பிரித்தானியாவை தளமாகக் கொண்ட "சனல் 4 நியூஸ்" இந்த வாரம் ஒளிபரப்பிய
வீடியோ, இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவப் படைகளும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக
நடத்திய யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான மேலதிக நேரடி ஆதாரங்களை
வழங்குகிறது.
ஆகஸ்ட் 25 அன்று சி.என்.என்.-இணைப்பில் ஒளிபரப்பட்ட இந்த வீடியோ படம்,
இலங்கை சிப்பாய்கள் நிர்வாணமான, கைகளும் கண்களும் கட்டப்பட்டவர்களை இரத்தம்தோய்ந்த வகையில்
படுகொலை செய்வதை காட்டுகிறது. இவர்கள் தமிழ்களாக தெரிகிறார்கள். அவர்கள் புலி போராளிகளா அல்லது
பொதுமக்களா என்பது தெரியவில்லை.
முதலில் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்ட
ஒருவர் தரையில் தள்ளப்படுகிறார். பின்னர் ஒரு இராணுவச் சீருடையில் உள்ள ஒருவன் அந்தக் கைதியின் தலையின்
பின்புறம் தனது சப்பாத்துக்காலால் பலமாக உதைக்கின்றான். கைதி முன்னால் சரியும் போது இன்னுமொரு சிப்பாய்
தனது தானியங்கி துப்பாக்கியால் இலக்கு வைத்து ஒரு முறை சுடுகிறான். கைதியின் உடல் தரையில் விழுகின்றது. "அவன்
குதிப்பது போல் இருந்தது" என ஒரு சிப்பாய் ஏளனமாக சிரிக்கின்றான். "நான் நினைக்கிறேன் அவன் பின்னால்
திரும்பி பார்த்தான் என்று" என சிங்களத்தில் சொல்வது கேட்கிறது.
துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கும் அதேவேளை, இடது புறம் திரும்பும் கமரா மேலும்
ஏழு சடலங்களை காட்டுகிறது. அவை அனைத்தும் நிர்வாணமாக இருந்ததோடு தரையில் பரவிக் கிடந்தன. பின்னர்
மீண்டும் வலது பக்கம் திரும்பும் கமரா, இன்னுமொரு நிர்வாண நபர் தரையில் தள்ளப்பட்டு தலையில் சுட்டுக்
கொல்லப்படுவதை காட்டுகிறது. இம்முறை அந்த சடலம் பின்பக்கமாக விழுந்தது. "இது கரணம் அடிப்பது போன்றுள்ளது"
எனக் கூறும் குரல் ஒன்று கேட்கிறது. (வீடியோ
படத்தை இங்கு பார்க்க முடியும்)
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பினால் இந்த
வீடியோ படம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, அரசாங்க குண்டர்களால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும்
கொல்லப்படுவது அதிகரித்த அண்மைய ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறிய டசின் கணக்கான தமிழ் மற்றும் சிங்கள
பத்திரிகையாளர்களின் அமைப்பாகும். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அதிகளவில் ஐரோப்பாவில் வாழ்கிறார்கள்.
புலிகளின் கோட்டையான கிளிநொச்சியை கைப்பற்ற இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கை சிப்பாய்
ஒருவரால் ஜனவரி மாதம் அவரது செல்லிடப் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்யப்பட்டது என அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்களின் பேச்சாளர் ஒருவர்
ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "இது விளையாட்டுக்காக பதிவு செய்த படமாக இருந்தது. இது சிப்பாய்களால்
விநியோகிக்கப்பட்டது. அது குறிப்பிட்டகாலம் சுற்றி வந்துள்ளது. இது ஒரு நினைவுப் பதிவாகவே எடுக்கப்பட்டுள்ளது."
இத்தகைய வீடியோ படங்கள் இருப்பது தொடர்பான வதந்திகள் நீண்டகாலமாக காணப்பட்ட போதிலும், இத்தகைய
படங்கள் "முக்கிய ஊடகங்களிற்கு" கிடைத்தது இதுவே முதல் தடவை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ படங்கள் சித்தரிப்பவை, 1949 ஜெனீவா தீர்மானத்தின் மூன்றாவது
விதியை மீறும் யுத்தக் குற்றங்களாகும். சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்,
அதே போல் வல்லுனர்கள் உட்பட மனித உரிமை குழுக்கள்,
இந்த வீடியோ படங்களின்
நம்பகத் தன்மையை சிதைக்கும் வகையிலான எதனையும் அதில் காணவில்லை என தெரிவித்ததாக சர்வதேச
ஊடகங்கள் மேற்கோள் காட்டியிருந்தன.
பல நாடுகளில் உள்ள மின்னியல் ஊடகங்களில் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்ட பின்னர்,
கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்துக்குப் புறம்பான, மொத்தமான அல்லது எதேச்சதிகாரமான மரண தண்டனைகள்
தொடர்பான ஐ.நா. விசேட விசாரணையாளர் பிலிப் ஆல்ஸ்டன், இலங்கையில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள்
தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துமாறு மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் விடுத்த
கோரிக்கையை புதுப்பிப்பதில் இணைந்துகொண்டார்.
புலிகளுக்கு எதிரான கடைசி தாக்குதல்களின் போது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின்
அரசாங்கம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றி ஏற்கனவே இருக்கும் ஆதாரங்களுக்கு மேலதிகமானவற்றை இது
வழங்கியுள்ளது. இந்த கடைசித் தாக்குதல்களில் சுமார் 20,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.
அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புலிகளை நிர்மூலமாக்கவும் முழு தமிழ் வெகுஜனங்களை பீதிக்குள்ளாக்கவும்
பாதுகாப்புப் படைகள் கண்மூடித்தனமான விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களையும் மோட்டார்
தாக்குதல்களையும் மீண்டும் மீண்டும் முன்னெடுத்திருந்தன.
யுத்த வலயத்தில் இருந்த டாக்டர்கள் மற்றும் தொண்டு ஊழியர்களும் குண்டுத்
தாக்குதல்கள் பற்றிய நேரடி மதிப்பீடுகளை வழங்கியிருந்ததோடு வட கிழக்காக முல்லைத் தீவு கரையோரத்தில்
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்களை டைம்ஸ் ஒஃவ்
லண்டன் வெளியிட்டிருந்தது. இந்த பாதுகாப்பு வலயத்தில் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள்
சிக்கிக்கொண்டிருந்தனர். நிலங்களில் தீப்பற்றிய அடையாளங்கள், வெடித்துச் சிதறிய பனை மரங்கள், எரிந்து
போன வாகனங்கள், இடிந்துபோன வீடுகள் மற்றும் ஷெல் வீச்சுக்காளல் நிலத்தில் ஏற்பட்ட குழிகளையும் இந்த
புகைப்படங்கள் காட்டின.
கடந்த மூன்று ஆண்டுகளாக, இராணுவத்தால் நேரடியாக அல்லது மறைமுகமாக இயக்கப்படும்
அரசாங்க சார்பு கொலைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் "காணாமல்
போன" சம்பவங்கள் தொடர்பான கணிசமான ஆதாரங்களை மனித உரிமைகள் அமைப்புக்கள் குவித்து வைத்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் இளம் தமிழர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் அடங்குவர். பொறுப்பாளிகள்
எவரும் விசாரணையின் முன்கொண்டுவரப்படவில்லை.
இராணுவம் மொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றும் நேரடி வீடியோ இதுவாகும்.
கொலைகள் பற்றி சிப்பாய்கள் ஏளனம் செய்தனர், தங்களை வீடியோ படம் எடுக்கவும் அது பலபேருக்கு
செல்லவும் அனுமதித்ததனர் என்ற உண்மை, இந்த பழக்கம் பரந்தளவில் இருந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது. தன்டனையில்
இருந்து விலக்களிப்புடன் இந்தக் கொலைகளை செய்ய முடியும் என அதில் ஈடுபட்டவர்கள் தெளிவாக இருந்துள்ளனர்.
இதற்கு முன்னர் வெளிப்பட்ட இது போன்ற ஆதரங்களுக்கு பிரதிபலித்தது போலவே,
இலங்கை அரசாங்கம் இம்முறையும் விசாரணை செய்வதாக பாசாங்கு கூட காட்டாமல் அது போலியானது என
கண்டனம் செய்துள்ளது. சனல் 4 இதை ஒளிபரப்பிய உடனேயே, அது "ஆயுதப் படைகளை அவமதிக்கும்" இலக்குடன்
"புணையப்பட்ட" ஒன்று என பிரிகேடியர் உதய நாணயக்கார பிரகடனம் செய்தார். வழமை போல், தனது
வலியுறுத்தலுக்கு ஆதாரங்களை வழங்க இராணுவப் பேச்சாளர் தவறிவிட்டார்.
இதே போல், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவர் நிஹால் ஜயசிங்க, "இராணுவம்
தமிழ் பொது மக்களுடன் மோதவில்லை" "அவர்கள் புலிகளுடன் மட்டுமே மோதினர்" என தெரிவித்தார். ஆனால்
பேட்டி ஒன்றை வழங்குமாறு அவரிடம் சனல் 4 விடுத்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.
இத்தகைய மறுப்பறிக்கைகளில் நம்பகத் தன்மை கிடையாது. இந்த அரசாங்கம்
யுத்தத்தை முன்னெடுக்கும் முறை தொடர்பாக மீண்டும் மீண்டும் பொய் கூறி வந்துள்ளதோடு, சாட்சிகளையும் ஏனைய
ஆதரங்களையும் காண்பதற்கு சகல ஊடகங்களையும் தடுப்பதன் மூலமும், எந்தவொரு சுயாதீனாமன விசாரணையையும்
தடுப்பதன் மூலமும் அதன் குற்றங்களை மூடி மறைக்க வெட்கமின்றி முயற்சித்து வந்துள்ளது. ஜனவரி மாதம் இராணுவ
மோதல்கள் உக்கிரம் கண்ட போது, சமூக சேவைகளில் தீவிர பற்றாக்குறை நிலவிய போதும், எஞ்சியுள்ள
புலிகளின் பிரதேசங்களில் இருந்து தொண்டு ஊழியர்களை வெளியேறுமாறு இராஜபக்ஷ அரசாங்கம் கட்டளையிட்டது.
மே மாதம் மோதல்கள் முடிவடைந்த பின்னர், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்
கீ-மூனுடன் சேர்ந்து ஒரு சுருக்கமான பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சில பத்திரிகையாளர்களை மட்டும் இராணுவ
ஸ்தாபனம் ஏற்பாடு செய்ததன் பின்னர், யுத்த வலயத்துக்குள் எந்தவொரு சுயாதீன ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படவில்லை.
இலங்கையில் யுத்தத்தின் போது இராணுவமும் மற்றும் புலிகளும் மனித உரிமைகளையும்
சர்வதேச சட்டங்களையும் மீறியமை தொடர்பாக ஒரு விசாரணையை முன்னெடுக்க சுவிட்ஸ்லாந்து ஒரு வரையறுக்கப்பட்ட
தீர்மானத்தை முன்வைத்த போது, மே 27 அன்று, சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் ஜெனீவாவில் ஐ.நா.
மனித உரிமை சபையில் அரசாங்கம் அதை தடுத்தது. மாறாக, புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தில் அரசாங்கத்தின்
வெற்றியை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யுத்த முடிவடைந்து மூன்று மாதங்களாகியும், அரசாங்கம் இன்னமும் சுமார்
280,000 தமிழ் பொது மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்திருப்பதோடு ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும்
முகாங்களுக்கு செல்வதை தடை செய்துள்ளது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக
தெரிந்துகொள்ளக்கூடிய பிரதான சாட்சிகளான தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகளுடன் பேச மாட்டோம் என வாக்குறுதியளிக்க
முகாங்களுக்குள் சேவையாற்றும் தொண்டு ஊழியர்கள் நெருக்கப்பட்டுள்ளார்கள். முகாம்களில் இருந்து புலி சந்தேக
நபர்கள் என சொல்லப்படுபவர்கள் தொடர்ந்தும் "காணாமல் போவதாக" வரும் செய்திகளுக்கு இந்த வார
வீடியோ காட்சிகள் மேலும் ஆதாரத்தை குவிக்கின்றது.
இந்த வீடியோவில் காட்டப்படும் மனிதப் படுகொலைகளும் அதன் கொடூரங்களும்,
தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக கொழும்பு ஸ்தாபனம் முன்னெடுத்த மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின்
இனவாத பண்புக்கு இன்னுமொரு சான்றாகும். அதே சமயம், யுத்தத்தாலும் பூகோள பொருளாதர பின்னடைவாலும்
ஏற்படுத்தப்பட்ட ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க உழைக்கும் மக்களையும் கிராமப்புற
வெகுஜனங்களையும் நெருக்குவதன் பேரில் இப்போது அரசாங்கம் "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுக்கின்ற
நிலையில், இதே வழிமுறைகள் பரந்தளவில் உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும் என்ற எச்சரிக்கையை
இந்த சிப்பாய்களின் நடவடிக்கைகள் முன்வைக்கின்றன.