World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

How many Afghans will die in Obama's war?

ஒபாமாவின் யுத்தத்தில் உயிரிழக்கப் போகும் ஆப்கானியர்கள் எத்தனை பேர்?

Patrick Martin
7 December 2009

Back to screen version

ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்கும் பராக் ஒபாமாவின் முடிவு பற்றிய செய்தி அறிவிப்புகளில், அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பில் எத்தனை ஆயிரம், எத்தனை பத்தாயிரம், எத்தனை இலட்சம் ஆப்கான் பொது மக்கள் உயிரிழப்பார்கள்? என்ற ஒரு கேள்வி கேட்கப்படவுமில்லை பதிலளிக்கப்படவுமில்லை.

நேட்டோ நாடுகளின் குறைந்த பட்சம் மேலும் 7,000 துருப்புக்களால் பலப்படுத்தப்பட்டு, மேலதிகமாக 30,000 அமெரிக்க துருப்புக்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை, வன்முறையின் அளவு பிரமாண்டமாக அதிகரிப்பதை குறிக்கின்றது. ஒபாமாவின் படையெடுப்பு முடியும் தறுவாயில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் அளவு, புஷ் நிர்வாகத்தின் கீழ் கடந்த ஆண்டு அங்கு நிலைகொண்டிருந்த துருப்புக்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்காக இருக்கும்.

பென்டகனின் சிடுமூஞ்சித்தனமான இரட்டைப் பேச்சுக்களின் படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயர் மட்ட தளபதியான ஜெனரல் ஸ்டன்லி மெக்கிரிஸ்டலால் அபிவிருத்தி செய்யப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு யுத்த நடவடிக்கை மூலோபாயமானது, "வெகுஜனங்களை பாதுகாப்பது" மற்றும் "தலிபான்களை கீழ்படியச் செய்வதையும்" இலக்காகக் கொண்டது. இது நடைமுறையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்றால், வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆப்கானியர்கள் தலிபான்களாக கருதப்படுவார்கள் மற்றும் அழிவுக்கு இலக்காவார்கள் என்பதேயாகும்.

ஈராக்கில் மெக்கிரிஸ்டலாலும் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பீடத்தின் தற்போதைய தலைவர் ஜெனரல் டேவிட் பெற்றீஸ்ஸாலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்த கிளர்ச்சி எதிர்ப்பு கோட்பாடு, ஒரு இராணுவ கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வியட்னாமில் (அதே போல் பிரான்சால் அல்ஜீரியாவிலும் மற்றும் பிரித்தானியாவின் எண்ணிலடங்கா காலனித்துவ யுத்தங்களிலும்) பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை மீண்டும் உபயோகத்துக்கு கொண்டுவரும் செயலாகும். ஆப்கானிஸ்தானின் பிரமாண்டமான கிராமப்புற வெகுஜனங்கள் விசேடமாக காபுல் மற்றும் கந்தகார் போன்ற நாட்டின் பிரதான நகரங்களில், மிகவும் இலகுவாக கட்டுப்படுத்தக் கூடியவாறு பெரும் ஒருங்கிணைப்பு முகாங்களுக்குள் அடைத்து வைக்கப்படவுள்ளதோடு அதை எதிர்ப்பவர்கள் கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள்.

பகல் நேரங்களில் ஆப்கான் அரசாங்க படைகள் ரோந்து சென்ற போதிலும், இரவில் தலிபான்கள் செல்வாக்கு செலுத்தும் கந்தகார் நகருக்குள்ளேயே அமெரிக்க துருப்புக்களின் ஒரு பிரதான படியெடுப்பையும் கூட முன்னெடுக்க மெக்கிரிஸ்டல் எதிர்பார்ப்பு கொண்டிருக்கின்றார். இது கிட்டத்தட்ட முப்பது இலட்சம் மக்கள் வாழும் நகருக்குள், ஃபலூஜாவில் செய்தது போல் வீட்டுக் வீடு சென்று மோதுவதை அர்த்தப்படுத்தக் கூடும்.

அமெரிக்க ஊடகங்கள் பொது மக்கள் உயிரிழப்பு பற்றி நேர்மையாக செய்தி வெளியிடும் என்பது எதிர்பார்க்க முடியாததாக இருந்தாலும், அமெரிக்க உக்கிரமாக்கத்தின் விளைவாக உயிரிழக்கும் பொது மக்களின் எண்ணிக்கை ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதற்கு பதிலாக, அமெரிக்க குண்டுகள், ஏவுகனைகள், ஷெல்கள் மற்றும் ஏனைய ஆயுதங்களால் கொல்லப்படுபவர்கள், "தலிபான்களாக" "பயங்கரவாதிகளாக" அல்லது புதிய பேச்சு வழக்கில் "கெட்ட மனிதர்களாக" சத்திரிக்கப்படுவர்.

ஒபாமா நிர்வாகம் யுத்தத்தை உக்கிரமாக்கும் தனது முடிவுக்கு நம்பகமான விளக்கத்தை வழங்க வேண்டும் என்பது பற்றி கவலைப்படவில்லை. பென்டகனின் மதிப்பீட்டின் படி, இன்னமும் நூறுக்கும் குறைவான அல் கைடா உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள் என்ற போதிலும், வெஸ்ட் பொயின்டில் உரையாற்றிய ஒபாமா, செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதலை அடுத்து வந்த நாட்களை மீண்டும் கவனம் செலுத்த முயற்சித்தார்.

இந்த மோதல்களில் அல் கைடா ஒரு முக்கியத்துவம் அற்ற காரணி என்றாலும், அமெரிக்க யுத்த முயற்சிகள், ஏகாதிபத்திய சக்திகளால் தமது நாடு ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து ஆயுதம் ஏந்தும் எந்தவொரு ஆப்கானியரையும் நிர்மூலமாக்குவதை அத்தியாவசிய இலகாகக் கொண்டிருக்கும். 150 ஆண்டுகள் வரை பின்திரும்பி பார்ப்போமாயின், காலனித்துவத்துக்கு எதிரான ஆப்கான் கிளர்ச்சியின் வரலாற்றைப் பொறுத்தளவில், ஏறத்தாழ நாட்டின் முழு ஜனத்தொகையும், சுமார் 30 மில்லியன் மக்கள் இலக்காகுவது சாத்தியமானது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஞாயிற்றுக் கிழமை வெளியான நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் "வீக் இன் ரிவீவ்" பகுதியில், ஸ்கொட் ஷேன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆய்வின்படி, இலக்கு வைக்கப்பட்டுள்ள வெகுஜனங்களின் எண்ணிக்கை உண்மையில் இதை விட அதிகமாகும். ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லையின் இரு பகங்களிலும் வாழும் முழு பஸ்துன் மக்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தில் ஆற்றலுடன் அமெரிக்கா மோதுகிறது என அவர் சுட்டிக் காட்டியுள்ளர். ஆப்கான் பக்கம் 15 மில்லியனும் பாகிஸ்தான் பக்கம் 27 மில்லியனும் பஸ்துன் மக்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் மற்றும் பாகிஸ்தானின் பஸ்துன் பகுதிகளிலும் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை 57 மில்லியனாகும் -இது பிரான்ஸ் அல்லது இத்தாலியின் ஜனத்தொகைக்கு சமமானதாகும்.

இது வரை, ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மிகக் குறைவே. ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் படி, அமெரிக்கா ஆக்கிரமித்து தலிபான்களை தூக்கி வீசிய ஆறு ஆண்டுகளின் பின்னர், 2007ம் ஆண்டிலேயே மனித அழிவுகள் சம்பந்தமான தரவுகள் முறையாக திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உயிர் சேதம் சம்பந்தமான தரவுதளம் ஒன்றை ஐ.நா. உருவாக்கியிருந்தாலும் அதை மக்கள் காண்பதற்கு வகை செய்யவில்லை. ஐ.நா. விடமிருந்து வந்த அரை ஆண்டு உத்தியோகபூர்வ அறிக்கை, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என கூறுகிறது.

கிழக்கு மற்றும் தெற்கின் பெரும் பகுதியும், மற்றும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பரவலாக ஆங்காங்கே உள்ள மாவட்டங்களும் உட்பட, தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, சந்தேகமின்றி முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்கள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். தரை தாக்குதல்களுடன் குண்டுவீச்சு விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ரிமோட் கொன்றோல் ஏவுகனைகள் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் உட்பட மிகப்பெரும் சுடுதிறனும் கட்டவிழ்த்துவிடப்படும். அமெரிக்க மற்றும் அதுடன் சேர்ந்த விமானப் படைகள், புதிய மற்றும் மேலும் பெரிய குண்டுகளை பயன்படுத்தும். அந்த குண்டுகளில் சில, கால்பந்தாட்ட மைதானமொன்றுக்கு சமமான பிரதேசத்தில் சகல உயிரனங்களையும் ஆவியாக்க போதுமானளவு பெரியவையாகும். இராணுவம் ஈராக்கில் இருந்து புதிய கண்ணி வெடி எதிர்ப்பு கவச வாகனங்களையும் வீதிகள் அல்லாத ஆப்கானிய நிலைமைக்கு ஏற்றவாறு புதிதாக வடிவமைத்து நிலை நிறுத்தியுள்ளது.

இந்த உண்மைகள், ஞாயிற்றுக் கிழமை காலை மூன்று வலையமைப்பு கொண்ட தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் இராஜங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுடன் தோன்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபட் கேட்சுகுக முன்னாள் பல கேள்விகளை தூண்டிவிட்டது. 1980களில் சீ.ஐ.ஏ. யின் இரண்டாவது கட்டளை தளபதியாக இருந்த கேட்ஸ், சோவியத் இராணுவத்துக்கு எதிராக போராட ஆப்கான் முஜைஹிதீன்களுக்கு ஆயுதங்களையும் பணமும் வழங்குவதிலும் மற்றும் ஆள் சேர்க்க உதவுவதிலும் மத்திய பாத்திரம் வகித்தவராவார் (ஏனையவர்களுடன் ஒசாமா பின்லேடனும் மற்றும் இப்போது தலிபான் தலைமைத்துவத்தில் உள்ளடங்கியுள்ளவர்களில் பெரும்பாலானவர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்)

சோவியத் ஒன்றியம் தோல்விகண்ட ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வெற்றி கண்டது எப்படி போன்ற, 1980களில் அனுபவங்கள் பற்றி பல நிகழ்ச்சிகளில் கேட்சிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பு ஒரு மில்லியன் மக்களின் சாவை விளைவாக்கியது மற்றும் ஐந்து மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர், என ஒவ்வொரு முறையும் அவர் பதிலளித்தார். ஆனால், தற்போது உக்கிரமாக்கப்பட்டுள்ள அமெரிக்க படையெடுப்பின் விளைவாக உயிரிழப்பவர்களதும் அகதிகளாவோரதும் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என அவரை பேட்டி கண்ட எவரும் கேட்கவில்லை. அது அதே அளைவைக் கொண்டதாக இருக்கக் கூடும்.

இது ஒரு மிகைப்படுத்தலாக ஆகாத வரை, ஒரு மில்லியன் சாவு மற்றும் ஐந்து மில்லியன் அகதிகள் என்பது ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் வெற்றியின் விளைவாக ஏற்பட்ட மனித அழிவுகள் பற்றிய அதிக நம்பகமான மதிப்பீடு என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். இப்போது இதே அளவிலான இராணுவத் தாக்குதலை ஆப்கான் மக்கள் சந்திக்கவுள்ளனர்.

இத்தகைய தரவுகள் மாற்றமின்றி ஒரு அரசியல் முடிவுக்கு வழிவகுக்கின்றன: ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்குவது, வரலாற்றளவில் ஒரு குற்றமாகும். அதன் ஏற்பாட்டாளர்களான ஒபாமா, கேட்ஸ், கிளின்டன், மெக்கிரிஸ்டல், பெற்றீஸ், உப ஜனாதிபதி பெய்டன், பாதுகாப்பு படைகளின் கூட்டின் தலைவர் முல்லனும், ஈராக்கில் இரத்தக்களரியை திட்டமிட்டு முன்னெடுத்த புஷ் நிர்வாகத்தில் இருந்த தமது முன்னோடிகளைப் போலவே குற்றவாளிகள் ஆவர்.

ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு புஷ், சென்னி, ரம்ஸ்பெல்ட் அன்ட் கம்பனிக்கு எதிராக யுத்தக் குற்றங்களுக்காக சட்ட நடவட்ககை எடுக்க வேண்டும் என உலக சோசலிச வலைத் தளம் நீண்டகாலமாக பரிந்துரைக்கின்றது. இதற்கு சமமான அளவில் ஆப்கானிஸ்தானில் யுத்தக் குற்றங்கள் கட்டவிழ்த்து விடப்படும் நிலையில், அமெரிக்க-நேட்டோ யுத்தத்துக்கு முடிவுகட்டவும் மற்றும் அதை திட்டமிட்டு முன்னெடுக்கின்றமைக்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோருமாறு, நாம் உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved