World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinists provide "left" cover for government's anti-Maoist counterinsurgency war

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் மாவோவாதிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தத்துக்கு "இடது" முகமூடி அணிவிக்கின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones
8 December 2009

Back to screen version

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணியும் கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் இடது முன்னணி அரசாங்கமும், இந்திய அரசாங்கத்தின் மாவோவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்கின்றன.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி (யு.பி.ஏ.) அரசாங்கம், மாவோவாதிகளுக்கு எதிரான பலமாநிலங்களை உள்ளடக்கி தொடுக்கவிருக்கும் தாக்குதலுக்கு இன்னும் சில வாரங்களே, சாத்தியமானளவு இன்னும் சில நாட்களே உள்ளன என்பதை தெரியப்படுத்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 100,000 துணைப் படைகளும் மற்றும் இந்திய ஆயுதப் படைகளிடமிருந்து விமான மற்றும் ஏனைய இராணுவ தளபாட உதவிகளும் பயன்படுத்தப்படும்.

யு.பி.ஏ. அரசாங்கமானது மாவோவாத கிளர்ச்சி தளம்கொண்டுள்ள பழங்குடி பிரதேசங்களில், பிரமாண்டமான வளங்களை சுரண்டும் திட்டங்களுடனான முதலாளித்துவ அபிவிருத்தியுடன் முன்செல்லும் தேவையுடன் இந்த தாக்குதலை திட்டவட்டமாக இணைத்துள்ளது.

சில ஊடக மற்றும் அரசியல் குழுக்களின் சில பகுதியினர், இந்த இரத்தக் களரி கிளர்ச்சியாளர்களுக்கு துணைபுரியும் என எச்சரித்து, அடுத்து வரவுள்ள கிளர்ச்சி எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்பாக தமது வரையறை கொண்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அதே வேளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது (சி.பி.ஐ.) ஆகிய பாராளுமன்ற ஸ்ராலினிச கட்சிகள் தமது தீர்க்கமான அரசியல் ஆதரவை வழங்குகின்றன.

அந்த பிரதேசத்தில் வாழும் பழங்குடி மக்களின் அபிவிருத்தி உதவிகள் வழங்காமை மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிரான கோரிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் மக்கள் ஆதரவை வென்றுள்ள மாவோவத கிளர்ச்சியாளர்களிடம் இருந்து, லால்கார் உப-மாவட்டத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பறித்துக்கொள்வதை இலக்காகக் கொண்ட கிளர்ச்சி எதிர்ப்பு திட்டத்தில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மேற்கு வங்காள இடதுசாரி அரசாங்கம் மத்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.

கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சில பழங்குடியினரை விடுவிப்பதற்கு தனது அரசாங்கம் தயாராகியது சம்பந்தமாக, கூட்டுத்தாபன ஊடகங்களின் அண்மைய விமர்சனங்களுக்கு பதிலளித்த மேற்கு வங்காள முதலமைச்சரும் சி.பி.எம். அரசியல் குழு உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜீ, அந்த கொடுக்கல் வாங்கல் ஒரு "விதிவிலக்கானது" மற்றும் அது கிளர்ச்சி தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவொரு "மென்மைப்படுத்தலையும்" பிரதிநிதித்துவம் செய்யவில்லை என தெரிவித்தார். இடது முன்னணி அரசாங்கம் விரைவில் "மாவோவாதிகளுக்கு பாடம் கற்பிக்கும்" என அவர் சபதமெடுத்தார்.

சி.பி.எம். வெளியிடும் ஆங்கில வார இதழான பீபில்ஸ் டிமோக்கிரஸியின் (People's Democracy) அக்டோபர் 18 வெளியீட்டின் ஆசிரியர் தலைப்பில், ஸ்ராலினிஸ்டுகள் எதிர்த் தாக்குதலுக்கு எந்தளவுக்கு துணை போகின்றனர் என்பதை கோடிட்டுக் காட்டப்படுகிறது.

