World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama to extend US attacks in Pakistan

பாக்கிஸ்தானில் ஒபாமா தாக்குதல்களை அதிகமாக்குகிறார்

By James Cogan
8 December 2009

Back to screen version

ஆப்கானிஸ்தானிற்கு ஜனாதிபதி ஒபாமா கூடுதலாக 30,000 துருப்புக்களை அனுப்புவது பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க தாக்குதலின் அதிகரிப்புடன் சேர்ந்துகொள்ளும். நியூ யோர்க் டைம்ஸ் கருத்தின்படி, வெள்ளை மாளிகை பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு அமெரிக்கப் படைகள் பலூச்சிஸ்தானில் உள்ள தாலிபன் தலைவர்கள் என்று கூறப்படுபவர்களை படுகொலை செய்ய அனுமதிக்குமாறு அழுத்தும் கொடுத்து வருகிறது. தாலிபனுடைய தலைவர் முல்லா ஒமார் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எழுச்சியை மாநிலத் தலைநகரமான குவெட்டாவிஅல் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்க இராணுவம் ஆளில்லாத பிரிடேட்டர் ட்ரோன்களை 2001ல் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாக்கிஸ்தான் பழங்குடிப் பகுதிகளில் இஸ்லாமியப் போராளிகளை கொல்லப் பயன்படுத்தி வருகிறது. ஒபாமா பதவிக்கு வந்தபின், தாக்குதல்கள் இன்னும் அதிகமாகியுள்ளன. 2008 நடுப்பகுதியில் இருந்து மதிப்பிடப்பட்டுள்ள 80 தாக்குதல்களில் பெரும்பாலானவை ஒபாமாவால் உத்திரவிடப்பட்டவை. குறைந்தது இஸ்லாமியப் போராளிகள் என்று கூறப்படுபவர்கள் 400 பேராவது கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் ஏராளமான சாதாரணக் குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானிய அரசாங்கம் இந்த இரகசிய நடவடிக்கைகளை பகிரங்கமாக எதிர்க்கிறது, ஆனால் அவைற்றைத் தடுக்க முயற்சிக்கவில்லை; அதன் உளவுத்துறைப்பிரிவுகள் இலக்குகளை அடையாளம் காண்பதில் CIA உடன் ஒத்துழைப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதல்கள் இதுவரை பழங்குடிப் பகுதிகளுடன் நிற்கின்றன; இப்பகுதிகள் முக்கியமாக நிலத்தை நம்பியுள்ள விவசாயிகள், இனவழி புஷ்டுன்கள் அதிகமாக உள்ள தொலைவில் உள்ள மக்கள் எண்ணிக்கை குறைவான எல்லைப் பகுதிகள் ஆகும். பொதுவாக பிரடேட்டர் தாக்குதல்கள் நடத்தும் இடத்தில் அங்கிருந்தே செய்தி ஊடகத் தகவல்கள் கிடைக்காது. ஆனால் இதற்கு மாறுபட்ட விதத்தில் குவெட்டாவில் கிட்டத்தட்ட 800,000 மக்கள் உள்ளனர்; இது நாட்டின் மிக முக்கியமான நகர்ப்புற மையங்களில் ஒன்றாகும். நகரத்திற்குள் அமெரிக்கத் தாக்குதல் எதுவாயினும் பெருமளவு விளம்பரப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சீற்றத்தைத் தூண்டும். பெரும்பாலான பாக்கிஸ்தானியர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர்; அதற்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்குக்கூட பரிவுணர்வு காட்டுகின்றனர்.

ஆயினும்கூட ஒபாமா நிர்வாகம் ஆப்பாக் போரை விரிவாக்கம் செய்வதின் ஒரு பகுதியாக இந்த பொறுப்பற்ற, அரசியலில் வெடிக்கும் தன்மையுடைய நடவடிக்கையை தொடர்வதில் தீவிரமாக உள்ளது.

பல செய்தி ஊடகத் தகவல்களும் ஆப்கானிஸ்தானில் வெளிப்பட்டுள்ள தாலிபன் எழுச்சிக்கு விடையிறுக்கும் விதத்தில் நீடித்து வெள்ளை மாளிகையில் நடக்கும் விவாதங்களில் பாக்கிஸ்தான்தான் மையப் பிரச்சினை என்று குறிப்பிடுகின்றன. ஆப்கானிய கெரில்லாக்கள் பாக்கிஸ்தான் பகுதியை பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் பகுதியாக, பயிற்சிப் பகுதி மற்றும் எழுச்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் பகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரி, "பாக்கிஸ்தான் உதவியின்றி நாம் வெற்றிபெற முடியாது" என்று கூறியதாக நவம்பர் 30ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்டில் மேற்கோளிடப்பட்டுள்ளது. மற்றொரு அதிகாரி நியூ யோர்க் டைம்ஸிடம் நவம்பர் 25 அன்று கூறினார்: "நீங்கள் எத்தனை துருப்புக்களை அனுப்பினாலும், பாக்கிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடம் சிதைக்கப்படாவிட்டால், முழுப் பணியும் முடங்கிவிடும்."

வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, வெளிவிவகாரச் செயலர், ஹில்லாரி கிளின்டன் கடந்த மாதம் இஸ்லாமாபாத்திற்கு வந்திருந்தபோது, பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் வெள்ளை மாளிகையானது ஆப்கானிய எழுச்சியில் தொடர்புடைய ஐந்து அமைப்புக்கள் மீது போரிட அவருடைய அரசாங்கம் இன்னும் கூடுதலான ஒத்துழைப்பை தரவேண்டும் என விரும்பியதாகக் கூறினார்.

பெயரிடப்பட்ட அமைப்புக்கள்: அல் குவைதா, முல்லா ஒமர் தலைமையில் ஆப்கானியத் தாலிபன்கள், பெரும்பாலான வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடிப் பகுதியைக் கட்டுப்படுத்தும் Jalaluddin Haqqani தலைமையில் உள்ள போராளிகள், தெற்கு வஜீரிஸ்தானில் இனவழி பஷ்டூன் பழங்குடி மக்களிடம் பெரும் தளத்தைக் கொண்டுள்ள பாக்கிஸ்தானிய தாலிபன் அல்லது Tehrik-e-Taliban மற்றும் 2008 ம் ஆண்டு இந்த மும்பை நகரத்தைத் தாக்கி 173 பேரைக் கொன்றதற்கு குற்றம் சாட்டப்படும், போர்க்குணமிக்க இஸ்லாமிய இயக்கமான Lashkar-e-Taiba ஆகியவை.

அமெரிக்க அழுத்தத்தின் கீழ் பாக்கிஸ்தானிய இராணுவம் ஏற்கனவே தெற்கு வஜீரிஸ்தானில் டெஹ்ரிக்-இ-தாலிபன் மற்றும் வட மேற்கு எல்லைப்புற மாநிலத்தின் மற்ற பழங்குடிப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் அவற்றிற்கு எதிராக பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களில் இஸ்லாமிய போராளிகள் என்று கூறப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 400,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

ஆனால் வடக்கு வஜீரிஸ்தானில் உள்ள ஆப்கானிய எழுச்சித் தளங்கள் மற்றும் ஹக்கானி இணையத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் பாக்கிஸ்தானின் ISI (Inter Services Intelligence) உளவுத்துறை அமைப்பு பல முறையும் ஆப்கானிய தாலிபன் மற்றும் ஹக்கானியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1994 மற்றும் 1996க்கு இடையே தாலிபன் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வருவதற்கு ISI தீவிரமாக உதவியது; 2001 கடைசியில் அமெரிக்க படையெடுப்பிற்கு முன்வரை அந்த அரசாங்கத்திற்கு ஆதரவையும் கொடுத்தது.

பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கும் Laskhar-e-Taiba விற்கும் இடையே இன்னும் கூடுதலான சந்தேகத்திற்கு உரிய தொடர்புகள் உள்ளன. காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்துவதில் அது முக்கிய குவிப்பை 1990 களில் கொண்டிருந்தபோது, ISI, Lashkar-e-Taiba விற்கு ஆதரவளித்தது. அதன் போராளிகள் பாக்கிஸ்தானின் முக்கிய மாநிலமான பஞ்சாப் பகுதிகளில் குவிந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஒபாமாவிடம் இருந்து ஜர்தாரிக்கு அனுப்பப்பட்ட இரு பக்க கடிதத்தில் இஸ்லாமிய இணையங்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்கக் கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளன; இக்கடிதத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் கடற்படைத் தலைவருமான ஜேம்ஸ் ஜோன்ஸ் கொடுத்திருந்தார்.

இணையத்தளமான Stratfor, அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களுடன் பிணைப்புக்கள் கொண்டது, டிசம்பர் 1ம் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்கள் அதனிடம் "ஒபாமா நிர்வாகத்தின் தற்போதைய பாக்கிஸ்தான் அரசாங்கத்துடன் காட்டும் ஒலிக்குறிப்பு செப்டம்பர் 11க்குப் பின்னர் முஷாரஃப் ஆட்சியிடம் புஷ் நிர்வாகம் மேற்கொண்டது போல் உள்ளது" என்று தனக்குத் தெரியவந்துள்ளதாக கூறுகிறது.

"ஒலிக்குறிப்பு" என்பதின் மூலம் Stratfor இறுதி எச்சரிக்கைகளைக் குறிக்கிறது. 2001ல் புஷ்ஷின் துணை வெளிவிவகாரச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தனது அரசாங்கம் தாலிபனை அகற்றுவதிற்கு ஒத்துழைக்காவிட்டால், பாக்கிஸ்தான்மீது குண்டு வீச்சு நடத்தி அது "கற்கால நிலைமைக்குத் தள்ளப்படும்" என்று கூறியதாக 2006ல் முன்னாள் பாக்கிஸ்தானிய சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் தகவலை வெளியிட்டார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையும் அது போன்ற நயமான அச்சுறுத்தல்களை கொடுக்கக்கூடும். பாக்கிஸ்தானிய அரசாங்கம் திவால்தன்மையின் விளிம்பில் உள்ளது; சர்வதேச நாணய நிதியத்தில் இருந்தும் அமெரிக்காவிடம் இருந்து நேரடியாகவும் அவசர நிதியங்கள் வாடிக்கையாக உட்செலுத்துவதை நம்பியுள்ளது. பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவுகளை சுருக்கிக் கூறுகையில் பலூசிஸ்தான் கவர்னர் Zulfiqar Magsi டெய்லி டைம்ஸிடம், "உங்களுக்கு பணம் கொடுப்பவரை நீங்கள் எதிர்த்துக் கொள்ள முடியாது. அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு பணம் கொடுக்கிறது. நாங்கள் எப்படி அதை எதிர்க்க முடியும்? அது விரும்புவதை செய்யக்கூடும்" என்றார்.

அமெரிக்கா இன்னும் அதிகமாக பாக்கிஸ்தானின் இறைமையை அப்பட்டமாக மீற அனுமதிப்பது முக்கியம் என்று இஸ்லாமாபாத்திடம் ஒபாமா கூறியுள்ளார். வடக்கு வஜீரிஸ்தானில் பெரும் செலவுடன்கூடிய, இராணுவ அதிருப்தியும் நிறைந்த போரை தொடக்குமாறு அதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது; மேலும் இஸ்லாமிய நடவடிக்கைகள் முக்கிய நகரங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் பலூச்சிஸ்தானில் பிரிடேட்டர் தாக்குதலுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சிறப்புப் படைகளின் தாக்குதல் பிரிவுகள் தாலிபன் தலைவர்களைத் தேடி கொலை செய்வதற்கு பாக்கிஸ்தானில் நுழையலாம் என்று விவாதிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. அமெரிக்கத் தரைப்படை துருப்புக்கள் ஒரே ஒரு முறைதான் எல்லையைக் கடந்துள்ளன. செப்டம்பர் 2008ல் போராளிகள் வளாகம் என்று கருதப்பட்டது, தெற்கு வஜீரிஸ்தானில் தாக்கப்பட்டது. இதன் விளைவு 20 சாதாரண மக்கள் கொல்லப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது; அவற்றுள் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்குவர்.

ஒபாமாவின் ஆப்பாக் போர் விரிவாக்கத்திற்கு ஜர்தாரியின் ஒத்துழைப்பு பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் மக்களிடையே பரந்த எதிர்ப்பை தீவிரமாக தூண்டிவிடும் என்பது உறுதி. ஏற்கனவே ஜனாதிபதி பாக்கிஸ்தானிய பொருளாதாரத்தின் பேரழிவுத் தன்மையினால் ஆழ்ந்த முறையில் செல்வாக்கை இழந்துள்ளார். நாட்டு நாணயத்தின் மதிப்பு 35 சதவிகிதம் சரிந்துவிட்டது; இதையொட்டி அடிப்படைப் பொருட்கள், பணிகளுடைய விலைகள் மகத்தான முறையில் பெருகிவிட்டன. மின்சாரம், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகிவிட்டன.

நீண்ட காலமாக இவருக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தள்ளிப்போடும் விதத்தில் ஜர்தாரி கடந்த மாதம் நாட்டின் அணுவாயுதக்கிடங்கு கட்டுப்பாட்டை பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானியிடம் ஒப்படைத்து, முஷாரஃப் சர்வாதிகாரத்தின்போது பாராளுமன்றத்திடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட அதிகாரங்களையும் திருப்பி கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் பலூச்சிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதல்கள் விரிவானால், அது இவருடைய நிர்வாகத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலும் கடைசி செயலாக இருக்கும்; அதுவும் நிர்வாகத்திற்கு வந்த பதினைந்தே மாதங்களில் நடைபெறக்கூடியதாக இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved