WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Massive abstention in Sri Lankan local elections
இலங்கை உள்ளூராட்சி தேர்தலில் மிகப்பெரும் புறக்கணிப்பு
By Deepal Jayasekera
12 August 2009
Use this
version to print | Send
feedback
இலங்கையின் வடக்கு நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக
கடந்த சனிக்கிழமை நடந்த இரு உள்ளூராட்சித் தேர்தல்களின் பெறுபேறுகள், தீவின் தமிழ் சிறுபான்மையினர் அரசாங்கத்தில்
இருந்து மட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலவித தமிழ் கட்சிகளில் இருந்தும் ஆழமான வகையில் அந்நியப்பட்டிருப்பதை
பிரதிபலிக்கின்றது.
மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த
பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நடவடிக்கையாக இந்தத் தேர்தலை காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சித்
போதிலும், வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பணத்தில் வாக்களித்தோரின் எண்ணிக்கை வெறும் 22 வீதமாகவே
இருந்தது. வவுனியாவில் 52 வீதமானவர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
யாழ் மாநகர சபையில் குறுகிய வெற்றியைப் பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி 23 ஆசனங்களில் 13 ஆசனங்களை மட்டுமே வென்றது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 10 வீதத்தினரின்
ஆதரவே கிடைத்திருந்த நிலையில் இது ஒரு போலியான வெற்றியாகும். பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த முன்னணியின்
பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), முதலில் தம்மை அரசாங்கத்தில் இருந்து தூர விலக்கி
தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருந்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அழுத்தத்தினால் தனது
திட்டத்தை மாற்றிக்கொள்ள தள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை ஆதரித்ததன் காரணமாக ஈ.பி.டி.பி.
தமிழர்கள் மத்தியில் பரந்தளவில் வெறுக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி.க்கு சொந்தமாக ஒரு துணைப்படை
குழுவொன்று இருப்பதோடு அது மோதல்களின் போது இராணுவத்துடன் இணைந்து செயலாற்றியதுடன், "புலி சந்தேக
நபர்களை "காணாமல் ஆக்குவது" அல்லது படுகொலை செய்வது உட்பட குண்டர் நடவடிக்கைகள் மற்றும்
அடக்குமுறையிலும் சம்பந்தப்பட்டிருந்தது.
இந்த இரு நகரங்களிலும், அரசாங்க கட்சிகளுக்கான பாதுகாப்பு படைகளின்
இரகசிய ஆதரவுடன், இராணுவ ஆக்கிரமிப்பு நிலைமையின் கீழேயே தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள்
அச்சுறுத்தல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் உள்ளான அதே வேளை, அரசாங்க அமைச்சர்கள் தமது சொந்த ஊடகக்
குழுக்களுடனும் இராணுவப் பாதுகாப்புடனும் சுதந்திரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் "பாதுகாப்பு" என்ற போலிக் காரணத்தைக் காட்டி தேர்தல்
தினத்தன்று சகல அரசாங்க சார்பற்ற ஊடகங்கள் யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் செல்வதை தடை செய்தது.
பாரிஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற நிருபர்கள் சங்கம், "ஒரு ஒளிவு மறைவற்ற தேர்தல் பற்றிய
எந்தவொரு எதிர்பார்ப்பையும்" இந்தத் தடை தூக்கியெறிந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தது.
ஈ.பி.டி.பி. வாக்குகளை பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகள், அச்சுறுத்தல்கள்
மற்றும் மோசடிகளின் கலவையை வெட்கமின்றி பயன்படுத்திக்கொண்டது. தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும்
நிலையத்தின் பிரதிநிதியான சுனில் ஜயசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "ஆளும் கட்சிக்கு
வாக்களிக்காவிட்டால் மீன் பிடிக்க அனுமதி கிடைக்காது என பல மீனவர்கள் குழுக்கள் அரசாங்க ஆதரவாளர்களால்
அச்சுறுத்தப்பட்டுள்ளன."
புலிகள் மீதான இராணுவ வெற்றியை அடுத்து கிட்டத்தட்ட 300,000 மக்கள்
யாழ்ப்பாணத்துக்கு அருகிலும் வவுனியாவுக்கு அருகிலும் இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை கடைப் பகுதியில் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி, "யாழ்ப்பாண
மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களில் சுமார் 11.6 வீதமானோர் இப்போது
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களில்
20.9 வீதமானவர்கள் மாவட்டத்துக்கு வெளியில் வசிக்கின்றார்கள்.
முகாங்களில் இருப்பவர்களால் வாக்களிப்புக்கு பதிவு செய்ய முடியாமல் போனது
மட்டுமன்றி, உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டதை அரசாங்கம் வாக்காளர்களுக்கான இலஞ்சமாக
பயன்படுத்திக்கொண்டது. சுதந்திர முன்னணி வேட்பாளர் இராஜதுரை இரட்னேஸ்வரன் ஆகஸ்ட் 01 அன்று சண்டே
டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து மீள் குடியேற்றத்தை
ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் அவருக்கு பணித்திருப்பதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின் சகோதரர்களில்
ஒருவரும் அவரது சிரேஷ்ட ஆலோசகருமான பெசில் இராஜபக்ஷ, இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய
ஒரு அதிகாரியை நியமித்தார்.
இந்தப் பெறுபேறுகளை ஒரு "மாபெரும் வெற்றியாக" காரணமின்றி பெருமை
பாராட்டிக்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டில் "ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்த எமது கொள்கைகளுக்கு
கிடைத்த வெற்றி" என பிரகடனம் செய்தார்.
எவ்வாறெனினும், திங்களன்று வெளியான வலதுசாரி ஐலன்ட் பத்திரிகையின்
ஆசிரியர் தலைப்பு ஒன்று, "வாக்காளரின் அக்கறையின்மையை தெளிவாய் தெரிவதாக" குறிப்பிட்டதோடு இந்தத்
தேர்தலை நடத்துவதன் அரசியல் விவேகத்தை கேள்விக்குள்ளாக்கியது. "யாழ்ப்பாணத்தில் வாக்களித்தோரின்
திகைப்பூட்டும் எண்ணிக்கை, அரசாங்கத்துக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது: இந்த சந்தர்ப்பத்தில்
மக்கள் அவசரமாக கோருவது எதுவெனில், யுத்தத்தால் சீரழிந்த தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே
அன்றி அரசியல் அல்ல," என அது தெரிவித்துள்ளது.
சிறிய நகரான வவுனியாவில், சுதந்திர முன்னணியானது புலிகள் சார்பு தமிழ்
கூட்டமைப்புக்கும் மற்றும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் இன்னுமொரு தமிழ் துணைப்படையான அரசாங்க
சார்பு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டி.பி.எல்.எஃப்) பின்னால் மூன்றாவதாக வந்துள்ளது. 11
ஆசனங்களில் தமிழ் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் டி.பி.எல்.எஃப். 3 ஆசனங்களையும் சுதந்திர முன்னணி வெறும்
இரண்டு ஆசனங்களும் பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு ஆசனத்தை எதிர்க் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பெற்றுள்ளது.
பெரும்பான்மை ஆசனங்களை தமிழ் கூட்டமைப்பு பெற்றிருந்த போதிலும், பதிவு
செய்யப்பட்ட வாக்குகளில் 17 வீத ஆதரவையே அது பெற்றுள்ளது. இந்த குறைந்த வாக்குகள், "தமிழ் மக்களின்
ஏக பிரதிநிதிகள்" என்ற போலி உரிமை கோரலை திணிப்பதற்காக கடைப்பிடித்த ஜனநாயக விரோத
வழிமுறைகளால் புலிகள் மீதான பரந்த பகைமையை வெளிப்படுத்துகிறது. தனியான தமிழீழ முதலாளித்துவ அரசு
என்ற வேலைத் திட்டம், தமிழ் முதலாளித்துவ தட்டின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது, தமிழ்
வெகுஜனங்களின் நலன்களை அல்ல.
2002 யுத்த நிறுத்தத்துக்கு சற்று முன்னதாக முதலாளித்துவ தமிழ் கட்சிகளின் ஒரு
கூட்டணியாக ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக புலிகளின் ஊதுகுழலாக இயங்கி
வந்துள்ளது. மே மாதம் புலிகள் இராணுவ ரீதியில் தோல்விகண்டதில் இருந்து, தமிழ் கூட்டமைப்பு மேலும் மேலும்
இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கிறது. அது யுத்தத்துக்கு ஒரு "அரசியல்
தீர்வுக்காக" இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்தது. இந்த அரசியல் தீர்வானது தமிழ் முதலாளித்துவ
தட்டுக்களின் நலன்களை பாதுகாக்கும் மாகாண மட்டத்திலான ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வடிவமாகும்.
தமிழ் கூட்டமைப்பு வவுனியாவில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை
வென்றிருந்தாலும், அது யாழ்ப்பாணத்தில் 8 ஆசனங்களையே வென்றது. யாழ்ப்பாணத்தில் குறைந்த வாக்களிப்பை
எடுத்துக்கொண்டால், தமிழ் கூட்டமைப்பின் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 7 வீதத்தையே
பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவையும் கூட தமிழ் கூட்டமைப்புக்கான ஆதரவு என்பதை விட இராஜபக்ஷ
அரசாங்கத்துக்கு எதிரான ஒரு கண்டன வாக்களிப்பாகும்.
அரசாங்க சார்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எஃப்) மற்றும்
முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சுயேட்சைக் குழுவும் யாழ்ப்பானத்தில் ஒவ்வொரு ஆசனத்தை பெற்றுள்ளன.
கொழும்பில் பிரதான எதிர்க் கட்சியான யூ.என்.பி. வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் எந்தவொரு ஆசனத்தையும்
வெல்லவில்லை. 1983ல் யுத்தத்தை ஆரம்பித்ததற்கும் அடுத்த தசாப்தம் பூராவும் அதை கொடூரமாக
முன்னெடுத்ததற்கும் யூ.என்.பி. பொறுப்பாளியாகும்.
தீவின் தெற்கில் ஊவா மாகணத்துக்கும் அதே தினம் தேர்தல் நடந்தது. சுதந்திர
முன்னணி இலகுவாக எதிர்க் கட்சிகளை தோற்கடித்து, 72.4 வீத வாக்குகளை வென்றதோடு அந்த மாகாணத்தில்
அதன் ஆசன எண்ணிக்கையை 21 முதல் 25 வரை அதிகரித்துக் கொண்டது. யூ.என்.பி. க்கு கிடைத்த வாக்குகள்
வெறும் 23.3 வீதமாக குறைந்தது. அதன் ஆசன எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆகக் குறைந்ததது.
மே மாதத்தில் இருந்தே, இராஜபக்ஷவும் சுதந்திர முன்னணியும் புலிகள் மீதான
வெற்றியைப் பாராட்டி அடுத்தடுத்து கொண்டாட்டங்களை நடத்தியதோடு இனவாத உணர்வுகளையும் கிளரிவிட்டனர்.
ஊவாவில் ஒப்பீட்டளவில் அரசாங்கத்துக்கு கிடைத்த அதிக வாக்குகள், அராசங்கத்துக்கான கணிசமான ஆதரவை
விட, நீண்ட கால யுத்தம் முடிவடைந்துவிட்டது என்ற நிம்மதி உணர்வையும் மற்றும் எதிர்ப்பின்மையையும்
பிரதிபலிக்கின்றது. யூ.என்.பி. மற்றும் சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய இரு
பிரதான எதிர்க் கட்சிகளும் யுத்தத்தை ஆதரித்ததோடு புலிகளின் தோல்வியையும் புகழ்ந்தன.
அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் மற்றும் தமிழ் சிவிலியன்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது
தொடர்பான அமெரிக்காவின் மற்றும் மேற்கத்தைய சக்திகளின் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை நிராகரித்தவாறே
இராஜபக்ஷ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ஊவாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1818ல்
நடந்த கிளர்ச்சியை நினைவூட்டினார். அமெரிக்காவின் எதிரிகளிடம் இருந்து, குறிப்பாக சீனாவிடம் இருந்து
பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை பெற்றதாலேயே இராஜபக்ஷவால் மேற்கத்தைய விமர்சனங்களை நிராகரிக்க
முடிந்தது.
அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவால் உருவாக்கப்பட்டு, பூகோள
பின்னடைவால் மேலும் குவிக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை வேண்டுமென்றே ஆளும் கூட்டணி
மறைத்துவிட்டது. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளாகவும் தொழிற்சங்கங்களாகவும்
இயங்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய இரு
கூட்டணி பங்காளிகளும், அரசாங்கத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை மூடி மறைக்கும் முயற்சியாக
சம்பள பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைத்தன. அரசாங்கத்தில் இருந்து விலகி நிற்பதன் பேரில் ம.ம.மு. தனித்துப்
போட்டியிட்டது.
யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. நிராகரிக்கப்பட்டமை, அரசாங்கத்துக்கு எதிராக
அவர்கள் எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. ஜே.வி.பி. யை
பொறுத்தளவில் இந்தத் தேர்தல் இன்னுமொரு தோல்வியாகும். அதன் ஆசன எண்ணிக்கை 7ல் இருந்து ஒன்றுக்கு
குறைந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பங்காளியாக இல்லாவிட்டாலும், ஜே.வி.பி. இராணுவச் செலவை
அதிகரித்த மற்றும் சமூக சேவைகளை அழித்த வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
ஆளும் சுதந்திர முன்னணி அதிகளவிலான வாக்குகளை பெற்ற அதேவேளை, அதற்கான
ஆதரவை தக்கவைத்துக்கொள்வது கடினம். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவாகும்
போது, இந்த மனநிலை அரசாங்கத்துக்கு எதிராக துரிதமாக மாறும். சியம்பலான்டுவ மற்றும் ரிதிமலியத்த
போன்ற கிராமங்களில் வறுமையின் மட்டம் 50 வீதமாக இருக்கும் தீவின் அதி வறிய பிராந்தியங்களில் ஒன்றான ஊவாவில்
இது குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். |