World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைUnions isolate Sri Lankan nurses' campaign for safety measures தொழிற்சங்கங்கள் அபாயம் தவிர்க்கும் நடவடிக்கையாக இலங்கை தாதிமாரின் பிரச்சாரத்தை தனிமைப்படுத்துகின்றன By Vilani Peiris இலங்கை அரசாங்கமும் மஹரகம புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகமும், கீமோதெரபி (Chemotherapy -புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை) பிரிவில் இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி தாதிமார் முன்னெடுக்கும் பிரச்சாரத்தை நசுக்க இராணுவத்தையும் பொலிசையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கின்றன. இந்த மருத்துவமனையில் இருந்து கீமோதெரபி தாதிமாரை இடம்மாற்றும் அரசாங்கத்தின் முடிவை சவால் செய்து, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததற்கு முன்னதாகவே ஆரம்பித்த சகல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டி, பிரச்சாரத்தை தனிமைப்படுத்த செயற்படும் தொழிற்சங்கங்கள் அதிகாரிகளுக்கு உதவுகின்றன. இலங்கை கீமோதெரபி தாதிமார் ஜூலை 28 அன்று மருத்துவமனை வளாக்தில் நடத்திய மறியல் போராட்டம். ஜூலை 28 இரவு, கதிரியக்க தாதிமாரின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் குழுக்கள், அவர்களை மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைய வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் கைதுசெய்யப்படுவர் என அச்சுறுத்தியும் கடிதங்களைக் கொடுத்தன. அந்த தினத்துக்கு முன்னதாக, சுகயீன விடுமுறை போராட்டத்தையும் மற்றும் ஜூலை 22, 27 திகதிகளில் தமது கீமோதெரபி பிரிவு சக ஊழியர்களுக்கு ஆதரவாக ஏனைய தாதிமார் மேற்கொண்ட முன்னைய வேலை நிறுத்த நடவடிக்கையையும் கீழறுக்க அரசாங்கம் புற்றுநோய் வைத்தியசாலையில் கடற்படை தாதிமாரை நிறுத்தியது. அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு அடிபணிந்த தொழிற்சங்க தலைவர்கள், ஜூலை 29 அன்று, வேலை நிறுத்தம் மற்றும் மருத்துவமனைக்கு முன்னால் நடத்தும் மறியல் போராட்டம் உட்பட புற்று நோய் மருத்துவமனை தாதிமாரின் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டினர். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தாதிமார் காத்திருக்க வேண்டும் என அவர்கள் வலியுத்தினர். ஆகஸ்ட் 6 அன்று, நீதிமன்ற தீர்ப்பை அமைச்சு கடைப்பிடிக்க வேண்டும் என கோரி, கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு வெளியில் புற்றுநோய் மருத்துவமனை தாதிமாரின் ஆர்ப்பாட்டம் ஒன்றை தொழிற்சங்கங்கள் நடத்தின. சக்திவாய்ந்த கீமோதெரபி மருந்துகளுடன் வேலை செய்வதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பாக கீமோதெரபி தாதிமார் மெதுவாக வேலை செய்யும் போராட்டமொன்றை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய போதே முரண்பாடுகள் தொடங்கின. தாதிமார் பாதுகாப்பு அங்கிகளையும் பொருத்தமான பயிற்சிகளையும் நான்கு புதிய சைடோடொக்சிக் (Cytotoxic) பாதுகாப்பு கவசத்தையும் மற்றும் மாதாந்தம் ஆபத்து கொடுப்பனவாக 10,000 ரூபாவும் (சுமார் 90 அமெரிக்க டொலர்) கோரினர். ஜூலை 15 அன்று, சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, 53 கீமோதெரபி தாதிமாரையும் இடம் மாற்றம் செய்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து இலங்கை சுகாதார சேவை சங்கம், அரசாங்க தாதி அலுவலர்கள் சங்கம், சுயாதீன சுகாதார தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் இந்த இடமாற்றங்களுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றில் நடவடிக்கை எடுத்தன. ஜூலை 22, இந்த இடமாற்றங்களுக்கு தடைவிதிக்கும் கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்ததோடு, ஆகஸ்ட் 17 அடுத்த விசாரணை வரை அந்த உத்தரவை மூன்று தடவைகள் புதுப்பித்தது. ஆயினும், அதை அலட்சியம் செய்த டி சில்வா, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு கட்டளையிட்டதோடு தாதிமார் இன்னமும் கடமைக்கு சமூகமளிக்க முடியாமல் உள்ளனர். ஆகஸ்ட் 3, முன்னைய நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காதது ஏன் என தெரிவித்து சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட எதிர் மனுவுக்கு எதிரான பதில்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தொழிற்சங்கங்களுக்கு பணித்தது. தொழிற்சங்க தலைவர்களின்படி, தாதிமார்களின் சொந்த பாதுகாப்புக்காகவே அவர்களை இடம்மாற்றியதாக அமைச்சு விவாதித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு பதிலாக பயிற்சி பெறும் தாதிமாரை அங்கு கடமையில் இருத்துவதன் மூலம், உண்மையில் அமைச்சு நோயாளர்களும் மற்றும் இப்போது கீமோதெரபி ஊசிகளை கையாளும் புதிய தாதிமாரும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்துள்ளது. தமது சக ஊழியர்களின் வீடுகளுக்கு ஜூலை 28 அன்று பொலிசார் வந்தது பற்றி பல தாதிமார் எமது வலைத் தளத்துடன் பேசினர். கமனி என்ற ஒரு தாதி, பொலிசாரின் அச்சுறுத்தல் நடவடிக்கையின் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி, 53 தாதிமாரும் புற்றுநோய் ஆஸ்பத்திரியினுள் நுழைவதை தடுக்கும் கட்டளையை, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டு மஹரகம பொலிசார் வீடுகளுக்கு வந்திருந்தனர். பொலிசாரின் வருகை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தொழிற்சங்கத் தலைவர்கள் தவறியதை அடுத்து, ஒரு கர்ப்பினித் தாயான சித்ராங்கனி என்ற தாதி, அதை சவால் செய்வதற்காக நுகேகொடை நீதிமன்றத்திற்குச் சென்றார். தாதிமாரின் இடமாற்றத்தை இடைநிறுத்தி மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்த கட்டளையை பொலிசார் மீறியுள்ளதாக அவரது சட்டத்தரணி வாதிட்டார். நீதவான் கேள்வியெழுப்பிய போது, உயர்மட்ட நீதிமன்றத்தின் கட்டளையைப் பற்றி தெரியாது என பொலிசார் மறுத்தனர். நீதவான் கீமோதெரபி தாதிமார் மருத்துவமனைக்கு செல்வதை தடுக்க பொலிசாருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை இரத்து செய்தார். ஆனால் பொலிசார் தொடர்ந்தும் மருத்துவமனைக்கு வெளியில் தமது காவலரணை வைத்திருப்பதோடு, தாதிமார் உள் நுழைய முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுப்பதாக விளைபயனுள்ள விதத்தில் எச்சரிக்கின்றனர். கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் வடமேல் மாகாணத்தில் குருநாகல் பொது வைத்தியசாலை ஊழியர்களும் எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் இருக்கும் ஊழியர்களும் புற்று நோய் மருத்துவமனையில் உள்ள தமது சக ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அரசாங்கத்தின் வேட்டையாடும் அச்சுறுத்தல் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புற்றுநோய் மருத்துவமனை தாதி எமது வலைத் தளத்துக்கு தெரிவித்ததாவது: "நாங்கள், குறிப்பாக இடம்மாற்றப்பட்ட தாதிமார் எங்களது தொழிலைப் பற்றி இப்போது பீதிகொண்டுள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். இடமாற்றத்தை நீதிமன்ற வழக்கின் மூலம் நிறுத்த முடியும் என தொழிற்சங்கங்கள் எங்களுக்கு கூறினாலும், நீங்கள் கூறியது போல், பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு தொகை பிரச்சினைகள் ஏற்படலாம், அதற்காக நாங்கள் தயாராக வேண்டும்." பொலிஸ் மற்றும் கடற்படை தாதிமரை அரசாங்கம் பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்க்க மறுத்ததைப் பற்றி நமது நிருபர் கேட்டபோது, மேன் முறையீட்டு நீதிமன்றின் முடிவுக்காக காத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு தொழிற்சங்கமான அனைத்து இலங்கை சுகாதார சேவையாளர் சங்கத்தின் (ஏ.சி.எச்.எஸ்.