World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Economic nationalism on the rise in Europe

ஐரோப்பாவில் பொருளாதார தேசியவாதத்தின் எழுச்சி

Stefan Steinberg
15 August 2009

Back to screen version

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளேயே பொருளாதார முறுகல்நிலையானது, அடுத்த மாதம் பென்சில்வானியா பிட்ஸ்பர்க்கில் நடக்க இருக்கும் G20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே தீவிரமடைந்து வருகின்றன. முக்கிய ஐரோப்பிய நாடுகள் நிதிய நெருக்கடிக்கு பாதுகாப்புவாத வணிகக் கொள்கைகள் மற்றும் தேசிய தீவிர நாட்டுவெறி வேண்டுகோள் ஆகியவற்றால் விடையளித்துக் கொண்டுவருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சர்களின் ஒவ்வொரு சர்வதேசக் கூட்டத்திலும் அவர்களின் நாட்டுக்குச் சொந்தமான தொழிற்துறைகள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக தேசிய பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதை கைவிடுவதாக அனைத்து நாடுகளிலிருந்தும் பங்கெடுத்துக் கொள்பவர்களும் வாக்குறுதிகளைக் கொடுப்பதை முதன்மைப்படுத்தி செய்திருந்தன. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் லண்டனில் நடைபெற்ற கடைசி G20 உச்சிமகாநாடும், பாதுகாப்புவாத முறையையும் மற்றும் நிதியச் சந்தைகளை கண்காணிக்க புதிய சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்காகவும் போராட அனைத்து தேசங்களும் தீர்மானிப்பதாக அறிவிப்புச் செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.

லண்டன் உச்சிமகாநாட்டிற்குப் பின்னர் என்ன நடந்தது, அனைவரும் அவரவர் விருப்பப்படி செய்யலாம் என்பதுதான் ஒரு நடைமுறை மெய்பாடாக இருக்கிறது, தனிபட்ட நாடுகள்-- அவ்வப்போது அண்டைய நாடுகளுடன் ஒரு முகாமாகச் சேர்ந்து, அவர்களுடைய சொந்த உள்நாட்டு வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேசியவாத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தன.

புள்ளி விவரங்கள் இதைத் தெளிவாக்குகின்றன. உலக வர்த்தக அமைப்பினுடைய (WTO) கருத்தின்படி,தேவைக்கு அதிகமான பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு (Dumping) எதிராகவும் 2008லும் 2009ன் முதல் பகுதியிலும் திடீரென அதிகரித்த பிற பாதுகாப்பாளர் நடவடிக்கைகளுக்கு (போட்டியிடும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து உள்நாட்டு தொழில்களை பாதுகாத்தல் உட்பட பல) எதிராகவும் தேசிய அரசாங்கங்களால் பல புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கும் முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வேகமாக அதிகரித்துக்கொண்டிருகின்றன. இந்த வார ஆரம்பத்தில் ஒரு ஜேர்மனிய கபினெட் மந்திரி, அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட ஒரு சட்டப்பிரிவாக இருக்கும் "அமெரிக்கப் பொருளை வாங்குக" என்பதைக் குறைகூறினார். "பெரும் தொழில்துறை நாடுகள் ஒரு நல்ல முன்னுதாரணத்தை நிறுவ வேண்டும் அத்தோடு; வணிகத்திற்கு புதிய தடைகளை ஏற்படுத்துதலை விலக்கிக்கொள்ள வேண்டும்" என்றும் ஜேர்மனிய பொருளாதார மந்திரியான Karl-Theodor zu Guttenberg ஜேர்மனியின் முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் சார்பாகக் கருத்துத் தெரிவித்தார்.

வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள் பற்றியும் முறுகல்நிலைகள் அதிகரித்துள்ளன. நிதி நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து, குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்சின் அரசாங்கங்கள், உலகின் நிதியச் சந்தைகளில் ஆங்கிலோ-அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக கூட்டாக பிரச்சாரத்தை நடத்திவருகின்றன.

செவ்வாயன்று, ஜேர்மனிய துணை அதிபரும் SPD உடைய தலைவருமான Frank-Walter Steinmeier, நிதிய நிறுவனங்களின் மைய நகரமாகிய லண்டனுக்கு (The City of London) எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அந்த நகர நிதிய நிறுவன வணிகர்கள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை சுமத்துமாறும் கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை எச்சரித்தார். ஜேர்மனிய அரசாங்கம் பிட்ஸ்பேர்க்கில் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும் Steinmeier தெளிவுபடுத்தினார்.

பிரெஞ்சு அரசாங்கமும் இந்தச் சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளது. Steinmeier இன் கருத்துக்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரெஞ்சு நிதி மந்திரி Christian Lagarde , பிரெஞ்சு வங்கியான BNP Paribas வின் ஒரு அவதூற்று சூழலை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்--அதாவது அந்த வங்கி அதனுடைய மேல்மட்ட ஊழியர்களுக்கு மில்லியன் யூரோக்களுக்கும் மேலாக போனஸாக கொடுக்க இருக்கிறது--இவை சர்வதேச வங்கிகளின் குற்றச்சாட்டிற்கும் உட்பட்டுள்ளது.

BNP Paribas அதன் நிர்வாகிகளுக்கு உயர்ந்த போனஸைக் கொடுக்கும் கட்டாயம் இருப்பதற்குக் காரணம் சர்வதேசக் கட்டுப்பாடுகள் இல்லாததுதான் என்று Lagarde அறிவித்தார் . "ஆனால் நான் பெரும் அவதூறாகக் கருதுவது" சில வெளிநாட்டு வங்கிகள் G20 கொள்கைகளைக் கைவிட்டு, ஒரு போட்டியான அனுகூலத்தினால் இலாபமடைகின்றன, உதாரணமாக உத்தரவாதமுள்ள போனஸை வழங்குகின்றன." என்று Lagarde, Le Monde பத்திரிகைக்கு தெரிவித்தார். இவர் குறிப்பிடும் "சில வெளிநாட்டு வங்கிகள்" என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதலாவதாக இருக்கின்ற முக்கிய அமெரிக்க வங்கிகளான கோல்ட்மன் சாஷ்ஸ், JP Morgan Chase போன்றவை ஆகும், அவைகள் சமீப வாரங்களில் மிகப்பெரியளவில் போனசை அளித்துள்ளன. Lagarde இப்பிரச்சினையை பிட்ஸ்பேர்க்கில் எழுப்ப இருப்பதாக Le Monde இடம் தெரிவித்தார்.

"ஆங்கிலோ-சாக்ஸன் மாதிரியில் உள்ள மிகையான விஷயங்கள்" என்று பிரான்சும் ஜேர்மனியும் கூறும் அனைத்து குறைகூறலும், பாரிஸ் மற்றும் பேர்லின் இரண்டும் ஒழுங்குபடுத்தப்படும் உலக நிதிய ஒழுங்கில் தலைமைப் பங்கைப் பெறுவதற்கான சூழ்நிலையைத் உருவாக்கும் நோக்கத்தைக் இலக்காகக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி நிதிய நெருக்கடி லண்டன் நிதிய நகரத்தை வலுவிழக்கச் செய்துள்ளது என்றும், "பாரிசில் உள்ள நிதிய நகரான La Defence அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள இருக்கிறது" என்றும் அறிவித்தார்.

தன்னுடைய பங்கிற்கு கன்சர்வேடிவ் கட்சி லண்டன் மேயரான போரிஸ் ஜோன்சன் ஆங்கிலோ-அமெரிக்க நிதிய நலன்களை உறுதியாக பாதுகாக்க இருப்பதாக தெளிவுபடுத்தினார்--குறிப்பாக The hedge fund industry. ஜூலை மாதம் லண்டனில் ஒரு வணிக கருத்தரங்கில் ஜோன்சன் கூறினார்: "ஐரோப்பிய ஒன்றியத்தை (அதாவது பிரான்ஸ், ஜேர்மனி), லண்டன் நிதிய நகரத்தின் மாற்று முதலீட்டு நிதியங்களைத் தாக்குவதற்கு அனுமதிப்பது முற்றிலும் கிறுக்குத்தனமாகும்...Hedge funds பாரிஸுக்கோ பிராங்க்போர்ட்டுக்கோ செல்லாது, அவை நியூயோர்க் அல்லது ஷாங்காய்க்குத்தான் செல்லும். லண்டனுக்கு எது நல்லதோ, அது இங்கிலாந்திற்கும் நல்லது மேலும் லண்டனுக்கு எது நல்லதோ அது ஐரோப்பாவிற்கும் நல்லது."

ஐரோப்பாவிலிருக்கும் சமூக ஜனநாயகத்தினாலும் பெயரளவில் மட்டுமிருக்கும் கம்யூனிச அமைப்புக்களாலும் அவற்றோடு கூட்டாக வேலைசெய்யும் தொழிற்சங்கங்களிலாலுமேயே பாதுகாப்புவாதமும் மற்றும் தேசியவாதமும் பெரும்கேடு விளைவிக்கும்முறையில் வெடித்து எழ பங்காற்றுகின்றன. இக்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அதையொட்டி ஏராளமான குட்டி முதலாளித்துவ "இடது" அமைப்புக்களின் பின்புல ஆதரவைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதார ஊக்கப் பொதி இந்த ஆண்டு ஆரம்பத்தில் வந்தபோது "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்ற உரத்த குரலில் கூறியவர்களுடன்தான் இருந்தனர். அமெரிக்க கார்த்தொழில் மற்றும் எஃகுத் தொழில் தொழிற்சங்கங்கள் அமெரிக்க சந்தைக்குள் சீனப் பொருட்கள் வருவதைத் தடுக்க புதிய காப்பு வரி நடவடிக்கைகள் வேண்டும் என்று மிகக் கடுமையாக வாதிட்டனர்.

ஜேர்மனியில் பெரும் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியான SPD இப்பொழுது அதனுடைய சொந்த தேசிய "ஜேர்மனிய திட்டத்தை" ஜேர்மனிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களுக்காக வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் வரவிருக்கும் தேசிய தேர்தல்களுக்கு முன்னர் அதன் கன்சர்வேடிவ் பங்காளிகளையும் விடக் கூடுதலாகக் கூற வேண்டும் என்ற முறையில் SPD இன் தேர்தல் அறிக்கை குறைந்த பட்சம் 146 தடவை "ஜேர்மனி" என்ற சொல்லைக் குறித்துள்ளது.

பிரதான சக்திகளுக்கு இடையே வணிக முரண்பாடுகள் தீவிரமாகையில், ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் முற்றிலுமான துரோகப் பங்கை, நிதிய மூலதனப் பிரிவுகளுடன் சேர்ந்து செயல்படும் விதத்தில் கொண்டுள்ளன. அவையோ அந்தந்த தேசிய தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கு முன்னேற சிறந்த வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. உதாரணமாக, GM-Opel கார் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய தற்போதைய பிரச்சனையில் ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் ஜேர்மனியை தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை இழப்புக்களை செய்வோம் என உறுதியாகக் கூறுபவர்களுக்குத்தான் ஆதரவைக் கொடுக்கின்றன.

அவர்களுடைய பங்கிற்கு பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் ஜேர்மனியில் அதிக வேலைகளைத் தகர்க்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் அவற்றின் தேசியவெறிப் பிரச்சாரத்திற்கு தொழிற் கட்சியின் முழு ஆதரவையும் கொண்டுள்ளன.

கட்டிட தொழிற்சங்கங்கள், "பிரிட்டிஷ் வேலைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே" என்ற கோரிக்கையை கொண்டிருந்த விளம்பர அட்டைகளை சுமந்தவண்ணம் தேசியவெறி வேலைநிறுத்தங்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்த்துகல் மற்றும் இத்தாலிய தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தியபோது, பிரிட்டின் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இரு ஆண்டுகளுக்கு முன்பு தானே இதே கோஷத்தை எழுப்பியதை நியாயப்படுத்தினார்.

வடிவம் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் இவ்வாறுதான் உள்ளது. நிதிய நெருக்கடியை தொடர்ந்து, தேசிய அரசாங்கங்கள் அவர்களுடைய நாடுகளை தளமாகக் கொண்ட சர்வதேச வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆணைக்கு ஏற்ப பாதுகாப்பு கொள்கையை செயல்படுத்த விரைகின்றன. முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களையும் வங்கியாளர்கள் மற்றும் CEO க்களுடைய செல்வங்களையும் பாதுகாத்தல் என்பதுதான் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களின் ஒரே குறியான இலக்காக உள்ளது. உள்நாட்டுக் கொள்கையின் ஒவ்வொரு கூறுபாடும் இந்த இலக்கிற்கு கீழ்ப்படுத்தி வைக்கப்படுகிறது.

தொழிலாளர்களினதும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்தினதும் தேசியவாதத்தின் தவிர்க்க முடியாத விளைவு, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமாவதைத்தான் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பாவிற்குள் பாதுகாப்புவாதம் மீண்டும் புத்துயிர் பெறுதல் என்பது கண்டத்தையே சிதைக்கும் அச்சுறுத்தலாய் அமைகின்ற பிரிவினை சக்திகளுக்கு வலுவூட்டுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதிக்குத்தான் பிரத்தியேகமானது எனப் பலர் நினைத்த வணிக யுத்தம், காலனித்துவ யுத்தம் மற்றும் "அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக ஆக்குக" என்னும் பொருளாதார தேசியமானது அரசியல் இயல்நிகழ்வாக மறுபடியும் எழுச்சி பெற்றுள்ளதானது முதலாளித்துவ முறையின் நெருக்கடி மற்றும் அழிவின் உறுதியான அடையாளமாகும். இந்த நெருக்கடிக்கு தேசியத் தீர்வு என்பது கிடையாது. இந்த தீவிர தேசிய நாட்டுவெறி, போர் மற்றும் ஐரோப்பாவிலுள்ள பெரும் வறுமை ஆகிய வளர்ந்துவருகின்ற ஆபத்துகளுக்கு ஒரே மாற்றீடு, உலக சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தின் பாகமாகவுள்ள ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுளை அமைப்பதற்கு ஒரு தொழிலாள வர்க்க புரட்சிகர போராட்டத்தின் மூலம் சமூகத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved