World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குObama's Afghan escalation and the decay of democracy ஒபாமாவின் ஆப்கன் போர் விரிவாக்கமும் ஜனநாயகத்தின் சிதைவும் Bill Van Auken தன்னுடைய பதவியின் முதலாவது ஆண்டு நிறைவை ஜனாதிபதி ஒபாமா நெருங்குகையில், ஆப்கானிஸ்தானில் அவர் போரை விரிவாக்குவது வாஷிங்டன் இன்னும் கூடுதலாக இராணுவ வலிமையை வெளிநாடுகளில் தொடர்வதற்காக ஜனநாயக ஆட்சி வழிவகைகளைச் சிதைக்கும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. இன்னும் கூடுதலாக 30,000 அமெரிக்கத் தரைப்படை மற்றும் கடற்படை துருப்புக்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பவதாக இந்த மாதம் முன்னதாக அவர் கொடுத்த அறிவிப்பில் இருந்து பெருகிய முறையில் இது தெளிவாகியுள்ளது. "ஒபாமா கோட்பாடு" என்ற பரந்த வகையில் விவரிக்கப்படும் கொள்கையை அவர் நோபல் சமாதானப் பரிசு பெற்றபோது ஓஸ்லோவில் நிகழ்த்திய உரையில் அது இன்னும் அதிகமாக உரைக்கப்பட்டுள்ளது. புஷ் கோட்பாட்டின் அனைத்து அடிப்படைகளையும் ஒபாமா கோட்பாடு உள்ளடக்கியுள்ளது--தவிர்க்க இயலாத போர், அமெரிக்காவின் "உலகின் ஒரே பெரும் இராணுவ வல்லரசு" என்பது உறுதிப்படுத்த விதத்தில், அமெரிக்கா தான் நினைப்பது போல் இராணுவத் தாக்குதலை ஒருதலைப்பட்சமாக தொடக்கும் என்ற கருத்துக்களில் அவை வெளிப்பட்டுள்ளன. ஒபாமாவின் பங்களிப்பு இவ்விதத்தில் தற்பொழுது நிலவும் சர்வதேச போர் விதிகளைக் குப்பையில் போட்டுவிட்டு, முன்பு வெளியுறவுக் கொள்கையில் வலிந்த போர் முறையான கருவி என்ற வரையறுக்கப்பட்டதை அங்கீகரித்துள்ளதுதான். இந்த பாசாங்குத்தன உரையின் முக்கிய பாகங்கள் ஏகாதிபத்தியப் போர் பொதுவாகவும்,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்தும் போர் குறிப்பாகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆழ்ந்த எதிர்ப்பைப் கொண்டு
உள்ளது என்பதையும் உட்குறிப்பாக ஒப்புக் கொள்கின்றன. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள், போர் எதிர்ப்பு உணர்வை அமெரிக்க ஜனாதிபதி சரியாகப் புரிந்து கொள்ளாத தன்மை என்று உதறிவிட்டார். "சமாதானத்திற்கு தியாகம் தேவை" என்றும் கூறியுள்ளார். சுருங்கக்கூறின், சமாதானத்திற்குப் போர் தேவை, இதையொட்டி இறக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுபவர்கள் அதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். இதே பல்லவிதான் நோபல் உரைக்குப் பின்னர் ஒபாமாவாலும், செய்தி ஊடகத்தாலும் விரிவாக்கப்பட்டுக் கூறப்படுகின்றன. ஞாயிறன்று CBS செய்தி நிகழ்ச்சியான "60 நிமிடங்கள்" பேட்டி ஒளிபரப்பப்பட்டதில் ஒபாமா "பெரும்பாலான அமெரிக்கர்கள்....இந்தப் போர் நடத்தத் தகுதியற்றது என நம்புவது" ஏன், எச் சூழலில் என்று கேட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதை எப்படியும் விரிவாக்க முடிவு செய்தார் என்று வினவப்பட்டார். "ஏனெனில் அதுதான் சரியானது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என்னுடைய வேலை...எதற்கு நன்கு வாக்களிக்கப்பட்டது என்ற கவலையை நான் கொண்டால், இந்த ஆண்டு பல செயல்களை நாம் செய்திருக்க மாட்டோம்." என்று விடையிறுத்தார். இவ்விடத்தில் தான் கூறவிரும்பியதைவிட அதிகமாகவே ஒபாமா கூறிவிட்டார். "இந்த பல செயல்களில்" அவருடைய நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டிற்கு முட்டுக் கொடுப்பதற்காக பல டிரில்லியன் டாலர்களை ஒதுக்கியது, அதே நேரத்தில் தங்கள் வேலைகளை இழந்த, வருமானங்களை இழந்த, வீடுகளை இழந்த மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" என்பதும் அடங்கும். இந்த "60 நிமிஷங்கள்" பேட்டி, துணை ஜனாதிபதி டிக் ஷெனி 2007, 2008 ஆண்டுகளில் புஷ் நிர்வாகம் பெரும் எதிர்ப்பிற்கு இடையே ஈராக்கில் "விரிவாக்கம்" நடத்தியபோது கொடுத்த பேட்டிகளைத்தான் கவலைக்கு இடம் கொடுக்கும் வகையில் நினைவுபடுத்தியது. 2007 ஜனவரி மாதம் Fox News பேட்டியில் தோன்றிய ஷெனி அமெரிக்க மக்கள் போரை எதிர்க்கும் தன்மையை உதறித்தள்ளினார். "சொந்த மதிப்பு உடைய எந்த ஜனாதிபதியும் இவ்வளவு பெரிய முடிவுகளை வாக்குகளின் அடிப்படையில் எடுக்க இயலாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். மே 2008ல் ABC News ஆல் "அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர் பொருட்படுத்தவில்லையா?" என கேட்கப்பட்டதற்கு ஷெனி கூறினார்: "இல்லை. மாறும் மக்கள் கருத்துக் கணிப்பின் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கில்லை." ஒபாமாவைப் பொறுத்தவரையில் மக்களின் போர் விரோதப் போக்கைப் பொருட்படுத்தாத்தன்மை இன்னும் வியக்க வைக்கிறது; ஏனெனில் 2008 தேர்தலில் இவர் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே போர் எதிர்ப்பு உணர்வுகளினால்தான். ஓஸ்லோ உரையை முற்றிலும் பாராட்டிய செய்தி ஊடகம் அந்தக் கருத்தை விரிவாக்கும் வகையில் மக்களுடைய நோக்கம் போரை நடத்துவதில் குறுக்கிட அனுமதிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கிறது. திங்களன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் நியூயோர்க் டைம்ஸ் "ஐரோப்பாவில் இருபக்கமும் உள்ள நிலை நீண்ட காலத்திற்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்ற தீவிர கோரிக்கைகளால் மாற்றப்பட்டுவிட்டது" என்று எழுதியுள்ளது. உண்மையில் பிரான்ஸ், ஜேர்மனியில் கருத்துக் கணிப்புக்கள் மக்களில் மூன்றில் இரு பகுதியினர் அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆதரவு கொடுத்துள்ளனர். இத்தகைய வெகுஜன எதிர்ப்பிற்கு இடையில், டைம்ஸ் ஆலோசனை கூறுகிறது: "ஜனநாயக முறைப்படி தேர்த்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களுடைய அவநம்பிக்கையை புறக்கணிக்க முடியாது; ஆனால் அவர்கள் கூடுதலாக அறிந்துள்ள நிலையில் மக்களிடம் சரணடைய வேண்டிய தேவையும் இல்லை. திருமதி மேர்க்கெல் மற்றும் திரு சார்க்கோசி இருவரும் வாக்காளர்களுக்கு தாலிபன் மற்றும் அல்கெய்டா மீண்டும் ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொள்ளக்கூடாது, பாக்கிஸ்தானில் இன்னும் உறுதிக்குலைப்பு கூடாது என்றால் ஐரோப்பா அதிக விலையைத்தான் கொடுக்க வேண்டும் என்ற கடின உண்மையை கற்பிக்க வேண்டும்." வாஷிங்டன் "வாக்களார்களுக்கு எப்படிச் சிறந்த முறையில் கற்பிப்பது" என்பது பற்றிய தரத்தை முன்வைத்துள்ளது போலும்: அதாவது தயாரிக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மூலம் மக்களை பயமுறுத்துவது, போருக்கான போலிக் காரணங்களைக் காட்டி அவர்களை ஏமாற்றுதல் என. அமெரிக்க இராணுவவாதத்தின் உண்மையான உந்துதல்கள் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. இதுதான் டைம் ஏட்டின் Joe Klein ஆல் திங்களன்று எழுதியுள்ள ஒரு கட்டுரையில் விவரிக்கப்படுகிது; இவர்தான் செய்தி ஊடகத்தின் மூலம் அரசியல், தேசியப் பாதுகாப்பு நடைமுறையின் தகவல் தெரிவிப்பவர். அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருப்பதற்கு காரணம் இஸ்லாமிய ஆதரவு இராணுவ ஆட்சி மாற்றம் பாக்கிஸ்தானில் வந்துவிடக்கூடாது, அதையொட்டி பாக்கிஸ்தான், இந்தியாவிற்கு இடையே போர் வரும் வாய்ப்பு குறையும் என்ற கருத்தை கிளைன் முன்வைத்துள்ளார். "இந்தப் போர் ஏன் தேவை என்பதற்கான சிறந்த வாதங்கள் ஜனாதிபதியால் கூறப்படாலமலேயே இருக்க வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க போருக்கான உண்மைக் காரணங்கள் உள்ளன, ஆனால் மோசடித்தன காரணங்கள்தான் அமெரிக்க மக்களிடம் கூறப்பட வேண்டும். இப்படி "கூறப்படாத உந்ததுதல்களின் மிகவும் அடிப்படையானது அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை உலகின் மிகப் பெரும் எரிசக்தி இருப்புக்களின்மீது கட்டுப்பாட்டுகளை கொள்வதற்கும் அவற்றுடன் குழாய்த்திட்டங்களை மேற்கிற்கு திசை திருப்புவதும் அடங்கும். இந்தக் கறைபடிந்த குடியேற்ற வகைப் போரைத்தான் ஒபாமா தொடர்ந்திருப்பதுடன் விரிவாக்கமும் செய்துள்ளார்; இப்போர் மக்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்ப்பதை அடக்குவதற்கும் அமெரிக்காவை ஆளும் பெருநிறுவன நிதியத் தன்னலக்குழுவின் நலன்களைக் காப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கமும் செய்தி ஊடகமும் முறையாகத் தவறான தகவல்களைத் தெரிவித்தபோதிலும்கூட, மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினர் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் எட்டு ஆண்டுகள் போர், ஈராக்கில் நடக்கும் ஆறாண்டுகளுக்கும் மேலான போர் ஆகியவற்றில் இருந்து தங்கள் முடிவுகளை எடுத்துள்ளனர். ஆனால் போருக்கான மக்கள் எதிர்ப்பிற்கு இருக்கும் அரசியல் நடைமுறையில் தக்க வெளிப்பாடு கிடைக்கவில்லை. 2006, 2008 இரு ஆண்டுகளிலும் போருக்கு எதிராக வாக்களித்த பின்னரும் கூட, அமெரிக்க மக்கள் இராணுவ வலிமையை மற்றும் போர் விரிவாக்கத்தின் தொடர்ச்சியைத்தான் எதிர்கொண்டுள்ளனர். மக்கள் எதிர்ப்பிற்கு எதிரான ஏகாதிபத்திய போர்களை தொடர்வதோ, எஞ்சிய மக்களின் இழப்பில் ஆளும் உயரடுக்கின் இலாபங்களையும் செல்வத்தையும் காக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதோ, ஜனநாயக வழிவகைகளால் இயலாது. இவை இரண்டிற்கும் இறுதியில் அடக்குமுறை, மிரட்டல் வழிவகைகள்தான் தேவைப்படும். இதனால்தான் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் தோற்றுவித்த அடிப்படை போலீஸ் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புக்களை ஒபாமா நிர்வாகம் முழுமையாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. போருக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகளைக் காப்பது போல், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரும் சுயாதீனமாக திரட்டப்படுதல் மூலம்தான் வெற்றிகரமாக நடத்தப்பட முடியும். முதலாளித்துவம்தான் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டு இருப்பதுடன் இன்னும் கூடுதலான குருதி கொட்டும் போர்களை நடத்தும் அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது. |