World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Subordinating science to religion

Obama names evangelical Christian to run National Institutes of Health

அறிவியலை சமயத்திற்கு அடிபணியவைத்து

ஒபாமா அங்கலிக்கன் கிறிஸ்தவரை தேசிய சுகாதார நிலையத்தினை நடத்த நியமிக்கிறார்

By Patrick Martin
30 July 2009

Back to screen version

இந்த வார ஆரம்பத்தில் ஜனாதிபதி ஒபாமா தேசிய சுகாதார நிலையத்தின் (National Institute of Health) இயக்குனராக பிரான்ஸிஸ். எஸ். கோலின்ஸ் பெயரை அறிவித்தார். ஒரு தேர்ந்த உயிரியல் வல்லுனர் மற்றும் மனித மரபணு திட்டத்தின் (Humane Genome Project) என்னும் சிறப்பு அமைப்பின் தலைவராக இருந்தாலும், கோலின்ஸ் அதிகரித்த வகையில் அங்கலிக்கன் திருச்சபையின் வெளிப்படையான ஆதரவாளர் ஆவார். சமீபத்தில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டால் மனிதகுலத்தின் அறநெறி பரிமாணங்களை விளக்க இயலாதவை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

கோலின்ஸை தேர்ந்தெடுத்ததில், தங்கள் வெளிப்படையான மதக்கருத்துக்கள் பூசலை தோற்றுவித்திருக்காது என்ற தன்மையை கொண்டிருக்கும் பல தேர்ச்சி பெற்ற அறிவியல் வல்லுனர்களை ஒபாமா ஒதுக்கிவிட்டார். இந்த முடிவு மதவாத வலசாரிகளுடன் வேண்டுமென்றே இணைந்துபோவதற்கு ஊக்கம் கொடுத்த விதத்தில் அமைந்துள்ளது.

2004ம் ஆண்டில் கோலின்ஸ் கடவுளின் மொழி (The Language of God) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். கோலின்ஸ் புத்தகத்தின் தலைப்பு அவருக்கு ஜனாதிபதி பில் கிளின்டன் மனித மரபணுவை (Gnome) வெற்றிகரமாக ஆராய்ந்து வரையப்பட்டதற்கு கொடுத்த வரவேற்பின்போது கொடுத்தார். ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை போல் ஒரு தெற்கு பாப்டிஸ்ட்டான கிளின்டன் "இன்று கடவுள் வாழ்வை தோற்றுவித்த மொழியை கற்கிறோம்."என அறிவித்தார்.

"அறிவார்ந்த வடிவமைப்பு" (Intelligent design) என்ற பெயரில் வந்துள்ள படைப்புவாதிகளின் போலித்தன அறிவியல் கருத்துக்களை எதிர்க்கையில், பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கும் சமயத்திற்கும் இடையே முரண்பாடுகள் இல்லை என்று கோலின்ஸ் வாதிட்டார். கடவுள் உலகை 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவித்து பரிணாமத்தை இயங்கவைத்தார், பின்னர் கிறிஸ்து கதை போல் அவ்வப்பொழுது மனித வரலாற்றில் தலையிட்டார் என்றும் கூறினார்.

மனித இயல்பில் சில கூறுபாடுகள் டார்வினின் கருத்தால் விளக்கப்பட முடியாதவை என்று கோலின்ஸ் கூறினார். "தன்னலமற்ற பிறருக்கு உதவும் இயல்பு என்பது பரிணாமவாதிகளுக்கு ஒரு முக்கிய சவால்" என்று அவர் வாதிட்டார்.

புத்தகம் வெளிவந்து சற்று பின்னரும், மனித மரபணு திட்டம் மனிதனின் பரம்பரை கட்டமைப்பை வெற்றிகரமாக வரைபடமாக்கிய நான்கு வருடத்தின் பின்னரும் கோலின்ஸ் புஷ்ஷினால் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெற்றார்.

அரசாங்கம் நடத்திய மரபணு திட்டத்தில் இருந்து 2007ல் கோலின்ஸ் விலகி, தன்னுடைய கூற்றான உயிரியல் பரிணாம வளர்ச்சி இறைவனின் விருப்பம் என்பதை பிரச்சாரம் செய்வதற்கு BioLogos Foundation எனும் அமைப்பை நிறுவினார். புஷ் நிர்வாகம் அறிவியல் ஆராய்ச்சியில் சில பகுதிகளை ஒடுக்கியது பற்றி அவர் கருத்து வேறுபாடுகள் கொண்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செயற்கைமுறை கருக்கட்டல் மருத்துவமனைகளில் ஒதுக்கப்படும் மனித கருக்களை நூறாயிரக்கணக்கில் எடுத்து தண்டுக்கல (Stem Cell) ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார். ஜனநாயக வேட்புமனுத் தாக்குதல் மற்றும் பொதுத் தேர்தலில் ஒபாமாவிற்கு கோலின்ஸ் ஆதரவு கொடுத்தார்.