மாவோவாத கிளர்ச்சியானது பழங்குடி மக்களின் சமூக பொருளாதார சீரழிவிலோ மற்றும் அவர்களை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றும் இந்திய முதலாளித்துவ கும்பலின் முயற்சியிலோ வேரூண்றியிருக்கவில்லை, மாறாக அதன் வளர்ச்சியானது முற்றிலும் அச்சுறுத்தலின் வெளிப்பாடாகும். என அந்த ஆசிரியர் தலைப்பு வலதுசாரி இந்து வெளியீட்டுக்கு ஒத்ததான மொழியை பயன்படுத்தி வாதிடுகிறது. "எந்தவொரு பிரதேசத்திலும் மாவோவாதிகளின் செல்வாக்கானாது சுரண்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் ஆதரவு மற்றும் அனுதாபத்தை விட, அச்சத்தின் காரணமாக வந்ததே" என பீபில்ஸ் டிமோக்கிரஸி வாதிடுகிறது.

பிரமாண்டமான அரச வன்முறைகளை பயன்படுத்தப்படுத்துவதே சரியான பதில் என்ற முடிவு இங்கு சொல்லப்படவில்லை.

அண்மைய வாரங்களில் சி.பி.எம். தலைவர்கள் மீண்டும் மீண்டும் செய்ததைப் போல், மாவோவாத கிளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் "உள்ளக அச்சுறுத்தலை" கொண்டுள்ளது என்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை இந்த ஆசிரியர் தலைப்பு அங்கீகரிக்கின்றது. இந்திய முதலாளித்துவ அரச அதிகாரம் எதிர்கொள்ளும் சவால்களை -சாதாரண இந்தியர்களின் மிக அடிப்படையான தேவைகளை கூட இட்டு நிரப்ப இந்திய முதலாளித்துவம் தவறியதைப் பற்றி அவர்கள் சிந்தத்ததால் தோன்றிய சவால்களை- இந்திய மக்கள் மீதான அச்சுறுத்தலாக அடையாளப்படுத்தும் இந்திய முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டை ஸ்ராலினிஸ்டுகள் எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை மட்டுமே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஸ்ராலினிஸ்டுகள் முன்னதாக, பலவித சாதிகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் மற்றும் ஆட்சியில் இருக்கும் இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் சந்தர்ப்பவாத கூட்டுக்களை அமைத்துக்கொள்வதன் மூலம், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துக்கு அடிபணியச் செய்ததை, பாராதீய ஜனதா கட்சி, சிவ சேனா மற்றும் அதன் நிழல் அமைப்பான "அரசியல் சாராத" ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மேலாதிக்கவாத வலதுசாரிகளின் எழுச்சியின் எதிரில், இந்தியாவின் "ஜனநாயக, மதச்சார்பற்ற" அரசை காத்துக்கொள்ளும் ஒரே வழி அது மட்டுமே என்ற அடிப்படையில் நியாயப்படுத்தினர்.

இப்போது ஸ்ராலினிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு ஏதிராக வன்முறைகள் மற்றும் அப்பட்டமான படுகொலைகளை செய்யும் இந்து வலதுசாரிகளின் நீண்டகால மற்றும் இரத்தக் களரி சாதனைகளை வசதியாக மறந்துவிட்டதோடு, மாவோவாத கிளர்ச்சி மிகப்பெரும் "உள்ளக அச்சுறுத்தல்" என கூறிக்கொள்வதன் மூலம் சமூக ரீதியில் கேடுவிளைவிக்கும் நவ-தராளவாத கொள்கைகளை அமுல்படுத்தியவாறு முன்நகரும் அரசாங்கத்தின் தலைவரான சிங்குடன் இணைந்துகொண்டுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளம் மாவோவாத அல்லது நக்ஸலைட்டுகள் தொடர்பான எமது சமரசமற்ற அரசியல் எதிர்ப்பை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

சி.பி.ஐ. அமைப்பை தனது அரசியல் பாதையின் பின்னணியாகக் கொண்டுள்ள ஒரு தேசியவாத-ஸ்ராலினிச போக்கான நக்ஸலைட்டுக்கள், பிரதான ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை முதாளித்துவத்துக்கு அடிபணியச் செய்வதை சவால் செய்ய மறுக்கின்றனர். மாறாக, அவர்கள் பல தசாப்தங்களாக ஏறத்தாள அவர்களது சகல நடவடிக்கைகளையும், பலவித பழங்குடி குழுக்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட கிளர்ச்சிகளை அபிவிருத்தி செய்வதன் மீது குவிமையப்படுத்துகின்றனர். அவர்கள் முதலாளித்துவத்தின் "முற்போக்கான பகுதிகளுடன்" கூட்டுச் சேர்ந்து நடத்தும், முற்றிலும் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட "தேசிய-ஜனநாயக" புரட்சி நோக்குடன், இந்தியாவின் மிக மிக பொருளாதார ரீதியில் பிற்போக்கான பிராந்தியங்களில் இருந்து செதுக்கப்பட்ட மூலோபாயத்தின் அடிப்படையில் இருந்து முன்னெடுகப்படும் ஒரு "நீண்ட மக்களின் யுத்தத்தை" பரிந்துரைக்கின்றார்கள். சிறிய சுரண்டல்கார தனிநபர்கள் மற்றும் அரசாங்க அலுவலர்கள் மீதான பழிவாங்கல் தாக்குதல்கள், சகல விதத்திலும் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் முன்னணிகளுடன் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் கைக்கு கைக்கு மாறுகின்றது.

மேற்கு வங்காளத்தில் நக்ஸலைட்டுகள் திரினமுல் [Grassroots] காங்கிரஸுடன் ஒரு எதிர்ப்போக்கு கூட்டணியை ஸ்தாபித்துள்ளனர். காங்கிரஸில் இருந்து பிரிந்து அமைக்கப்பட்ட ஒரு வலதுசாரி வங்காள கட்சியான திரினமூல் காங்கிரஸ், இப்போது யு.பி.ஏ. அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த போதிலும், முன்னர் பி.ஜே.பி. உடன் கூட்டணி வைத்திருந்தது.

2007ல், பெரும் நிலப்பரப்பு கொண்ட காணிகளை பிரமாண்டமான இந்திய மற்றும் பன்னாட்டு கூட்டுத்தாபனங்களுக்கு கொடுக்கக் கூடிய வகையில், விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்யும் மேற்கு வங்காள இடது முன்னணி அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக நந்திகிராம் பிரதேசத்தில் வெகுஜன எதிர்ப்பு அபிவிருத்தி கண்டபோது, மாநிலத்தின் மிக வறிய விவசாயிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டிக்கொள்ளும் இந்த பிராந்திய முதலாளித்துவ கட்சியின் பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, மாவோவாதிகள் திரினமுல் காங்கிரஸுடன் பொது நடவடிக்கையில் ஈடுபடுவதை தேர்வு செய்துகொண்டனர்.

சி.பி.எம். உள்ளூர் காரியாளர்களை இலக்காகக் கொண்ட படுகொலை அலை உட்பட, இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் லால்காரில் மாவோவாதிகளின் விரிவாக்கமானது, திரினமுல் காங்கிரஸ் கடந்த மே மாதம் நடந்த லோக் சபா (தேசிய பாராளுமன்றம்) தேர்தலில் இடது முன்னணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, திரினமுல் காங்கிரஸ் தூண்டிவிட்ட அரசியல் வன்முறை பிரச்சாரத்தின் மறுபக்கமாக இருக்கின்றது. திரினமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பனர்ஜி, யு.பி.ஏ. அரசாங்கத்தின் ரயில் போக்குவரத்து அமைச்சரான உடனேயே, யு.பி.ஏ. மேற்கு வங்காளத்தில் உள்ள இடது முன்னணி அரசாங்கத்தை பதவி விலக்கி அதை "ஜனாதிபதியின்", உதாரணமாக மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என வாதிடுவதற்காக அவர் தனது சொந்த மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளை மேற்கோள் காட்டத் தொடங்கினார்.

மாவோவாதிகள் பனர்ஜியை ஆதரிக்கின்றார்களா என்பது பற்றி எதாவது சந்தேகம் இருந்திருந்தால், அது அக்டோபர் முற்பகுதியில் வங்காள நாளிதழான ஆனந்த பஸார் பத்ரிகாவுக்கு சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) முக்கிய தலைவர்களில் ஒருவரான கிஷஞ்சி வழங்கிய ஒரு பேட்டியில் தீர்க்கப்பட்டது. பனார்ஜி மேற்கு வங்காளத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதையே மாவோயிஸ்டுகள் விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்தான் சி.பி.எம். க்கு எதிராக வெகுஜனங்களுக்காக போராடுகிறாள் என கிஷஞ்சி தெரிவித்தார். "அடுத்த முதலமைச்சராவதற்கு அவள்தான் சரியான நபர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எங்களால் எங்களது வேலைகளை தொடர முடிவதோடு அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் அவதானிக்க முடியும்," என கிஷஞ்சி தெரிவித்தார்.

திரினமுல் காங்கிரஸுடனான கூட்டணிக்கு மாவோவாதிகளின் "தத்துவார்த்த நியாயப்படுத்தல்", -முதலாளித்துவ கட்சிகளை அணைத்துக்கொண்டு மக்கள் முன்னணிகளை அமைக்கும் தேவைகளுக்கு மட்டுமன்றி, ஸ்ராலினிச சி.பி.எம். "சமூக சக்தி" என்ற நற்பெயரை பெறவும் பயன்படுத்தப்படும்- ஸ்ராலினிச வார்த்தை ஜாலங்கள் மற்றும் சாக்குப்போக்குகளின் கலவையாகும்.

யதார்த்தத்தில், மேற்கு வங்காலத்தில் திரினமுள் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வருமாயின், அது உடனடியாக இடது முன்னணி அரசாங்கத்தின் பெரும் வர்த்தகர்கள் சார்பு "கைத்தொழில்மயமாக்கல் திட்டம்" தொடர்பான தனது எதிர்ப்பை கைவிடுவதோடு, சி.பி.எம். இன் "மோசடிகளுக்கு" எதிராக போராடும் பெயரில், பொது மற்றும் சமூக சேவைகள் மீது ஒரு தாக்குதலை கட்டவிழ்த்து விடும்.

நிலையாக பெருமளவு பழங்குடி மக்களை இலக்காகக் கொண்ட யு.பி.ஏ. அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு யுத்த தயாரிப்புகளுக்கு தமது முழு ஆதரவையும் வழங்குவதன் மூலம், சி.பி.எம். மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணியும் மாவோயிஸ்ட்-திரினமுல் காங்கிரஸ் எதிர்போக்கு கூட்டணிக்கு பிரதிபலித்துள்ளன. திரினமுல் காங்கிரஸ் உடன் தொடர்பை முழுமையாக துண்டித்துக்கொண்டால் மட்டுமே, காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான ஒத்துழைப்பை வழங்குவதாக இடது முன்னணி தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 அன்று, சி.பி.எம். இன் 95 வயது முதிய "அரசியல் மேதையும்" முன்னாள் மேற்கு வங்காள முதலமைச்சருமான ஜோதி பாசு, திரினமுள் காங்கிரஸ்-மாவோவாத "பிணப்புக்கு" எதிராக இடது முன்னணி அரசாங்கத்தை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு விசேட அழைப்பு விடுத்தார். தமது வேண்டுகோளில், 2004 மே மாதம் முதல் 2008 ஜூன் வரை, நான்கு ஆண்டுகள் இடது முன்னணி அதன் பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டு யு.பி.ஏ. யை ஆதரித்தது என சுட்டிக்காட்டிய அவர், இப்போது அதே போல் திருப்பிச் செய்யுமாறு காங்கிரஸை தூண்டினார்: "நாடடின் நலன் கருதி நாம் காங்கிரஸை நிபந்தனையின்றி ஆதரித்ததோடு வகுப்புவாதத்துக்கும் எதிராக போராடினோம்."

மாவோவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள திரினமுல் காங்கிரஸை நிராகரிப்பதன் மூலம், மாவோவாதிகள் நாட்டுக்கு மாபெரும் "உள்ளக அச்சுறுத்தல்" என்ற தனது கூற்றை பின்பற்றுமாறு பிரதமர் சிங்குக்கு சி.பி.எம். தலைவர்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுப்பதுடன், இந்த வேண்டுகோள்கள் கடந்த மாதம் பூராவும் ஒரு உண்மையான முழக்கமாகியுள்ளது.

இதுவரை, ஸ்ராலினிஸ்டுகளை மேலும் வலதுபக்கம் உந்துவதற்காக திரினமுல் காங்கிரஸுக்கும் மேற்கு வங்காள இடது முன்னணி அரசாங்கத்துக்கும் இடையாலான பகையை பயன்படுத்திக்கொள்வதில் காங்கிரஸ் திருப்தியடைந்துள்ளது.

திரினமுல் காங்கிரஸின் அழுத்தத்துக்கு வெளிப்படையாக பணிந்த உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பி. சிதம்பரம், மாநிலத்தில் அரசியல் வன்முறை நிலைமைகள் குவிந்துவருவது பற்றி இரண்டு நாட்கள் விசாரணை செய்ய கடந்த வாரம் நான்கு பேர் அடங்கிய உள்துறை அமைச்சு குழுவொன்றை அனுப்பி வைத்தார்.

இடது முன்னணியும் பி.ஜே.பி. உட்பட ஏனைய பல கட்சிகளும், இந்த விசாரணையை மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை இருத்தும் முதல் நடவடிக்கை என கண்டனம் செய்துள்ளன. அரசாங்கத்தின் எண்ணம் அதுவல்ல என மறுத்துள்ளார். ஆனால் அத்தகைய விசாரணைகள் மிக மிக குறைவானதாக இருப்பதோடு மாநிலத்தில் சட்ட மற்றும் ஒழுங்கை காக்க மாநில அரசாங்கம் தவறுவதானது அடிக்கடி "ஜனாதிபதியின் ஆட்சியை" அமுல்படுத்துவதற்கான சாக்குப் போக்காக பயன்படுகின்றது எனவும் கூறினார்.

இடது முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திரினமுல் காங்கிரஸை பயன்படுத்த முடியும் என்ற செய்தை அனுப்பிய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. பின்வாங்கியது. பனர்ஜிக்கு ஏமாற்றம் தரும் வகையில், சி.பி.எம். குண்டர்களின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவாளர்கள் இலக்கானதாக அவர் கூறிய மாவட்டங்களுக்கு செல்ல மறுத்த உள்துறை அமைச்சு குழு, கொல்கத்தாவுக்கு அப்பால் செல்லவில்லை.

வெள்ளிக் கிழமை, பகைமை கொண்ட மேற்கு வங்காள பிரதிநிதிகளை மன்மோகன் சிங் சந்தித்தார். மமதா பனர்ஜி தலைமையிலான திரினமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, சி.பி.எம். வன்முறைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க விரும்பியதோடு சீதாராம் யசூரி தலைமையிலான இடது முன்னணி பிரதிநிதிகள் குழு, திரினமுல் காங்கிரஸ் வன்முறைகள் பற்றியும் திரினமுல் காங்கிரஸ்-மாவோவாதிகள் கூட்டு பற்றியும் ஆதராங்களை கொண்டுவந்திருந்தது. இரு தரப்பும், பலவித குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுக்களின் நன்மையில் ஆட்சி செய்யக்கூடிய அரசியல் ரீதியில் எரிச்சலூட்டும் நிலைமையில் பிரதமரை விட்டுச் செல்லவதாக தோன்றியது.

பிரதமரை சந்தித்த பின்னர், சி.பி.எம். அரசியல் குழு உறுப்பினர் யசூரி, "உள்துறை அமைச்சால் விசாரிக்கப்பட்ட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மாவோவாத வன்முறை துன்பங்களை அழிக்க அரசாங்கம் அர்ப்பணித்துள்ளதை அவர் வலியுறுத்தியதோடு அது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்ற அவரது நிலைப்பட்டில் அவர் உறுதியாக இருக்கிறார்," என அறவிக்கத் தள்ளப்பட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved