World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Britain: Iraq inquiry hears the testimony of guilty men

பிரிட்டன்: ஈராக் விசாரணைக் குழு குற்றம் செய்தவர்களின் சாட்சியத்தைக் கேட்கிறது

Robert Stevens
4 December 2009

Back to screen version

ஈராக் போர் பற்றிய சேர் ஜோன் சில்கோட்டின் தலைமையிலான உத்தியோகபூர்வ பிரிட்டிஷ் விசாரணைக்குழு, முன்னாள் உளவுத்துறை கூட்டுக்குழுத் தலைவர் சேர் பீட்டர் ரிக்கெட்ஸ், 2002-2004 காலத்தில் வெளியுறவு அமைச்சரகத்தில் பாதுகாப்பு உளவுத்துறைப் பிரிவுகளின் இயக்குனர் தலைவராக இருந்த வில்லியம் எஹ்ர்மன், படையெடுப்பிற்கு முன் அமெரிக்காவில் இங்கிலாந்து தூதராக இருந்த சேர் கிறிஸ்டோபர் மெயர், 1998ல் இருந்து 2003 வரை ஐ.நா.வில் இங்கிலாந்தின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த ஜேரிமி க்ரீன்ஸ்டாக் மற்றும் அப்பொழுது பிரதமராக இருந்த டோனி பிளேயரின் முக்கிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான சேர் டேவிட் மன்னிங் ஆகியோரின் சாட்சியங்களைப் பதிவு செய்தது.

இவர்கள் அனைவருமே ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு நடத்திய ஒரு சட்டவிரோதப் போரில் பிளேயர் அரசாங்கம் இணைந்து செயலாற்றியதற்கு அசைக்க முடியாத சான்றுகளைக் கொடுத்தனர்.

க்ரீன்ஸ்டாக் மற்றும் மேயர் அளித்த முக்கிய சான்றுகளில் வாஷிங்டனில் இருந்த புதிய கன்சர்வேடிவ்கள் ஆட்சி மாற்றம் பற்றித் தீவிரமாக இருந்தனர் என்றும் 9/11 போலிக்காரணத்தைப் பயன்படுத்தினர் என்றும் ஏப்ரல் 2002 ல் புஷ் மற்றும் பிளேயர் டெக்சாஸ் கிராபோர்டில் நடத்திய பேச்சுவார்த்தைகளில்தான் போருக்கான தயாரிப்புக்கள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளன.

பல உயர்மட்ட அரசு அதிகாரிகளும் தங்களை தொழிற் கட்சி அரசாங்கத்தின் ஆணைக்குட்பட்ட ஏதும் செய்ய முடியாத கைப்பாவைகள், தாங்கள் ஆதரவு தராத போரில் இழுக்கப்பட்டனர் என்று சித்தரித்துக் கொண்டனர். உதாரணமாகத் தன் சாட்சியத்தில் க்ரீன்ஸ்டாக் அக்டோபர் 2002ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு போருக்கு ஒப்புதல் கொடுத்து இரண்டாவது தீர்மானத்தை இயற்றாவிட்டால் தான் இராஜிநாமா செய்துவிடுவதாக அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கூறியுள்ளார். சில்கோட்டிடம் அவர் கூறியது: "2003 மார்ச்சில் ஈராக் மீதான இராணுவ நடவடிக்கையை நான் சட்டபூர்வமானது என்று கருதுகிறேன், ஆனால் ஐயத்திற்குரிய சட்டரீதியான தன்மைதான் அதில் உள்ளது; ஏனெனில் ஐ.நா. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையின் ஆதரவு என்ற ஜனநாயக முறையில் காணப்படக்கூடிய ஆதரவை அது கொண்டிருக்கவில்லை, ஒருவேளை இங்கிலாந்திற்குள் உள்ள பெரும்பாலான மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கவில்லை."