கோலின்ஸ் முழு தகுதியுடைய விஞ்ஞானி, மனித மரபணு பற்றிச் செய்தது போல் முக்கிய ஆய்வு முயற்சியை திறமையுடன் நடத்தக்கூடியவர் என்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால் இந்த முன்னேற்றங்கள் மதக் கருத்துக்களுக்கு முரண்பாடான விதத்தில் வெளிவந்தவை; அக்கருத்துக்களுடன் அவர் பகிரங்கமாக தொடர்பும் கொண்டிருந்தார்.

தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனர் என்ற முறையில் கோலின்ஸ் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் இருந்து வேறுபட்ட பங்கை வகிப்பார். உலகிலேயே மிக முக்கியமான, மிக அதிக நிதி பெற்ற அறிவியல் அமைப்பிற்கு அவர் தலைமை தாங்குவார். அடுத்த 14 மாதங்களில் தேசிய சுகாதார அமைப்பு 4 பில்லியன் டாலர் பணத்தை பேதெஸ்தா நகரிலுள்ள மேரிலாந்து வளாகத்தில் ஆய்வுப்பணிகளுக்காக செலவழிக்கும். மேலும் அது 37 பில்லியன் டாலரை ஆராய்ச்சி உதவித் தொகைகளுக்காக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் கொடுக்கும்.

ஹார்வர்டில் இருக்கும் பரிசோதனை முறை உளவியல் நிபுணர் Steven Pinker எழுதினார்: "தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனராக பிரான்ஸிஸ் கோலின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி எனக்கு தீவிரக் கவலைகள் உள்ளன. பொது அறிவியல் நிர்வாகிகளுக்கு கடுமையான மத பரிசோதனை வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கருத வேண்டாம்; அல்லது விசுவாசமான கிறிஸ்துவராக இருப்பது தகுதியானதல்ல என்றும் கூறவில்லை. ஆனால் கோலின்ஸைப் பொறுத்தவரையில், இது தனி நம்பிக்கை பிரச்சினை அல்ல. பொது பாதுகாப்புதன்மை சம்பந்தமானதாகும். தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனர் பணம் செல்லும் வகையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்துவத்தினர் அல்லர். ....ஆணோ, பெண்ணோ, அவர் அறிவியலின் பொது முகம் ஆகும்; நாட்டின் அறிவியல் முக்கியத்துவத்தின் முக்கிய அரங்கை கட்டுப்படுத்துபவர். இவர் காங்கிரஸுக்கு சாட்சியம் அளிப்பார், முன்னுரிமைகளை நிர்ணயிப்பார், பேச்சாளர்கள், குழு உறுப்பினர்களை நியமிப்பார், பல இடங்களிலும் அமெரிக்கா மற்றும் உலகில் உயிரியில் மருத்துவ ஆய்வின் அடையாளமாகக் கருதப்படுவார். அவ்விதத்தில் கோலின்ஸின் பல வாதிடும் அறிக்கைகள் ஆழ்ந்த மன உளைச்சலைக் கொடுக்கின்றன."

கோலின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது பொதுவாக பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தால், மதத்திற்கு புகழாரம் செலுத்தும் அதே நேரத்தில் படைப்புக் கோட்பாட்டிற்கு எதிராக வளர்ச்சிப் பரிணாமத்தை காக்கும், கருக்கலைப்பு உரிமை மீதுள்ள தடைகளை எதிர்ப்பவர், அதே நேரத்தில் தண்டுக்கல ஆய்வையும் நடத்தும் தனி நபரை தேர்ந்தெடுத்தது ஒபாமாவின் புத்திசாலித்தனமான உத்தி என்று பாராட்டப்பட்டுள்ளது.

"அறிவார்ந்த வடிவமைப்பு" கோட்பாட்டிற்கு குறிப்பாக ஆதரவு திரட்டுபவர்களில் ஈடுபட்டுள்ள சிலரைத் தவிர கிறிஸ்துவ அடிப்படைவாதிகளும் கத்தோலிக்க குழுக்களும் இந்த தெரிந்தெடுத்தலை பாராட்டினர்.

கடந்த சில ஆண்டுகளில், கோலின்ஸ் அதிகரித்த வகையில் மதத்திற்கு வாதிடுபவராக ஆகிவிட்டார். BioLogos ல் அவருடைய தளத்தில் (blog) "அறிவியலும் பரிசுத்தமும்'' (Science and the Sacred) என்ற தலையங்கத்தில் கோலின்ஸ் பின்வருமாறு எழுதினார்: "நம்மைப் போன்ற விலங்குகளை தோற்றுவிக்க பரிணாமம் என்ற கருவியை கடவுள் பயன்படுத்தினார் என்று வைத்துக் கொள்ளுவோம். இந்த நிகழ்வுபோக்கு அதிக மூளை உடைய உயிரினங்கள், சிந்திக்கும் திறன் பெற்றிருக்கும், நம் தோற்றங்களை பற்றி வினா எழுப்பும் திறனைப் பெற்றிருக்கும், அண்டத்தை பற்றிய உண்மையைக் கண்டறியும், வாழ்விற்கு அர்த்தம்கொடுக்கும் ஒருபொருளைப் பற்றி சுட்டிக்காட்டுபவற்றை கண்டுபிடிக்கும் என அறியப்பட்டது. நாம் எப்படி அதை செய்திருப்போம் என்று கூறுவதற்கு நாம் யார்?''.

பிரிட்டனின் இயற்கை அறிவியல் வல்லுனர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் இந்த வாதத்தை டைம்ஸ் வெளியிட்ட, கோலின்ஸுடன் நடத்திய அறிவியலும் சமயமும் என்ற விவாதத்தில் எள்ளி நகையாடியுள்ளார். அவர் கூறினார்: "இது ஒரு பெரும் வெற்றுத்தனம் என்று நினைக்கிறேன். கடவுள் வாழ்வை தோற்றுவித்து, மனிதர்களையும் படைக்க விரும்பினால், உயிர்வாழ்க்கை ஆரம்பிக்க முன்னர் 10 பில்லியன் ஆண்டுகள் காத்திருந்து, பின்னர் மனிதர்கள் வழிபட, பாவம் செய்ய இன்னும் ஏனைய மத விடயங்களில் மக்கள் ஆர்வம் கொள்ள இயலுமானவரைக்கும் மேலும் 4 மில்லியன் ஆண்டுகள் காத்திருந்தார் என மிக அசாதாரண முறையில் சுற்றிவளைத்து அவர் அதைச் செய்திருப்பது விந்தையாக உள்ளது."

அவருடைய பல அறிக்கைகளும் கோலின்ஸ் அறிவியல் அறிவிற்கு முழு மதிப்பையும் கொடுக்கிறார் என்ற விதத்தில் சொல்லாட்சியைப் பயன்படுத்தினாலும், சில விழிப்புணர்வு இல்லாத கணங்களில் அவர் பைபிளின் வார்த்தைகளுக்கு நெருக்கமான கருத்துக்களை கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் பில் மாஹெர் எடுத்த Religulous என்னும் மத-எதிர்ப்பு திரைப்படத்தில், கோலின்ஸ் ஒரு பேட்டியில் தோன்றி புதிய ஏற்பாடு (New Testament) "தாங்கள் நேரில் பார்த்தவற்றை எழுதிய சாட்சிகளின் சான்றுகள்" என்று விளக்குகிறார்.

ஆனால் 19ம் நூற்றாண்டில் கிடைத்த எழுத்துப்பதிவுகள் பற்றிய அறிவார்ந்த பகுப்பாய்வு புதிய ஏற்பாட்டை (New Testament) எழுதியவர்கள் உண்மையில் வரலாற்று நசாரத்தில் (Nazareth) ஏசு மறைந்த பின் நூறாண்டுகளுக்கு பின் எழுதினர் என்று உறுதியாக நிருபித்துள்ளன. ஆரம்பகால கிறிஸ்தவ பிரிவுகளிடையே பலவித செவிவழிச் செய்தி மரபுகள் மற்றும் கோட்பாட்டு போக்குகள் என்று பிரதிபலித்தன என்பதை அவர்களுடைய அடிக்கடி முரண்பாட்டிற்குட்பட்ட கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எந்த குறிப்பிட்ட மத கருத்துக்கள் தேசிய சுகாதார அமைப்பு தலைவர் என்ற நியமிக்கப்பட்டவருக்கு இருந்தாலும், ஒபாமா தேர்ந்தெடுத்ததின் அரசியல் முக்கியத்துவம் வெளிப்படையானது. ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள், வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நலன்கள் மீது தாக்குதல் என கொள்கை இயற்றும் முக்கிய பகுதிகள் எல்லாவற்றிலும் இருப்பது போல் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் அதன் முன்னோடி குடியரசுக் கட்சியின் வலதுசாரியின் போக்கைத்தான் தீவிரமான முறையில் தொடர்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved