World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government calls early presidential poll இலங்கை அரசாங்கம் குறித்த காலத்துக்கு முன் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறது By K. Ratnayake இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு வாரத்துக்கும் மேலான தயக்கத்தின் பின்னர், கடந்த திங்கழன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே புதிய ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இது ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் தனது கையை பலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றதோடு அடுத்த தேர்தல் 2011 நவம்பரிலேயே நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பின் கீழ், நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னரே ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்க முடியும். தேர்தல் ஜனவரி 23 நடக்கவுள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் ஏப்பிரல் மாதம் நடத்தப்பட வேண்டுமானாலும் இன்னமும் அறிவிக்கப்படவிலை. இராஜபக்ஷ தீவில் நீண்டகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த மே மாதம் இராணுவம் தோற்கடித்ததை பயன்படுத்தி நன்மையடையும் நோக்கிலேயே குறித்த காலத்துக்கு முன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவ வெற்றியை பறைசாற்றித் திரிவதன் மூலம், அவர் மோசமடைந்துவரும் பொருளாரம், விலைவாசி ஏற்றம், வேலை இழப்புக்கள் மற்றும் சமூக சேவைகளிலான வெட்டுக்கள் தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் அமைதியின்மையை திசை திருப்பிக்கொள்ள முடியும் என கணக்கிட்டுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே பரீட்சார்த்தமாக மாகாண சபை தேர்தல்களை நடத்தியுள்ளது. ஆயினும், முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக தோன்றியுள்ள நிலையில், இராஜபக்ஷவின் கணிப்பீடு குழப்பத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இராஜபக்ஷவின் ஆளும் கும்பலின் பங்காளியாக இருந்த பொன்சேகா, கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு யுத்தத்தை வென்றது யார் என்பது தொடர்பான கசப்பான எதிர்க் குற்றச்சாட்டுக்களின் மத்தியில் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தையும் வெளியிட்டுள்ளார். யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்தாமல் பொன்சேகாவை ஆதரிக்க விரும்பியமை, இந்த இரு கட்சிகளில் எதுவும் அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். இரு தரப்பும் இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தையும் அதை அடுத்து 250,000 தமிழ் சிவிலியன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் மற்றும் அரசாங்கத்தின் சந்தை சார்ந்த பொருளாதார அணுகுமுறையையும் ஆதரிக்கின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக எந்தவொரு மாற்றீட்டையும் வழங்காத காரணத்தால், ஜே.வி.பி. யும் யூ.என்.பி.யும் மாகாண சபை தேர்தலில் மோசமாக தோல்வியடைந்தன. பொன்சேகாவுக்குப் பின்னால் நிற்பதன் மூலம், யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் ஜனாதிபதிக்கு எதிராக ஜெனரலை உண்மையான யுத்த வீரனாக முன்னிலைப்படுத்தி, இராஜபக்ஷவை அவரது சொந்த விளையாட்டிலேயே தோல்வியடையச் செய்வதற்கு முயற்சிக்கின்றன. சிங்கள அதி தீவிரவாத ஜே.வி.பி., ஏற்கனவே பொன்சேகாவை அங்கீகரித்திருந்ததோடு, வலதுசாரி யூ.என்.பி. தலைமையிலான ஒரு தேர்தல் கூட்டுடன் அதுவும் உடனடியாக பின்னால் சேர்ந்துகொண்டது. பொன்சேகா போன்ற ஒரு பொது வேட்பாளர் இன்றி, இந்த இரு எதிர்க் கட்சிகளும் ஒரு கூட்டுப் பிரச்சாரத்தை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகும். பொன்சேகா வெறும் ஒரு எதிர்க் கட்சி பெரும் புள்ளி அல்ல. மாறாக, அவரது வேட்பாளர் நிலையானது இராணுவ உயர் மட்டத்தினர் அரசியல் வாழ்க்கைக்குள் நேரடியாக நுழைவதையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. இராணுவத் தளபதி என்ற வகையில், பொன்சேகா புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுத்ததோடு, இராஜபக்ஷ அரசாங்கத்தோடு சேர்த்து அவரும் தமிழ் பொது மக்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புச் சொல்லவேண்டியவராவார். யுத்தத்தின் முடிவை அடுத்து, அவர் மேலும் மேலும் தெளிவடைந்தமை, இராணுவ உயர்மட்டத்தினருள் அடியிலிருந்து உந்தப்படும் அதிருப்தியை பிரதிபலிக்கின்றது. பொன்சேகாவுக்கு எதிர்க் கட்சி வேட்பாளராவதற்கு கிடைத்த வாய்ப்பு, இராஜபக்ஷவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்தலை தாமதப்படுத்தும் அளவுக்கு, நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைவதோடு அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவத்றகான வாய்ப்பும் குன்றும். எவ்வாறெனினும், முன்கூட்டிய தேர்தலொன்றின் மூலம் முன்செல்லும் திட்டத்தில் அரசாங்கம் பயன்படுத்தவிருந்த புலிகளின் தோல்வி என்ற ஆதாரம், பொன்சேகாவின் வருகையால் கீழறுக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. நவம்பர் 15 அன்று தேர்தலை அறிவிப்பதாக ஆரம்பத்தில் இராஜபக்ஷ சமிக்ஞை செய்திருந்தாலும், திரைக்குப் பின்னால் நடந்த உக்கிரமான கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி முடிவெடுக்கும் வரை முடிவை அறிவிக்காமல் தாமதித்தார். இராஜபக்ஷ சுதந்திர முன்னணி கூட்டணியை சேர்ந்த 30 கட்சிகளின் கூட்டமொன்றில் கடந்த வியாழனன்று பேசுகையில் தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்தார். அரசுக்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின்படி, இராஜபக்ஷ கட்சி தலைவர்களுக்கு தெரிவித்ததாவது: "முன்னதாக மக்கள் நாட்டை ஐக்கியப்படுத்த எங்களுக்கு வாக்களித்தனர். இன்று விடுவிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை பலப்படுத்த நாம் மக்கள் ஆனையை எதிர்பார்க்கிறோம்." ஒவ்வொரு சொல்லும் ஒரு பொய். இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் யுத்தத்தின் மூலம் நாட்டை ஐக்கியப்படுத்த பிரச்சாரம் செய்யவில்லை. அவர் 2002 யுத்த நிறுத்தத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கூறும் கோரிக்கைகளை வரைந்தாலும், தன்னை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு சமாதான மனிதன் என கூறிக்கொண்டார். அவர் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம், சம்பள உயர்வு, இளைஞர்களுக்கு பத்துலட்சக்கணக்கான புதிய தொழில்கள் மற்றும் கல்வி, சுகாதார மேம்பாட்டையும் ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். இந்த சகல வாக்குறுதிகளும் அவரது பிரமாண்டமான யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஒரு புறம் இராஜபக்ஷ பிளவுபட்டு பலவீனமடைந்திருந்த புலிகளில் இருந்து அனுகூலம் பெறுவதற்கும் மற்றும் இன்னொருபுறம் சமூக அமைதியின்மையின் வளர்ச்சியின் மத்தியில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் இனவாத பதட்டங்களை கிளறிவிடவும் 2006 ஜூலையில் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் மூழ்கடித்தார். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில், அரசாங்கம் தொழிலாளர்களின் மாணவர்களின் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நசுக்குவதற்காக "புலி பயங்கரவாதத்தின் மீதான" யுத்தத்தை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் பொது மக்களை "விடுவிப்பதற்கு" பதிலாக, அவர் அவர்களை முட்கம்பிகளால் சூழப்பட்ட இராணுவத்தால் நடத்தப்படும் பெயரளவிலான நலன்புரி கிராமங்களில் அடைத்து வைத்தார். யுத்தத்தின் முடிவு அரசாங்கத்தின் நெருக்கடியை மட்டுமே உக்கிரமாக்கியுள்ளது. யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை ஈடு வைத்த இராஜபக்ஷ, சர்வதேச நிதிச் சந்தைகளில் கடன் பெறுவதை சாத்தியமற்றதாக்கிய மற்றும் இலங்கையின் ஏற்றுமதியை மோசமாக பாதித்த ஒரு பூகோள பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டார். அரசாங்கம் உக்கிரமான அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலரை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது. இராஜபக்ஷ அரசாங்க ஊழியர்களுக்கு 750 ரூபா (6.55 அமெரிக்க டொலர்) மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பணவு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 375 ரூபா மாதாந்த கொடுப்பனவு உட்பட வாக்காளர்களை சாந்தப்படுத்தவும் மற்றும் விலைக்கு வாங்கவும் திட்டமிட்டு மேலும் ஒரு தொகை தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். உயர் பணவீக்கத்தை சமாளிக்க பெரும் சம்பள உயர்வை கோரிவரும் அரசாங்கத் துறை ஊழியர்கள் சீற்றமடைந்துள்ளனர். அவர் ஜனவரி அளவில் 17,000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்த போதிலும் ஏற்கனவே 25,000 பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படப் போவதில்லை. அரசாங்கம் நவம்பரில் முன்வைக்க வேண்டிய ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தேர்தலுக்குப் பின்னர் முன்வைக்க ஒத்தி வைப்பதன் மூலம், அதன் உண்மையான பொருளாதார நிலைமையை மூடி மறைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் கொடுத்த கடனுக்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அது வலியுறுத்தியுள்ள நிலையில், தேர்தல் முடிந்த உடனேயே இந்த தேர்தல் வாக்குறுதிகள் காணாமல் போய்விடும். 2011ம் ஆண்டு வரவு செலவுத் துண்டு விழும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது -இந்த ஆண்டு மதிப்பீடு 9 வீதத்துக்கும் 11 வீதத்துக்கும் இடையில் உள்ளது. அதே சமயம், அதன் ஜனநாயக உரிமை மீறல் சாதனை தொடர்பாக கவனத்தை திசை திருப்புவதன் பேரில், அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழ் மக்களுக்கு டிசம்பர் 1ம் திகதி முதல் "நடமாடும் சுதந்திரத்தை" வழங்குவதாகவும் ஜனவரி 31 அளவில் தடுப்பு முகாங்களை மூடுவதாகவும் அறிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, வடக்கு மற்றும் கிழக்கில் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் பூராவும் அரசாங்கமும் இராணுவமும் இராணுவ முகாங்களையும் பொலிஸ் நிலையங்களையும் அமைத்துக்கொண்டிருக்கின்றன. முகாங்களில் இருந்து "விடுவிக்கப்படும்" தமிழர்கள், தமது மூடப்பட்ட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப எந்தவொரு உதவியும் இன்றி, ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்குள் திரும்பிச் செல்வர். ஜெனரல் பொன்சேகாவுக்கு முண்டு கொடுப்பதற்காக, யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் அவருக்கு ஜனநாயக நம்பகத்தன்மையை வழங்க முயற்சிக்கின்றன. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவது, நியாயமான பொதுத் தேர்தலை நடத்துவதற்காக காபந்து அரசாங்கமொன்றை அமைப்பது மற்றும் தமிழ் கைதிகளை மீண்டும் குடியமர்த்துவது உட்பட 10 நிபந்தனைகளின் கீழ் தனது கட்சி பொன்சேகாவை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். கடந்த வாரம் சிப்பாய்களுக்கு எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில், யுத்தத்தை வென்றமைக்காக அவர்களை பாராட்டிய பொன்சேகா, அவர்களது நிலைமைகளை முன்னேற்ற தன்னால் இயலாமல் இருப்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை சமிக்ஞை செய்த அவர் பிரகடனம் செய்ததாவது: "நான் பலவீனமடைந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக நியாயங்களை பாதுகாக்கவும் இன ஒற்றுமையை காக்கவும் என்னை அர்ப்பணித்துக்கொள்வதோடு எதிர்காலத்தின் நன்மைக்காக நான் நிழலாக உங்களுடன் இருப்பேன்." ஜனநாயகவாதியாக பொன்சேகா காட்டிக்கொள்வது நகைப்புக்கிடமானதாகும். இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்களை தடுத்து வைக்கும் திட்டத்துக்கு அவர் உதவியதோடு, ஊடகங்களை மீண்டும் மீண்டும் துரோகிகள் என வகைப்படுத்தியதுடன் மற்றும் நூற்றுக்கணக்கான படுகொலைகளிலும் காணாமல் ஆக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அரசாங்க-சார்பு கொலைப் படைகளுடன் இராணுவம் ஒத்துழைத்த நிலையில் அவர் அதற்கு பொறுப்பாளியாகவும் இருந்தார். பலம் வாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்க்கும் யூ.என்.பி. யின் உத்தேசத்தைப் பொறுத்தளவில், பதவிக்கு செல்லும் வரை மட்டுமே எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் அதை நீக்குமாறு அழைப்பு விடுப்பது வழமையாகும். சிரேஷ்ட யூ.என்.பி. தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல வியாழக்கிழமை ஊடகங்களுடன் பேசுகையில், நவம்பர் 27 அன்று யூ.என்.பி. "பொது வேட்பாளரின்" பெயரை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என தெரிவித்தார். தொடரும் வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் பொன்சேகாவுக்கும் யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. தலைவர்களுக்கும் இடையில் கடந்த வாரம் மூடிய கதவுகளுக்குள் கூட்டங்கள் நடந்ததாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு பொது வேட்பாளராக பொன்சேகாவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த ஜே.வி.பி., திங்கட் கிழமை மாலையும் மேலும் கலந்துரையாடல்களை நடத்தியது. பொன்சேகா, நாட்டில் மோசமடைந்துவரும் பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான "பலமான தலைவராக" தன்னை தயார்படுத்தி வருகிறார். வியாழக் கிழமை அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ வல்லுனர்கள் உடனான மாநாடொன்றில் பேசிய அவர், தனது கோட்பாடு "செய்ய முடியும்" என்பதே என பிரகடனம் செய்தார். "நீங்கள் அரசாங்கத் தலைவரானால் தேசத்தின் பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பிரச்சினைகளை உங்களால் தீர்க் முடியுமா? தேசிய பாதுகாப்பை உங்களால் வலுப்படுத் முடியுமா? அரசியல் தலையீடு இன்றி உங்களால் ஒரு பொலிஸ் படையை ஸ்தாபிக்க முடியுமா? தகுதி பெற்ற அனைவராலும் பல்கலைக்கழகம் செல்ல முடியுமா? இவ்வாறு அவர் எந்தவொரு தீர்வோ அல்லது கொள்கையையோ முன் வைக்காமல் பல கேள்விகளை எழுப்பினார். தேவையான வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் இயலுமை இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு உள்ளதா என்பதையிட்டு கவலைகொண்டுள்ள ஆளும் கும்பலின் ஒரு பகுதியினர் பொன்சேகாவை ஆதிரிக்கின்றனர். கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார பத்தி எழுத்தாளர், குவிந்துவரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை தீர்க்கும் தேவையை எழுப்பினார். "திறைசேரியை பலப்படுத்த வேண்டிய தேவை தெளிவாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அயல் நாடுகளின் அளவுக்கு பிரச்சினை நீளாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் விவேகமான நிதி திட்டங்களை பின்பற்றுவதற்கான அரசியல் விருப்பமும், உத்வேகமும் மற்றும் உறுதிப்பாடும் அரசாங்கங்களுக்கு இன்னமும் இல்லை," என அவர் முறைப்பாடு செய்கின்றார். இதன் உட்பொருள், அடுத்த அரசாங்கம் அரசாங்க தொழில்களை, சம்பளத்தை அத்தியாவசிய சேவைகளை வெட்ட வேண்டும் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளால் தவிர்க்க முடியாமல் தூண்டிவிடப்படும் வெகுஜன எதிர்ப்புக்களை அடக்க வேண்டும் என்பதேயாகும். ஆளும் வர்க்கத்தின் தட்டுக்கள் இராஜபக்ஷ அரசாங்கம் பலவீனமானதாகவும் பிளவுபட்டுள்ளதாகவும் காண்கின்றனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பொலிஸ் அரச இயந்திரத்தை கையாளத் தேவையான "பலமான மனிதனாக" கருதி பொன்சேகாவின் பின்னால் அணிதிரளுகின்றனர். |