WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The assassination of Baitullah Mehsud
பைதுல்லா மெசூத்தின் படுகொலை
James Cogan
8 August 2009
Use this
version to print | Send
feedback
அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கமும் செய்தி ஊடகமும், இஸ்லாமாபாத்தில் இருக்கும்
வாஷிங்டனுடைய வாடிக்கை அரசாங்கத்துடன் ஒரு ஆளில்லாத அமெரிக்க பிரிடேட்டர் விமானத்தில் இருந்து புதனன்று
ஏவிவிடப்பட்ட ஏவுகணைகள் 39 வயது பாக்கிஸ்தான் பழங்குடித் தலைவர் பைதுல்லா மெசூதை தெற்கு வஜீரிஸ்தானில்
உள்ள அவருடைய மாமனார் வீட்டில் கொன்றுவிட்டன என்ற தகவலில் களிப்பு அடைந்துள்ளனர்.
ஆளில்லாத பிரிடேட்டர் விமானத்தாக்குதல் பற்றிய விவரங்கள் ஒபாமா நிர்வாகம்
மக்கள் படுகொலைக்கு உத்தரவிட்டதை தெளிவாக்குகின்றன. இத்தாக்குதல் நள்ளிரவில் நடாத்தப்பட்டதுடன்,
எத்தனை பேர் கொல்லப்படுவர் என்பதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாத வகையில் நடாத்தப்பட்டது.
பாக்கிஸ்தான் எக்ஸ்பிரஸ் நியூஸ் தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து வந்துள்ள தகவல்படி,
இரவு 1 மணிக்கு ஏவப்பட்டிருந்த ஏவுகணை ஒன்று வீட்டு வளாகத்தின்மீது பாய்ந்து குடும்பத்தின் மெய்காப்பாளர்கள்
7 பேர், மற்றும் 26 பேர்களை படுகொலை செய்ததாக தெரிகிறது. இதில் தாலிபான் தலைவரின் இளம் மனைவியும்
அடங்குவார். மற்ற குறிப்புக்கள் இறந்த, காயமுற்ற குழந்தைகளை பற்றி குறிப்பிடுகின்றன. தப்பியோட முயன்று
ஒரு காரில் சென்று கொண்டிருக்கையில் அதன் மீது பாய்ந்த இரண்டாம் ஏவுகணையினால் மெசூத் கொல்லப்பட்டதாக
தெரிகிறது.
வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத்தில் களிப்பு சற்று நிதானமாக இருந்தது. ஏனெனில்
அதிகாரிகளால் மெசூத் இறந்துவிட்டார் என்பதை தீர்மானகரமாக உறுதிபடுத்த முடியவில்லை. தாக்குதல்
நடைபெற்ற தெற்கு வஜீரிஸ்தான் பகுதி, இனவழி பஷ்டூன் மெசூத் பழங்குடி கூட்டமைப்பின் முழுக்கட்டுப்பாட்டிற்குள்
இருக்கிறது.
பெய்துல்லாவின் தலைமையில், மெசூத் மற்றும் பிற பஷ்டூன் பழங்குடியினர் 2004ம்
ஆண்டில் இருந்து பாக்கிஸ்தான் அரசங்கம் இவர்களுடைய அரசியல் தன்னாட்சியை தகர்க்க முற்படும் செயல்களை
தோற்கடித்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து இவர்கள் ஆப்கானிஸ்தானத்துடன் எல்லையை
கொண்ட நாட்டில் எல்லைப் பகுதியில் தன்னாட்சியை அனுபவித்து வருகின்றனர்.
மெசூத் கொலைசெய்யப்பட்டுள்ளது வெள்ளை மாளிகை மற்றும் பாக்கிஸ்தானிய
அரசாங்கத்தால் அவர் ஒரு "பயங்கரவாதி", "அல் கைதாவின் நண்பர்" என்று கூறப்பட்டு
நியாயப்படுத்தப்படுகிறது. அடிபணிந்துநிற்கும் செய்தி ஊடகம் இத்தகைய கூற்றுக்களை விமர்சனத்திற்குட்படுத்தாமல்
அப்படியே கூறிவருகின்றன. உண்மையில் "பயங்கரவாதம்" என்பது எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் சொல்லாக
பயன்படுத்தப்படுகிறது. தங்கள் நாட்டில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நவ-காலனித்துவ ஆதிக்கத்தை
எதிர்ப்பவர்கள் அனைவரும் இவ்வாறு விவரிக்கப்படுகின்றனர்.
பெய்துல்லா மெசூத், அல் கைதா உறுப்பினர் அல்ல. அதேபோல் அமெரிக்கா
அல்லது வேறு மேலை நாடுகளில் நடந்த எந்தத் தாக்குதலுடனும் தொடர்பு கொண்டவரும் அல்ல. ஆப்கானிஸ்தானில்
இருக்கும் அமெரிக்க அல்லது நேட்டோ படைகள் மீது நடக்கும் எல்லை கடந்த தாக்குதல்களிலும் நேரடித்
தொடர்பு உடையவர் அல்ல.
இவருடைய குற்றம் தங்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கர்களுக்கு எதிரான
கெரில்லாப் போர் நடத்துபவர்கள், மற்றும் இஸ்லாமாபாத்தின் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சியை
எதிர்ப்பவர்கள், பாக்கிஸ்தான் பழங்குடிப் பகுதிகளை பாதுகாப்பு இடமாக கொண்டிருக்கும் ஆப்கான்
எழுச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுத்ததுதான். பாக்கிஸ்தானிய பஷ்டூன் பழங்குடியினர் 1980களில் சோவியத்
ஆக்கிரமிப்பு நடந்தபோது கொண்டிருந்த கொள்கையைத்தான் இப்பொழுதும் பின்பற்றுகின்றனர்; அதாவது வெளி
ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைய முற்படும் ஆப்கானிய மக்களின் போரை அவர்கள் ஒரு நியாயமான போர்
என்று கருதி போராளிகளுக்கு உதவி அளிக்கின்றனர்.
2007 க்கு முன்பு பெய்துல்லா மெசூத்
தெற்கு வஜீரிஸ்தானுக்கு வெளியே அதிகம் அறியப்பட்டவர் அல்ல. 2004 அமெரிக்க விமானத் தாக்குதல் பாக்கிஸ்தான்
அரசாங்க துருப்புக்கள் வஜீரிஸ்தானத்திற்குள் நடத்திய ஆரம்ப தாக்குதலுக்கு எதிர்ப்பை நடத்திய பழங்குடித்
தலைவரான நெக் முகம்மதை கொன்ற பின்னர்தான் அவர் மெசூத் பழங்குடி மக்களிடையே ஒரு தலைவராக வெளிப்பட்டார்.
வாஷிங்டனின் அழுத்தத்தின்கீழ் இஸ்லாமாபாத் அரசாங்கம் பின்னர் பஷ்டூன் பழங்குடி மக்களுடன் கையெழுத்திடப்பட்ட
சமாதான உடன்படிக்கைகளை மீறி நடத்திய தாக்குதல்கள் பலவற்றை விரட்டியடித்த போராளிகளுக்கு மெசூத்
தலைமை தாங்கினார்.
2007 கடைசியில் மெசூத்
Tehrik-e-Taliban எனப்படும் புதிய அமைப்பிற்கு பொதுத்
தலைவராக மதிக்கப்பட்டார். இந்த அமைப்பு பழங்குடி மக்களை ஒன்றுபடுத்தவும், பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின்
நடவடிக்கைகளுக்கு எதிரான இஸ்லாமிய எதிர்ப்புக்கும் மற்றும் அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு எதிராகப்
போராடும் ஆப்கானிய தாலிபனின் போராட்டத்திற்கு உதவவும் நிறுவப்பட்டது.
பாக்கிஸ்தானிய தாலிபன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில்
தளபதி முஷாரப்பின் ஆட்சி டிசம்பர் 2007ல் எதிர்க்கட்சித் தலைவர் பெனாசீர் பூட்டோ படுகொலையை
நடத்தியதாக மெசூத் மீது குற்றம் சாட்டியது. பூட்டோவின் மரணத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என்று மெசூத்
உறுதியாக மறுத்திருந்தார். ஆனால் அடுத்த ஆண்டுகளில் பாக்கிஸ்தானின் பல பகுதிகளிலும் இராணுவ இலக்குகளுக்கு
எதிராக நடந்த தொடர்ச்சியான தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
இவை பழங்குடிப் பகுதிகள்மீது அமெரிக்க பாக்கிஸ்தானிய அரசாங்கங்கள் நடத்தும் விமானத் தாக்குதல்களுக்கு
பதிலடியாகும் என்றும் கூறினார்.
பெய்துல்லா மெசூதை வாஷிங்டன் இலக்கு கொண்ட முடிவு ஆப்கானிஸ்தானின் மீது
ஒபாமா நிர்வாகம் கொண்ட மறுகுவிப்பு மற்றும் எல்லைக்கு இரு புறமும் "AfPak
War" என்று அழைக்கப்பட்ட பூசல் விரிவாக்கப்பட்டதும் ஆகும்.
புஷ் நிர்வாகம் மெசூதையோ தெற்கு வஜீரிஸ்தானயை ஆளில்லா விமானங்கள் மூலமான ஏவுகணைத் தாக்குதல்கள்
நடத்த இலக்கு கொண்டதில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தான் போரில் மெசூதின் படைகள் தொடர்பு
கொண்டிருக்கவில்லை.
மெசூதை இலக்கு கொள்ள ஒபாமா நிர்வாகம் ஒப்புக் கொண்டமை பாக்கிஸ்தானின்
உள் அரசியல் நிலைமையில் இராணுவ வகையில் குறுக்கீடு செய்யவதும், பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க விமான
தாக்குதல்களுக்கு இசைவு கொடுத்ததற்கும் மற்றும் அதேபோல் இஸ்லாமாபாத் ஸ்வாட் பள்ளத்தாக்கு இன்னும்
ஆப்கானிய எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்த பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரியின்
மறைமுகமான
ஒப்புக் கொண்டதற்கு பிரதி உபகாரம் ஆகும்.
மார்ச் மாதம் பழங்குடி தலைவர் தலைக்கு $5 மில்லியன் விலை நிர்ணயிக்கப்பட்டது.
வஜீரிஸ்தானிலும் மற்ற பழங்குடிப் பகுதிகளிலும் ஆளில்லா விமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
Dawn
செய்தித்தாள் கருத்தின்படி, 2008ல் 34 தாக்குதல்கள் நடத்தபப்பட்டபோது, ஒபாமா ஏற்கனவே இந்த ஆண்டு
28 தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார். இவற்றில் 19 மெசூத்தை கொல்ல அல்லது அவருடைய முக்கிய துணை
அதிகாரிகளை கொல்ல என இருந்தன. நூற்றுக்கணக்கான சாதாரணக் குடிமக்கள் இந்த வழிவகையில் இறந்து
போயினர்.
மெசூத் படுகொலையுண்டது மத்திய ஆசியாவில் ஒபாமா நடத்தும் போரின் குற்றம்
சார்ந்த, பொறுப்பற்ற, தீமை பயக்கும் தன்மையின் அடையாளம்தான்.
ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பிற்கு புஷ் நிர்வாகத்தின் ஆரம்ப
நியாயப்படுத்துதலான செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு உத்தரவிட்டிருந்த ஒசாமா பின் லேடன் மற்றும் பிற அல்
கைதா தலைவர்களை கொல்லுதல் அல்லது உயிருடன் பிடிப்பது என்பது இப்பொழுது கைவிடப்பட்டுவிட்டது.
இப்போரை ஆப்கானிஸ்தானத்திற்கு "ஜனநாயகத்தை" கொண்டுவருவதற்காக நடத்துவது என சித்திரிக்கப்பட்டதும்
நடுவே கைவிடப்பட்டுவிட்டது. இந்த நிலைமையின் கீழ் நாட்டில் பாதிப் பேர் ஆக்கிரமிப்பிற்கு எதிராக எழுச்சியில்
ஈடுபட்டுள்ளதுடன், ஜனாதிபதி ஹமித் கார்சாயி தலைமையில் இருக்கும் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தின்
சட்டபூர்வதன்மையையும் ஏற்கவில்லை.
இது இரத்தம் தோய்ந்த நவ-காலனித்துவ நோக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியமும்
அதன் நேட்டோ நட்பு நாடுகளும் எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய ஆசிய குடியரசுகளில் தங்கள் மூலோபாய மேலாதிக்கத்தை
நிறுவும் முயற்சியும் மற்றும் அப்பகுதியில் உள்ள சக்திகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான் போன்றவற்றின்
செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற நோக்கங்களை கொண்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள எதிர்ப்பிற்கு ஒபாமாவால் இன்னும்
கூடுதலான படைகள், மரணப்படைகளை நிறுத்துதல் மற்றும் பொதுமக்கள் மீது கூட்டு தண்டனை வழங்குதல் என்ற
விதத்தில் விடையிறுப்பு கொடுக்கப்படுகிறது. இதன் விளைவு எழுச்சியின் அதிகரிப்பு ஏற்பட்டுவிட்டதுதான். இந்த ஆண்டு
251 அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2008ல் மொத்தம் 294 என்ற
எண்ணிக்கையுடன் இது ஒப்பிடத்தக்கது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் 19 படையினர் உயிரிழந்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபன் அரசை அகற்றியதன்
மூலம் ஆரம்பித்து இப்பொழுது அணுவாயுதம் கொண்ட பாக்கிஸ்தானை முழு உள்நாட்டுப்போரில் மூழ்கடிக்கிறது.
இராணுவ நடவடிக்கைகளும் பொறுப்பற்றவிதத்தில் அமெரிக்கர் பழங்குடிப்பகுதிகளில் நடத்தும் கொலைகளும் வெகுஜன
சீற்றத்தை அரசாங்கத்தின் மீது திருப்பி எரியூட்டியுள்ளன.
பல ஆண்டுகள் வன்முறைக்கு பின்னர், பஷ்டூன் இனவழி மக்களில் பெரும்பாலானவர்களை
தாங்கள் இஸ்லாமாபாத்துடன் போரில் ஈடுபட்டிருப்பதாக கருதுகின்றனர். மெசூத் கொலையை உடனடியாக தொடர்ந்து
பாக்கிஸ்தானிய இராணுவமும் போலீசும் தலைநகரம் மற்றும் பிற நகரங்கள் முழுவதும் சோதனைச் சாவடிகளையும்
சாலைத் தடுப்புக்களையும் போட்டுள்ளன. பரந்த முறையில் மெசூத் மரணத்திற்கான பதிலடித் தாக்குதல்கள் தவிர்க்க
முடியாமல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
அமெரிக்கா உட்பட, ஆப்கானிஸ்தானத்தில் துருப்புக்களை அனுப்பி வைத்திருக்கும்
ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலான மக்கள் போருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. மக்களுடைய கருத்துக்களை
இழிவாகக் கொள்ளும் விதத்தில், ஒபாமாவும் அவருடைய சர்வதேச நட்பு நாடுகளும் ஆக்கிரமிப்பை ஒரு ஆபத்தான
புதிய பரிமாணத்திற்கு விரிவாக்கிக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் தாராளவாத மற்றும் மத்தியதர
வர்க்க அமைதிவாதிகளும் உதவுகின்றனர். அவர்கள் போர் எதிர்ப்பு என்ற தங்கள் கொள்கையை ஒபாமா பதவிக்கு
வந்தபின் கைவிட்டுவிட்டனர்.
முற்றிலும் சட்டவிரோதமாக இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ள மெசூத்தின்
படுகொலை பாக்கிஸ்தானில் உள் நிலைமை மற்றும் மத்திய ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் மோதல்கள் என்பதை
இன்னும் அதிகமாக்கும். அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை சீனாவுடனும் ரஷ்யாவுடனும் அழுத்தங்களை அதிகரித்துக்
கொண்டு வருகிறது; மேலும் அணுவாயுதங்களை கொண்டிருக்கும் பாக்கிஸ்தான் இந்தியா போன்ற மரபுவழி விரோதிகளுக்கு
இடையே உறவுகளையும் சீர்குலைக்கிறது. இறுதியில் அமெரிக்க இராணுவவாதம் உலகப் பேரழிவிற்குத்தான் வகை செய்யும்.
ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படும் அமெரிக்க,
சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முற்றுப்புள்ளி
வைக்கக்கூடிய சமூக சக்தியாகும். ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் நடத்தப்படும்
போர்கள் என்ற குற்றங்களுக்கு மூலகாரணமாக இருக்கும் முதலாளித்துவத்தின் அஸ்திவாரமான இலாபமுறை
அகற்றப்பட வேண்டும். |