WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
A grim journey through Sri Lanka's war zone
இலங்கையின் யுத்த வலயத்தின் ஊடாக ஒரு மகிழ்ச்சியற்ற பயணம்
By our correspondent
28 November 2009
Use this version
to print | Send
feedback
இலங்கையின் வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவத் தாகுதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு அளவிலான
அழிவு, ஆறு மாதங்களுக்கு முன்னர் புலிகளின் தோல்வியோடு யுத்தம் முடிவடைந்த போதிலும், வெளி உலகுக்குத் தெரியவில்லை.
இந்த இராணுவத் தாக்குதலில், வடமேற்கு கடற்கரையில் மன்னாரில் இருந்து கிளிநொச்சி
ஊடாக, கிழக்குக் கடற்கரையில் முல்லைத்தீவு மாவட்டம் வரை ஒரு பரந்த பிரதேசத்தில் மக்கள் குடியகற்றப்பட்டுள்ளதோடு
சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான
தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் முடமாக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இருந்து வன்னி ஊடான ஏ9 பாதை வழியே யாழ்ப்பாணத்தில் இருந்து தென்
பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்துக்கு அனுமதித்துள்ளது. "சுதந்திர நடமாட்டம்" என்ற அரசாங்கத்தின்
கூற்றை பரீட்சிக்க நிருபர் ஒருவர் அந்த வழியாக பயணம் செய்ததோடு யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவைப்
பற்றிய காட்சியை தந்துள்ளார்.
நவம்பர் 18 அன்று, வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி,
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புவரை சுதந்திர நடமாட்டத்துக்கு இருந்த தடைகளை அகற்ற அரசாங்கம்
முடிவெடுத்துள்ளது" என அறிவித்து மறுநாள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்தேன். எனது பயணம்
அரசாங்கத்தின் கூற்றுக்கள் போலியானவை என்பதை நிரூபித்ததோடு தமிழர்கள் அனுபவித்துவரும் ஒடுக்கு முறைகளையும்
அம்பலப்படுத்தியது.
முன்னர், கொழும்புக்கோ அல்லது தெற்கின் வேறு பகுதிகளுக்கோ செல்வதற்கு
யாழ்ப்பாண கட்டளைத் தளபதியின் அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு அனுமதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
விண்ணப்பதாரிகள் பயணத்துக்கான காரணங்களை சமர்ப்பிப்பதோடு தாம் போய் தங்கும் இடத்தின் முகவரியை
கொடுக்க வேண்டும். அனுமதி வழங்குவது கட்டளைத் தளபதியின் அலுவலகத்தின் விருப்பத்தைப் பொறுத்தது.
இறுக்கமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து பயணிப்பதில் இருந்த
கட்டுப்பாடுகளை அகற்றுவதாக ஜெனரல் சந்திரசிறி அறிவித்திருந்த போதிலும், அரசாங்கம் பெருமையாக
கூறிக்கொள்வது போல் சுதந்திரம் கிடையாது. சகல தமிழர்களும் சந்தேக நபர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
"சகல தடைகளும்" அகற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பின்னரும் கூட, பஸ்
சேவையில் ஆசன ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள மக்கள் தமது தேசிய அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டின்
பிரதிகளை கொண்டு செல்ல வேண்டும். கொழும்புக்கு 50 ரூபாவும் வவுனியாவுக்கு 10 ரூபாவும் ஆசன
ஒதுக்கீட்டுக்காக அறவிடப்படுகிறது. வவுனியாவுக்கான பயணக் கட்டணம் 200 ரூபா மற்றும் கொழும்புக்கு 600
ரூபா. சொகுசு பஸ் டிக்கட்டுகள் 2,000 ரூபாவுக்கு (17.50 அமெரிக்க டொலர்) விற்கப்படுகின்றன.
நான் பயணிப்பதற்கு முதல் நாள், யாழ்ப்பாணம் மத்திய பஸ்நிலையத்தில் அலுவலகம்
திறக்கப்படும் வரை காலை 7 மணி முதல் 10 மணிவரை வரிசையில் நின்றிருந்த நூற்றுக் கணக்கானவர்களுடன்
இணைந்துகொண்டேன். புலிகளின் முன்னாள் கோட்டையான கிளிநொச்சியை முகவரியாகக் கொண்ட அடையாள
அட்டைகளை காட்டிய முதியவர்கள் உட்பட பயணிகள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அடையாள அட்டை
இல்லாதவர்களும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிக்கு, நாங்கள் யுத்தத்தால் அழிக்கப்பட்ட ரயில்
நிலையத்துக்கு அருகில் வரிசையில் நின்றிருந்தோம். பயணிகள் அவர்கள் பயணிக்கும் இடத்தைப் பொறுத்து 200
மீட்டர் தூர வரிசையில் பிரித்து நிறுத்தப்பட்டார்கள். சுமார் காலை 9 மணிக்கு எங்களை வவுனியா பஸ்ஸில்
ஏற்றினார்கள். நாங்கள் இப்போது வவுனியாவுக்கு போகிறோம் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
ஆனால், இராணுவம் பஸ்களையும் மக்களையும் சோதனை செய்து முடிக்கும் வரை
சுமார் அரை மணித்தியாலம் யாழ்ப்பாண நகரில் ஆஸ்பத்திரி வீதியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த மிகப்பெரும்
சோதனை நிலையம் முட்கம்பிகளால் சூழப்பட்டிருந்ததோடு கடுமையாக இராணுவப் பாதுகாப்பிடப்பட்டிருந்தது.
எங்களது முறை வந்ததும் இரும்பு குழாய்களுக்கு இடையில் குறுகிய பாதை ஊடாக
நாங்கள் சோதனை நிலையத்தை நோக்கி நடந்தோம். முதலில் எங்களது பொதிகள் முழுமையாக
சோதனையிடப்பட்டன. இன்னுமொரு சிப்பாய் எங்களது அடையாள அட்டைகளையும் பிரதிகளையும் பரிசோதித்த
அதே வேளை இன்னொருவர் பிரதிகளில் இறப்பர் முத்திரை குத்தினார். இரு பொலிஸ் அலுவலர்கள் எங்களது
பெயர்களையும் நாம் சென்று தங்கும் இடத்தின் முகவரிகளையும் பதிவு செய்தனர்.
அடையாள அட்டையின் பிரதிகளில் ஒன்றை எடுத்துக் கொண்ட சிப்பாய்கள் எங்களிடம்
ஒன்றைத் தந்தனர். பின்னர் எங்களை மீண்டும் பஸ்களில் ஏற்றிய போதிலும், ஏனைய பயணிகளையும் இராணுவம்
சோதனையிட்டு முடிக்கும் வரை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நாங்கள் பஸ்ஸுக்குள் இருந்தோம்.
12 பஸ்கள் பயணத்தை தொடங்க காத்திருந்தன. ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும்
மேலதிக பயணிகள் வவுனியா பஸ்களில் ஏற்றப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு 142
கிலோமீட்டர் நின்றுகொண்டே பயணித்தனர். வரிசையாக பயணித்த 12 பஸ்களில் ஒவ்வொன்றிலும் இரு சிப்பாய்கள்
பயணிகளை அவதானித்து வந்தனர்.
யுத்தத்தின் அடையாளங்களை, யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்காக சுமார் 25
கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எழுதுமட்டுவாளில் காண முடியும். எழுதுமட்டுவாள், முகமாலை மற்றும் பலாலி
போன்ற இடங்கள் தெங்கு பயர்ச்செய்கைக்கு பேர் போன இடங்களாக இருந்தாலும் தெங்கு பயிர்ச்செய்கை
எரிந்து போயுள்ளது அல்லது சேதமாகியுள்ளது. இலங்கை விமானப் படைகளின் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட
பெரும் குழிகள் அங்கு காணப்பட்டன.
ஏ9 வீதி, யாழ்ப்பாண குடாநாட்டில் முகமாலை, பலாலி மற்றும் இயக்கச்சி ஊடாக
சென்று, பின்னர் பரந்தன், கிளிநொச்சி, இரணைமடு, திருமுறுகண்டி, மாங்குளம், கனகராயன் குளம் மற்றும்
புளியங்குளத்தை கடந்து வவுனியா செல்கிறது. இந்த நகரங்களில் வவுனியா தவிர்ந்த ஏனையவை புலிகளின்
கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அனைத்து நகரங்களும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. அவை பேயடித்தது போல்
உள்ளன. வீதியின் இரு பகுதிகளிலும் வீடுகள், கடைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களும்
தரைமட்டமாக்கப்பட்டிருந்ததை என்னால் காணக்கூடியதாக இருந்தது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த 25
மீட்டர் உயர தண்ணீர் கோபுரம் மோசமாக சேதமடைந்துள்ளது போலவே, கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியும்
சேதமடைந்துள்ளது.
பருந்தொகையான எரியுண்ட மற்றும் சேதமடைந்த வாகனங்கள் காணப்படுகின்றன.
சேதமடையாத எந்தவொரு வீடு, பாடசாலை மற்றும் பொது கட்டிடங்களும் இராணுவ முகாங்களாக
மாற்றப்பட்டுள்ளன.
வீதீ முழுவதும், 100 மீட்டர் இடைவெளியில் கனரக ஆயுதம் தரித்த இரு சிப்பாய்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 500 மீட்டர் அளவிலும் அமைக்கப்பட்டுள்ள மினி முகாங்களில் சிப்பாய்கள் குழுவினர்
நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்துக்கு புறம்பாக அங்கு மனித நடமாட்டங்கள் இருப்பதற்கான அறிகுறிகள்
இருக்கவில்லை. அங்கு சில இராணுவ வாகனங்களுக்கு அப்பால் வேறு வாகனங்கள் நகரவில்லை.
இந்து கோவில்கள் இடிக்கப்பட்ட நிலையில் இருக்க, பெளத்த சிலைகளும்
வணக்கஸ்தலங்களும் பிரதான நகர சந்திகளில் கட்டப்பட்டுள்ளன. பெளத்தம் சிங்களவர்கள் மத்தியில் வழக்த்தில்
இருக்கும் அதே வேளை, தமிழர்கள் மத்தியில் பிரதான மதம் இந்து மதமேயாகும். இங்கு புத்தர் சிலைகள்
அமைக்கப்படுவதானது, தமிழர்கள் செறிந்து வாழ்ந்த இந்த பிரதேசங்களில் புதிய மத-இனவாத பதட்டங்களை
உருவாக்குவதற்கு இராணுவமும் அரசாங்கமும் முயற்சிப்பதற்கான அறிகுறியே ஆகும்.
கிளிநொச்சியில், இராணுவத்தின் பயன்பாட்டுக்காக பரந்த நிலப் பகுதி
முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உள்ளே என்ன நடக்கின்றது என்பதை எங்களால் காண
முடியாவிட்டாலும், ஒரு நிரந்த இராணுவ இருப்புக்காக இந்த பிரதேசத்தில் எத்தகைய பிரமாண்டமான பாதுகாப்பு
வலையமைப்பு கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். இராணுவ ஆக்கிரமிப்பு
பரந்தளவில் பலப்படுத்தப்பட்டுள்ள இந்த இடங்களுக்கு வவுனியா மற்றும் ஏனைய முகாங்களிலும் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தமிழ் பொது மக்களை இப்போது அரசாங்கம் அனுப்பி வைக்கும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கும்
மாங்குளத்தை அடையும் வரை, அழிவுண்ட யுத்த வலயத்தில் எந்தவொரு இடத்திலும் நிறுத்தாமல் பஸ்கள்
தொடர்ந்தும் அதிரும் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தன. அங்கு எங்களுக்கு 10 நிமிட தேநீர் இடைவேளை கிடைத்தது.
12 பஸ்களில் வந்த சுமார் 600 பயணிகளில் அதிகளவானவர்களுக்கு பத்து நிமிடங்களில் தேநீர் அருந்த நேரம்
போதவில்லை.
நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக பயணித்த பின்னர் பஸ் மாலை 4 மணியளவில்
வவுனியாவை வந்தடைந்தது. அங்கிருந்து மேலும் 250 கிலோமீட்டர்கள் கொழும்புக்கு பயணிக்க வேண்டியிருந்தது.
வவுனியாவுக்கு தெற்காக மதவாச்சியில் இன்னுமொரு பிரதான சோதனை சாவடி அமைக்கப்பட்டிருதந்தது. அங்கும்
நாங்கள் யாழ்ப்பாணத்தைப் போலவே சோதனைகளையும் பதிவுகளையும் எதிர்கொண்டோம். (ஒருவர் வவுனியாவில்
இருந்து கொழும்புக்கு ரயிலில் வந்தால் ரயில் நிலையத்தில் இதே போன்ற சோதனைக்கு உட்படுவார்.)
கொழும்பில் இருந்து வடக்குக்கு வரும் தமிழர்கள், இன்னமும் தாங்கள் வாழும்
பிரதேசத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். கொழும்பு புறநகர் பகுதியான
வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், வடக்கிலிருந்து வரும் மக்கள் பதிவு செய்யாவிட்டால் கைது மற்றும்
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரும் என பொலிசார் அச்சுறுத்துவதை கேட்கக் கூடியதாக இருந்தது.
குறிப்பிட்ட சில பயண கட்டுப்பாடுகளை அகற்றுவதன் மூலம், ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷவின் அரசாங்கம் தமிழர்கள் மத்தியிலான சீற்றத்தை தணிக்க அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது.
ஆழமடைந்துவரும் பொருளாதர மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் தனது கையை
பலப்படுத்திக்கொள்வதற்காக இராஜபக்ஷ குறித்த காலத்துக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு
விடுத்துள்ளார். எவ்வாறெனினும், அரசாங்கம் பாசாங்கு செய்தாலும், நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் மீதான
அதன் இனவாத அடக்குமுறை தொடர்கின்றது. |