World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குObama's Abu Ghraib solution அபு கிரைப்பிற்கான ஒபாமாவின் தீர்வு Bill Van Auken 2004 வசந்த காலத்தில் முழு உலகமும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கச் சிறையான அபு கிரைப்பிலிருந்து வெளிவந்த புகைப்படங்களை பீதியுடனும் பெரும் வெறுப்புடனும் கண்டு திகைத்து நின்றது. முகமூடி அணியப்பெற்று தன் கைகளில் எலெக்ட்ரோட் வயர்கள் பிணைக்கப்பட்டு ஒரு பெட்டியில் நிற்கும் பீதியில் உறைந்த ஈராக்கிய கைதி ஒருவரின் படம் இருந்தது. மேலும் பலர் அடிக்கப்படுதல், நாய்களால் தாக்கப்படுதல், சவுக்குகளால் இழுக்கப்படுதல், "மன அழுத்தம் தரும் நிலையில்" சங்கிலிககளால் பிணைக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் அவமானம் இழைப்பதற்காக பலரையும் நிர்வாணமாக ஒருவர் மீது ஒருவர் குவித்து வைத்தல் போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன. ஒரு கொலை செய்யப்பட்ட கைதியின் பிணத்திற்கு அருகே கட்டைவிரலை உயர்த்தி வெற்றியை புன்னகையுடன் காட்டும் அமெரிக்க துருப்புகளின் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் காலனித்துவ வகைப் போரை நடத்தியதைக்காட்ட இப்படங்கள் அனைத்தும் அதை அம்பலப்படுத்த உதவின. இந்த மிகக்கொடுசெயல்கள் ஈராக்கில் இருந்த மூத்த தளபதிகளால் ஊக்கம் கொடுக்கப்பட்டு, பாராட்டப்பட்டன என்பது மட்டுமின்றி சித்திரவதை வழிவகைகள் பென்டகனாலும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களாலும் இயற்றப்பட்டவை, வெள்ளை மாளிகையே சித்திரவதைப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்தது என்பற்கான சாட்சியங்கள் பெருமளவில் உள்ளன. புஷ் நிர்வாகத்தையும் அதன் முக்கிய நபர்களையும் அவர்களின் குற்றங்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றும் வகையில், ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடகத்தின் ஒத்துழைப்புடன் புஷ்ஷின் வெள்ளை மாளிகையும் பென்டகனும் போலிக்காரணத்தை தீட்டின. அபு கிரைப்பின் கொடூரங்களை "சில ஏமாற்றுத்தன" பிரிவினரதும், "ஒரு சில ஒழுங்கங்கெட்ட நபர்களின்" வேலை என்றும் இந்த செயற்பாடுகள் ஈராக் ஆக்கிரமிப்பை எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை, அதேபோல் சட்டபூர்வக் காவல், விசாரணைமுறை பற்றி எதிர்மறையாகவும் பிரதிபலிக்கவில்லை." என்று அவர்கள் இதை முன்வைத்தார்கள். இறுதியில் ஒரு சில இளநிலை இராணுவ அதிகாரிகள் மற்றும் பின்னர் வேலையில் ஈடுபட காத்திருக்கும் அதிகாரிகள் (Reservists), எந்தவித சந்தேகமின்றி அவர்களுடைய மிருகத்தனமான செயல்களுக்கு தண்டனை பெறத்தக்கவர்கள் என வழக்குக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் சித்திரவதை செய்யப்படுவதற்கும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்படுவதற்கும் காரணமான, புஷ் நிர்வாகம் மற்றும் இராணுவத்தின் மிக உயர்மட்டங்களின் கூடுதலான குற்றங்களை மூடி மறைக்கும் ஒரே காரணத்திற்குத்தான் அவர்கள் "நீதிக்கு முன் நிறுத்தப்படுவதற்கு" ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புஷ் நிர்வாகத்தின் இது ஒரு வரலாறாகிப் போய்விட்டது மேலும் ஒரு ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர் ஜனாதிபதி பொறுப்பில் உள்ளார், சித்திரவதையை பேச்சளவிற்கு ஒப்புக்கொள்ள மறுத்து, "வெளிப்படையான நிலைகள்" இருக்கும் என்று உறுதி கூறுகிறார். ஆயினும்கூட, வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி, ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் அவருடைய அரசாங்கத் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டரும் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் செய்த பெரும் தீவிரக் குற்றங்களை வெள்ளைப்பூச்சு அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு ஒழுங்கு நடைமுறையின் கீழே "ஒரு சில ஒழுங்கங்கெட்ட நபர்களின்" மீது குற்ற விசாரணை நடத்தும் அபு கிரைப் உத்தியை தூசி தட்டி எடுத்துள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டியபடி, அரசாங்கத் தலைமை வக்கீல் ஹோல்டர் தன்னுடைய அலுவலகம், CIA சித்திரவதை பற்றி ஏதேனும் ஒரு விதத்தில் விசாரணை நடத்துவதை தவிர்க்க முடியாது என உறுதிகொண்டுள்ளதாக கூறினார். அத்தகைய விசாரணைக்கான அழுத்தம் இம்மாதத்தின் பின்னர் பெருகக்கூடும், ஏனெனில் நீதிமன்றம் ஒரு CIA தலைமை ஆய்வாளர் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில் பெயரிடப்படாத மூத்த நீதித்துறை அதிகாரிகளை மேற்கோளிட்டு, ஹோல்டர் திட்டமிட்டுள்ள விசாரணை "குறுகிய" பரப்பை கொண்டு, புஷ் நிர்வாகம் சித்திரவதைக்கு இசைவுகொடுத்த குறிப்புக்களில் கூறப்பட்டதற்கு "உத்திமுறைகளுக்கு அப்பால் அதிகாரிகள் சென்றார்களா" என்பது பற்றி மட்டும் விசாரிக்க உள்ளது என்று கூறுகின்றனர். டைம்ஸில் வந்துள்ள அறிவிப்பின்படி, விசாரணையின் ஒரு கவனம் "நீதித்துறை கொடுத்த வழிகாட்டு நெறிகளுக்கு மிக அதிகமான முறையில் கைதிகளை நீரினால் சித்திரவதை செய்த" குற்றத்தை CIA விசாரணையாளர்கள் செய்தார்களா என்பதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த அறிக்கையின்படி, ஹோல்டர் நீதித்துறையில் தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் வரைந்த சித்திரவதைக் குறிப்புக்கள் ஒன்றை அடிப்படையாக கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. அதில் நீரினால் செய்யப்படும் சித்திரவதை முறை பற்றி எச்சரிக்கப்பட்டிருந்தது. "இது மீண்டும் செய்யப்பட்டால் கணிசமான பலன்கள் இருக்காது என்றும் அதற்குக் காரணம் சில முறை செய்யப்பட்டபின் உத்திகள் அவற்றின் திறைமையை இழந்துவிடும்." இந்த அடிப்படையில் விசாரணைக்குட்படும் வழக்குகள் ஆகஸ்ட் 2002 ல் குறைந்தது 83 தடவை நீரினால் செய்யப்படும் சித்திரவதை முறைக்குத் தள்ளப்பட்ட அபு ஜுபயதா மற்றும் அதே ஆண்டு மார்ச்சில் 183 தடைவை இதேமுறை சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்ட கலீத் ஷேக் முகம்மது இருவரின் சித்திரவதைகளும் உள்ளன என்று டைம்ஸ் தெரிவிக்கிறது. ஜுபயதா மற்றும் ஷேக் முகம்மது இருவருடைய சித்திரவதையும் "சித்திரவதை செய்ய நாட்டமுள்ளவர்களான" விசாரணையாளர்களின் பணியாக இருக்க முடியாது. மிக நுட்பமான விவரங்களில் இது புஷ் நிர்வாகத்தின் முக்கிய நபர்களால் இயக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. அதில் துணை ஜனாதிபதி டிக் சேனி, பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ், பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட், CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட், தலைமை அரசாங்க வக்கீல் ஜோன் ஆஷ்க்ரோப்ட் இன்னும் பலர் இருந்தனர். அவர்கள் பணி பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்றும் அதற்கு முழுமையாக ஒப்புதல் கொடுத்ததாகவும் புஷ் ஒப்புக் கொண்டார். இச்சித்திரவதை "மிக அதிகமாக" பயன்படுத்தப்பட்டதற்கு ஒரு காரணம் புஷ் நிர்வாகம் அல் கெய்டா மற்றும் சதாம் ஹுசைனுக்கும் இடையே இல்லாமலிருந்த தொடர்பு பற்றி, காவலில் இருந்தவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறமுற்பட்டது ஆகும். அதையொட்டி ஈராக்கிற்கு எதிரான திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு அதை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்பது அவர்களுடைய நோக்கம் ஆகும். இந்த அடிப்படையில் வெற்றிகரமாக விசாரணை நடத்துவது என்பது மிகவும் அரிது. நீரினால் செய்யப்படும் சித்திரவதை முறை பற்றிய நீதித்துறை குறிப்பு பெரும் குழப்பமுடையது, கொள்கை என்பதைவிட திறமை என்ற கண்ணோட்டத்தில் பலமுறை செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளது. இக்குறிப்பு பற்றி CIA விசாரணையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. எப்படியும் இந்த குறிப்பு கூட ஏற்கனவே நடைமுறையில் இருந்த சித்திரவதை வழிவகைகளை ஒரு போலி சட்டவகையில் மூடிமறைப்பதற்குத்தான் எழுதப்பட்டது. மேலும் பிற கண்டுபிடிப்பு முறைகளும் சித்திரவதை செய்வதற்கு பச்சை விளக்குக் காட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான காவலில் வைத்திருப்பவர்களை "எதிரிக் கிளர்ச்சியாளர்கள்" என்று நிர்வாகம் வரையறை கொடுத்து ஜெனீவா சட்ட வரைவு ஒப்பந்தங்களின் கீழ் உரிமைகள் இல்லையென, சித்திரவதை செய்வதற்கு வசதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. மற்றய தீர்ப்பு அதிகார உரிமைகளையும் ஜனாதிபதி தலைமைத் தளபதி என்னும் முறையில் "பயங்கவாதத்தின் மீதான போரில்" தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று கூறி, அவர் சித்திரவதைக்கு எதிராகத் தடைகள் உட்பட எந்தச் சட்டக் கட்டுப்படுத்தல்களையும் மீறிச் செயல்படலாம் என்று கூறின. புஷ் நிர்வாகத்தின் நீதித்துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்தின் தலைவர் என்ன முறையில் ஜாக் கோல்ட்ஸ்மித் எழுதினார்: "நீங்கள் சித்திரவதை செய்தால் அனேகமாக அதற்கு ஒரு பாதுகாப்பு இருக்கும்; ஒரு பாதுகாப்பு இல்லாவிட்டாலும், ஜனாதிபதி சட்ட அதிகாரத்தின் கீழ் நீங்கள் செயல்பட்டால் சித்திரவதைச் சட்டம் பயன்படாது போய்விடும்." ஹோல்டர் திட்டமிட்டிருக்கும் விசாரணையின் அடித்தளத்தில் இருக்கும் கருத்தாய்வு--"சித்திரவதை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் சட்டவரம்பிற்குள்--அதாவது இதில் அவமதிப்பு மட்டும் தான் தகுதியாயிருக்கிறது. இதன் இறுதி விளைவு முதலில் சித்திரவதை செய்ய அனுமதிக்கப்பட்ட அனைவரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தல்தான். மெளனமாக ஆதரவு கொடுத்து அவர்கள் அனுமதித்த சர்ச்சைக்குரிய முறைகளான--நீரினால் சித்திரவதை செய்தல், விலங்கிட்டு தலைகீழாக ஆட்களை தொங்கவிடுதல், கொடிய பூச்சிகளிருக்கும் பெட்டிகளில் அவர்களை வைத்து மூடுதல் போன்றவை-- அவ்வழிவகைகள் உண்மையில் சித்திரவதை அல்ல என்று சட்டபூர்வ அதிகாரமளிக்கிறது. அத்தகைய விசாரணை உண்மையில் நடத்தப்படுமா அல்லது குற்றம் சார்ந்த தண்டனைகளை கொடுக்குமா என்பது பொறுத்திருந்தான் பார்க்கப்பட வேண்டும். அரச இயந்திரத்திற்குள்ளேயே இது பற்றி தீவிர கருத்து வேறுபாடுகள் உள்ளன; இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் இன்னும் கூடுதலாக பலவற்றை வெளிப்படுத்துதலோ அல்லது விசாரணைகளுக்கோ விரோதப் போக்கு காட்டுகையில், அவர்களுடைய எதிர்ப்புக்கள் பெருகிய முறையில் நன்கு அறியப்பட்டவை ஆகும். CIA அதிகாரிகளை "மிகை" சித்திரவதைக்காக விசாரித்தல் என்பது அமைப்பை முடக்கு விடும் என்ற கருத்தை அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். அதையொட்டி தேசியப்பாதுகாப்பு ஆபத்திற்கு உட்படும் என்றும் பயங்கரவாதம் வலுப்பெற்றுவிடும் என்றும் கூறியுள்ளனர். புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் நேரடி உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட முறையான சித்திரவதை பற்றிய அச்சமீபத்திய சூழ்ச்சியானது அக்குற்றங்களை மூடிமறைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் அடிப்படை பங்கை உறுதி செய்வதுடன், அந்த அடிப்படைக் கொள்கைகளை தொடந்து உயர்த்தி செல்லவும் செய்கிறது. ஜனநாயகக் கட்சி முன்னைய எட்டு ஆண்டுகளில் மேற்கொண்டிருந்த நடந்து கொண்ட அதே கொள்கையில் தான் இருக்கிறது. அதாவது ஆக்கிரமிப்பு போர்களுக்கு தொடர்ந்த ஆதரவு கொடுக்கப்பட்டதும் அதே போல் புஷ் நிர்வாகம் தொடங்கிய போலீஸ் அரச நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுக்கப்பட்டது; இவற்றுள் சித்திரவதைப் பயன்பாடு இப்போது வெளிப்பட்டு நிற்கிறது. அவைத் தலைவர் நான்சி பெலோசி உட்பட முக்கிய காங்கிரஸ் ஜனநாயக கட்சியினருக்கு அவர்களின் ஆதரவைப் பெறும்பொருட்டு சித்திரவதை பயன்பாடு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அதே நேரத்தில் இக்குற்றங்களை அமெரிக்க மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தன. சித்திரவதைக் கொள்கைகள், சட்டவிரோதப் போர் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும். இதில் புஷ், சேனி, ரைஸ், ரம்ஸ்பெல்ட், டெனட், ஆஷ்க்ரோப்ட் இன்னும் பலரும் அடங்குவர். இதேபோல் சித்திரவதைக்கு போலித்தன சட்ட நியாயங்களை இயற்றியவர்கள்--முன்னாள் தலைமை அரசாங்க வக்கீல் ஆல்பெர்ட்டோ கோன்ஸலேஸ், சேனியின் அலுவலக தலைமைஅதிகாரி டேவிட் ஆடிங்டன் மற்றும் முன்னாள் நீதித்துறை துணை உதவி செயலாளர் ஜோன் யூ உட்பட பலரும்--குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இத்தகைய விசாரணைகள் சர்வதேச அளவில் இக்குற்றங்கள் மீண்டும் இழைக்கப்படுவதை தவிர்க்க மிக முக்கியமானதும் அதே நேரம் வளர்ந்து வரும் சமூக நெருக்கடியும் அதிகரிக்கும் வர்க்கப் போராட்டமும் இதே வழிவகைகளை அமெரிக்காவிலேயே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும். அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் அரசியல் பணிகளில் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை பதில் கூற வேண்டிய நியாயத்திற்காக போராடுவதும் ஒன்றாகும். ஒபாமா நிர்வாகத்திற்கும் ஆளும் அதிகாரத்துவ இரு கட்சிகளுக்கும் மற்றும் போருக்கும் அடக்குமுறைக்கும் மூல காரணமாகவிருக்கும் முதலாளித்துவமுறைக்கு எதிராக சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளுவதன் மூலம்தான் இது அடையப்பட முடியும். |