WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
One year since Russian-Georgian war
Georgia remains focus of Washington-Moscow tensions
ரஷ்ய-ஜோர்ஜியப் போர் முடிந்து ஓராண்டிற்கு பின்னரும்
வாஷிங்டன்-மாஸ்கோ அழுத்தங்களில் மத்தியாக ஜோர்ஜியா இருக்கின்றது
By Niall Green
7 August 2009
Use this
version to print | Send
feedback
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, நீண்ட காலமாக ரஷ்யாவிற்கும் முன்னாள் சோவியத்
குடியரசான ஜோர்ஜியாவிற்கும் இருந்த அழுத்தங்கள் ஒரு முழுப் போராக வெடித்தது. மோதலுக்கு உடனடிக் காரணம்
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினை பகுதியான தெற்கு ஒசேஷியா மீது ஜோர்ஜியா இராணுவக் கட்டுப்பாட்டை
கொள்ள வேண்டும் என்று விரும்பியதுதான். 1990 களின் ஆரம்பத்தில் இருந்து நடைமுறையில் ஒரு சுதந்திரப் பகுதியாக
அது இருந்து வருகிறது.
ஜோர்ஜியா மற்றும் தெற்கு ஒசேஷியாவிற்கும் இடையே உள்ள அழுத்தம் பல மாதங்களாக
அதிகமாக இருந்தன. இரு பக்கங்களும் ஒன்றையொன்று போர்த்தயாரிப்பு நடத்திவருவதாக குற்றம் சாட்டின.
ஆகஸ்ட்7-8 இரவில் ஜோர்ஜிய ஆயுதமேந்திய படைகள் விமான மற்றும் பீரங்கித் தாக்குதலை பிரிவினை நாடும்
பகுதிமீது நடத்தியது. அதில் தலைநகரான டிசிகின்வலி மீது குண்டுவீச்சும் அடங்கும். இதில் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜோர்ஜியாவின் தரைப்படைக்கு மாநிலத்தின் மீது கட்டுப்பாட்டை மீட்குமாறு உத்தரவிடப்பட்டது.
தெற்கு ஒசேஷியா மீதான தாக்குதலுக்கு மாஸ்கோ விடையிறுக்க முற்பட்டது. அங்கு
அதன் இராணுவ பிரசன்னம் மிகஅதிகமாக இருந்தது. ஐந்து நாட்கள் கடுமையான போருக்குப் பின்னர் ரஷ்ய படைகள்
ஜோர்ஜிய துருப்புக்களை வெளியே துரத்தி ஜோர்ஜியாவிற்குள்ளும் நுழைந்தன. இந்த பதிலடியால் திணறிப்போன
ஜோர்ஜிய படைகள் பின்வாங்கியதில், ரஷ்ய துருப்புக்கள் குறுகிய காலத்தில் போடி, கோரி ஆகிய நகரங்களை
ஆக்கிரமித்தன.
ஆரமபத் தாக்குதலுக்கு இத்தகைய பாரிய ரஷ்ய இராணுவ பிரதிபலிப்பு ஜோர்ஜிய
அரசாங்கத்திற்கும், அதன் வாஷிங்டன் ஆதரவாளர்களுக்கும் வியப்பை அளித்தது. ஜோர்ஜியாவின் ஜனாதிபதி மிகைல்
சாகேஷ்வில்லி அமெரிக்காவிடம் இருந்து அவருடைய அரசாங்கம் பெற்றிருந்த ஆதரவு தெற்கு ஒசேஷியாவை மீண்டும்
ஜோர்ஜியக் கட்டுப்பாட்டிற்குகள் கொண்டு வருவதற்கு போதுமானது என்று நினைத்திருந்தார். ரஷ்யா ஒசேஷியாவின்
உதவிக்கு வந்தால் வாஷிங்டன் தன்னுடைய உதவிக்கு வரும் என்றும் கணக்கிட்டார்.
ஆனால் அமெரிக்காவிற்கும் ரஷ்ய துருப்புக்களுக்கு இடையே நேரடி இராணுவ
மோதலை எதிர்கொள்ளும் தன்மை வந்த நிலையில் வாஷிங்டன் தன் ஆதரளாளருக்கு முழு இராணுவ ஆதரவைக்
கொடுக்க மறுத்துவிட்டது. ஆயினும்கூட, அரசியல்வாதிகளும் அமெரிக்க செய்தி ஊடகமும் ரஷ்யாவை கண்டித்ததற்கு
இடையே அமெரிக்கா ஜோர்ஜியாவின் கருங்கடல் பகுதிக்கு ஒரு கடற்படை பிரிவை அனுப்பி வைத்தது.
மனிதாபிமான தலையீடு என்ற போர்வையில், அமெரிக்க ஆறாம் கடற்படையின்
தலைமை கப்பலான
USS Mount Whitney,
ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் உள்ள முக்கிய போர்க்கப்பலான
Moska விற்கு அருகே
நகர்த்தப்பட்டது. அது அப்பகுதியில் கிரெம்ளினால் நிறுத்தப்பட்டிருந்தது. ஜோர்ஜியாவினுள் மேலும் செல்ல
மாஸ்கோ விரும்பவில்லை அல்லது வாஷிங்டனுடனான போர்மூளும் அபாயத்தையும் விரும்பவில்லை என்ற செய்தி
தெளிவாயிற்று.
இப்பூசலின்போது நூற்றுக்கணக்கான சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர்,
அல்லது காயமுற்றனர். இரு பக்கங்களும் குடிமக்கள் மீது இழைத்த கொடுமைகள் பற்றி பல தகவல்கள்
வெளிவந்தன. இன்றும்கூட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
போர் முடிந்ததற்கு பின்னர் தெற்கு ஒசேஷியாவும் மற்றொரு பிரிந்த ஜோர்ஜிய
பகுதியான அப்காசியாவும் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவித்தன. இதை மாஸ்கோ மற்றும் நிக்கரகுவா
அரசாங்கங்கள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. கிட்டத்தட்ட 8.000 ரஷ்ய ஆயுதப் படைகள் இரு பகுதிகளிலும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
சாகேஷ்வில்லி ஜோர்ஜிய தலைநகரான டிபிலிசியில் பெரும் எதிர்ப்புக்களை
எதிர்கொண்டார். எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதலை அவர் நடத்திய விதம் பற்றியும் அவருடைய
சர்வாதிகார ஆட்சியையும் கண்டித்தனர்.
2003 ல்
சாகேஷ்வில்லி ஜனாதிபதி பதவியை "ரோசா வண்ணப் புரட்சி" என்று அழைக்கப்பட்ட நிகழ்வின் மூலம் வென்றார்.
இது அமெரிக்க ஏற்பாட்டில் நடந்த அரசியல் ஆட்சி மாற்றம் ஆகும். இதன் நோக்கம் வாஷிங்டனின் நலன்களை
முன்னெடுக்கும் ஒரு வலுவான அமெரிக்க சார்புடைய அரசாங்கம் காகசஸ் பகுதியில் அங்கு நிறுவப்பட வேண்டும்
என்பதாகும்.
1991 ல்
ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்தபின், அமெரிக்கா, ஜோர்ஜியாவை தன்னுடைய ஆதரவு
நாடாக்குவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் வெளியுறவு மந்திரியான
எடுவார்ட் ஷேவர்ட்நாட்ஷேயின் அரசாங்கம் (அவர்தான் ஜோர்ஜியாவின் ஜனாதிபதியாக 1995ல் இருந்து அவரை
2003ல் சாகேஷ்வில்லி அகற்றியவரை இருந்தார்), அமெரிக்காவுடன்
நட்புறவை வளர்க்க
விரும்பியது. ஆனால் மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே அவர் ஊசலாடியமை அமெரிக்காவினால்
ஏற்கப்படமுடியாதிருந்தது. ஜோர்ஜியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய செல்வாக்கிற்கு மாற்றாக வாஷிங்டன்
"ரோசா வண்ணப் புரட்சியை" தோற்றுவித்தது.
தெற்கு ஒசேஷியா பற்றிய போர் மத்திய ஆசியாவில் இருக்கும் பரந்த எரிசக்தி
இருப்புக்கள் மீது மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி விளைவு ஆகும். எரிசக்தி
இருப்புக்களில் பெரும்பாலானவை காகசஸ் பகுதி மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சாகேஷ்வில்லியின் அரசாங்கம் அமெரிக்காவிடம் இருந்து சாதாரண மற்றும் இராணுவ உதவியாக பில்லியன் கணக்கான
டாலர்களை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஜோர்ஜிய ஆயுதப் படைகளில்
நிலைத்து பயிற்சி கொடுக்கின்றனர். வாஷிங்டன் கொடுக்கும் ஊக்கத்தில், சாகேஷ்வில்லி, அமெரிக்கத்
தலைமையிலான நேட்டோ இராணுவ கூட்டிலும் உறுப்பினர் அந்தஸ்தை நாடியுள்ளார். இதற்கு மாஸ்கோ பெரும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
தன்னுடைய பங்கிற்கு ரஷ்ய உயரடுக்கு ஜோர்ஜியா உட்பட அதன் "அருகில் இருக்கும்
வெளிப்பகுதிகள்மீது" தன் செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முற்பட்டுள்ளது. 1991க்கு முன்பு இரு நூற்றாண்டுகள்
தொடர்ச்சியாக மாஸ்கோவினால் ஆளப்பட்டுவந்த பகுதியில் ரஷ்ய பிரசன்னம் உறுதியாக பெருகிய முறையில்
இருப்பது அமெரிக்காவின் நோக்கங்களை குறுக்கறுத்து போருக்கான சூழ்நிலையை தோற்றுவித்தது.
போர் முடிந்து ஓராண்டாகியும் நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இம்மாத ஆரம்பத்தில் ரஷ்யாவும் ஜோர்ஜியாவும் ஒன்றை ஒன்று தெற்கு
ஒசேஷியாவிற்கும் ஜோர்ஜிய பகுதிக்கும் குறுக்கே இருக்கும் எல்லைப் பகுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்
சாட்டின. இப்பகுதி டிபிலிசியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. ஜோர்ஜிய இராணுவம் பீரங்கிகள் மூலமும் எறி குண்டுகள்
மூலமும் தெற்கு ஒசேஷியாவை தாக்கியதாக மாஸ்கோ குற்றம்சாட்டி, ரஷ்ய துருப்புக்கள் "தம்மிடமுள்ள அனைத்து
சக்திகள், வழிவகைகள்" மூலம் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டிபிலிசி அரசாங்கம், ஜோர்ஜிய கிராமங்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியாக
ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் எல்லைச் சாவடிகளை பகுதிக்குள் அதிகமாக கொண்டுவந்துள்ளது
என்றும் கூறியுள்ளது. இருபுறத்தில் இருந்தும் 225 கண்காணிப்பாளர்களை பிரிவினை நாடும் பகுதிகளில் எல்லைக்கு
அருகே நிறுத்தலாம் என்று உரிமைகொண்ட ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு பிரிவின் பிரதிநிதிகள் இரு பக்கக்
கூற்றுக்களையும் உறுதிபடுத்தவில்லை.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாரக் ஒபாமா, புஷ்
நிர்வாகம் மற்றும் அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளர் ஜோன் மக்கைன் இருவருடைய ரஷ்ய ஆக்கிரமிப்பை
கண்டித்த கருத்துக்களை பலமான முறையில் எதிரொலித்தார். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஒபாமா
மாஸ்கோவுடன் நயமான உறவுகளைத்தான் கூடுதலாக கொள்ள விரும்பியுள்ளார்.
ரஷ்யாவுடன் தன்னுடைய நிர்வாகம் உறவுகளை "மறு சீராக்க முற்படும்" என்று
அறிவித்த பின்னர், ஒபாமா மாஸ்கோவிற்கு ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவுடனும் பிரதம மந்திரி விளாடிமீர்
புட்டினுடனும் பேச்சுக்களை நடத்த சென்றிருந்தார். இப்பேச்சுக்களின்போது அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவின்
"சிறப்பு நலன்கள்" முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜா மற்றும் உக்ரைனில் இருந்ததை ஒப்புக்
கொண்டதாக பரந்த அளவு தகவல்கள் வந்துள்ளன. இதற்கு ஈடாக மாஸ்கோ ஆப்கானிஸ்தானில் அமெரிக்க
தலைமையில் நடக்கும் போருக்கு ஒத்துழைப்பும் ஈரான் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்பும் தருவதாக
ஒப்புக் கொண்டுள்ளது.
பல அமெரிக்க இராஜதந்திர ஆதாரங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளது
போல், இதன் பொருள் நேட்டோவில் சேர்வதற்கு கொடுக்கப்பட்ட ஜோர்ஜிய மற்றும் உக்ரைனிய விண்ணப்பங்கள்
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கிரெம்ளின் அமெரிக்க விமானப் படைகள் ஆப்கானிஸ்தானிற்கு
செல்லும்போது ரஷ்ய வான்பகுதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. மாஸ்கோவிற்கு ஒபாமா வருவதற்கு
சற்று முன்னர் இந்தச் சலுகை மெட்வெடேவினால் அறிவிக்கப்பட்டது.
ஒரு வாய்ப்பு கிடைப்பதை கண்டதும், ரஷ்ய உயரடுக்கு வாஷிங்டனுடைய
"பயங்ரவாதத்திற்கு எதிரான போரில்" கூட்டு கொள்ள முற்படும் விதத்தில், தன்னுடைய நலன்களை காகசஸ்
பகுதியில் ஆக்கிரோஷமாக தொடர முனைந்துள்ளது. ஒபாமாவுடன் நடந்த உச்சிமாநாட்டிற்கு பின்னர்,
மெட்வெடேவ் தெற்கு ஒசேஷியாவிற்கு ஆத்திரமூட்டும் விதத்தில் பயணித்தார். அது சர்வதேச சட்டத்தின்படி
ஜோர்ஜியாவின் கீழ்தான் உள்ளது. அங்கு அவர் ரஷ்யாவின் இராணுவப் படைகளை மேற்பார்வையிட்டு இரு
மாநிலங்களும் சுதந்திரம் அடைவதற்கு தன் ஆதரவை உறுதிபடுத்தினார். ஐ.நா.மன்றத்தின் கண்காணிப்பு குழு
மோதலுக்கு உட்பட்ட பகுதி பற்றிய திட்டம் ஒன்றை ரஷ்ய தடுப்பதிகாரம் மூலம் நிராகரித்தது. அடுத்த ஐந்து
ஆண்டுகள் தங்கள் எல்லை ரோந்துப் படையுடன் ரஷ்யாவுடன் இணைந்து ரோந்து புரியவேணடும் என்னும் தெற்கு
ஒசேஷிய, அப்காஜிய அரசாங்கத்தின் வேண்டுகோளையும் சமீபத்தில் ஏற்றது.
ஆப்கானிஸ்தான், வடக்கு பாக்கிஸ்தானில் நடக்கும் போரில் கவனம்
செலுத்துவதற்காக, வாஷிங்டன் மாஸ்கோவிற்கு சில சலுகைகளை காகசஸில் கொடுத்திருக்கும்போது, இப்பகுதியின்
மீது தன் மேலாதிக்கத்தை செலுத்த வேண்டும், இதன் எண்ணெய், எரிவாயு செல்லும் பாதைகளை தன்வயப்படுத்த
வேண்டும் என்ற தன் நோக்கத்தை அது கைவிட்டுவிடவில்லை.
இந்த வாரம் அமெரிக்க செனட்டின் வெளியுறவு ஐரோப்பிய துணைக்குழுவின் முன்
நிர்வாகம் கொடுத்த சாட்சியத்தில் இது தெளிவாகியுள்ளது. செனட்டர்களுக்கு உரையாற்றியபோது, ஐரோப்பா,
யூரேசியாவின் உதவி வெளிவிவகார செயலாளராக இருக்கும் பிலிப் கோர்டன் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு $1
பில்லியனை ஆகஸ்ட் 2008 போருக்கு பின்னர் கொடுத்துள்ளதாக கூறினார்.
குழுவிடம் கோர்டன் "ரஷ்யாவுடன் நம் உறவுகளை முன்னேற்றுவிக்கும் நம் முயற்சிகள்
ஜோர்ஜியாவுடன் நம் கொள்கையே எதிரிடையாக பாதிக்குமா என்று சிலர் வினா எழுப்பியுள்ளனர். துணை
ஜனாதிபதியின் விடை ஐயத்திற்கு இடமின்றி உள்ளது. "ஜோர்ஜியாவே, அமெரிக்கர்களாகிய நாங்கள் உங்களுடைய
பாதுகாப்பான, சுதந்திரமான, ஜனநாயக மற்றும் மீண்டும் ஒன்றுபடுவதற்கான பயணத்தில் துணைநிற்போம்." என்று
கூறி துணை ஜனாதிபதி ஜோசப் பிடன் கடந்த மாதம் டிபிலிசிக்கு பயணித்தபோது விடுத்த அறிக்கையை கோர்டன்
மேற்கோளிட்டு காட்டினார்.
ஜோர்ஜியா பற்றி ஒபாமாவின் வெள்ளை மாளிகை கொண்டுள்ள அடிப்படை நிலைப்பாட்டையும்
கோர்டன் கூறினார்: "ஜோர்ஜியாவின் சுதந்திரம், இறையாண்மை, நிலப்பகுதியின் உறுதிப்பாடு, அதன் சர்வதேச
அங்கீகாரம் பெற்ற எல்லைகள் ஆகியவற்றிற்கு வலுவான ஆதரவை நாங்கள் கொடுக்கிறோம். செல்வாக்கு மண்டல
( Sapheres of
influence) கருத்தை
நாங்கள் நிராகரிக்கிறோம். ஜோர்ஜியாவும் பிற நாடுகளும் தங்களுக்கு பிடித்த நட்புறவுகளை தேர்ந்தெடுக்கும்
உரிமைக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதே நேரத்தில் ஜோர்ஜியா ஒரு மூலோபாய பொறுமை காட்ட வேண்டும்,
இன்னும் மோதலை தவிர்க்க இயன்றதை செய்ய வேண்டும், அரசியல், பொருளாதார சீர்திருத்தத்தை தீவிரமாகத்
தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்."
இத்தகைய நிலைப்பாடு சர்வதேச பாதுகாப்பு உதவி செயலாளர் அலெக்சாந்தர்
வெர்ஷ்போவின் சாட்சியத்தில் வலியுறுத்தப்பட்டது; அவர் கூறியது: "ஜோர்ஜிய அரசாங்கத்திற்கு ரஷ்யாவுடன்
மோதும் எத்தகைய மூலோபாயமும் பலன் தராது, தோல்வியைத்தான் கொடுக்கும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இதற்கு நீண்ட கால அணுகுமுறையும் மற்றும் ஜோர்ஜியாவின் பங்கில் மூலோபாய சுய தடுப்பும் வேண்டும்."
வேறுவிதமாகக் கூறினால், வாஷிங்டன் ஜோர்ஜியாவை பொறுத்தவரை காலம் கனியக்
காத்திருக்க தயாராக உள்ளது. ஆனால் ஜோர்ஜியாவை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆக்கிரோஷத்துடன் தன்
முக்கிய மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்க வேண்டிய தேவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் உள்ளது.
இந்தப் போக்கை தக்க வைக்க உதவும் வகையில், வெள்ளை மாளிகை
அமெரிக்க-ஜோர்ஜிய மூலோபாய கூட்டுக்குழுவை ஜூன்மாதம் நிறுவியது. இதற்கு அமெரிக்க துணை வெளிவிவகார
செயலாளர் ஜேம்ஸ் ஸ்ரைன்பேர்க்கும் ஜோர்ஜியாவின் வெளியுறவு மந்திரியும் தலைமை வகிக்கின்றனர்.
குழுவிடம், அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேஷியா மறு இணைப்பிற்கு இராணுவ
விருப்புரிமை இல்லை" என்று கோர்டன் கூறினாலும், அமெரிக்கா ஜோர்ஜிய இராணுவத்திற்கு தொடர்ந்து ஆதரவு
கொடுத்து, அதை நேட்டோவுடன் இணைக்க முயல்கிறது.
ஜோர்ஜியாவின் "நேட்டோ நோக்கங்களுக்கு" அமெரிக்கா ஆதரவளிக்கிறது என்ற
நிர்வாகத்தின் நிலைப்பாட்டை கோர்டன் வலியுறுத்தினார். மேலும் விரைவில் இந்தக் கூட்டில் அது உறுப்புரிமை
பெறுதல் கடினம் என்றாலும், கிரெம்ளினிடம் இருந்து எதிர்ப்புக்கள் வந்தபோதிலும்கூட ஜோர்ஜியா நேட்டோவுடன்
ஒத்துழைப்பது "சமாதானத்திற்காக பங்காளித்தனம்" மூலமும், கூட்டு இராணுவ பயிற்சிகள் மூலம் தொடரும்.
இதைத்தவிர வாஷிங்டன் இரு நாடுகளின் "நீண்ட கால இருதரப்பு இராணுவ உறவுகளை" உறுதிப்படுத்திக் கொள்ளும்
என்றும் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்களுக்கு துருப்புக்கள் அனுப்பி பங்குகொண்டதற்கு டிபிலிசிக்கு
நன்றியையும் கோர்டன் மறுபடி வலியுறுத்தினார்.
அமெரிக்கா, ஜோர்ஜிய இராணுவத்திற்கு போருக்கு பின்னர் "புதிதாக ஆயுதங்கள்"
கொடுக்கவில்லை என்று வெர்ஷ்போ செனட்டர்களிடம் கூறினார். "பேராபத்து கொடுக்கும் இராணுவ உதவி" என்று
வகைப்படுத்தியுள்ளதை அமெரிக்கா வழங்கவில்லை என்றாலும், அது "பாதுகாப்புப் பிரிவுகள், உதவியளிக்கும்
பாதுகாப்புப்பிரிவு சீர்திருத்தம் மற்றும் மூலோபாய, படிப்பினை அஸ்திவாரங்களுக்கு உதவும். இவை தேவையான
பயிற்சி, கல்வி, பகுத்தறிவார்ந்த கட்டுமான வடிவமைப்பு மற்றும் அவற்றை பெறுவதற்கு உதவும்" என்பது வெர்ஷ்போவின்
கருத்து ஆகும்.
பல மில்லியன் டாலர்கள் பென்டகனில் இருந்தும் அமெரிக்க சர்வதேச உதவி
அமைப்பின் மூலம் ஜோர்ஜிய போலீசுக்கு கொடுக்கப்படுவதற்கு முன் திசைதிருப்பப்படும்.
பல பில்லியன் டாலர்கள் உதவி இருந்தும், அவற்றுள் பெரும்பாலானவை
இராணுவத்திற்கு சென்றாலும், ஜோர்ஜியா ஒரு நம்பிக்கையான சார்பான நாடு என்று கருதப்படவில்லை. ஆகஸ்ட்
2008 போர் சாகேஷ்விலிக்கு அரசியல், இராணுவப் பேரழிவு ஆகும். பிரிந்து செல்லும் பகுதிகளில் தன்
நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து முன்னேற்றுவிக்க அப்போர் ரஷ்யாவிற்கு உதவியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் போரின் விளைவாக எதிர்கொண்டுள்ள நிலைமை பற்றி
கோர்டன் அப்பட்டமாக கூறினார்: "ரஷ்ய படையெடுப்பு நடந்த ஓராண்டிற்கு பின்னர் மாஸ்கோ தெற்கு ஒசேஷியா,
அப்காஜியா மீது தன்னுடைய பிடியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய படைகள் இரு
பகுதிகளிலும் உள்ளன. இது போருக்கு முந்தைய தரங்களை விட அதிகமாகும். ஏப்ரல் மாதம் ரஷ்யா பிரிவினை பகுதிகளுடன்
ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி ரஷ்யா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவற்றின் நிர்வாக பகுதிகளைப்
பாதுகாக்கும். ரஷ்யாவிடம் பொருளாதார ரீதியாக தங்கியிருக்கும் நிலைமை தெற்கு ஒசேஷியாவிற்கும் அப்காஜியாவிற்கும்
அதிகரிக்கும்."
வாஷிங்டன் "மூலோபாயப் பொறுமை" விளையாட்டை காகசஸில் கொண்டிருக்கையில்,
சாகேஷ்விலியிடம் அளவற்ற பொறுமையை அது கொண்டிருக்கவில்லை. ஜோர்ஜிய ஜனாதிபதிக்கு ஒபாமா நிர்வாகம்
தொடர்ந்து ஆதரவைக் கொடுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் நாட்டில் தனக்கு செல்வாக்கை திரட்டும் புதிய
சக்திகளை உருவாக்க முயல்கிறது. டிபிலிசிக்கு கடந்த மாதம் சென்றிருந்தபோது, துணை ஜனாதிபதி பிடென் ஜோர்ஜிய
எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். அவர்கள் தாங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு வாஷிங்டன் ஆசியை ஆர்வத்துடன்
நாடினர்.
"2003 ரோசா வண்ணப் புரட்சிக்கு பின்னர் ஜோர்ஜியா செயல்படுத்தியிருக்கும்
குறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்களை" பாராட்டினாலும், கோர்டன் டிபிலிசி அரசாங்கம் "அரசியல்
மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" என்று எச்சரித்தார். வாஷிங்டனின் இப்பகுதியில் உள்ள
திட்டங்களுக்கு சாகேஷ்வில்லி தடை என்று நிரூபணம் ஆனால், இத்தகைய விமர்சனங்கள் "ஆட்சி மாற்றம்" என்னும்
அழைப்புக்களாக பெருகும்.
செனட் துணைக்குழு ஜோர்ஜியா பற்றிக் கேட்டறிந்தபோது அது அமெரிக்காவை
முழுமையாக நம்பியிருக்கும் நாடு என்ற சித்திரம் வெளிப்பட்டது; வாஷிங்டன் அதன் இராணுவம், போலீசிற்கு பயிற்சி
கொடுக்கிறது. அரசாங்க ஓய்வூதியங்கள், உள்கட்டுமான மறுகட்டமைப்புக்கள் என நாட்டின் பொதுக் கடமைகள்
நிறைவேற்றப்பட பணம் கொடுப்பதுடன் அதன் வெளியுறவு கொள்கையை நிர்ணயிக்கின்றது. சோவியத் ஒன்றியத்தில்
இருந்து பிரிந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனபோதிலும், ஜோர்ஜியா பெயரளவிற்குத்தான் சுதந்திரம்
கொண்டுள்ளது. இப்பொழுது மாஸ்கோவிற்கு பதிலாக வாஷிங்டன் ஆணை இடுகிறது. |