யூ) தலைவர் மெதவத்த தெரிவித்தார். அரசாங்க தாதிமார் அலுவலர் சங்கம் மற்றும் சுயாதீன சுகாதார ஊழியர் சங்கத்தின் அலுவலர்களும் இதே பதிலை அழித்தனர். அதே சமயம், போராளித் தோரணையை காட்ட முயற்சித்த, அரசாங்க தாதியர் அலுவலர் சங்கத்தின் செயலாளர் ஜயந்த விமலசிறி, புற்று நோய் மருத்துவமனை தாதியருக்கு ஆதரவாக ஏனைய ஆஸ்பத்திரிகளில் சில மறியல் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததாக கூறிக்கொண்டார். ஆனால் அந்த சகல நடவடிக்கைகளும் ஆஸ்பத்திரியிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாக அவரே ஏற்றுக்கொண்டார். ஜே.வி.பி. யின் கொள்கையின் வழியில், ஏ.சி.எச்.எஸ்.யூ. தலைவர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் படுகொலை யுத்தத்தின் ஆர்வமான ஆதரவாளர்களாக இருந்ததோடு யுத்தத்தின் பொருளாதாரச் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதையும் ஆதரித்தனர். இதே போல், அரசாங்க தாதியர் அலுவலர் சங்கம் மற்றும் சுயாதீன சுகாதார ஊழியர் சங்கத்தினதும் தலைவர்கள் இராஜபக்ஷவின் யுத்தத்தை எதிர்க்கவில்லை. இத்தோடு இந்தத் தொழிற்சங்கங்கள், தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ இயந்திரத்தை, ஒழுக்கமான தொழில், சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை தகர்க்கப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தாங்களாகவே அடிபணிந்து போயுள்ளனர். சுகாதாரத் துறையில் தமது தொழிற்சங்கம் ஒன்றையும் வைத்துள்ள மத்தியதர வர்க்க தீவிரவாத நவசமசமாஜ கட்சியும், தாதிமார் போராட்டத்தை பாதுகாக்க மறுத்துள்ளது. கட்சியின் தலைவர்களில் ஒருவரான சமல் ஜயநெத்தி, "அவசரமாக நாம் எதையும் செய்யப் போவதில்லை. தொழிலாளர்கள் முன்னணிக்கு வரும் வரை நாம் காத்திருக்கிறோம். அதற்குப் பின்னர் நாம் நடவடிக்கை எடுப்போம்," என எமது வலைத் தளத்துக்கு தெரிவித்தார். இந்த வகையில், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தையும் சுயாதீனமான அணிதிரள்வையும் கடுமையாக எதிர்க்கும் நவசமசமாஜ கட்சி, சுகாதார ஊழியர்கள் மத்தியில் வகுப்பு பிளவுகளை விதைக்க செயற்படுகின்றது. ஏனைய தொழிற் சங்கங்களை போலவே, அது முழு அரசாங்கத்துடன் அல்லது எதிர்க் கட்சியான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க முயற்சிக்கின்றது. புற்று நோய் மருத்துவமனையில் கீமோதெரபி தாதிமார் மற்றும் நோயாளர்களின் அடிப்படை பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியமானது, அதன் பிரமாண்டமான யுத்தச் செலவுடன் பூகோள பொருளாதார பின்னடைவும் சேர்ந்து இலங்கை பொருளாதாரத்தில் கூர்மையான சீரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலவச சுகாதார சேவை உட்பட நலன்புரி சேவைகளை வெட்டித் தள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபட்டதாகும். 2011ல் மொதத் தேசிய உற்பத்தியில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 7 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைக்க அரசாங்கம் சபதம் பூண்டிருப்பது, சுகாதார மற்றும் ஏனைய சேவைகளில் மேலும் வெட்டுக்களுக்கு வழிவகுக்கும். மொத்த தேசிய உற்றத்தியின் படி, சுகாதார சேவைக்கான செலவு ஏற்கனவே 2007ம் ஆண்டில் 1.9 வீதத்தில் இருந்து 2008ல் 1.7 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தாதிமார் மீதான தாக்குதல், சகல பொதுத் துறை ஊழியர்கள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பாகமாகும். முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும் -உதாரணமாக, முதலாளித்துவ அமைப்புக்கே சவால் செய்யும்- மாற்றீடாக ஒரு முன்நோக்கு இன்றி, பாதுகப்பான வேலை நிலைமைகளுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட தொழிலாளர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தேவைப்படுவது என்னவெனில், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான, ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான அரசியல் இயக்கமாகும். அந்த இயக்கம் ஒரு சில செல்வந்தர்களின் தனியார் இலாப கோரிக்கைகளுக்கு மாறாக, சாதாரண மக்களின் சுகாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக இருக்கும். |