World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Mounting popular opposition to the war in Afghanistan

ஆப்கானிஸ்தானுடனான போருக்கு பெருகும் மக்கள் எதிர்ப்பு

Stefan Steinberg and Barry Grey
7 August 2009

Back to screen version

ஐரோப்பாவில் தொடர்ச்சியான பல சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ யுத்தம் நடத்தப்படுவதற்கு பெருகிய எதிர்ப்பை காட்டியுள்ளன.

ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு ஜேர்மனிய மக்களிடையே ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் துருப்புக்கள் இருப்பது பற்றிய எதிர்ப்பு 85 சதவிகிதம் என காட்டுகிறது. பிரான்சில் ஒரு சமீபத்தி கருத்துக் கணிப்பின்படி போருக்கு 55 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் பிரெஞ்சு துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு ஆதரவாக உள்ளனர் என்றும் தெரிகிறது.

பிரிட்டனில் சமீபத்திய ComRes கருத்துக் கணிப்பின்படி பாதிக்கும் மேலான மக்கள் (52 சதவிகிதம்) உடனடியாக துருப்புக்கள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்; 64 சதவிகிதத்தினர் பிரிட்டிஷ் துருப்புக்கள் "எவ்வளவு விரைவில்" திரும்பப் பெற முடியுமோ அவ்வளவு விரைவில் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரவை மந்திரி கிம் ஹோவல்ஸ் சமீபத்தில் போருக்கு எதிரான கருத்து அலை இப்பொழுது உறுதியாக மாறியுள்ளது என்று எச்சரித்தார். "பொதுமக்கள் இதைத் தொடர விரும்பவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்." என்று அவர் BBC இடம் கூறினார்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸும் கடந்த மாதம் ஒரு பேட்டியில் "ஈராக்கின் நீண்ட கடினமான அனுபவத்திற்கு பின்னர் நாம் முன்னேற்றம் காணவில்லை என்றால், எவரும் நீண்ட கால தேக்கத்தை விரும்பவில்லை. துருப்புக்கள் களைத்துவிடும், அமெரிக்க மக்களும் பெரிதும் களைத்துள்ளனர்." எனக்கூறினார்.

ஆனால் மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்விற்கு அரசாங்கங்களின் கொள்கைகளிலும், அதேபோல் முதலாளித்துவ அரசியல் நடைமுறைக்குள்ளேயே இருக்கும் எதிர்கட்சிகளிலும் எவ்வித வெளிப்பாடும் கிடைக்கவில்லை.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் இராணுவக் குறுக்கீடு போரினால் உருக்குலைக்கப்பட்டிருக்கும் நாட்டில் தொடரும் என்றுதான் விரும்புகின்றன. உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தின் வடிவமைப்பிற்குள் போரை ஈவிரக்கமற்ற தன்மையுடன் தொடராததற்காக அவர்களுடைய அரசியல் எதிர்ப்பாளர்களால் குறைகூறப்படுகின்றனர்.

நேட்டோவின் புதிய தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்ட சில நாட்களுக்குள் திடீரென ஆப்கானிஸ்தானிற்கு விஜயம் செய்த டேனிஷ் பிரதம மந்திரி Anders Fogh Rasmussen, வெறுக்கப்படும் ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கார்சாயுடன் தோன்றி, அறிவித்தார்: "நாங்கள் இங்கு நிலைத்திருந்து நம் பணி முடியும் வரை உங்களுக்கு ஆதரவைத் தருவோம்..." கடந்த மாதம் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் ஆப்கானிஸ்தானில் வெற்றி என்பது "ஒரு நீண்ட கால திட்டம்" என்று கூறிய கருத்துக்களை தொடர்ந்து Rasmussen உடைய கருத்துக்கள் வந்துள்ளன.

மக்களுடைய போருக்கு எதிரான விருப்பத்தை பற்றி உத்தியோகபூர்வ அரசியல் கொண்டிருக்கும் பொருட்படுத்தாததான அகந்தைத் தன்மை முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதிச் சரிவின் வெளிப்பாடாகும். பெரும்பலான மக்களுடைய வாக்குரிமை இவ்விதத்தில் சிதைந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் ஏற்கனவே ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போரை விட இரண்டு ஆண்டுகள் கூடுதலாக நடந்து வருகிறது. எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய ஆசியாவில் மூலோபாய சிறப்பு பெற்றுள்ள ஒரு நாட்டின்மீது இன்னும் அப்பட்டமான முறையில் பெரும் சக்திகள் தமது கட்டுப்பாட்டை நிறுவ முற்படும் இழிவான, மிருகத்தமான முயற்சியைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

2001 ல் அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போர் முதலில் ஒபாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவிற்கு பதிலடி என்ற முறையில் நியாயப்படுத்தப்பட்டது. அவர்கள்தான் நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு என்று கருதப்பட்டனர். பில் லேடன் மற்றும் அவருடைய உயர்மட்ட துணை அதிகாரிகளை அமெரிக்காவிற்கு வெளியேற்றுவதை நிராகரித்தது என்ற அடித்தளத்தில் அகற்றப்படுவதற்காக தாலிபான் ஆட்சி குறிவைக்கப்பட்டது.

உண்மையில், அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பானது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு இருந்த முன்கூட்டிய திட்டத்தை செயல்படுத்த 9/11 தாக்குதல்கள் போலிக் காரணமாக அதற்கு உதவியது. தற்போதைய போர், குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு CIA சோவியத் எதிர்ப்பு முஜாஹிதீனுக்கு நிதியளிக்கத் தொடங்கியதின் உச்சக்கட்டம் ஆகும்; அதன் உறுப்பினர்களில் பின் லேடனும் அடங்கியிருந்தார்.

வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் நீண்ட காலமாக பில் லேடனை வேட்டையாடிப் பிடிப்பதற்கு போரை நியாயப்படுத்தவதை நிறுத்திவிட்டன. அவர் அதிகமாக இப்பொழுது குறிப்பிடப்படுவதில்லை. மாறாக எல்லா நோக்கங்களுக்கும் எதிரியாக இருப்பது தாலிபான் ஆகும். ஆப்கானிஸ்தானிலும், பாக்கிஸ்தானிலும் வெளிநாட்டு தலையீடுகள் அனைத்தையும் எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரே வலையில் கொண்டுவர இப்பெயர் பயன்படுகிறது.

மேலும் ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு ஒப்பான போர் என்ற புஷ் சகாப்த கூற்றை ஒபாமா நிர்வாகம் குப்பையை ஒதுக்குவது போல் ஒதுக்கிவிட்டது. ஒபாமா பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒரு வாரத்தில், கேட்ஸ் ஒரு செனட் குழு கூட்டத்தில் ஆக்கிரமிக்கம்மட்ட நாட்டில் "மத்திய ஆசிய ஆட்சிப்பிரதேசத்தை" நிறுவும் நோக்கத்தைக் அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்று கூறினார்.

எப்படிப் பார்த்தாலும், காபூலில் இருக்கும் கைப்பாவை அரசாங்கம், நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு உயர் பதவியளித்தல், ஊழல் ஆகியவற்றிற்கு பெயர் போன ஜனாதிபதியின் தலைமையில்தான் உள்ளது.

ஜேர்மனிய பசுமைவாதிகள் போல் போருக்கான "இடது" ஆதரவாளர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், ஆப்கான் மகளிரை தாலிபானின் கொடுங்கோன்மையில் இருந்து விடுவிக்க என்பதாகும். ஆனால் உண்மையில் ஆப்கானிய மகளிரின் நிலை ஆக்கிமிப்பின்கீழ் மோசமாகிவிட்டது.

மே மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ஆப்கானிய மகளிர் அமைப்பான RAWA "ஒபாமா நிர்வாகத்தின் "புதிய" மூலோபாயம் என்று அழைக்கப்படுவது "கூடுதலான கொலைகளையும், இன்னும் கூடுதலான கொடூர அடக்குமுறையையும் தான்" கொண்டுவந்துள்ளதுடன், "புஷ்ஷின் போர் வெறியைவிட அதிகம் என்றுதான் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது." என குறிப்பிட்டது.

போரை ஆரம்பிப்பதற்காக இருந்த சட்டபூர்வ மற்றும் சித்தாந்தரீதியான போலிக்காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்ட ஒபாமா நிர்வாகம் அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர வேறு எதையும் கொண்டிருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் இரண்டில் இருந்தும் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டால் அன்றி இப்பகுதிகள் அமெரிக்க உள்நாட்டின்மீது புதிய தாக்குதல்களுக்கு தளமாக செயல்புரியும் என்பதே அது. உண்மையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை ஆப்கான், பாக்கிஸ்தானிய மக்களுக்கு எதிராக நடத்தும் குற்றங்கள் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பதிலடித் தாக்குதல்கள் நடத்துவதைத்தான் அதிகரிக்கும்.

உண்மையில் எஞ்சியிருப்பது ஒரு காலனித்துவ ரீதியான போர் ஆகும். ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்குத்தான் இது உதவுகிறது. அதே போல் அத்துடன் இணைந்துள்ள வறுமையும் கொடுங்கோன்மையும் நீடிக்கின்றன.

அரசியல் நடைமுறை மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்வின் எந்த வெளிப்பாட்டையும் ஒதுக்கி நிற்கும் நிலையில், புஷ்ஷிற்கு எதிராக போர் எதிர்ப்பு வகைகளை அமைத்த மத்தியதர வர்க்கத்தின் "இடது குழுக்களும்" மற்றும் வெளியீடுகளும் ஒபாமாவின்கீழ் நடக்கும் போர் பற்றி தங்கள் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதால் ஆளும்தட்டு ஊக்கமடைந்துள்ளது.

ஈராக்கில் 140,000 அமெரிக்க துருப்புக்களை ஒபாமா நிறுத்தி வைத்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கு காலவரையின்றி நிறுத்த திட்டமிட்டிருக்கையில், அவர் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க இராணுவ வன்முறையை விரிவுபடுத்தி, அதை பாக்கிஸ்தானுக்குள்ளும் பரப்புகிறார். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மக்கள் பெரிதும் போர் எதிர்ப்பு காட்டிவருவதை மீறி நடக்கிறது. ஆனால் போர் எதிர்ப்பு உணர்வு தக்க முறையில் அமைப்பு பெற்று வெளிப்படவில்லை. மத்தியதரவர்க்க எதிர்ப்பு அரசியலுக்கு நீண்ட காலமாகத் தலைமை பெற்று வந்த சமூக-அரசியில் அடுக்கு ஒபாமா தேர்தவினை பயன்படுத்தி தமது இயக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்திய முகாமுடன் இணைத்து விட்டது. மறைமுகமாகவும், சில நேரம் வெளிப்படையாகவும் இது ஒபாமாவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.

ஏகாதிபத்திய போருக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுப் புள்ளி வைக்க நேர்மையுடன் விரும்புபவர்கள் அனைவருக்கும் முக்கியமான அரசியல் படிப்பினைகள் இவற்றில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 2003 பெப்ருவரி மாதம் மில்லியன் கணக்கான மக்கள் உலகெங்கிலும் தெருக்களுக்கு வந்து ஈராக்கிற்கு எதிராக உடனடியாக வரவிருந்த போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வதேசப்போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக அது இருந்தது.

ஆனால் வெகுஜன எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த தலைவர்களால் பல முதலாளித்துவக் கட்சிகளுக்கு பின் திசைதிருப்பப்பட்டது. அவை போரை எதிர்த்ததாக கூறியதுடன் "போர் எதிர்ப்பு" பிரிவுகளை தங்களிடம் கொண்டிருந்தன. அமெரிக்காவில் போருக்கு மக்கள் எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியினரை காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் தேர்ந்தெடுப்பதற்கு திசை திருப்பப்பட்டது.

ஐரோப்பாவில், அமைதிவாத அமைப்புக்கள், இடது குழுக்கள், Attac இயக்கம் மற்றும் ஜேர்மனியில் Party of Democratic Socialism (இடது கட்சியின் முன்னோடி) ஆகியவை சமூக ஜனநாயக கட்சிகளிலும் பசுமைவாதிகளிடையேயும் இத்தைகைய போலித்தோற்றங்களை ஊக்குவிக்க முற்பட்டுள்ளன. ஜேர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இவை ஈராக் போர் பற்றி மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.

போர் எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அரசியல்ரீதியாக அடிபணியச்செய்து கைவிடப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர்கள் பின்னர் ஏகாதிபத்திய போர் முகாமில் அதிகம் சேர்ந்துவிட்டனர்.

இதில் இருந்து என்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்? முதலில்: மத்தியதர வர்க்க சந்தர்ப்பவாதக் குழுக்கள் கைவிட்டு ஓடிவிட்டமை என்பது தொழிலாள வர்க்கம் இன்னும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் முக்கிய சமூக சக்தியாக ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக வெளிப்படும் என்று அர்த்தப்படுகின்றது. இரண்டாவது: போருக்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தை போருக்கு மூலகாரணமாக இருக்கும் ஆளும் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ முறைக்கும் எதிரான அனைத்து பிரிவுகளையும் எதிர்க்கும் விதத்தில் சுயாதீனமாக திரட்டுவதின் மூலம்தான் முடியும். போருக்கு எதிரான போராட்டத்திற்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பு பெருகிய முறையில் தொழிலாள வர்க்கம் பெரு மந்த நிலைக்குப் பின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் பாதிப்பிற்கு எதிராக போரிடும் நேரத்தில் தெளிவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved