World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Iranian election crisis continues amid growing US threats

பெருகும் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு இடையே ஈரானிய தேர்தல் நெருக்கடி தொடர்கிறது

By James Cogan
5 August 2009

Back to screen version

நாட்டின் உயரடுக்கிற்குள் இருக்கும் பிளவுகள் மற்றும் அமெரிக்க பொருளாதார, இராணுவ அச்சுறுத்தல்களால் கூடுதலாகியுள்ள நிலையில், இன்று மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஈரானிய இஸ்லாமிய குடியரசிற்கு ஜனாதிபதியாக அவருடைய இரண்டாம் பதவிக்காலத்திற்கு உறுதிப் பிரமாணம் செய்யப்படுவார்.

ஈரானிய ஆளும் வட்டங்களில் இருக்கும் வேறுபாடுகள் திங்கள் அன்று நடைபெற்ற நிகழ்வில் நாட்டின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி முறையாக அஹ்மதிநாஜேட்டை ஜூன் 12 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதை அடையாளமாகக் காட்டின.

ஒரு முன்னோடியில்லாத செயலாக, நாட்டின் சக்திவாய்ந்த பிரமுகர்கள் சிலர் நிகழ்வை புறக்கணித்தனர். முன்னாள் ஜனாதிபதிகள் அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சஜானி, முகம்மது கட்டாமி, தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் மீர் ஹோசைன் மெளசவி மற்றும் மஹ்தி கரெளபி, ஈரானிய ஆட்சியின் நிறுவனர் அயத்துல்லா ருஹோல்லா கோமேனியின் பேரரும் மிக முக்கியமான வாரிசுமான ஹாசன் கோமேனி ஆகியோர் இதில் அடங்கியிருந்தனர்.

நிகழ்ச்சியின் பங்கு ஏற்க மறுத்தவிதத்தில் அஹ்மதிநெஜாட்டின் சட்டபூர்வதன்மையை நிராகரிக்கும் விதத்தில் டஜன் கணக்கான சற்றுகுறைந்ந முக்கியத்துவம் வாய்ந்த ஆனாலும் செல்வாக்கு படைத்த மதகுருமார்கள், அரசியல்வாதிகள், அரசாங்க செயலர்கள் ஆகியோர் இருந்தனர்.

ஜூன் 12 வாக்கெடுப்பை தொடர்ந்து, அமெரிக்காவுடனும் மற்றும் முக்கிய சக்திகளுடனும் நல்லிணக்கத்திற்கு வாதிட்டு, தடையற்ற சந்தை பொருளாதார மறுசீரமைப்பிற்கும் வாதிட்ட மெளசவியின் ஆதரவாளர்கள் பல வாரங்கள் எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தேர்தல்முடிவுகள் தில்லுமுல்லு மூலம் வந்தவை என்றும் புதிய தேர்தல்கள் வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

திங்களன்று நடந்த புறக்கணிப்பு, அயத்துல்லா காமேனி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் அழைப்பு, அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை மீறி எதிர்க்கட்சி பிரச்சாரம் தொடரும் என்பதை தெளிவாக்கியுள்ளது. முந்தைய தினம் எதிர்ப்புக்களின் போது முன்னாள் துணை ஜனாதிபதி முகம்மது அலி அப்டாஹி உட்பட கைது செய்யப்பட்டிருந்த கிட்டத்தட்ட 100 பேர் ஒரு தொலைக்காட்சி விசாரணையின் முன் "ஒப்புதல் வாக்குமூலம்" கொடுக்க நிறுத்தப்பட்டு அவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு விசுவாசத்தை அறிவித்தனர்.

எதிர்த்தரப்பு குற்றச் சாட்டுக்கள் ஒரு புறம் இருந்தாலும், மிகப் பெரிய தேர்தல் மோசடி இருந்தது என்பதற்கான நம்பகத்தன்மை இருந்த சான்றுகள் ஏதும் இல்லை. அஹ்மதிநெஜாட் 60 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை வென்றார். குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவரிடையே. ஏற்கனவே உயர் வேலையின்மை மற்றும் பெருத்த பணவீக்கத்தை பொறுத்துக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான ஈரானியர்கள் மெளசவியின் கோரிக்கைகளான சமூகச் செலவில் பெரும் வெட்டுக்கள் என்பது தங்கள் வாழ்க்கைத்தரங்கள் இன்னும் மோசமாக்கும் என்றுதான் அஞ்சினர். அவர்கள் அஹ்மதிநெஜாட்டிற்கு "குறைத்த தீமை" என்ற கருத்தில் வாக்களித்தனர். தேர்தலுக்கு பின்னர் நடந்த எதிர்ப்புக்களில் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் கலந்து கொள்ளவில்லை.

மெளசவியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் வசதியுடைய சமூக அடுக்குகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தடையற்ற சந்தை முறைக்கொள்கைளில் இருந்து நலன்களை அடையப் பார்க்கின்றனர். அதேபோல் மெளசவியின் தெளிவற்ற ஜனநாயக சீர்திருத்தம் பற்றிய உறுதிமொழிகளை விவரம் தெரியாமல் நம்பும் இளைஞர் பிரிவும் ஆதரவு கொடுக்கிறது. ரப்சஞ்ஜானி குடும்பத்தின் ஆதரவும் மெளசவிக்கு உள்ளது. அது பல பெருநிறுவனங்களையும், மிக அதிக அளவு நிலங்களையும், இதைத்தவிர ஈரானிய வணிகங்களில் பல பிரிவுகளையும் கொண்டுள்ளது. சர்வதேச சந்தைகள், கடன்கள், மூலதனங்கள் ஆகிவற்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை அவர்கள் முடிவுக்குகொண்டுவர விரும்புகின்றனர்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி ஈரானிய ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து மெளசவியின் வெளிநாட்டு, உள்நாட்டு செயற்பட்டியிலின் முக்கிய கூறுபாடுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றன. இதில் அவற்றிற்கு விரும்பத்தக்க விளைவு ஈரானின் செழித்த எண்ணெய், எரிபொருள், உள்நாட்டுச் சந்தை மற்றும் கற்ற, குறைவூதிய தொழிலாளர் பிரிவை அடைவதற்கான வாய்ப்பு மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈரானின் உதவியும் ஆகும்.

ஈரானுக்குள் நடக்கும் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் ஒரு முக்கிய காரணி ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு ஆகும். இன்றைய பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்கு தெஹ்ரானில் உள்ள முக்கிய சந்தைகளிலும் மற்ற நகரங்களிலும் எதிர்த்தரப்பு குழுக்கள் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. எதிர்த்தரப்பின் செயற்பட்டியலை சுருக்கமாகக் கூறிய தோல்வியுற்ற வேட்பாளர் மஹ்தி கரெளபி ஒரு ஸ்பெயின்நாட்டு செய்தித்தாளிடம் நேற்று கூறினார்: "இந்த அரசாங்கம் சட்டபூர்வமானது என நாங்கள் நினைக்கவில்லை. எதிர்ப்புக்களை தொடர்ந்து செய்வோம். இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மாட்டோம். இதற்கு கெடுதல் செய்ய மாட்டோம், ஆனால் அதன் நடவடிக்கைகளை குறைகூறுவோம். அதற்கு எந்த விதத்திலும் உதவமாட்டோம்."

ஆட்சிக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் முக்கிய சர்வதேச அமைப்புக்கள், ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை பெறுவதற்கான வாய்ப்புக்களை துண்டிக்கும் என்று தகவல் கொடுத்துள்ளது.

இத்தகைய பெரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஈரானுக்குள் பெரும் மோதலை ஏற்படுத்தக்கூடும். ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு என்றாலும், சுத்திகரிப்புத் திறன் அதனிடம் குறைவாக இருப்பதுதால் அது தற்பொழுது அதன் உள்நாட்டு பெட்ரோல், எரிபொருள் தேவைக்கு 40 சதவிகிதம் இறக்குமதியை நம்பியுள்ளது. இறக்குமதி இல்லாவிடில் நாடு மண்டியிட நேரிடும்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான ஒருதலைப்பட்ச தாக்குதல் நடத்துவதற்கு செப்டம்பர் மாதம் ஐ.நா.பாதுகாப்புக் குழுக் கூட்டங்கள் முடியும் வரை காத்திருக்கும் என்று வெள்ளை மாளிகை இஸ்ரேலிய அரசாங்கத்துடன் உடன்பாடு கொண்டிருப்பதாக டைம்ஸ் உறுதிப்படுத்தப்படாத கூற்றுக்களை வெளிப்படுத்தியுள்ளது;

தாமதப்படுத்துவதற்கான நோக்கம் ஐ.நா. ஒப்புதலை இன்னும் கூடுதலான பொருளாதார தடைகளை ஈரான்மீது சுமத்தி அதையொட்டி அந்த ஆட்சி பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்த வசதிகளை வாஷிங்டனுக்கு வழங்குவதற்காகும். இதனால் ஈரானிய எதிர்த்தரப்பு நலன்களை பெறும் என்பதாகும். இதற்கு மாறாக, இஸ்ரேலிய தாக்குதலானது பெரிய சக்திகளுக்கு எதிரான அஹ்மதிநெஜாட்டினதும் காமெனியினதும் ஜனரஞ்சகவாத எதிர்ப்பின் பின்னால் நாட்டின் மக்களை உறுதியாக இணைத்துவிடும்.

ஐ.நா. கூட்டத் தொடர் வருவதற்கு முன், "பேரழிவு ஆயுதங்கள்" என்ற ஈராக் பற்றிய வெறிக்கூச்சலை போல், பெயரிடப்படாத "மேலை உளவுத்துறை ஆதாரங்கள்", பிரிட்டிஷ் தளத்தை கொண்ட டைம்ஸிற்கு இம்மாதம் ஈரானிடம் 12 மாதங்களுக்குள் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் திறன் உள்ளது என்ற ஆதாரமற்ற கூற்றுக்களைத் தெரிவித்துள்ளன.

ஆனால் ஐ.நா.பாதுகாப்புக் குழு இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்காது என்றுதான் தோன்றுகிறது. சீன மற்றும் ரஷ்ய அரசாங்கங்கள், அணுப்பிரச்சினை ஈரானில் அமெரிக்க செல்வாக்கை உயர்த்துவதற்கு நடத்தப்படும் வேட்டை விவகாரம் என்பதையுணர்ந்துள்ளதால், அவை தீர்மானம் எதையும் தடுப்பதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திவிடக்கூடும்.

மேலும் ஐ.நா. ஒப்புதல் பெற்றோ அல்லது ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளோ என்றாலும், அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் நடைமுறைப்படும். பலமுறையும் ஈரான் அத்தகைய அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தன்மைக்கு விடையிறுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது; இதன்வழியாகத்தான் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் இருந்து ஏராளமான எண்ணெய் உற்பத்திப் பொருட்களை ஆசியாவிற்கும் பிற சந்தைகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.

ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் அதன் அணுசக்தித் திட்டம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதாகக் கூறியிருந்தாலும், தெஹ்ரானில் உள்ள அரசியல் நெருக்கடி அத்தகைய பேச்சுவார்த்தைகள் நடப்பது கடினம் எனக் காட்டுகின்றன. ஈரான்மீது முடக்கும் தன்மையுடைய தடைகளைச் சுமத்தும் அமெரிக்க முயற்சிகள் அல்லது ஈரானிய அணுசக்தி நிலையங்கள்மீது இஸ்ரேலியத் தாக்குதல் என்பது மத்திய கிழக்கை மற்றொரு பேரழிவு தரக்கூடிய போரில் மூழ்கடிக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved