World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Police attack protesters in Greece

கிரேக்கத்தில் எதிர்ப்பாளர்களை போலீஸ் தாக்குகிறது

By Markus Salzmann
8 December 2009

Back to screen version

பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட 10,000க்கும் மேற்பட்ட மக்கள் ஞாயிறன்று ஏதென்ஸ் நகரத்தில் ஒரு கிரேக்க போலீஸால் 15 வயது மாணவன் Alexis Girgoropoulous சுட்டுக் கொல்லப்பட்ட வன்முறையைக் குறிக்கும் ஓராண்டு நினைவு பேரணியில் கலந்துகொண்டனர். நகரத்தின் வட பகுதியான Thessaloniki, மற்றும் Piraus துறைமுகப் பகுதியிலும் எதிர்ப்புக்கள் நடைபெற்றன. இன்னும் பல எதிர்ப்புக்கள் வரவிருக்கும நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பெரும் மிருகத்தனமான முறையில் போலீஸார் நடந்து கொண்டனர். எதிர்ப்பிற்கு முன்பே குடிமக்கள் பாதுகாப்பு மந்திரி Michalis Chrsohoidis, "ஏதென்ஸ் நகரத்தை குண்டர்களின் பிடிக்குள் கைவிட்டுவிடமாட்டோம்." என்று அறிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்களை உன்னிப்பாக கவனிக்கும்படியும், வன்முறை ஏற்பட்டால், "சிறிதும் பொறுத்துக் கொள்ள வேண்டாம்" என்றும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஏதென்ஸில் மட்டும் நகர மையத்தில் ஞாயிறு ஆர்ப்பாட்டத்தை ஒட்டி 10,000 போலீஸார் திரட்டப்பட்டிருந்தனர். பேரணியின்போது போலீஸுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது; ஏதென்ஸில் பல வங்கிகள், கடைகளின் சன்னல்கள் உடைக்கப்பட்டன. 200க்கும் மேலான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு 15 வயது சிறுவன் டிசம்பர் 6, 2008ல் இறந்தது பல வாரங்களுக்கு வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், கலகங்களுக்கு வழி வகுத்தது. ஆனால் போலீஸ் கொன்றது எதிர்ப்புக்களை தூண்ட வெறும் உடனடிக் காரணம்தான். மாணவர்களின் நிலையில் சரிவு, பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இளைஞர்களுக்கு கெளரவமான வேலை இல்லாத நிலை என்ற பரந்த பின்னணியானது, ஊழல், பாரபட்சம் ஆகியவை நிறைந்த அரசியல் உயரடுக்கின் ஆட்சிக்கு எதிரான சீற்றத்தைத் தூண்டின.

ஓராண்டிற்கு முன் நடத்தப்பட்ட எதிர்ப்புக்களின் விளைவாக பழமைவாத புதிய ஜனநாயக (New Democracy ND) அரசாங்கம், பிரதம மந்திரி Kostas Karamanlis தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுதல் கடினம் என்றாலும், அக்டோபர் 4ம் தேதி புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது. முன்கூட்டிய தேர்தல் அரசாங்கப் பொறுப்பை மாற்றும் முடிவிற்கு ஒப்பானது, அதே போல் நாட்டின் எழுச்சி செய்யும் இளைஞர்களை PASOK எனப்படும் Social Democratic Panhellenic Socialist Movement என்ற தொழிற்சங்க ஆதரவு பெற்றுள்ள கட்சிக்கு விட்டுவிடும் நோக்கத்தையும் கொண்டிருந்தது.

பெயரளவிற்கு "இடது" என்னும் பல அமைப்புக்களின் ஆதரவை PASOK நம்பிப் பெற முடிந்தது; அவற்றுள் KKE எனப்படும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை வாதிகள் மற்றும் Radical Left (Syrizas) ஆகியவை அடங்கும்; இவை PASOK ஐ குறைந்த தீமை எனக்கருதி இத்துடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெறக்கூடத் தயாராக இருந்தன.

தேர்தலுக்கு பின்னர் PASOK மற்றும் அதன் முக்கிய வேட்பாளர் Giorgos Papandreou வும் கூட்டணிப் பங்காளி இல்லாமல் பெரும்பான்மை கொண்டதால் அரசாங்கத்தை அமைக்க முடிந்தது; 44 சதவிகித வாக்குகள் பெற்ற பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இருந்ததே இதற்குக் காரணம். "இடது" எனப்பட்டது PASOK க்கிற்கு ஆதரவு கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்து கீழிருந்து வந்த எதிர்ப்பை திசைதிருப்பியது.

ஞாயிறு நடந்த நிகழ்வுகள் அரசாங்க மாற்றம் அரசாங்கக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. Papandreou, அவருக்கு முன் பதவியில் இருந்த Karamanlis செய்ததைத்தான் தொடர்கிறார்.

பொது ஒழுங்குப் பிரிவின் மந்திரி இப்பொழுது குடியுரிமை பாதுகாப்பு மந்திரி என அழைக்கப்படுகிறார்; ஆனால் முந்தைய மிருகத்தனத் தன்மையுடன்தான் போலீசார் எதிர்ப்பாளர்களை நடத்துகின்றனர். Alexis Grigoropoulos சுடப்பட்டதில் தொடர்புடைய இரு போலீஸார் மீது வழக்கு தொடுப்பது தாமதிக்கப்பட்டுள்ளது, இப்பொழுது அது ஜனவரி 20 ல் தொடங்கும்.

ஜேர்மனிய Frankfurter Rundschau குறிப்பிடுகிறது: "இங்கு வெடித்து எழுந்துள்ளது பெரும் ஏமாற்றத் திகைப்பு ஆகும்; ஒரு புதிய தலைமுறையில் பெரும் இயலா ஏக்கத்தன்மை --ஒரு வருங்காலம் இழக்கப்பட்டுவிட்டது என்று அது உணர்ந்திருக்கும் நிலை." அரசியலில் பல பிரிவுகளில் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து உறுதிமொழிகள் வந்துள்ள போதிலும், கிரேக்கம் தன்னுடைய ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 2.5 சதவிகிதம் மட்டுமே கல்விக்கு தொடர்ந்து செலவழிக்கிறது--இது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகக் குறைவானது ஆகும். பள்ளியை விட்டு நீங்குபவர்களில் ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை. அதே நேரத்தில் Transparency International நடத்திய ஆய்வின்படி ஊழல் என்று வரும்போது ஐரோப்பாவில் கிரேக்கம்தான் முதலில் நிற்கிறது.

கிரேக்கத்தின் உள்நாட்டு பிரச்சினைகள் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியினால் கூடியுள்ளன. அக்டோபர் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு சற்று முன்னதாக அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த கரமன்லிஸ் சர்வதேச நெருக்கடியை ஒட்டி கிரேக்கத்தின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 2006ல் 6 சதவிகிதம் அதிகரிக்கும் என்றார். PASOK தேர்தலுக்கு பின்னர் இந்த முன்கணிப்பு 12.7 சதவிகிதம் என இரு மடங்கு ஆகும் என்று கூறினார்; உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான குறைப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரியது.

ஐரோப்பிய ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி கிரேக்கம் இப்பொழுது யூரோப்பகுதியில் மிக அதிக கடனைச் சுமக்கிறது --2010ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் கிட்டத்தட்ட 125 சதவிகிதம் ஆகும். அதன் குறையும் நிதிய அந்தஸ்த்தை அடுத்து கிரேக்க நாடு சர்வதேச நிதியச் சந்தைகளில் பெற்ற கடன்களுக்கு கூடுதலான வட்டிவிகிதங்களை கொடுக்க வேண்டும்; இது அதன் கடனை இன்னும் அதிகரிக்கும். கடந்த புதனன்று ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரி ஏதென்ஸின் வரவு-செலவுத் திட்டக் கொள்கையை பிரஸ்ஸல்ஸில் மேற்பார்வையின் கீழ் கொண்டுவர முடிவெடுத்தார்; இது குறைப்புக்களை கொண்டுவரும் அழுத்தங்களை அரசாங்கத்தின்மீது அதிகரிக்கும்.

கிரேக்கப் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடியின் தன்மை பைனான்ஸியல் டைம்ஸில் ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது; அது கிரேக்கத்தில் உள்ள நிலைமையை ஜேர்மனி 1930களின் ஆரம்பத்தில் கொண்டிருந்த நிலைமையுடன் இணைத்து ஒப்பிட்டுக் காட்டுகிறது. "கிரேக்கத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியின்போது ஜேர்மனியில் Bruning கொண்டு வந்த பேரழிவுக் கொள்கையின் விளைவுகள் போலவே வரக்கூடும்" என்று தெற்கு ஐரோப்பிய Dekabank ன் வல்லுனர் Sebastian Wanke கூறியுள்ளார்.

யூரோப்பகுதி குழுவின் தலைவர் Jean-Claude Juncker ம் அரசாங்கக் கடன் அதிகமாகப் பெருகியுள்ளது பற்றிக் கவலை தெரிவித்துள்ளார். ஏதென்ஸில் உள்ள அரசாங்கம் பற்றாக்குறையை கட்டுப்படுத்த கூடுதல் முயற்சிகளைக் கொள்ள வேண்டும் என்று 16 யூரோ நாடுகளின் நிதி மந்திரிகள் கூட்டம் செவ்வாய் மாலை நடந்து முடிந்தபின், ஜங்கர் அறிவித்தார்.

கரமனலிஸின் புதிய தாராளக் கொள்கையை எதிர்த்தல், தேசிய செலவுகளை அதிகமாக்குதல், வேலையின்மை பெருக்கத்தை எதிர்த்தல் என்ற உறுதிமொழிகளுடன் PASOK தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது போல், PASOK, Papandreou இப்பொழுது அதற்கு முற்றிலும் மாறானதைத்தான் செய்ய முடிகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் இன்னும் சமத்துவம் நிறைந்த சமூகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதிமொழி இருந்தாலும் PASOK முந்தைய அரசாங்கம் நடத்தியிருந்த போக்கையேதான் துல்லிமாகப் பின்பற்றுகிறது.

பதவிக்கு வந்த சில வாரங்களிலேயே கிரேக்க சமூக ஜனநாயகவாதிகள் மக்கள்மீது முக்கியமான தாக்குதல்களை தொடர்ச்சியாக செயல்படுத்துகின்றனர். தேர்தலுக்கு முன்பு கொடுத்த உறுதி மொழிகளுக்கு முற்றிலும் மாறாக அவர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டுடன் தொழிலாள வர்க்கத்தின்மீது பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் ஏற்ற விரும்புகின்றனர்.

பிரதம மந்திரி Papandreou நாட்டின் முழு ஓய்வூதியத் திட்டத்தையும் "சீர்திருத்தும்" தன் விருப்பத்தை அறிவித்துள்ளார்; இதற்கான ஓய்வூதிய வயது உயர்த்தப்படும், ஓய்வூதிய அளிப்புக்கள் உயர்த்தப்படும், முன்கூட்டி ஓய்வு பெறுவதற்கான கோரிக்கைகள் குறைக்கப்படும் என்றார். வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் அரசாங்கம் எடுக்க உள்ள நடவடிக்கைகளின் தொடக்கம்தான் இவை.

பொதுப்பணித் துறையில் ஊதியங்களை முடக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது; மேலும் அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள், பணிகள் ஆகியவற்றைத் தனியார்மயமாக்கும் முயற்சியும் தீவிரப்படுத்தப்படும்.

கரமன்லிஸ் ஓய்வூதியங்கள் கடுமையாக குறைக்க முற்பட்டார்; ஆனால் மகத்தான வெகுஜன எதிர்ப்பை ஒட்டி அப்போக்கை கைவிட நேர்ந்தது. பாப்பாண்ட்ரூ இப்பொழுது அதே போன்ற நடவடிக்கைகளை திட்டமிடுகிறார்: ஆனால் இம்முறை நாட்டின் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஈடுபடுகிறார்.

இரு முக்கிய தொழிற்சங்க அமைப்புக்களான GSSE, ADEDY ஆகியவை ஏற்கனவே குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய PAME தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை அவை நிராகரித்து விட்டன; ஆனால் அரசாங்கம், முதலாளிகள் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் பங்கு பெற ஒப்புக் கொண்டுள்ளன.

GSSE, ADEDY இரண்டும் கிரேக்கத் தொழிலாளர்களை பலநேரமும் காட்டிக் கொடுத்துள்ளன. முந்தைய அரசாங்கங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அல்லது மறைமுகாமான ஆதரவை இரு அமைப்புக்களிடம் இருந்தும் நம்ப முடிந்தது; அதுவும் அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் அல்லது பொதுநலச் செலவு குறைப்புக்களை செயல்படுத்துதல் என வரும்போது. அவை இப்பொழுது அரசாங்கத்திற்கு கொடுக்கும் ஆதரவு இன்னும் வலதிற்கு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது; இது தவிர்க்க முடியாமல் அவற்றைத் தொழிலாளர்களுடன் மோதலுக்கு கொண்டு வரும்.

தொழிற்சங்க தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளும் அரசாங்க அதிகாரிகள் விடும் அறிக்கைகளைப் போலவே உள்ளன. CSSE தலைவர் Yiannis Panagopoulos கருத்தின்படி, பொருளாதார நெருக்கடி மற்றும் பெரும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை என்பது பற்றி "ஒரு பொது விவாதம் சமூக பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி இருக்க வேண்டும்" என்ற பொருளைத் தருகிறது. கிரேக்க வங்கியாளர்களும் பெருநிறுவன நிர்வாகிகளும் இதேபோன்ற கருத்துக்களைத்தான் கூறுகின்றனர்.

கிரேக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள இழிந்த நிலைமைகள் PASOK கொள்கைகளினால் விளைந்தவை ஆகும். இக்கட்சி கிரேக்க அரசியலை 1974 இராணுவ சர்வாதிகாரம் முடிந்ததில் இருந்து மேலாதிக்கத்திற்குள் கொண்டுள்ளது. இது சிறு இடைவெளிகள் தவிர 2004 வரை அதிகாரத்தில் இருந்தது.

1980èOTM, PASOK பல குறைந்த வரம்புடைய சமூக சீர்திருத்தங்களை செய்தது; அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு வனப்புரைகளையும் இணைந்திருந்தது. ஆனால் 1990களில் மற்ற ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகளைப் போலவே இதுவும் கடுமையாக பொதுநலச் செலவுக் குறைப்புக்களை செயல்படுத்தத் தொடங்கியது.

1996TM Konstantin Simitis தலைமையில் PASOK அரசாங்கம், கட்டுப்பாடுகளை தளர்த்தல், பொதுத் துறையைத் தனியார் மயமாக்குதல் இவற்றை மையமாகக் கொண்டு செயல்படுத்தியது. இக்கொள்கைகள் தொழிற்சங்கங்களின் ஆர்வத்திடையே செயல்படுத்தப்பட்டன. பழமைவாத கரமன்லிஸ் அதிகாரத்திற்கு 2004ல் வந்தபோது அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தினார்.

இப்பொழுது எதிர்க்கட்சியில் இருக்கும் New Democracy தன்னுடைய வலதிற்கான மாற்றத்திற்கு தயாரிப்புக்களை நடத்துகிறது. Antoins Samaras ஐ புதிய கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. முந்தைய நிதி மந்திரி, வெளியுறவு மந்திரி, பண்பாட்டுத் துறை மந்திரி என்ற பல ஆண்டுகள் இவர் New Democracy-ல் இருந்துள்ளார்; ஆனால் 2000ம் ஆண்டில் முறித்துக் கொண்டு தீவிர வலது Pola Party ஐ புதிய பாசிஸ்ட்டுக்களுடன் சேர்ந்து தொடக்கியுள்ளார்.

2004 தேர்தலுக்கு முன்பு, அவர் கட்சியின் வலதுசாரியில் முக்கிய இடத்தை ஆக்கிரமிக்க New Democracy க்கு திரும்பினார். 1990களில் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது, அவர் அண்டை நாடான மாசிடோனியா அப்பெயரை பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியதால் ஏற்கனவே தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். சமரஸ் கருத்துப்படி, இது "கிரேக்க வரலாறு, பண்பாடு ஆகிவற்றை ஸ்லாவியர்கள் தகா வழியில் பறித்துக்கொள்வது போலாகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved