World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குGerman Green leader Joschka Fischer bangs the drum for Afghanistan war ஜேர்மனிய பசுமைக் கட்சித் தலைவர் ஜோஷ்கா பிஷ்ஷர் ஆப்கானிஸ்தான் போருக்காக முரசு கொட்டுகிறார் Peter Schwarz ஆப்கானிஸ்தான் போரின் விரிவாக்கம் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு கடுமையான கஷ்டங்களை தோற்றுவித்துள்ளது. போரில் ஜேர்மனியின் போக்கு பற்றி முரண்பட்ட அறிக்கைகள் அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சரகம் மற்றும் பவேரிய மாநில ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய (CDU) தலைவரும் ஜேர்மனியின் அதிபருமான அங்கேலா மேர்க்கெல் பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் வொன் கூட்டன்பேர்க்குடன் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் CSU) இணைந்து கூடுதலான ஜேர்மனியத் துருப்புக்களை ஜனவரி இறுதியில் அதிகப்படுத்துவதற்கான அறிவிப்பிற்கு தயாராகையில், CSU தலைவரும் முன்னாள் பவேரிய பிரதம மந்திரியுமான கோர்ஸ்ட் ஸீகோவர் பகிரங்கமாக அத்தகைய நடவடிக்கைகை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். தாராளவாத ஜனநாயக கட்சியின் (FDP) தலைவரும் ஜேர்மனியின் வெளியுறவு மந்திரியுமான கைடோ வெஸ்டவெல்ல இப்பிரச்சினையில் மெளனமாக உள்ளார். இந்த வேறுபாடுகளுக்கு நடுவே போருக்கு எதிரான மக்கள் உணர்வும் பெருகியுள்ளது. ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, கருத்து கேட்கப்பட்டவர்களில் 69 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய துருப்புக்கள் எவ்வளவு விரைவில் திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவில் திரும்ப ஆதரவு கொடுத்துள்ளனர். இது செப்டம்பர் கருத்துக்கணிப்பில் இருந்து 12 சதவிகிதம் அதிகமாகும். கருத்துக்கணிப்பின்படி, துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தியிருப்பது பற்றி அரசாங்கம் நேர்மையாக தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று 77 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். Der Spiegel கருத்துக்கணிப்பின் முடிவுகள் பற்றி பின்வருமாறு கூறியுள்ளது: "ஆப்கானிஸ்தானில் படைகள் ஈடுபடுத்துவது பற்றிய எதிர்ப்பு அதிகரிக்கும் அளவிற்கு அரசாங்கத்தால் விரைவாக பிரதிபலிக்கமுடியாது."பெருகிய முறையில் போரின் மிருகத்தன்மை அதிகரித்துள்ளது, மோசடித்தன ஆப்கானிய ஜனாதிபதித் தேர்தல், ஹமித் கர்சாய் உடைய ஊழல் மலிந்த ஆட்சி, மற்றும் குண்டூஸில் சமீபத்தில் நடைபெற்ற படுகொலை, அதை அரசாங்கம் மூடி மறைத்தது, அனைத்தும் போருக்கான உத்தியோகபூர்வ நியாயப்படுத்ததலை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன. கிணறுகள் வெட்டுவது, ஆப்கானிய மகளிருக்கு விடுதலை வாங்குவது, குடிமக்களைக் காப்பது, ஜனநாயகத்தை வளர்ப்பது இவற்றைத்தான் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவம் பணியாகக் கொண்டுள்ளது என்று ஜேர்மனியில் இன்று எவரும் நம்பவில்லை. ஆனால் முக்கிய காரணங்களுக்காக அரசாங்கம் போரின் உண்மை நோக்கங்களை வெளிப்படுத்தவும் தயங்குகிறது. இந்தப் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தானில் படைகள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தும் அதற்கான புதிய நியாயப்படுத்தும் கருத்துக்களை கூறுவதிலும் ஜோஷ்கா பிஷ்ஷர் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளார். பசுமைக் கட்சியின் முதல் மற்றும் ஒரே வெளியுறவு மந்திரியாக (1998-2005) இருந்தவர் என்ற முறையில், பிஷ்ஷர் ஜேர்மனிய இராணுவம் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு நிலவிய நம்பிக்கையை முறித்திருந்தார். கொசவோ போரில் ஜேர்மனிய இராணுவம் பங்குபெற்றதையும் பிஷ்ஷர்தான் நியாயப்படுத்தி ஹொலோகோஸ்ட்டின் (Holocaust) மரபு ஜேர்மனியை பால்கன் பகுதிகளில் இனப்படுகொலைகள் எனக் கூறப்படுவதை தடுத்து நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது என்ற இழிந்தவாதங்கள் மூலம் நியாயப்படுத்தினார். ஆப்கானிஸ்தானத்திற்கு ஜேர்மனியப் படைகள் அனுப்பப்பட்டதும் அவர் பதவியில் இருந்தபோதுதான் நடந்தது. பிஷ்ஷரின் சமீபத்திய கருத்தில் மேலோங்கி நிற்பது அவர் இனியும் ஆப்கானிஸ்தானில் துருப்புக்களை நிறுத்துவதை மனிதாபிமான அடிப்படையில் என்பதை நியாயப்படுத்தும் வகையில் இல்லை. மாறாக அவர் முற்றிலும் பூகோள-அரசியல் நோக்கங்களைத்தான் மேற்கோளிடுகிறார். "ஆப்கனிஸ்தானிய போருக்கான மூலத்தையோ அல்லது அதற்கான அர்த்தத்தையோ அந்நாட்டிலேயே காண்பது இயலாததாகும்". என்று பிஷ்ஷர் Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். "ஆப்கானிஸ்தான் ஒரு போர்க்களம்தான்; ஆனால் அந்நாட்டை 1970 களின் நடுப்பகுதியில் இருந்து பேரழிவிற்கு உட்படுத்தியதற்கான காரணங்கள் அப்பொழுதும், இப்பொழுதும் அதன் எல்லைகளுக்கு அப்பால்தான் காணப்பட முடியும். எனவே ஒரு தனித்த "ஆப்கானிய தீர்வு" என்பது சாத்தியமற்றது." சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெறப்பட்டவுடன் ஆரம்பித்து, 1989ல் இருந்து நடப்பது "ஹிந்துகுஷ் பகுதி மீது பிராந்திய அண்டை நாடுகளுக்கு இடையே நடக்கும் ஒரு மறைமுகமான போர் ஆகும்''. சவுதிஅரேபியாவின் ஆதரவுடன் பாக்கிஸ்தான், "அதன் முக்கிய விரோதியான இந்தியாவிற்கு எதிராக மூலோபாய ஆழத்தைக் காண முற்பட்டது.", இதற்காக தலிபானை வலுப்படுத்தியது. ஈரான் தன்னுடைய நலன்களை ஷியைட் சிறுபான்மை உதவியுடன் பாதுகாத்தது, மற்றும் வடக்கில் உள்ள அண்டை நாடுகள் (ரஷ்யா உட்பட) தாஜிக் வடக்கு கூட்டு (Tajik Northern alliance) மற்றும் உஸ்பெக் (Uzbek) போராளிகளிடம் உதவியை நாடின. மார்ச் 2003 ல் ஈராக் மீதான படையெடுப்பு, ஒரு "மடத்தனம்" என்று பிஷ்ஷர் கருதுவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "அமெரிக்காவின் இராணுவ வலிமையைப் பெரிதும் வீணடித்தது மட்டும் இல்லாமல், இப்பகுதி முழுவதுலும் ஈரான் ஒரு மத்திய பூகோள-அரசியல் செல்வாக்குப் பெறுவதற்கு காரணமாயிற்று." என்று பிஷ்ஷர் கூறுகிறார். பிஷ்ஷர் தொடர்கிறார்: "எனவே இன்று ஆப்கானிய புதிருடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் முதலிலும் முக்கியமானதுமாக பிராந்திய யதார்த்தங்களை ஆராய வேண்டும். மேலை நாடுகளால் படைகளை பின் வாங்குவதற்கு இயலுமா?" இக்கேள்விக்கு ஒரு தெளிவான "முடியாது" என்பதைத்தான் பிஷ்ஷர் விடையாகக் கொடுக்கிறார்; மேலும் தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில்--"ஆப்கானிஸ்தான் உறுதியாக இருக்கும் நிலை காப்பாற்றப்பட வேண்டும், நாட்டை அது மீண்டும் பிராந்திய நலன்களுக்கான போர்க்களமாக, அல் குவேடாவிற்கு ஒரு அமைப்புத் தளமாக மீண்டும் வருவதைத் தடுக்க வேண்டும், போர் தொடரப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். "போதுமான இராணுவ நிலைப்பாடு இல்லை என்றாலோ, முன்னேற்றமான, தீவிர கட்டமைப்பு முயற்சிகள் இல்லை என்றாலோ, இந்த இலக்கு அடையப்பட முடியாதது." என்றும் அவர் தொடர்ந்து எழுதியுள்ளார். இது ஒரு உண்மையை வெளியிடும் ஒப்புதல் வாக்குமூலமாகும். "ஹிந்துகுஷ் பகுதியில் அதிகாரத்தை" பிராந்திய அண்டை நாடுகளிடம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, பசுமைவாதிகளின் முக்கியநபர் ஏற்கனவே நூறாயிரக்கணக்கான குடிமக்கள் உயிர்களை குடித்துவிட்ட, சத்தேகமின்றி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை விழுங்கும் ஒரு போரின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறார். கட்சிச் செய்தித் தொடர்பாளர்கள் சற்றே எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவித்தாலும், அவருடைய கட்சியின் ஆதரவும் இதற்கு பிஷ்ஷரிடம் உள்ளது. "ஹிந்துகுஷ்ஷில் அதிகாரத்தை" செலுத்தும் உரிமை நாட்டின் பிராந்திய அண்டை நாடுகளைவிட அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் கூடுதலான உரிமையைப் பெற்றுள்ளனவா என்ற வெளிப்படையான கேள்விக்கு பிஷ்ஷர் விடையிறுக்கவில்லை. இங்குதான் அவருடைய நேர்மைத்தனம் முடிவுறுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சுயநலமற்ற முறையில் தலையீடு செய்வதாக அவர் காட்ட முற்படுகிறார். அதுவும் தலையீடு இல்லாவிட்டால் பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், அணுசக்தி அச்சுறுத்தல்கள், பிராந்திய மோதல்கள் மற்றும் இவற்றை ஒட்டிய சீரழிவு வந்து விடும் என்று கூறுகிறார். பிஷ்ஷருக்கு இது நன்கு தெரியும். மத்திய ஆசியாவில் இருக்கும் இயற்கை எரிவாயுவை முக்கிய ஐரோப்பிய எரிசக்தி நிறுவனங்கள் சுரண்ட அனுமதிக்கும் நாபுக்கோ (Nabucco) குழாய்த்திட்டத்தினால் பணம் வழங்கப்பட்ட செல்வாக்குச் செலுத்துபவர் (lobbyist) என்ற முறையில் பிஷ்ஷர் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான போராட்டத்தைப் பொறுத்த வரையில் முன்னணியில் இருப்பவர். அந்த இயற்கை மூலவளங்கள்தான் ஆப்கானிஸ்தானில் போரை மூட்டியுள்ளன. ஒரு முன்னாள் வெளியுறவு மந்திரி என்னும் முறையில், பிஷ்ஷர் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski உடைய மூலோபாயக் கருத்துக்களைப் பற்றி நெருக்கமாக அறிந்துள்ளார். அவர்தான் ஆப்கானிய முஜாஹிதீனுக்கு ஆதரவை அமெரிக்கா கொடுக்கும் திட்டத்தைத் தொடக்கியவர். 1998ல் அவர் எழுதிய The Grand Chessboard (பாரிய சதுரங்கப்பலகை) என்ற புத்தகத்தில் Brzezinski 21ம் நூற்றாண்டில் அமெரிக்க உலக மேலாதிக்கத்தை காப்பதற்கு முக்கிய திறவுகோல் மத்திய ஆசியா மீதான கட்டுப்பாடு என்ற கருத்தாய்வை வளர்த்திருந்தார். ஆப்கானிஸ்தானை பற்றி அவர் குறிப்பான கவனத்தைக் காட்டியிருந்தார். பிஷ்ஷரைப் பொறுத்தவரையில், மத்திய ஆசியாவில் உள்ள தாதுப் பொருட்களைப் பெறுவதற்காக அனைத்து வழிவகைகளும் பயன்படுத்துதல் முக்கியமானவை ஆகும். அதுதான் அப்பகுதியில் "மேற்கின்" மேலாதிக்கத்தை அப்பகுதியில் நிலைநிறுத்தும். ஜேர்மனிய மற்றும் அமெரிக்க நலன்கள் ஒரே மாதிரியானவை இல்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோற்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை மீண்டும் கொண்டுவரமுடியாத அளவிற்கு சேதப்படுத்திவிடும் என்பதோடு, ஐரோப்பிய சக்திகளுக்கும் ஆழ்ந்த தாக்கங்களையும் காட்டும். அட்லான்டிக்கின் இரு கரைகளிலும் ஆப்கானிஸ்தான் ஒரு ''சதுரங்க பலகை'' போல் உள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வளர்ச்சிபெறும் நாடுகள் அங்கு தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிஷ்ஷரைப் பொறுத்தவரை "பெரிய வினா", "அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அத்தகைய செயற்பாட்டிற்கேற்ற வலிமை, தொடர்ந்த நின்றுபிடிக்கும் தன்மை (perseverance) மற்றும் தொலைநோக்கை கொண்டுள்ளனவா என்பதுதான்." அவர் குறிப்பிடுகிறார்: "இதைப் பற்றி சந்தேகப்பட்டால் தக்க காரணங்கள் உள்ளன. இதற்கு மாற்றீடு இந்த பெரும் வெடிப்புத் தன்மை உடைய இடத்தில் பெரும் குழப்பம் மற்றும் ஆபத்தான வருங்காலம் என்று இருக்கும்." வரலாற்று நிகழ்வுகளைச் சற்றே பார்த்தால் ஒரு யுத்தவெறிகொண்ட சக்தியின் வலிமையும், நின்றுபிடிக்கும் தன்மையும் உள்எதிர்ப்பை எந்த அளவிற்கு அது தடுத்துக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பொறுத்து இருக்கும் என்பதை வெளிப்படுத்தும். முதல் உலகப் போரில் ஜேர்மனிய இராணுவத்தின் "நின்றுபிடிக்கும் தன்மைக்கான" முக்கிய நிபந்தனையாக இருந்தது ஜேர்மனிய ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்ததும், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தொழிலாளர்கள் இயக்கத்தை நொருக்கியமையும்தான். இன்னும் சமீபத்தில் அமெரிக்க வியட்நாம் போரை இழந்ததற்குக் காரணம் போருக்குப் பெருகிய முறையில் உள்நாட்டு எதிர்ப்பு அதிகரித்ததுதான். இவ்விதத்தில், பிஷ்ஷர் மற்றும் பசுமைவாதிகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படலாம். அவர்கள் தங்கள் சமாதானவாதிகள் என்பதில் இருந்து போருக்கு தீவிர ஆதரவளிப்பவர்களாக மாற்றிக் கொண்டுவிட்டனர். நூறாண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிய மத்தியதர வர்க்கம் பேரரசரின் கடற்படைத் திட்டத்தைப் பார்த்து மயக்கமுற்றது. இன்று பசுமைவாதிகள் ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்படுவது பற்றி தங்கள் உற்சாகத்தை வெளியிடுகின்றனர் வடிவம் மாறியுள்ளது, ஆனால் உள்ளடக்கம் அப்படியே மாறாதுள்ளது. இந்த நிலைப்பாட்டில் அதன் தவிர்க்க முடியாத தர்க்கம் உள்ளது. போருக்கு மக்கள் எதிர்ப்பு பெருகும்போது, பிஷ்ஷரும் மற்றும் பசுமைவாதிகளும் மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்கும் கடுமையான அரச ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுப்பர். |