை பற்றி அம்பலப்படுத்தும் தகவலை கொடுத்துள்ளார். அவர் கடந்த
ஆண்டுகளில் நவசமசமாஜக் கட்சியினதும் (ந.ச.ச.க.) ஐக்கிய சோசலிச கட்சியினதும் (ஐ.சோ.க.) தலைவர்கள்
வழங்கிய ஆதரவுக்கு மனப்பூர்வமாக நன்றிதெரிவித்ததோடு, தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அவர்களது பிரச்சாரத்துக்கு
வாழ்த்தும் தெரிவித்தார்.
விக்கிரமசிங்க "சுதந்திரத்துக்கான மேடை" என்ற பதாதையின் கீழ் தென்பகுதி நகரான
மாத்தறையில் ஒரு பொதுக் கூட்டத்திலேயே உரையாற்றினார். இந்த சுதந்திரதுக்கான மேடை, அரசாங்கத்தின்
அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல்கள் தொடர்பாக வளர்ச்சியடைந்து வரும் மக்களின் அக்கறையையும் ஆத்திரத்தையும்
தணிக்கவும் அதை பயன்படுத்திக்கொள்ளவும் யூ.என்.பி. அமைத்துக்கொண்ட ஒரு கலைவைக்கூள கூட்டணியாகும். அரசாங்க-சார்பு
குண்டர்கள், ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி நிலையமான சிரச மீது தாக்குதல் தொடுத்ததோடு
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை பட்டப் பகலில் படுகொலை செய்ததை
அடுத்தே இந்த மேடை அமைத்துக்கொள்ளப்பட்டது.
அரசியல் உதவியின்றி வலதுசாரி யூ.என்.பி. க்கு ஜனநாயக உரிமைகளின்
பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, யூ.என்.பி. இலங்கை முதாலாளித்துவ
வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை 1983ல்
தொடக்கிய யூ.என்.பி., 1994ல் ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படும் வரை யுத்தத்தை இரக்கமின்றி
முன்னெடுத்தது. ஏனைய அட்டூழியங்களுக்கு மத்தியில், 1980களின் கடைப் பகுதியில் இராணுவத்தையும் அதனுடன்
சேர்ந்து செயற்பட்ட கொலைப் படைகளையும் கட்டவிழ்த்துவிட்டு, ஒரு மதிப்பீட்டின்படி 60,000 கிராமப்புற
சிங்கள இளைஞர்களை படுகொலை செய்ய வழிவகுத்தமைக்கு யூ.என்.பி. பொறுப்பாளியாகும்.
ஆனால், சோசலிஸ்டுகள் என்றும் சில சமயங்களில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்றும் கூட
சொல்லிக்கொள்ளும் நவசமசமாஜக் கட்சியிலும் ஐக்கிய சோசலிச கட்சியிலும் விக்கிரமசிங்கவால் தங்கியிருக்க
முடிந்தது. "சுதந்திரத்துக்கான மேடை" என்ற கூட்டணியில் ஐ.சோ.க. உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்ட
அதே வேளை, நவசமசமாஜக் கட்சி இரண்டு மாதங்களின் பின்னர் அதன் உத்தியோகபூர்வ பிணைப்புக்களுக்கு முடிவு
கட்டியதோடு "பாசிச-விரோத கூட்டணிக்கு" எச்சரிக்கையுடன் தூர இருந்து ஆதரவளித்தது. ஆயினும்,
நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன யூ.என்.பி. தலைமையகத்தில் நடந்த
பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டதோடு கடந்த பெப்பிரவரியில் கண்டியில் நடந்த மாற்று சுதந்திர
தின கூட்டத்தில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொண்டார்.
யூ.என்.பி. யுத்தத்தை ஆதரித்ததோடு ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள்
கொல்லப்பட்ட இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களையும் நியாயப்படுத்திய அதே வேளை, ஜனாதிபதி
இராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் யுத்தத்தை எதிர்ப்பதாக நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய
சோசலிச கட்சியும் கூறிக்கொள்வதானது இந்த சந்தர்ப்பவாத கூட்டணியானது குறிப்பாக வேடிக்கையானதாகும்.
எனினும், கட்சிக்குள் "தாராண்மைவாத பிரிவையே" விக்கிரமசிங்க பிரதிநிதித்துவம் செய்கின்றார் எனக்
கூறிக்கொண்டு யூ.என்.பி. க்கு ஆதரவளித்ததை நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும்
நியாயப்படுத்துகின்றன. யூ.என்.பி. யை ஆதரிப்பதை தவிர தொழிலாள வர்க்கத்துக்கு வேறு தேர்வுகள் இல்லை
என அவர்கள் கூறுகின்றனர்.
யூ.என்.பி. யை முன்னாள் தீவிரவாதிகள் ஆதரித்ததன் விளைவு இப்போது
வெளிப்படையாகியுள்ளது. மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.)
தொடர்ச்சியாக நடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க் கட்சிகளை தோற்கடித்ததோடு இராஜபக்ஷ
இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்துள்ளார். மாற்றுக் கொள்கைகளோ அல்லது
பொருத்தமான வேட்பாளரோ இல்லாத நிலையில், புலிகளை தோற்கடித்த மனிதராக உயரத்தில் நிற்கும்
இராஜபக்ஷவை கீழறுப்பதன் பேரில், சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) சேர்ந்து,
ஒரு மாதத்துக்கு முன்னர் வரை உயர்மட்ட ஜெனரலாக இருந்த ஜெனலர் சரத் பொன்சேகாவை தமது "பொது
வேட்பாளராக" யூ.என்.பி. ஆதரிக்கின்றது.
சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள நவசமசமாஜக் கட்சி
மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியை பொறுத்தளவில் -பத்திரிகை ஆசிரியர் விக்கிரமதுங்க போன்ற விமர்சகர்ககளை
படுகொலை செய்த, இராணுவ பின்னணியைக் கொண்ட கொலைப் படைகள் உட்பட யுத்தக் குற்றங்களுக்கான
பொறுப்பை இராஜபக்ஷவுடன் பங்கிட்டுக்கொள்ளும் ஜெனரல்- பொன்சேகாவை அணைத்துக்கொள்ள அடியெடுத்து
வைப்பது ஆகவும் நாணங்கெட்டதாக இருக்கும். எவ்வாறெனினும், யூ.என்.பி. அக்கறை செலுத்தியது போல்,
நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் ஏற்கனவே தமது அரசியல் காரியத்தை செய்து
முடித்துவிட்டன. அவை யூ.என்.பி. க்கு ஜனநாயக ஆடை உடுத்தியதால், விக்கிரமசிங்கவால் பொன்சேகாவை
இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக மாற்றீடாக நகைப்புக்கிடமான முறையிலேனும் முன்வைக்க முடிந்துள்ளது.
குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய
சோசலிச கட்சியிடமிருந்து யூ.என்.பி. பாதைகளை வகுத்துக்கொண்டுள்ளதோடு, மனத்தாக்கங்கள் எதுவும் இல்லை
என்பதை காட்டுவதற்காக கடந் வாரம் மாத்தறையில் நடந்த கூட்டத்தில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தனது
நன்றியுனர்வை வெளிப்படுத்தியுள்ளார். "நாங்கள் சுதந்திரத்துக்கான மேடையை" அமைத்த போது, எங்களது
மேடையில் திரு. விக்கிரமபாகு கருணாரட்ன இருந்தார். நாம் சிரமத்தை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர்
வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். நாம் அதை மதிக்கின்றோம். அவர் இப்போது ஜனாதிபதி வேட்பாளராக
போட்டியிடுகின்றார். திரு. சிறிதுங்க ஜயசூரிய [ஐக்கிய சோசலிச கட்சி தலைவர்] ஒரு உற்சாகமான மனிதர்.
அவரும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர். நான் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்," என அவர் விளக்கினார்.
"எமக்கு தெளிவான அரசியல் வேண்டும். இந்த நாட்டின் அரசியலில் விக்கிரமபாகு
கருணாரட்னவும் சிறிதுங்க ஜயசூரியவும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அவர்கள் ஜனநாயகத்துக்கு ஒரு பக்கபலம்.
அவர்கள் துணிவானர்கள். அவர்கள் சிறந்த ஆட்சிமுறையை ஊக்குவிக்கிறார்கள்," என விக்கிரமசிங்க மேலும்
தெரிவித்தார்.
நவசமசமாஜக் கட்சிக்கும் ஐக்கிய சோசலிச கட்சிக்கும் இதைத் தவிர
குற்றச்சாட்டுக்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. வலதுசாரி கோலிச வேட்பாளர் ஜாக் சிராக், 2002
ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச ஜூன்-மரி லு பென்னுக்கு எதிராக பலவித பிரெஞ்சு தீவிரவாத கட்சிகள் தம்மை
இரகசியமாக ஆதரித்தமைக்காக நன்றி கூறுவது போன்றதாகும். அல்லது 1999ல் கிழக்குத் தீமோரில் தனது
இராணுவ தலையீட்டுக்காக பிரச்சாரம் செய்த ஆஸ்திரேலிய இடது குழுக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜோன்
ஹொவார்ட் பாராட்டுக்களை தெரிவிப்பது போன்றதாகும். ஒரு பொது விதியாக, சாதாரண உழைக்கும் மக்களின்
முன்னிலையில் இத்தகைய இழிந்த அரசியல் உறவுகள் தெளிவாக அம்பலப்படுத்தப்படுவதை தவிர்த்துக்
கொள்வதற்காக, இத்தகைய பாராட்டுக்களை தெரிவிக்காமல் இருப்பதே நல்லது என சம்பந்தப்பட்ட அனைவரும்
புரிந்துகொண்டுள்ளனர்.
கருணாரட்னவும் ஜயசூரியவரும் விக்கிரமசிங்கவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவில்லை.
அல்லது, அவை சம்பந்தப்பட்டுள்ள சர்வதேச சந்தர்ப்பவாத அமைப்புக்கள் தமது இலங்கை கிளையினரை
விமர்சிக்குமா அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? -நவசமசமாஜக் கட்சியைப் பொறுத்தளவில் நான்காம்
அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகமும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சிக்கு சர்வதேச தொழிலாளர்கள்
கமிட்டியும் அவற்றின் சர்வதேச அமைப்புகளாகும். யூ.என்.பி. உடன் நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச
கட்சியும் கொண்டுள்ள உறவைப் போல் அவற்றின் சமதரப்பினரும் உலகின் ஏனைய பகுதிகளில்
உறவுகளைக்கொண்டுள்ளன. மற்றும் அது பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பலவித வடிவங்களின் சீரழிவின்
உற்பத்தியாகும்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான மார்க்சிச போராட்டத்தை
நிராகரித்து, பல நாடுகளில் தலைநீட்டிய சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத
துரோக தலைமைத்துவங்களுக்கு அடிபணிந்து போன மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மன்டேலின் தலைமையிலான
நான்காம் அகிலத்தின் சர்ந்தர்ப்பவாத போக்கில் இருந்து பிரிந்து, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழு ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் பகுதியாகும்.
அரை நூற்றாண்டின் பின்னர், இத்தகைய முன்னாள் மத்தியதர வர்க்க தீவிரவாதிகள்,
அரசியல் ஸ்தாபனத்துக்குள் தமக்கென்று ஒரு இடத்தைப் பெற முயற்சித்த நிலையில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற தமது
உரிமைகோரலையும் கைவிட்டுவிட்டனர். பெப்பிரவரியில், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சு
பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (எல்.சி.ஆர்.) தம்மை புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியாக
(என்.பி.ஏ.) மாற்றிக் கொண்டு, "ட்ரொட்ஸ்கிசம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உறவையும்" கைவிட்டதோடு
சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் கூட்டணிக்காக திறந்துவிடப்பட்டுள்ள "ஒரு பன்மைவாத மற்றும்
ஜனநாயகக் கட்சியாக உறுதிப்படுத்திக்கொண்டது.
நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் யூ.என்.பி. உடனான தமது
உறவில், உலகம் பூராவும் உள்ள தமது சம சிந்தனையாளர்கள் எங்கே சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்பதை
மட்டுமே மிகவும் தெளிவாக காட்டியுள்ளனர். சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீ.ல.சு.க.
அரசாங்கத்துடன் கூட்டணிக்குள் நுழைந்ததன் மூலம், ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கொள்கைகளை லங்கா
சமசமாஜக் கட்சி காட்டிக்கொடுத்து ஒரு தசாப்தத்தின் பின்னரே, அதில் இருந்து பிரிந்து 1977 நவசமசமாஜக்
கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து
பிளவுபட்டிருந்தாலும், அதன் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து அவர்கள் பிரியவேயில்லை.
லங்கா சமசமாஜக் கட்சியைப் போலவே, நவசமசமாஜக் கட்சியும் பின்னர் ஐக்கிய
சோசலிச கட்சியும், யூ.என்.பி. உடன் ஒப்பிடும் போது ஸ்ரீ.ல.சு.க. "குறைந்த கெடுதியாக" இருப்பதாக கூறி
ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஏனைய முதலாளித்துவ அமைப்புக்களையும் தாம் இரகசியமாக ஆதரித்ததை நியாயப்படுத்தின.
2002ல் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றை கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த
போதே, யூ.என்.பி. க்கு அவர்கள் அடிபணியத் தொடங்கினார்கள். அந்த ஏகாதிபத்தியவாதிகளின் அனுசரணையிலான
"சமாதான முன்னெடுப்பைக்" கொண்டாடும் இடதுசாரித் தலைமைகளாக நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச
கட்சியும் மாறின. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து, புதிய யுத்தத்துக்கு தயாராவதற்கு இராணுவத்தை
அனுமதிப்பதற்கான தந்திரோபாயமே அந்த யுத்த நிறுத்தம் என இந்த ஆண்டு யூ.என்.பி. யே பிரகடனம் செய்த
பின்னரும் அவர்களது உறவுகள் தொடர்கின்றன.
"சுதந்திரத்துக்கான மேடை" ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து, நவசமசமாஜக் கட்சி
தலைவர் கருணாரட்ன வலதுசாரி யூ.என்.பி. யின் தேவைகளுக்கு மிகவும் நெருக்கமாக தமது கட்சியை அர்ப்பணித்தார்.
அவர் லக்பிம வார இதழில் ஒவ்வொரு வாரமும் எழுதும் பத்தியில், ஜூலை 26 அன்று, நவசமசமாஜக் கட்சி "மிகக்
குறைந்தளவிலேனும் சோசலிச கோரிக்கைகளுக்காக" தேர்தலில் நிற்கவில்லை மற்றும் -யூ.என்.பி. யின் வழியில்-
ஒரு "சுதந்திர ஜனநாயக அரசுக்காகவும்" மற்றும் "ஜனநாயக கோரிக்கைகளுக்காகவும்" அது பிரச்சாரம் செய்யும்
என தெரிவித்தார்.
பொன்சேகாவை விக்கிரமசிங்க அணைத்துக்கொண்ட பின்னரும் கூட, நவசமசமாஜக்
கட்சி தலைவர் இன்னமும் யூ.என்.பி. யின் "தாராளவாத பிரிவுடன்" ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக்கொள்ள பேராவலுடன்
எதிர்பார்க்கின்றார். கடந்த வாரக் கடைசியில் ராவய பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் கருணாரட்ன தெரிவித்ததாவது:
"எனது ஜனநாயக கோரிக்கைகளுடன் யாராவது உடன்பட்டால் நான் அவரைப் பற்றி [அவரை ஆதரிப்பதை பற்றி]
அக்கறை செலுத்துவேன். ஒரு பொது வேட்பாளருக்கு விக்கிரமசிங்கவே ஓரளவுக்கேனும் பொருத்தமானவராவார்."
கருணாரட்னவும் ஜயசூரியவும் தங்களை தயக்கத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்களாக
நிறுத்திக்கொள்ளத் தள்ளப்பட்டார்கள். இத்தகைய "சோசலிஸ்டுகளின்" இலக்கு எங்குள்ளது என்பதையிட்டு சோசலிச
சமத்துவக் கட்சிக்கு எந்தவொரு மாயையும் கிடையாது. அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள
தற்போதைய பொருளாதார மற்றும் சமூக பேரழிவுக்கு பொறுப்பாளிகளான ஸ்ரீ.ல.சு.க., யூ.என்.பி., மற்றும்
அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஆளும் வர்க்கத்தின் சகல தரப்பில் இருந்து பிரிந்து, சுயாதீனமாக
தொழிலாளர்களை அணிதிரட்டும், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ் மற்றும் எமது கட்சியின்
சோசலிச வேலைத் திட்டத்துக்கும் எதிராகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளது. |