World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US income gap widest since 1917

அமெரிக்க வருமானங்களுக்கு இடையேயான இடைவெளி 1917ல் இருந்து மிக அதிமாக உள்ளது

Bill Van Auken
19 August 2009

Back to screen version

அமெரிக்க நிதிய தன்னலக் குழுவையும் மக்களின் பரந்த பெரும்பான்மையான தொழிலாளர்களையும் பிரிக்கும் சமூக இடைவெளி 1917க்கு பின்னர் காணப்படாத மிகப் பரந்த தன்மையை கொண்டுள்ளது என உள்நாட்டு வருவாய்த் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்மட்ட 10 சதவிகித மக்களுக்கும் கீழேயுள்ள 90 சதவிகிதத்தினருக்கும் இடையே உள்ள வருமான இடைவெளி "1917ல் இருந்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, 1928 இடைவெளியையும் விட அதிமாகி, ஏன் 1920களில் "பெரும் தலைதூக்கிய" பங்குச் சந்தையின் உச்ச நிலையையும் விடக் கடந்து விட்டது" என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுனர் இமானுவல் சாயிஸ் இம்மாதம் முன்னதாக வெளியிட்ட தகவல் பகுப்பாய்வு கூறுகிறது.

"செல்வம் கொழித்தல்--அமெரிக்காவில் உயர்மட்ட வருமானங்களின் வளர்ச்சி" என்ற தலைப்பில் வந்துள்ள சாயிஸின் அறிக்கை சமூக பிரமிட்டின் உச்சியில் செல்வக் குவிப்பு உண்மையில் அதிகரித்துள்ளது --உயர்மட்ட 1 சதவிகிதம், ஆண்டு வருமானங்கள் $400,000 மற்றும் அதற்கும் மேல்-- என்று காட்டியுள்ளது.

IRS வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் 2007ம் ஆண்டை சேர்ந்தவை ஆகும். உயர்மட்ட 10 சதவிகிதத்தினரில் பெரும்பாலானவர்களை (ஆண்டு ஒன்றுக்கு $110,000 அல்லது அதற்கும் கூடுதலாக வருமானம் உள்ள குடும்பங்கள்), பொறுத்தவரையில் வருமான வளர்ச்சி, தேசிய வருமானத்தில் அதல் பங்கில் அதிக மாறுதல் இல்லை என்றும், அதே நேரத்தில் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் வருமானமும் தேசிய வருமானத்தில் பங்கும் 2006ல் 22.8 சதவிகிதம் பெற்றிருந்ததுடன் ஒப்பிடும்பொழுது 23.5 சதவிகிதம் ஆக உயர்ந்துவிட்டது என்று குறிக்கின்றன.

2002க்கும் 2006க்கும் இடையே இந்த சமூக அடுக்கு, 100 அமெரிக்க குடும்பங்களில் ஒன்று என்ற நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வருமான வளர்ச்சியில் 65 சதவிகிதத்தை கொண்டிருந்தது. இப்போக்கு கடந்த தசாப்தத்தில் பெரும்பகுதியில் தொடர்ச்சியாக இருந்தது.

2002 முதல் 2007 வரையிலான காலத்தில், உயர்மட்ட 1 சதவிகிதம் ஆண்டு ஒன்றுக்கு 10 சதவிகித வருமான உயர்வை ஒவ்வொரு ஆண்டும் கண்டது. இதே காலத்தில் கீழேயுள்ள 99 சதவிகிதத்தினர் ஆண்டு ஒன்றுக்கு 1.3 சதவிகித உயர்வைத்தான் கண்டனர்; இது பணவீக்க விகிதத்தைவிட மிகவும் குறைவு ஆகும். இதன் விளைவாக உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் ஆறு ஆண்டு காலத்தில் வருமான வளர்ச்சியில் மூன்றில் இரு பங்கைக் கொண்டனர்.

இன்னும் கூர்மையான கவனக்குவிப்பில் வருமான வேறுபாடுகளை கொண்டு வந்தால், அது அமெரிக்காவில் செல்வக் குவிப்பு பற்றி பெரும் திகைப்பு கொடுக்கும் குறிப்பைக் காட்டுகிறது. மக்கள் தொகையில் உயர்மட்ட 0.1 சதவிகிதத்தினர் (15,000 குடும்பங்களுக்கும் குறைவு), மொத்த வருமானத்தில் அதன் பங்கு 2006ல் 5.46 சதவிகிதம் என்பதில் இருந்து 2007ல் 6.04 சதவிகிதம் என உயர்ந்ததை கண்டது (இது 1979ம் ஆண்டு 0.9 சதவிகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும்). இந்த 2007 புள்ளிவிவரம் மிகக் கீழ்மட்ட 20 சதவிகித்தினரின் சுமார் 30 மில்லியன் குடும்பங்களின் மொத்த வருமானத்தை போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.

"2007ம் ஆண்டு நம்ப முடியாத வகையில் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு சிறந்த ஆண்டாக இருந்தது" என்று சாயிஸ் குறிப்பிடுகிறார்.

1930களின் பெரு மந்தநிலைக்கு பின் மகத்தான சரிவு நடந்த ஆண்டிற்கு இது முந்தைய ஆண்டுதான் என்று குறிப்பிட வேண்டும். இது ஒன்றும் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இச்சிறுபான்மையினரால் இழிந்த முறையில் செல்வம் குவிக்கப்பட்டிருத்தது நாட்டை திவாலாக்குவதில் ஒரு முக்கிய காரணி ஆகும்; உலகம் முழுவதையும் பொருளாதார நெருக்கடி, துன்பம் ஆகியவற்றிலும் இது ஆழ்த்தியது.

2007ல் இருந்து பொருளாதாரக் காட்சியில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பேராசிரியர் சாயிஸ் சுட்டிக் காட்டி பலருக்கும் உண்மை வருமானம் வீழ்ச்சியுற்றது என்றும் கூறியுள்ளார். முந்தைய மந்தநிலைமைகளில் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் வருமானப் பங்கு, வணிக இலாபங்கள், மூலதன ஆதாயங்கள், பங்கு விருப்பங்ளில் திரும்பக் கிடைப்பவை சராசரி வருமானத்தைவிட அதிகமாக சரியும் போக்கை கொண்டிருந்ததன் காரணமாக வீழ்ச்சியடைய இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்க வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், மந்த நிலையினால் வருமான குவிப்புக்களில் சரிவுகள் என்பது தற்காலிமானது; நிதியக் கட்டுப்பாடு அல்லது குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்ற வகையில் வரிவிதிப்பு செயல்படுத்தப்பட்டு வருமானக் குவிப்பு வராமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் ஒழிய இந்த நிலைதான் இருக்கும்" என்று சாயிஸ் எழுதியுள்ளார்.

ஆனால் தற்போதைய நெருக்கடி மற்றும் ஒரு மந்த நிலை மட்டும் அல்ல. மாறாக இது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் இறுதிச் சரிவை அடையாளம் காட்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் இல்லாமல், அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் ஆளும் உயரடுக்கு நெருக்கடியை தீர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் வருமானம், சமூக நிலைகள் ஆகியவற்றை கடுமையாக குறைப்பதின் மூலம் முயல்கிறது; அதைத் தொடர்ந்து அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களும் இராணுவ தாக்குதலுக்கு திருப்பமும் ஏற்படுகின்றன.

இந்த உலகளாவிய வழிவகையின் பகுதியாக, அமெரிக்காவில் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஏற்கனவே கடுமையான தாக்குதல்களை அனுபவித்துவிட்டது. 30 மில்லியன் பேர் கிட்டத்தட்ட வேலையிழந்துள்ளனர் அல்லது வேறுவழியின்றி பகுதி நேர வேலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; அதேவேளை, ஊதியக் குறைப்பு எங்கும் படர்ந்துள்ளது.

ஆனால் சமூக முப்பட்டைக் கண்ணாடியின் மறு புறத்தில் செல்வக் கொழிப்பு குறைவின்றித் தொடர்கிறது. அமெரிக்காவின் உயர்மட்ட 10 CEO க்கள் வீட்டிற்கு கடந்த ஆண்டு மொத்த ஊதிய, படித் தொகைகளாக $100 மில்லியனுக்கும் மேல் எடுத்துச் சென்றனர் என்று சுயாதீன ஆய்வுக் குழு அறிக்கை ஒன்று தகவல் கொடுத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு மூன்று பேர்தான் அவ்வளவு பெரிய தொகையைப் பெற்றனர் என்பதுடன் இது ஒப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் மேலிடத்தை பெறுபவர் (இதில் ஏழு பெரிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் அடங்குவர்), தனியார் பங்குகள் நிறுவனமான Blackstone Group LP இன் Stephen Schwarzman உள்ளார்; இவர் $702.4 மில்லியனை பெற்றார் --கிட்டத்தட்ட நாளொன்றிற்கு $2 மில்லியன் வீதம்.

இதற்கிடையில் வோல் ஸ்ட்ரீட் ஆண்டு போனஸிற்காக பல பில்லியன்களை ஒதுக்கி வைத்துள்ளது; வங்கியாளர்களுக்கும், நிதிய வணிகர்களுக்கும் இதுகாறும் இல்லாத அளவு செல்வக் கொழிப்பு உடைய ஆண்டாக 2009 ம் ஆண்டு இருப்பதற்கு இது வழிவகுக்கின்றது.

செல்வக் குவிப்பு மற்றும் சமூக துருவமுனைப்படலை குறைக்கும் வகையில் சாயிஸ் ஆலோசனை கூறும் நிதியக் கட்டுப்பாட்டு வகைகளை சுமத்தவோ, வரிகளை அதிகரிக்கவோ ஒபாமா நிர்வாகம் எவ்வித விருப்பமும் கொண்டிருக்கவில்லை. மாறாக, அதன் கொள்கைகள் அனைத்தும் வங்கிகளையும், நிதிய உயரடுக்கையும் பிணை எடுப்பதற்குத்தான் இயக்கப்படுகின்றன; அதே நேரத்தில் தொழிலாளர்கள் கடுமையான ஊதிய, நலன் குறைப்புக்களை ஏற்க வேண்டும், வேலை இழப்புக்கள் மற்றும் தொடர்ந்த சீர்திருத்த-எதிர்ப்பு நடவடிக்கைளையும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை சமூக திட்டங்களில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஊதியம் மற்றும் பிற நலன்கள் பற்றிய விவாதத்தைப் பற்றி கடந்த வாரம் குறிப்பிடுகையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் பொருளாதாரத்தை வங்கிகள் சூறையாடுவதை காக்கும் விதத்தில் செய்தி ஊடகத்திடம் கூறினார்: "பொதுமக்களுடைய நல்லெண்ணத்தை பாதிக்காதவகையில் அமெரிக்க மக்கள் சிலர் பெரும் ஊதியங்கள் ஈட்டுவதைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்" என்றார்.

நிதியப் பிரபுத்துவத்தின் செல்வத்தை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கு ஒரே மாற்று வழி சோசலிசம்தான். இதற்கு, ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளுவதுடன், வோல் ஸ்ட்ரீட் நிதிய ஒட்டுண்ணிகள் சமூகத்தின் மீது மேலாதிக்கம் செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வெகுஜன அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியமைப்பது தேவையாகும்

வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் தனியார் கைகளில் இருந்து அகற்றப்பட்டு உழைக்கும் மக்களின் பொது உடைமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். CEO க்கள் மற்றும் நிதிய ஊக வணிகத்தினர் குவித்துள்ள பரந்த செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு, வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள் மற்றும் முக்கிய சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.

வருமானத்தில் துருவமுனைப்படலுக்கு திரும்பும் நிலை 1917ம் ஆண்டு தரத்திற்கு வந்துள்ளது ஆழ்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அந்த ஆண்டுதான் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்தது; அது உலகில் முதல் தடவையாக தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி சமூகத்தை உலகளாவிய அடிப்படையில் சோசலிச அஸ்திவாரத்தில் கொண்டுவரும் பணியைத் ஆரம்பித்தது. இப்பொழுது அமெரிக்க சமூகத்தை ஆதிக்கம் செலுத்தும், உண்மையில் உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் சமூகப் பிளவானது, வர்க்கப் போராட்டம் மற்றும் ஒரு புதிய சமூகப் புரட்சிக் காலம் வெடிப்புத்தன்மையுடன் எழுச்சியுறுவதை உருவாக்காமல் தொடர முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved