World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்War to escalate after Afghan election ஆப்கானிய தேர்தலுக்கு பின்னர் போர் தீவிரமாக்கப்படும் By James Cogan கடந்த வியாழன் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தல்களை அடுத்து, அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் போரை இன்னும் விரிவாக்கும் திட்டங்களுடன் தொடர்ந்துள்ளது. எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக பதவியில் இருத்தப்பட்டாலும், அவருடைய முக்கிய பணி ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு பெருகி வரும் ஆயுதமேந்திய எதிர்ப்பை நசுக்கும் முயற்சிகளை முடுக்கி விடுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக இருக்கும். இத்தேர்தலே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஒரு சங்கடமாகும். தெற்கு, கிழக்கு மாநிலங்களில் இருக்கும் இனவழி பஷ்டூன் மக்களில் பெரும்பாலானவர்கள் தாலிபனின் உத்தரவுகளை பின்பற்றி, வாக்களிப்பதை முற்றிலும் புறக்கணித்தனர். அச்சம் என்பது ஒரு காரணியாக இருந்திருக்கக்கூடும் என்றாலும், எழுச்சிக்கு பரந்த மக்கள் ஆதரவு உள்ளது என்பது மறுக்கப்பட முடியாததாகும். பஷ்டூன் மக்கள் வெளிநாட்டுப் படைகளையும் காபூலில் இருக்கும் கைப்பாவை ஆட்சியையும் வெறுக்கின்றனர்; பிந்தையது எட்டு ஆண்டு காலமாக ஒடுக்குமுறை, ஊழல் நிறைந்த அதிகாரிகள், போலீஸ் மற்றும் பொருளாதார நலன்கள் இழப்பு ஆகியவற்றைத்தான் கொடுத்துள்ளது. போர்ப்பிரபுக்களாலும், ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தரும் வடக்கு கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காபூலிலும், வடக்கில் இருக்கும் இனவழி டாஜிக், உஸ்பெக், ஹசாரி பகுதிகளிலும் வாக்குப் பதிவு 40ல் இருந்து 50 சதவிகிதம்தான் இருந்தது, ஆப்கானிய தேர்தல் ஆணைய தலைவர் இதனை கூடுதல் நம்பிக்கையானது" என்று விளக்கியிருந்த போதிலும், 2004 தேர்தலில் கிடைத்த 70 சதவிகித வாக்குப்பதிவுடன் இது ஒப்பிடத்தக்கது. செப்டம்பர் 17 அன்று இறுதியாக உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்படும்போது, அது பல ஆப்கானியர்களாலும் நெறியற்றது என்றுதான் பரந்த முறையில் கருதப்படும். வாக்களிப்பை கண்காணித்த சுதந்திர அமைப்புக்கள், வாக்குச் சீட்டுக்கள் நிறைய வாக்குப் பெட்டிகளில் திணிக்கப்படல் இன்னும் பல முறைகேடுகளை தகவலாக கொடுத்துள்ளனர். ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மற்றும் அவருடைய முக்கிய போட்டியாளர் அப்துல்லா அப்துல்லா, இருவருமே 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறுகின்றனர் இது சட்டபூர்வ சவால், கன்னைவாத உட்பூசல் மற்றும் இரண்டும் சுற்று வாக்கு என்று சில மாதங்களுக்கு குழப்பத்திற்கான அரங்கை அமைத்துள்ளது. ஜனாதிபதி ஒபாமா தேர்தலை "வெற்றிகரமானது" என்று விவரித்தாலும், உயர்மட்ட இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் தேர்தல் நாட்டை ஆக்கிரமிப்பாளர்களின் உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் என்ற பாசாங்கைக்கூட கொள்ளவில்லை. கர்சாய் அரசாங்கத்தின் ஊழல், வடக்கு கூட்டணியின் இனக் குழு அடிப்படையிலான யுத்தப்பிரபுக்கள் அதன் மீது கொண்டுள்ள ஆதிக்கம் ஆகியவை கிளர்ச்சி வளர்ச்சியடைவதற்குக் காரணமாக இருந்துள்ளன. பெயர் கூற விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி இங்கிலாந்தின் Telegraph இடம் வெள்ளியன்று கூறினார்: "கர்சாயி வெற்றி பெற்றால், அவர் செயல்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க வகை முன்னேற்றத்தை நாங்கள் விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் நிலைமை முடிவில்லாமல் காரணங்களைக் கூற அனுமதியாத வகையில் தீவிரமாக உள்ளது. இரண்டாம் பதவிக்காலத்திற்கு கர்சாயி ஜனாதிபதியாக இருக்க விரும்பினால், அதற்கேற்ப அவர் நடந்து கொள்ள தொடங்க வேண்டும்." BBC க்கு தேர்தல் தினத்தன்று கொடுத்த பேட்டி ஒன்றில், ஈராக்கில் விரிவாக்கத்தின் தளபதியாகவும் இப்பொழுது அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவராகவும் இருக்கும் தளபதி டேவிட் பெட்ரீயஸ் அப்பட்டமாகக் கூறினார்: "ஆட்சிமுறையின் அபிவிருத்தி மக்களிடையே ஆதரவு பெறும் தகுதியை உடையதாக இருக்க வேண்டும்."எவர் ஜனாதிபதி பதவியை வென்றாலும் சரி, கர்சாய் மீது வெள்ளமென வரும் குறைகூறும் கருத்துக்கள் அமெரிக்க, நேட்டோ ஆக்கிரமிப்பின் தேவைகளுக்கு இணங்க நடக்கும் ஒரு புதிய ஆப்கானிய நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கத்தை தெளிவாகக் கொண்டுள்ளன. அடுத்த ஜனாதிபதியின் முக்கிய பணி, நாட்டை ஒரு வாடிக்கை நாடாக உறுதிப்படுத்தும் ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சியில் இரையாகப் பயன்படுத்துவதற்காக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இன்னும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை அளிப்பதாகும். நேட்டோ தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசென் வியாழனன்று "நேட்டோ ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் 400,000 என்ற தரத்திற்கு கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்." என்றார்--இது தற்போதைய எண்ணிக்கையை விட இரு மடங்கு ஆகும். இந்தத் தரத்தை அடைவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும். இடைக்காலத்தில் கூடுதலான அமெரிக்க, நேட்டோ படைகள் தேவைப்படும். அமெரிக்க, நேட்டோ படைகளின் தளபதி ஸ்டான்லி மக்கிறிஸ்டல் அடுத்த சில வாரங்களில் போரின் முன்னேற்றம் பற்றிய தன்னுடைய பரிசீலனையை ஒபாமாவிற்கு அளிக்க இருக்கிறார். அவருடைய அறிக்கைக்கு முன்னதாக பென்டகன் மக்கள் கருத்தை உருவாக்கும் வகையில் ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு நிலைத்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஞாயிறன்று படைகளின் கூட்டுத் தலைவர் அட்மைரல் மைக்கேல் முல்லன் CNN இடம் "என்னிடம் இருந்தும் பாதுகாப்பு மந்திரியிடம் இருந்தும் மக்கிறிஸ்டலுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டி நெறி, நீங்கள் எங்குள்ளீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதை மதிப்பிட்டுக் கூறுங்கள்" என்பதேயாகும் என்றார். ஆக்கிரமிப்பானது, எழுச்சியின் வளர்ச்சியை ஒட்டி கடினமாக இராணுவ நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்று அவர் அறிவித்தார். "நான் நினைக்கிறேன், இது முக்கியமானது, சரிந்து கொண்டிருக்கிறது....தாலிபன் எழுச்சி, அவர்களுடைய தந்திரோபாயங்களில் கூடுதலான நயத்தையும் சிறப்பையும் கொண்டுள்ளது." இப்பொழுது 60,000 அமெரிக்கப் படைகளும் 32,000 நேட்டோத் துருப்புக்களும் ஆப்கன் நாட்டில் உள்னர்; இன்னும் 8,000 துருப்புகள் போகிற வழியில் உள்ளனர். இன்று நியூ யோர்க் டைம்ஸ், ஆப்கானிஸ்தானில் உள்ள நான்கு வட்டாரத் தளபதிகளும் கடந்த வார இறுதியில் ஒபாமாவின் தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக்கிடம் துருப்பு எண்ணிக்கைகள் "தளபதிகளுக்கு தேவைப்படுவதைவிட மிகக் குறைவாக உள்ளன" என்று தெரிவித்ததாக கூறியுள்ளது. மக்கிறிஸ்டலுக்கு ஆலோசகராக இருக்கும், Center for Strategic and International Studies உடைய Anthony Cordesman, தாலிபனை தோற்கடிக்க இன்னும் ஒன்பது போர் பிரிகேடுகள் அல்லது 60,000 அதிகத் துருப்புக்கள் தேவை என்று, இம்மாத துவக்கத்தில் எழுதினார். அத்தகைய விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்கச் செய்தி ஊடகம் இராணுவத்திற்காக தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறது; போரில் வெற்றி பெறுவதற்கு "தரையில் போதுமான பூட்ஸ்கள் இல்லை" என்ற கவலைகளுக்கு அது குரல் கொடுத்துள்ளது. உதாரணமாக நேற்று தாலிபனுக்கு எதிரான முக்கிய தாக்குதலை இப்பொழுது அமெரிக்க மரைன்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஹெல்மாண்ட் மாநிலத்தில் இருந்து நியூ யோர்க் டைம்ஸ் ஒரு தகவல் கொடுத்துள்ளது. "சில முக்கியமான மக்கள் மையங்கள், கெரில்லா கோட்டைகள் என்று மத்திய தெற்கு ஹெல்மாண்டில் இருக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்திற்கு போதிய துருப்புக்கள் எண்ணிக்கை வலிமை இல்லை. ஆப்கானியர் வாழ்வில் பொருள் செறிந்த பாதுகாப்பை அளிக்கக்கூடிய விதத்தில் பகுதி முழுவதும் அளிக்கப்பட வேண்டிய பணிகளை கொடுப்பதற்கும் போதுமான படைகள் இல்லை; எப்படிப் பார்த்தாலும் அப்பணியை அமெரிக்க தளபதிகள் ஆப்கானிய அரசாங்கம் செய்ய வேண்டும் என விரும்புவர்" என்று கட்டுரை கூறியுள்ளது. அமெரிக்க, நேட்டோ படைகள் கூடுதலாக ஆப்கானிஸ்தானிற்கு வேண்டும் என்ற அழைப்புக்களுக்கு இடையே, ஆப்கானிய எழுச்சியாளர்கள் பாதுகாப்பான புகலிடம் மற்றும் பயிற்சி முகாம்களை கொண்டிருக்கும் தெற்கு, வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடிப் பகுதிகளில் இயக்குவதற்கு ஆயிரக்கணக்கான துருப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்று பாக்கிஸ்தானிய அரசாங்கம் வாஷிங்டனிடம் இருந்து ஆழ்ந்த அழுத்தத்தைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று ஒரு அமெரிக்க பிரிடேட்டர் ட்ரோன் பாக்கிஸ்தானுக்குள் மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது; இது தாலிபனுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடும் சக்தி வாய்ந்த பஷ்டூன் பழங்குடி வலைப்பின்னலின் முக்கியத் தலைவர் சிராஜ் ஹக்கானியை படுகொலை செய்வதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது. இதில் மூன்று மகளிர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் பாக்கிஸ்தான் பழங்குடிப் பகுதிகளில் நடைபெறும் போர் ஆப்கானிய அல்லது பாக்கிஸ்தானிய மக்களுடைய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. அதே போல் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் ஒரு தளமாக மாற்றுவதற்கு உதவி செய்வதற்கு படைகளை அனுப்பியுள்ள நாடுகள் அனைத்திலும் பெரும்பலான மக்களாலும் எதிர்க்கப்படுகிறது. "பயங்கரவாதத்தை நிறுத்துதல்", "ஜனநாயகத்தைக் கொண்டுவருதல்" என்ற பெயரில் இப்புது வகை காலனியப் போரை நியாயப்படுத்தும் நயமற்ற முயற்சிகளான இப்பொய்களை மில்லியன் கணக்கான மக்கள் இனியும் நம்பவில்லை. |