World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government rejects UN ceasefire call

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்காக ஐ.நா. விடுத்த அழைப்பை நிராகரித்தது

By K. Ratnayake
28 April 2009

Use this version to print | Send feedback

தீவின் வடக்கில் "மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்காக" ஐ.நா. விடுத்த அழைப்பை நிராகரித்த இலங்கை அரசாங்கம், குவிந்து வரும் சர்வதேச அழுத்தத்துக்கு ஒரு சிறிய சலுகை வழங்கும் வகையில், இராணுவம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனரக ஆயுதங்களை இனிமேல் பயன்படுத்தாது அல்லது விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தாது என நேற்று அறிவித்தது.

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று, "போர் நடவடிக்கைகள் முடிவை எட்டியுள்ளன" என்றும் "பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் ஏரியல் ஆயுதங்களையும் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றும் பிரகடனம் செய்தது. யுத்த நடவடிக்கைகள் "பணையமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை காப்பாற்றும் நடவடிக்கையாக" வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் நம்பகத் தன்மை கிடையாது. முன்னர் இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளை "பணையக் கைதிகளை காப்பாற்றும் உலகின் மிகப்பெரும் நடவடிக்கை" என மூடி மறைத்ததோடு அதிகரிக்கும் உயிரிழப்புக்களுக்கு புலிகள் பொது மக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்தியமையே காரணம் என மகிந்த இராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை இராணுவம் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்தனர்.

இந்த அறிக்கை, சுமார் 10 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு குட்டி கரையோரப் பிரதேசத்துக்குள் இராணுவம் கடுமையான விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. ஒரு மதிப்பீட்டின்படி இந்த சிறிய பிரதேசத்துக்குள் 50,000 பொதுமக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 6,432 சிவிலியன்கள் கொல்லப்பட்டும் 13,946 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில், இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களின் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற கூற்றைப் பொறுத்தளவில், அரசாங்கத்தின் அறிவித்தல் யுத்த நிறுத்தத்துக்கு சமமானது அல்ல என பாதுகாப்பு அமைச்சு உடனடியாக மறுத்ததோடு, இத்தகைய பொருள்விளக்கங்கள் "நகல் அறிக்கையை வெளிப்படையாக திரிபுபடுத்துவதாகும்" என பிரகடனம் செய்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இராணுவம் தனது குற்றவியல் நடவடிக்கையை தொடரும். "பொதுமக்களை காப்பாற்றுதல்" என்ற போர்வையில், மேலும் ஆண்களும் பெண்களும் மற்றும் சிறுவர்களும் கொல்லப்படுவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கனரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியாது. யுத்த வலயத்துக்கு அருகில் சுயாதீன பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அரசாங்கம் முன்னதாகவே வடக்கில் இருந்து சகல தொண்டு நிறுவனங்களையும் வெளியேறக் கட்டளையிட்டது. பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் எந்தவொரு செய்தியும் வடிகட்டப்படுவதோடு வெளிப் பிரதேசங்களில் இருந்து வரும் செய்திகளும் புலிகளுக்கு சார்பான பிரச்சாரம் என்ற அரசாங்கத்தின் கண்டனத்திற்கு உள்ளாகின்றன.

வாரக் கடைசியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹொம்ஸ், அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை மறுத்ததைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நேற்று செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தும் அறிவித்தல் "நேர்மையாக கடைப்படிக்கப்படும்" என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதே சமயம், யுத்த வலயத்துக்கு ஐ.நா. மனிதாபிமான குழுவை அனுமதிக்க அரசாங்கம் மறுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சனிக்கிழமை புலிகள் அறிவித்த "ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்துக்கு" அரசாங்கம் காட்டிய பிரதிபலிப்பு, பொதுமக்களின் உயிர் தொடர்பான அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது. பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ, இந்தப் பிரகடனத்தை ஒரு "நகைச்சுவை" என வகைப்படுத்தினார். "அவர்கள் எங்களோடு சண்டையிடவில்லை; அவர்கள் எங்களிடமிருந்து ஓடுகிறார்கள். யுத்த நிறுத்தமொன்று தேவையில்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவ்வளவுதான்," என அவர் மேலும் தெரிவித்தார்.

வெளியேறும் சிவிலியன்களை புலிகள் தடுப்பதாக தொண்டு நிறுவனங்களிடமிருந்து செய்திகள் கிடைக்கும் அதே வேளை, இலங்கையின் வடக்கில் மனிதப் பேரழிவுக்கான பொறுப்பு முழுவதும் இராஜபக்ஷ அரசாங்கத்தையே சாரும். 50,000 துருப்புக்களுடன் பிரதேசத்தை முற்றுகையிட்ட இராணுவம், பாதுகாப்பு வலயத்துக்குள் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுத்தது. பொதுமக்கள் மீதான இராணுவத்தின் விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின்படி யுத்தக் குற்றத்திற்குச் சமனாகும்.

புலிகளிடம் இருந்து "விடுவிக்கப்பட்ட" சகலரும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற உண்மை, தமிழ் பொதுமக்களை அரசாங்கம் அலட்சியம் செய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி, வுவனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய நகரங்களைச் சூழ 38 பிரதேசங்களில் 150,000 மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். இடையில் வந்துகொண்டிருப்பவர்களோடு சேர்த்து 200,000 என்ற உயர்ந்த எண்ணிக்கையை தொண்டு நிறுவனங்கள் காட்டுகின்றன.

நேற்று வெளியான ஐ.நா. முகவர் அமைப்பு ஒன்றின் ஊடக அறிக்கை: "முகாம்களில் கூட்டம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். ஒரு பகுதியான வவுனியாவுக்கு அருகில் உள்ள மெனிக் பார்மில், சாதாரணமாக நான்கு அல்லது ஐந்து பேருக்கு அமைக்கப்பட்ட தங்குமிடங்களை எட்டு முதல் பத்து வரையானவர்கள் பங்கிட்டுக்கொள்கின்றனர். முகாம்களில் உள்ள, உள்ளூரில் இடம்பெயர்ந்த பலருக்கு, அல்லது அகதிகளுக்கு கொதிக்கும் வெய்யிலிலும் தங்குமிடம் கிடையாது," என தெரிவிக்கின்றது.

மன்னார் மற்றும் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது கட்டிடங்களும் மேலும் நிலமும் தேவை என யூ.என்.எச்.சீர்.ஆர். கோரியுள்ளது. திருகோணமலையில், 20,000 பேரை (5,000 குடும்பங்களை) தங்கவைக்க நூறு ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்தவர்கள் பல நாட்கள் சாப்பிடவில்லை என்றும் போசாக்கின்மை அதிகமாக காணப்படுவதாகவும் தொண்டு நிறுவன ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். சுகயீனமுற்றவர்களையும் காயமடைந்தவர்களையும் எடுத்துச் செல்வதற்கு போதுமான போக்குவரத்து இல்லாததோடு மருத்துவ ஊழியர்களுக்கும் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் போல் மக் மாஸ்டர், "காயமடைந்தவர்களை சமாளிக்க சகல ஆஸ்பத்திரிகளும் போராடிக்கொண்டிருக்கின்றன" என ஏப்பிரல் 27 அன்று சுட்டிக் காட்டினார். ஏப்பிரல் 23 அன்று, வவுனியா ஆஸ்பத்திரியில் நடக்கும் அவசர சிகிச்சைகளின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. அதாவது ஐந்து நாட்களில் முதல் முறையாக அவசர சிகிச்சைகளின் எண்ணிக்கை 100 விட குறைவாக இருந்துள்ளது. ஏப்பில் 24 அன்று, இந்த எண்ணிக்கை 18 ஆகக் குறைந்துள்ளது. இதற்கானக் காரணம் இராணுவம் அவசர நோயாளர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றியமையே ஆகும்.

"எலும்பு முறிவு, துப்பாக்கி ரவை காயங்கள் மற்றும் குண்டு வெடிப்பால் எற்பட்ட காயங்களுடன் வாட்டுகளில், கதவருகில் மற்றும் நிலத்திலும் இன்னமும் நோயாளர்கள் நிறைந்து போயுள்ளனர்... இன்னமும் சிகிச்சை தியட்டருக்குள் செல்ல முடியாமல் வாட்டுகளில் பலர் காத்திருக்கின்றனர். சிலர் 24 மணித்தியாலமாகக் காத்திருக்கின்றனர்," என மக்மாஸ்டர் தெரிவித்தார். 350 படுக்கைகள் உள்ள மன்னார் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர், அங்கு 1,000 நோயாளர்களைக் கண்டார். சிலர் ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு வெளியில் கூடாரங்களில் இருந்தனர்.

மக்மாஸ்டர் மேலும் தெரிவித்ததாவது: "வவுனியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தென் மேற்கே உள்ள மெனிக் பார்முக்கும் இன்று நாம் சென்றோம். அங்கு இப்போது 100,000 இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். மேலும் அறைகளை அமைக்க புல்டோசர்கள் நிலத்தை துப்புரவு செய்துகொண்டிருந்ததோடு யுனிசெப் நூற்றுக்கணக்கான கூடாரங்களை அமைத்துக்கொண்டிருந்தது... வடக்கில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் மெனிக் பார்முக்கு வந்த ஒருவர் எங்களிடம் வந்து, 'என்னிடம் ஒன்றும் இல்லை, என்னிடம் ஒன்றும் இல்லை' எனக் கூறினார். அவர் அங்கு வெறுமனே அதிர்ந்து போய் நின்றவாறு 'என்னிடம் ஒன்றும் இல்லை' எனக் கூறினார்."

இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி பற்றி ஐ.நா மற்றும் பலவித பெரும் வல்லரசுகளும் பயனற்ற அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. "மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு" அமெரிக்கா ஆதரவளித்தது. யுத்தம் மற்றும் மனிதாபிமான நிலைமை தொடர்பாக கலந்துரையாட இன்று பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மெலிபன்ட் மற்றும் பிரான்ஸ் மற்றும் சுவிடனில் உள்ள அவரது சமதரப்பினரும் கொழும்புக்கு வரவுள்ளனர்.

"போர் நடவடிக்கைகளை நிறுத்தும்" இலங்கை அரசாங்கத்தின் சிடுமூஞ்சித்தனமான அறிவித்தலை மிலிபன்ட் நேற்று வரவேற்றார். "உண்மையில் காயமடைந்த பொதுமக்களின் அளவு சர்வதேச சமூகத்தை தீவிரமாக கவலையடையச் செய்துள்ளதோடு எந்தவிதமான நீண்டகால தீர்வுக்கும் முற்றிலும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது," என அவர் மேலும் தெரிவித்தார்.

2002 யுத்த நிறுத்தத்தால் தொடக்கி வைக்கப்பட்ட "சமாதான முன்னெடுப்புகளை" மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற இணைத் தலைமை நாடுகள் கூட்டமொன்றை நடத்திய பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முந்தைய யுத்த நிறுத்த எல்லைக்கு துருப்புக்களை திருப்பியழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருவதற்கு மாறாக, பாதுகாப்பு வலயத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுப்பதாக புலிகளை கண்டனம் செய்துள்ள அந்த அறிக்கை, "மத்தியஸ்தமான ஒரு மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை கையளிக்குமாறு" அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பகுதி தமிழ் புலி போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அரசியல் பேச்சுவார்த்தைக்கு வழி திறக்குமாறு அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த நாடுகளில் எதுவும், 2006 ஜூலையில் உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கி, பொதுமக்கள் மீதான தாக்கத்தைப் பற்றி முழு அலட்சியத்துடன் தாக்குதலை முன்னெடுத்தமைக்கு பொறுப்பான இலங்கை அரசாங்கத்தின் குற்றங்களை கண்டனம் செய்யவில்லை. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை இரகசியமாக ஆதரித்த "சர்வதேச சமூகம்" இராணுவத்தின் அட்டூழியங்கள் மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்களை பற்றி கண்டும் காணாமல் இருந்தன. 2008 ஜனவரியில் அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக கிழித்தெறிந்த போது, இந்த இணைத்தலைமை நாடுகள் மெல்லிய கண்டனத்தைத் தன்னும் வெளியிடவில்லை.

அண்மைய அறிக்கைகள் இலங்கையின் வடக்கில் தமிழ் பொதுமக்களின் நிலைமைக்கு எதுவும் செய்யப்போவதில்லை. மாறாக, தீவின் தமிழ் முதலாளித்துவ தட்டுக்கு குறைந்தபட்சம் மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையேனும் வழங்கும் வகையில், யுத்தத்துக்கு அரசியல் தீர்வு காணாவிட்டால், இனவாத பதட்ட நிலைமைகளும் அரசியல் ஸ்திரமின்மையும் தொடரும் என்பதையிட்டே "சர்வதேச சமூகம்" கவலை கொண்டுள்ளது. முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாய பங்காளியாகி வரும் அயல் நாடான இந்தியாவில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் காரணியாக இலங்கை உள்ளதையிட்டு குறிப்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அதே சமயம், புலிகளிடம் எஞ்சியுள்ள எதிர்த் தாக்குதல் பலத்தையும் இலங்கை இராணுவம் நசுக்குகின்ற ஒரு சந்தர்ப்பத்தில், முன்னேற்றம் காண்பதற்காக பெரும் வல்லரசுகள் தம்மை நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.