இது வரலாற்றை வேறுவிதமாக எழுதுவது போல் ஆகும். போருக்கான உந்ததுதலில் க்ரின்ஸ்டாக் ஒரு முக்கிய புள்ளி ஆவார். போர் சட்டவிரோதமானது, பெரும்பாலான இங்கிலாந்து மக்களால் எதிர்க்கப்படுகிறது என்பதை அறிந்தும், பிளேயர் வெளியுறவுக் கொள்கை மந்திரி சேர் டேவிட் மன்னிங், மற்றவர்களுடைய ஆலோசனையின் பேரில் புஷ்ஷிடம் ஐ.நா.தீர்மான வழிவகை மூலம் ஒரு சட்டபூர்வமான மறைப்பை பெற வலியுறுத்தினார். இந்த அரசியில் ஏமாற்றுத்தனத்தில் க்ரீன்ஸ்டாக் முழுமையாகப் பங்கு பெற்றார், நவம்பர் 2002 ஐ.நா. பாதுகாப்புக்குழுத் தீர்மானம் 1441 ன் வரைவை தயாரித்தார்; அது பலவற்றைச் செய்யாவிட்டால் ஈராக் "தீவிர விளைவுகளை" எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தது. முதல் வளைகுடாப் போருக்குப் பின், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுத் தீர்மானம் 687, ஏப்ரல் 1991ல் இயற்றப்பட்டதில் உள்ள போர்நிறுத்த உடன்பாட்டின் பல விதிகளை அது மீறியதாகவும் அது கூறியது.

டிசம்பர் 2002ல் க்ரீன்ஸ்டாக்கிடம், ஐ.நா.தலைமை ஆயுத ஆய்வாளர் Hans Blix னால் ஈராக் ஐ.நா.ஆய்வாளர்கள் பற்றிய நெறியை ஏற்றதாகவும் அவர்களுக்கு அதனிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் அணுசக்தி நிலையங்களை தணிக்கை செய்ய அனுமதித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த கருத்தை க்ரீன்ஸ்டாக், "[ஈராக்கிடம் இருந்து] நூறு சதவிகித ஒத்துழைப்பு ஆய்வாளர்களுக்கு தேவை" என்று கூறி, நிராகரித்தார்.

ஒரு இரண்டாம் ஐ.நா. பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தை ஈராக் மீது படையெடுக்க பச்சை விளக்குக் காட்டும் விதத்தில் கிடைக்க போவதில்லை என்று அமெரிக்கா அறிந்ததும், க்ரீன்ஸ்டாக்தான் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போருக்கான ஒருதலைப்பட்ச அறிக்கையை வெளியிடும் உரிமை உண்டு என்று வலியுறுத்தி, மார்ச் 17, 2003ல் வாஷிங்டன் மற்றும் லண்டன் இரண்டும் "ஈராக் ஆயுதங்களைக் களைவதற்குத் தேவையான தங்கள் நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளன" என்ற போர் அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னுடைய சாட்சியத்தில் பிரிட்டிஷ் தூதர் சேர் கிறிஸ்டோபர் மேயர் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் தன்னிடம் செப்டம்பர் 11, 2001 லேயே, நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்திய அன்றே, சதாம் ஹுசைனின் ஆட்சி இத்தாக்குதல்களில் தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என்று கூறியதாகத் தெரிவித்தார்.

2002 மார்ச் 18 அன்று மேயர் புஷ் நிர்வாகத்தில் முக்கிய போருக்கு வாதிடும் போல் வொல்போவிட்ஸுடன் நடத்திய பேச்சுக்கள் பற்றி டேவிட் மன்னிங்கிற்கு எழுதினார். மேயர் எழுதினார்: "கடந்த வாரம் கொண்டி ரைஸிடம் நீங்கள் பயன்படுத்திய முறையில் நின்று ஈராக் பற்றிப் பேசினேன். ஆட்சி மாற்றத்திற்கு நாம் ஆதரவு கொடுத்தோம் ஆனால் திட்டம் கெட்டிக்காரத்தனமாக இருக்க வேண்டும், தோல்வி ஏற்பட்டுவிடக்கூடாது." அவர் மேலும் கூறியது: "அதன்பின் ஆய்வாளர்களை பொறுத்த வரையில் சதாம் தவறு செய்ததாகக் காட்ட வேண்டும் என்றேன்."

2005 DC இரகசியம் என்ற நினைவுக் குறிப்பில் மேயர் எழுதுகிறார்: "சதாம் ஹுசைன் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு நான் உறுதியான ஆதரவைக் கொடுத்தேன், தேவையானால் போரைத் தொடர்ந்தும்கூட."

Independent ல் எழுதிய Yasmin Alibhai-Brown 2003 ஜூனில் டேவிட் உஸ்போர்னுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் க்ரீன்ஸ்டாக் "அப்பொழுதும்கூட பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புத் தொடர்கின்றன, தனியார் வீடுகளில் மறைத்து வைக்கப்படுகின்றன, நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும் கூறுவது: "சேர் கிறிஸ்டோபர் மேயர் ஒன்றும் சிறந்தவர் அல்ல, இப்பொழுது அவர் தன்னைத் தெளிவற்ற முறையில் பெரும் தீரர் என்று காட்டிக் கொண்டாலும். அவரும்தான் போருக்கு ஆதரவு கொடுத்தவர், எப்பொழுதும் ஒரு நல்ல போரை விரும்பியவர்."

மேயரைப் பொறுத்த வரையில், பிளேயரின் மிகப் பெரிய குற்றம் ஒரு மில்லியன் ஈராக்கியர்களின் உயிரைக் கொடுத்து நாட்டை வீணடித்த சட்ட விரோதப் போரைத் தொடக்கியது அல்ல, ஆனால் அதற்குத் தேவையான அரசியல் ஆதாயத்தை அமெரிக்காவிடம் இருந்து பெறாததுதான். விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார்: "[முன்னாள் பிரதம மந்திரி] மார்க்கரெட் தாட்சர் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறேன்? அவருடைய பெயரை வீணே இழுக்கிறேனா? என்னை இடி தாக்கக்கூடும்? ஆனால் அவர் ஒரு தெளிவான, நேர்த்தியான தூதரக மூலோபாயத்தை வலியுறுத்தியிருப்பார், என்ன நடந்தது என்பதைப் பற்றி மிகத் தெளிவான முறையில் தகவல் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியிருப்பார், எப்பொழுது சதாமை அகற்றுவது என்று கேட்டிருப்பார்."

ஒரு பின்னோக்கு முறையில் மேயர் பிளேயரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலோபாய நலன்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்கு கடிந்து கொள்ளுகிறார். ஆனால் அந்த நேரத்தில் அவரும் இப்பொழுது சாட்சியம் கொடுத்துள்ள மற்றவர்களும் போருக்கு ஆதரவைக் கொடுத்தனர்; ஏனெனில் அவர்கள் அது பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு உகந்தது என்று நம்பினர். எப்படியும் அமெரிக்காவுடன் உடன்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிளேயரின் கொள்கை, அதையொட்டி சர்வதேச அளவில் பிரிட்டனின் நலன்களை முன்னேற்றுவிப்பது, அதுவும் பெருகிய முறையில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் பொருளாதார, அரசியல் நலன்கள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் என்பது, தாட்சரின் மூலோபாயத்தின் தொடர்ச்சியாகும்.

இவ்விதத்தில் சில்காட் விசாரணைக்குழு முன்பு முன்னாள் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களுக்கு உதவும் விதத்தில் கூறிய சாட்சியம், ஓரளவிற்கு தங்களை பின்னோக்கிய விதத்தில் ஈராக் சங்கடத்தில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ளும் முயற்சி ஆகும்; மேலும் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு அரசியல் தாக்குதல்களை கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. இந்த அளவிற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்த உண்மையே சில்காட் விசாரணைக்கு கொடுக்கப்பட்டுள்ள குறுகிய வரம்புதான் காரணம்; இதற்கு சட்டபூர்வ சரிபடுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை; "படிப்பினைகள்" அறியப்பட வேண்டும், குற்றத்தை சுமத்த வேண்டும் என்று அதற்கு உத்தரவிடப்படவில்லை.

ஆயினும்கூட, அவர்கள் நெருப்புடன் விளையாடுகின்றனர். பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் சில்கோட் விசாரணைக்கு உத்தரவிட்ட காரணம் சேதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது. ஆனால் சேதம் மிகப் பெரிய அளவில் இருப்பதால் அது கட்டுப்படுத்தப்பட முடியாதது ஆகும். ஈராக்கிய போருக்குப் பின்னர், பிரிட்டனின் ஆளும் வட்டங்களில் ஆழ்ந்த பிளவுகள் வெளிப்பட்டு, அவை பிளேயரை பதவியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தின; இருந்தபோதிலும்கூட, அவர் போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

இத்தகைய கோரிக்கைகள் இப்பொழுது வெளிப்படையாக மூத்த நடைமுறை நபர்களாலும் பகிரங்கமாக கூறப்படுகின்றன. கடந்த வாரம் Johan Steyn, கட்சிமாறிய பிரபுவும் முன்னாள் சட்டப் பிரபுவுமாக இருந்தவர், பைனான்சியல் டைம்ஸில் ஈராக் போர், "பிரிட்டிஷ் வரலாற்றில் மிகப் பெரிய வெளியுறவுக் கொள்கை பேரழிவுகளில் ஒன்று, சூயஸ் விவகாரத்தைவிட கூடுதலான தீவிரத்தைக் கொண்டுள்ளது" என்று எழுதியுள்ளார்.

விசாரணைக்குழு "போரின் சட்ட நெறி" பற்றியும் கருத்துக் கூறும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். "ஒரு இரண்டாம் ஐ.நா.தீர்மானம் படையெடுப்பிற்கு இசைவு தராத வகையில், இது ஒரு சட்ட விரோதப் போர்" என்ற முடிவற்கு அது வரவேண்டும் என்றார்.

பிரிட்டனின் சிறப்புப் படைகள் SAS மற்றும் ஐக்கிய நாடுகள் பொஸ்னியாவில் நிறுத்தியிருந்த படைகளின் முன்னாள் தளபதி சேர் மைக்கேல் ரோஸ் பல முறை 2006ல் பிளேயர் போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியதை மீண்டும் வலியுறுத்தி இது மற்றவர்கள் மீதும் பாய வேண்டும் என்று கூறியுள்ளார். Daily Mail ல் அவர் ஆட்சி மாற்றம் பிளேயர் அரசாங்கத்தால் போருக்குப் போவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படவில்லை ஆதலால், "பாராளுமன்றத்தை தவறாக பிளேயர் வழிநடத்தியது போல், உண்மையில் நாட்டையே தவறாக வழி நடத்தியது போல் தோன்றுகிறது" என்றார்.

அவர் மேலும் கூறியது, "....பிளேயர் மட்டுமே பொறுப்பேற்கக் கூடாது. ஈராக் போருக்கு முன்பு, போரை நியாயப்படுத்துவதற்கு பிளேயர் பயன்படுத்திய உளவுத்துறை தகவலின் உண்மையை வினாவிற்கு உட்படுத்த எம்.பி.க்கள் தவறிவிட்டனர் என்பது தெளிவு... நியாயம் நிலைக்க வேண்டும் என்றால், ஜனநாயகத்தில் நம்பிக்கை மீண்டும் இந்நாட்டில் மீட்கப்பட வேண்டும் என்றால், டோனி பிளேயரும் ஈராக் போர் பேரழிவிற்கு பொறுப்பான அந்த அதிகாரிகளும் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அதையொட்டி அவர்கள்மீது போர்க்குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டும்."

போர்க்குற்றச் சாட்டுக்களுக்கான கோரிக்கை எங்கு முடியும்? பிளேயர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், அவருடைய முக்கிய மந்திரிசபை உறுப்பினர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; இதில் அப்பொழுது வெளியுறவு, பாதுகாப்பு மந்திரிகளாக இருந்த ஜாக் ஸ்ட்ரா, ஜெப் ஹுன் ஆகியோரும் அடங்குவர். இவர்களுடன் புஷ் மற்றும் அவருடைய உயர்மட்டத் தலைமையும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.

ஆனால் பிளேயரின் போர் நடத்த வேண்டும் என்ற முடிவு, தொழிற் கட்சி அரசாங்கத்தாலும், எதிர்க் கட்சி கன்சர்வேடிவ்களாலும், அரசாங்கப் பணியாளர்கள், இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலராலும், அவர்களுடைய தனி விருப்பம் எப்படி இருந்தாலும், ஆதரிக்கப்பட்டது. அவர்கள் போலி உளவுத்துறைத் தகவலாலோ அல்லது பிளேயரின் பகிரங்க உத்தரவாதங்களாலோ ஏமாற்றப்படவில்லை. இவர்கள் கொண்டிருந்த உட்தகவலை அறியாத மில்லியன் கணக்கான மக்களோ எளிதில் இந்தப் பொய்களைக் கண்டறிந்தனர். இதற்கு முற்றிலும் மாறாக, சில்கோட் விசாரணைக் குழுவிற்கு முன் சாட்சியம் கொடுக்க வந்தவர்கள் பொய்களைத் தயாரிக்க, அறிவிக்க உதவியவர்கள் ஆவர். அவர்கள் கொடுத்துள்ள சாட்சியம் இந்த குற்றம் சார்ந்தவர்களைப் பற்றிய சான்றுகள் ஆகும்; அவர்களும் அப்படித்தான் நடத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved