World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Afghanistan's gunpoint election

ஆப்கானிஸ்தானின் துப்பாக்கி முனை தேர்தல்

James Cogan
20 August 2009

Back to screen version

எப்படிப் பார்த்தாலும், ஆப்கானிஸ்தானில் இன்று நடக்கும் தேர்தல் ஒரு அத்துமீறல் ஆகும். மனித உரிமைகள் புறக்கணிக்கப்படுதல், ஊழல் மலிந்தது, மற்றும் பெரும்பாலான மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியுற்ற ஒரு இழிந்த கைப்பாவை அரசாங்கம் தொடர்ந்து வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பு முண்டு கொடுத்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடக்கிறது.

2002ல் அமெரிக்காவால் பதவியில் இருத்தப்பட்ட, இப்பொழுது இருக்கும் ஜனாதிபதியும் முக்கிய வேட்பாளருமான ஹமித் கர்சாய், ஆப்கானிய மக்களால் பரந்த அளவில் வெறுக்கப்படுபவர். அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எவரும் முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டனர்; மக்களின் பெரும்பாலானவர்கள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர் என்று இருந்த போதிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. குறிப்பாக தெற்கு பஷ்டூன் பகுதியில் தாலிபன் செல்வாக்கு வலுவாக இருக்கும் இடங்களில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு அதிகம் ஆகும். கர்சாயுடைய முக்கிய போட்டியாளரும் முன்னாள் வெளியுறவு மந்திரியுமான அப்துல்லா அப்துல்லா முன்பு அமெரிக்கா தாலிபனை வீழ்த்த உதவிய வடக்கு கூட்டணியின் குடிப்படைகளுக்கான செய்தித் தொடர்பாளராக இருந்தார்.

அமெரிக்க, நேட்டோ துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாலிபனும் அதன் நட்பு அமைப்புக்களும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் நிறைய இடங்களில் ஆதிக்கம் கொண்டுள்ளன; அவை தேர்தல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. நாட்டில் குறைந்தது 60 சதவிகிதப் பகுதியிலேனும் வாக்குச் சாவடிகள் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. 7,000 வாக்குச் சாவடிகளில் 440ல் பாதுகாப்பு இல்லாததால் திறக்கப்படவே முடியாது. பாதுகாப்பாக வாக்களிக்க 100,000 வெளிநாட்டுத் துருப்புக்களும் 180,000 ஆப்கானிய இராணுவத்தினர் மற்றும் போலீசாரும் உள்ளனர்.

தாலிபானும், Gulbuddin Hekmatyar உடைய Hezb-e-Islami இயக்கம் போன்ற மற்ற எழுச்சிக் குழுக்களும் அமெரிக்க, நேட்டோ துருப்புக்களை நாட்டில் இருந்து விரட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன; அமெரிக்க சார்புடைய அரசாங்கத்தை அகற்றவும் முயல்கின்றன. அனைத்து முக்கிய ஜனாதிபதி பதவி வேட்பாளர்களும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை உறுதிமொழியாகக் கொடுத்துள்ளனர்; கிளர்ச்சியாளர்களுடன் அதிகாரப் பகிர்விற்கும் தயாராக உள்ளனர்; ஆனால் அவற்றின் ஆதரவு பெருகுகையில் தாலிபனும் ஹெக்மாத்யாரும் தாங்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கும் வரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்று கூறிவிட்டன.

தங்கள் செல்வாக்கை நிரூபிக்க கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் அதிகமான தாக்குதல்களை ஆக்கிரமிப்பின் நாடி நரம்புகள் துடிக்கும் இடங்களில் செலுத்தியுள்ளனர். காபூலில் உள்ள நேட்டோ தலைமையகம் மற்றும் அருகில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவை ஆகஸ்ட் 15ம் தேதி மாபெரும் வாகன வெடிகுண்டு மூலம் இலக்கு வைக்கப்பட்டன. செவ்வாயன்று தாலிபன் போராளிகள் நகரத்தின் இதயத்தானத்தில் இருக்கும், பெரும் பாதுகாப்புடைய ஜனாதிபதி அரண்மனை திடலில் மோட்டார் குண்டுகளை போடும் தூரத்திற்கு நிலைகொள்ள தக்கதாக இருந்தனர்.

அமெரிக்க, மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்கள், தேர்தல் வேட்பாளர்கள், அரசாங்க அதிகாரிகள் அனைவர் மீதும் கணக்கிலடங்கா மற்ற தாக்குதல்களும் இந்த மாதம் நடந்துள்ளன; இதில் தாலிபன் எழுச்சி முன்பு இல்லை என்று நம்பப்பட்ட நாட்டின் வடக்கு மாகாணங்களும் அடங்கும். அமெரிக்க/நேட்டோ இறப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே 50 ஐ எட்டிவிட்டது; ஜூலை மாதம் போரிலேயே அதிக எண்ணிக்கையான 75க்கு அடுத்தாற்போல் இது உள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 150 அரசாங்கத் துருப்புக்களும் போலீசாரும் கொல்லப்படுகின்றனர்; ஆனால் உத்தியோகபூர்வ எண்ணிக்கை அபூர்வமாகத்தான் வெளியிடப்படுகிறது.

வாக்குப் பதிவு தெற்கிலும் கிழக்கிலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உருஸ்கன் மாநிலத்தின் ஒரு ஆப்கான் நீதிபதி McClatchy News இடம் கூறினார்: "மக்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க முடியும். 80 சதவிகித மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இது எப்படி ஒரு வெளிப்படையான தேர்தல் எனக் கூறப்பட முடியும்?'

அமெரிக்கா ஐயத்திற்கு இடமின்றி தாலிபன் வன்முறையைக் குற்றம் சாட்டும் என்றாலும், பொறுப்பற்ற முறையில் எட்டு ஆண்டுகளாக நடைபெறும் வான்வழித் தாக்குதல், தரைமூலம் தாக்குதல், ஆயிரக்கணக்கான ஒருதலைப்பட்ச தடுப்புக்காவல்கள் ஆகியவை மக்களிடையே, ஆக்கிரமிப்பிற்கும் அதன் ஆப்கானிய ஒத்துழைப்பாளர்களுக்கும் எதிராக ஆழ்ந்த விரோதப் போக்கைத் தோற்றுவித்துள்ளன.

அமெரிக்கப் படையெடுப்பானது 1996ல் ஆட்சியில் இருந்து தலிபான்களால் தூக்கி எறியப்பட்ட, இனக்குழு அடிப்படையிலான யுத்தபிரபுக்களின் ஒன்று கூடலை --வடக்கு கூட்டணியை-- அடிப்படையில் மீண்டும் பதவியில் இருத்தியுள்ளது. ஒரு சில புதிய முகங்கள், பல மில்லியன் டாலர் "மறு சீரமைப்பு", "உதவி" திட்டங்களில் இருந்து இலாபம் ஈட்ட அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து திருப்பி வந்துள்ள வணிகர்களின் கூட்டம் ஆகும்.

மத்திய, வடக்கு மாகாணங்களான தாஜிக், உஸ்பெக் மற்றும் ஹஜாரியில் யுத்தப்பிரபுக்கள் விளைவைக் கட்டுப்படுத்துவர். கர்சாய் முக்கிய ஆதாயம் பெறுபவராகக் கருதப்படுகிறார். அவருடைய இரு துணை ஜனாதிபதி பதவிகளுக்கான வேட்பாளர்களும் மற்ற ஆதரவாளர்களும் முக்கிய வடக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஆவர்; இவர் தெற்கில் இருக்கும் பல தாலிபன் எதிர்ப்பு பஷ்டூன் அதிகாரபேரம் செய்பவர்களால் ஆதரிக்கப்படுகிறார்; இதில் காந்தகார் மாநிலத்தில் இருந்து அபின், ஹெராயின் ஆகியவற்றை பெருமளவு கடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள, இவருடைய சகோதரர் அஹ்மத் வாலி கர்சாயும் அடக்கம்.

ஒபாமா நிர்வாகம் கூட விளைவு மொத்தமான வாக்குப் பதிவு மோசடியால் கறைபடும் என்று ஒப்புக் கொள்ளுகிறது; இது கர்சாயினால் நிமயமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளால் முக்கியமாக நடத்தப்படும். மொத்த எண்ணிக்கை 17 மில்லியனில் குறைந்தது 3 மில்லியன் இரட்டை அல்லது மோசடி வாக்காளர் பதிவு அட்டை சுற்றில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வாரம் அதன் இரகசியச் செய்தியாளர்கள் 1,000 அட்டைகளை --ஒன்று $10 விலைக்கு-- காபூல் தெருக்களில் வாங்குவதில் சிரமம் ஏதும் இல்லை என்று கூறியதாக பிபிசி செய்தியை வெளியிட்டுள்ளது.

கர்சாய் நேரடியாக வெற்றிபெறாவிட்டால், அவர் இரண்டாம் முறை இரண்டாம் அதிக வாக்கு பெற்றவருடன் போட்டியிடும் கட்டாயத்திற்கு உட்படுவார். அமெரிக்காவின் International Republican Institute நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி கர்சாய் 44 சதவிகித வாக்குகளையும் அவருடைய மிக நெருக்கமான போட்டியாளர் அப்துல்லா, சதவிகிதம் வாக்கைப் பெறுவார் என்றும் தெரிகிறது. இரு மற்ற முக்கிய வேட்பாளர்களான அசரப் கானியும் ரமாஜான் பஷர்தோஸ்த்தும் தலா 10 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறுவர்.

வாக்களிப்பின் மோசடித்தன்மை ஒபாமா நிர்வாகத்தின் வெளிப்படை திரித்தல் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பற்கு விசுவாசமாக உழைத்திருந்தாலும், கர்சாய் அமெரிக்காவிடம் இருந்து அவருடைய நிர்வாகத்தின் ஊழல், மக்களிடையே ஆதரவு இன்மை ஆகியவற்றுக்காக பெருகிய முறையில் குறைகூறலை எதிர்கொண்டுள்ளார். வாஷிங்டன் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டாலும், அமெரிக்க தூதர் கார்ல் எய்க்கன்பெரி இந்த ஆண்டு ஆரம்பத்தில் கர்சாயியுடைய முக்கிய போட்டியாளர்களுடன் பகிரங்கமாகத் தோன்றியிருந்தார்.

வெள்ளை மாளிகை கர்சாயிடம் அது கொண்டுள்ள அதிருப்தியை காட்டும் விதத்தில், ஆப்கானிஸ்தானிற்கு கடந்த சனிக்கிழமை உஸ்பெக் இனக்குழு செல்வாக்குடைய அப்துல் ரஷிட் தோஸ்டம் திரும்பி வந்ததை பகிரங்கமாக கண்டித்தது; அவர் தாலிபனுக்கு முந்தைய காலத்தில் மிருகத்தனமாக செயல்பட்ட யுத்தப்பிரபுக்களில் ஒருவர் ஆவார் மற்றும் 2001ல் அமெரிக்க படையெடுப்பின்போது அமெரிக்காவின் நெருக்கமான நண்பராக இருந்தவருமாவார். கடந்த ஆண்டு, ஒரு அரசியல் எதிரியை கொலை செய்த பின்னர் அவர் துருக்கிக்கு தானாகவே சென்றதுபோன்று குடிபெயருமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்; ஏனெனில் கர்சாயின் அழைப்பை ஏற்று திருப்பிய அவர் உடனடியாக பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க தூதரகம், தோஸ்டம் "மகத்தான மனித உரிமை மீறல்களில் தொடர்பு பற்றி வினாக்களை" எதிர்கொள்கிறார் என்ற பாசாங்குத்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இக்குற்றச் சாட்டு 1990 களில் அவருடைய போர்க்குற்றங்களுக்கு என்று இல்லாமல், 2001ல் குண்டுஸ் பகுதியில் அவருடைய வடக்கு உடன்பாட்டு வீரர்கள் கைப்பற்றிய ஏராளமான தாலிபன் கைதிகளைக் கொன்றதற்கு ஆகும். CIA முகவர்கள், அமெரிக்க சிறப்பு படைகள் இதே போன்ற படுகொலையை Mazar-i-Sharif ல் செய்ததில் தொடர்பு பற்றி குறிப்பு ஏதும் வரவில்லை. (See: "A cover-up of US massacre at Mazar-i-Sharif")

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கார்சாய் முதல் சுற்றில் நேரடியாக வெற்றிபெறுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது போல் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதர் மார்க் செட்வெல், ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் செவ்வாய் இரவு இரண்டாம் சுற்று வாக்களிப்பு "வழிவகை, உண்மை என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த உதவும்" என்று கூறினார்.

கர்சாய் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவருடைய நிலைமை தக்க பாதுகாப்புடன் இருக்காது. அமெரிக்க இராணுவத் தளபதிகளுக்கு முக்கிய ஆலோசகராக இருக்கும் டேவிட் கில்குல்லன் இம்மாதத்தில் முன்னதாக கர்சாயை கடுமையான மொழிகளில் விவரித்து, 1963ல் கென்னடி நிர்வாகம் படுகொலை செய்த தெற்கு வியட்நாமின் ஜனாதிபதியான என்கோ டின் டியத்துடன் தீய முறையில் ஒப்பிட்டார்.

வாஷிங்டன் தற்பொழுது ஜனாதிபதியின் பல அதிகாரங்களை நீக்குவதற்கான திட்டத்தை அமைதியாக செயல்படுத்துகிறது; அதற்காக தேர்ந்தெடுக்கப்படாத "தலைமை நிர்வாக அதிகாரி" என்னும் ஒருவர் பதவியில் இருத்தப்பட்டு ஆப்கானிய அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்கக்கூடும். இதற்கான வேட்பாளர்களில் ஒருவர் Ashraf Ghani ஆவார்; அவர் Brookings Institute, உலக வங்கி, ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுகளில் செயலாற்றியுள்ளார்.

தேர்தல் முடிந்துவிட்டது என்றால், ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் போரை பெரிதும் விரிவாக்கும் திட்டத்தை செயல்படுத்தும். பல்லாயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்கத் துருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மற்றும் அமெரிக்கத் தளபதிகள் இந்தப் புது வகை காலனித்துவ போரில் கொல்லுவதற்கும் கொல்லப்படுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved