World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government resettles Tamil detainees in prison-like conditions

இலங்கை அரசாங்கம் தமிழ்க் கைதிகளை சிறைச்சாலைக்கு ஒப்பான நிலமைகளுக்குள் மீளக் குடியமர்த்துகின்றது

By Subash Somachandran
5 November 2009

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் வவுனியாவுக்கு அருகில் உள்ள மெனிக்பாம் மற்றும் இதர வடக்கு நகரங்களிலும் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து சில ஆயிரம் தமிழ் மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களில் மீளக் குடியமர்த்தியுள்ளதாகக் கூறிக்கொண்டது. உண்மையில் இந்த அகதிகள் இராணுவக் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு, புதிய சிறைச்சாலைக்கு ஒப்பான நிலைமைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்நாட்டு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்த நிலையில், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் சுமார் 41,000 தமிழர்களை மீளக் குடியமர்த்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, சுமார் 250,000 தமிழ் மக்கள், கடந்த மே மாதத்தில் இருந்து குற்றச்சாட்டுக்கள் இன்றி, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறி மற்றும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட முறைமையை மீறி அடைத்து வைக்கப்பட்டார்கள்.

விடுவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பான அரசாங்கத்தின் கூற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வழிகள் கிடையாது. முகாமக்களுக்குச் சென்று வருவதற்கு சுதந்திர பத்திரிகையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, உதவி நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் சுமத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் பின்னர் நடந்த "மீள்குடியேற்றத்தை" ஆய்வு செய்ய ஊடகவியலாளர்களும் மற்றும் உதவி நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், கைதிகள் அனுப்பபட்டுள்ள கிராமங்களுக்கு WSWS நிருபர்கள் சென்றிருந்தனர்.

மெனிக்பாம் முகாம்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளார்கள். அதில் சிலர் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர். எவ்வாறயினும், வெளியேறிய சிலர் தங்குமிடம் எதுவுமில்லாத நிலையில் முன்னர் கைவிடப்பட்ட வீடுகளில் வாழ்கிறார்கள். ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுப் பிரதேசங்கள் கடல் வழி பாலங்கள் மற்றும் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தீவுகள் 1990 களில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருப்பதுடன், தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 1990 முற்பகுதியில் இந்தப் பிரதேசங்கள் இராணுவத் தாக்குதலால் கைப்பற்றப்பட்டதனால் பல பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடமாகாணத்தின் வன்னிப் பிரதேசத்துக்குள் இடம்பெயர்ந்தனர்.

1995 க்குப் பின்னர் சிலர் இந்தத் தீவுகளுக்கு படிப்படியாக மீளத் திரும்பினர். இந்தத் தீவுகளில் உள்ள பல பிரதேசங்களை இராணுவம் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தியதால் ஏனைய மக்களால் மீளவும் திரும்ப முடியாது போனது. இங்கு வாழும் மக்கள் கடற்படையாலும் அதனுடன் துணைப்படையாக இணைந்து செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் பங்காளியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாலும் (EPDP) தொடர்ச்சியாகத் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்தத் தீவுகளில் இருந்து யாழ்ப்பாண நகரத்துக்கும் அங்கிருந்து தீவுகளுக்கும் செல்லும் மக்கள் கடற்படையினரிடம் பாஸ் பெற்றுக் கொண்டு, கடுமையான பாதுகாப்புப் பரிசோதனையின் பின்னரே பயணிக்க முடியும். அவர்கள் ஒவ்வொரு பயணத்துக்கும் கடற்படையின் அனுமதியைப் பெற வேண்டும். பயணத்துக்கான காரணம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. கமரா கைத்தொலைபேசி மற்றும் ஏனைய மின்னியல் சாதனங்களின் பாவனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விடுலைசெய்யப்பட்ட கைதிகள் தங்களின் துன்பகரமான அனுபவங்ககளை WSWS க்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்கள் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ் மூலம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக மெனிக்பாமுக்கு அருகில் உள்ள அருவித்தோட்டம் என்னும் ஒரு கிராமத்தில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அவர்கள் தத்தமது கிராமங்களுக்கு திரும்பியவேளை, இராணுவம் அவர்களை முட்கம்பி வேலிக்குள் ஒரு நாள் அடைத்து வைத்தது. அவர்கள் முதலாவதாக கடற்படை அல்லது இராணுவத்தால் விசாரிக்கப்பட்டார்கள். அடுத்ததாக அவர்களை தனித்தனியாகவும் மற்றும் குடும்பத்துடனும் படம் பிடித்தார்கள். பின்னர் அவர்கள் உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு உறவினர்களைக் கொண்டிருந்தவர்கள் அவர்களோடு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களை பொறுப்பேற்ற உறவினர்கள், தாம் பொறுப்பேற்றவர்களுக்கு தாங்களே பொறுப்பு என கையொப்பமிட நெருக்கப்ட்டார்கள். ஏனைய கைதிகள், அவர்கள் ஒரு தசாப்தங்களுக்கும் முன்னர் வாழ்ந்த பிரதேசங்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடற்படையினர், பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே, இந்த கைதிகள் "ஆறுமாதங்களுக்கு தீவுக்கு வெளியில் செல்ல முடியாது மற்றும் யாரும் புதிய தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது" என உறவினர்களுக்கு தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து கொண்டு வந்த மக்களின் அடையாள அட்டையில் கடற்படை ஒரு அடையாளத்தை இட்டுள்ளது. அவர்கள் வெளியில் சென்றால், கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறைவாசத்தையும் எதிர்கொள்வார்கள்.

வேலணைத் தீவில் அவர்கள் தத்தமது கிராமங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் கடற்படை இளைஞர்களின் அடையாள அட்டையைக் பறித்தெடுத்தது. அவர்கள் பின்னர் வந்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் மீண்டும் சென்ற போது பல இளைஞர்கள் கடற்படைச் சிப்பாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இந்த இளைஞர்கள் எல்லோரும் புலிச் சந்தேக நபர்களாகவே நடத்தப்பட்டார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கடற்படை முகாமுக்கு வந்து ஒரு புத்தகத்தில் கையொப்பமிடுமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பங்கள் எதுவித உதவிகளும் அற்று உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்படுகிறார்கள். அரசாங்கம், அவர்களுக்கு உணவு, உடை மற்றும் வீட்டு வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்குவதில் இருந்து கையை கழுவிக்கொண்டது. மக்கள் இந்தப் பிரதேசத்தில் இருந்து வைத்திய சிகிச்சைக்காக வெளியில் செல்ல முடியாது. அவர்கள் மெனிக்பாம் முகாம் என்ற நரகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்ளே அன்றி, அவர்களுடைய நிலமைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஒரு அகதி WSWS க்குத் தெரிவித்ததாவது: "நாங்கள் 30 பேருடன் எமது உறவினர் வீட்டில் இருக்கிறோம். ஆகவே அது அவர்களுக்கு இடையூறுகளைக் கொடுக்கும். ஆனபடியால் நாங்கள் எமது உறவினரின் நிலத்தில் ஒரு கொட்டிலை அமைப்பதற்கு தீர்மானித்தோம்." இன்னொரு அகதி கூறுகையில், "நாங்கள் வெறும் கையுடன் தான் இங்கு வந்தோம். நாங்கள் ஒரு கொட்டிலை அமைப்பதற்கான பொருட்களை வாங்குவதற்கு கடன்பட்டுள்ளோம்," என்றனர். கூரை வேய்வதற்கு உபயோகிக்கப்படும் கிடுகு ஒன்று 4 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

காரைநகரில் உள்ள தோப்புக்காடு, மடத்துவளவு மற்றும் இராசாவின் தோட்டம் போன்ற கிராமங்கள் கடற்படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளன. தோப்புக்காட்டைச் சேர்ந்த 90 குடும்பங்கள் பராமரிப்பதற்கு உறவினர்கள் இல்லா நிலையில் மீளக் குடியமர்ந்துள்ளனர். அவர்களின் உறவினர்கள் கடற்படையினரின் கட்டுப்பாடு காரணமாக தீவை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அந்த அகதிகள் கைவிடப்பட்ட 10 வீடுகளில் வாழ்கிறார்கள்.

இராசாவின் தோட்டம் மற்றும் மடத்துவளவு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 190 பேர் ஏழு கைவிடப்பட்ட வீடுகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வீடுகளின் உரிமையாளர்கள் 1990 களில் இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அதன் கூரைகள் பாழடைந்துள்ளன, இது மழைக்காலத்துக்கு தாக்குப் பிடிக்க மாட்டாது.

இந்த கிராமங்களில் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட கைதிகளில் ஒருவர், தன்னால் சில கிலோமீட்டர் தூரத்தில் தான் முன்னர் வேலை செய்த இடத்துக்கு திரும்ப செல்ல முடியும் என்றும், ஆனால் எவரும் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். "எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் எப்படி பிழைப்பது. இந்த வீடுகள் 19 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் செடிகள் வளர்ந்திருப்பதோடு காடுபோல் தோற்றமளிக்கிறது. இங்கு நிறைய பாம்புகளும் கொசுக்களும் இருக்கின்றன. இது இன்னுமொரு மெனிக் பார்ம் போல் இருக்கிறது," என கூறினார்.

இன்னுமொருவர் தெரிவித்தாவது: "எதாவதொரு தொழில் செய்து எங்களால் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களால் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாதுள்ளது. எங்களுக்கு கிடைக்கும் நிவாரணப் பொருட்களில் ஒரு கிலோவை விற்றுதான் நாங்கள் மரக்கறிகளையும் ஏனைய பொருட்களையும் வாங்கிக்கொள்கிறோம்."

வரட்சியின் காரணமாக கிணறுகள் காய்ந்து போயுள்ளன. மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு ஒரு கிலோமீட்டருக்கு மேல் செல்ல வேண்டும். உள்ளூராட்சி மன்றம் வெறும் 15 லிட்டர் தண்ணீரையே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுக்கிறது. இன்னுமொரு தொண்டு நிறுவனம் மேலும் 30 லீட்டர் குடிதண்ணீரை 22 ரூபாவுக்கு கொடுக்கிறது.

அங்கு ஒரு கிராம மருந்தகம் மட்டுமே ஆஸ்பத்திரியாக இயங்குகிறது. அவசர நோயாளர்களை யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்ப முடியும். ஆனால், முன்னால் கைதிகள் அங்கு செல்வதற்கு முடியாது. நோயாளர்கள் வைத்தியரின் ஆலாசனையை பெறவேண்டும். இதை கடற்படையினரும் கவணிப்பர். இவை மெனிக் பார்ம் கட்டுப்பாடுகளுக்கு சமாந்தரமானதாகும்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள், சப்பாத்துகள் அல்லது பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவில்லை. ஒரு மாணவன் கூறியதாவது: "நாங்கள் 2008ல் இடம்பெயர்ந்தோம். அதிலிருந்து நாங்கள் பாடசாலை செல்லவில்லை. எங்களுக்கு 'கல்வி' வழங்க பிரச்சார பிரிவு ஒன்று அங்கே செயற்பட்ட போதிலும், மெனிக் பார்மில் எங்களது மாணவர்களுக்கு எதுவும் கிடைக்கவிலை."

ஒரு நபர் ஆத்திரத்துடன் கூறியதாவது: "நாங்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறுவதற்காக பஸ்ஸில் ஏறிய போது, டக்ளஸ் தேவானந்தா [ஈ.பி.டி.பி. தலைவரும் அரசாங்க அமைச்சரும்] எங்களை சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதாவும் சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் கூறினார். ஆனால் எங்களால் எங்களது சொந்த இடங்களுக்கு கூட செல்ல முடியவில்லை மற்றும் எங்களுக்கு பிழைப்பதற்கும் வழியில்லை."

மெனிக் பார்மில் இருந்து விடுவிக்கப்பட்ட பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள், அவர்கள் தொடர்ந்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதையே கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் இலட்சக்கணக்கான கைதிகளை பெயரளவில் மீளக் குடியேற்றுவது பற்றி சிந்திக்கவேயில்லை. அவர்கள் தொடர்ந்தும் மெனிக் பார்மிலும் ஏனைய முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) இந்தக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும், அவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்றும் கோரி, பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (பார்க்க: இலங்கையில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருக)

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரும், இந்த தமிழ் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையை கோரி அறிக்கைகளை வெளியிடுமாறும் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse
Secretary of Defence, Public Security, Law & Order
Ministry of Defence, Colombo
Sri Lanka
Email: gotabaya@defence.lk

Lalith Weeratunga
Permanent Secretary to the President of Sri Lanka
Old Parliament Building, Colombo
Sri Lanka

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்:

Socialist Equality Party
301 1/1, Main Road, Attidiya, Dehiwala
Sri Lanka
Tel/Fax: 0094 11 2712104

The World Socialist Web Site
Email: editor@wsws.org