World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்குAhmadinejad speech provokes walkout at UN anti-racism conference அஹ்மதினெஜாட்டின் உரை ஐ.நா. இனவெறி எதிர்ப்பு மாநாட்டில் வெளிநடப்பை தூண்டுகிறது By Richard Phillips ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் ஐ.நா.இனவெறி எதிர்ப்பு பரிசீலனை மாநாட்டில் ஜெனீவாவில் திங்களன்று நடத்திய உரைக்கு வெறித்தனமான கண்டனங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து வந்தது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டது; நிகழ்ச்சியை ஒட்டி அதிக அளவில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். 2001ம் ஆண்டு முதல் ஐ.நா.வின இனவெறி எதிர்ப்பு மாநாட்டைப் புறக்கணித்தபின், ஜெனிவாவில் நடைபெற்ற மறு அழைப்புக் கூட்டத்திற்கு எதிராக இஸ்ரேல், பாலஸ்தீனிய மக்களை அது கடுமையாக அடக்குவது பற்றி ஐ.நா.வட்டங்கங்களுக்குள்ளே எந்த விமர்சனமும் வருவதைத் தகர்ப்பதற்கு உறுதியாக இருக்கிறது. இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகு ஜெனீவா மாநாட்டை "இஸ்ரேல்-எதிர்ப்பு" மாநாடு என்று கண்டித்து, மாநாட்டிற்கு முன் சுவிஸ் ஜனாதிபதியும் அஹ்மதிநெஜாட்டும் பேச்சுக்கள் நடத்தியதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்த இஸ்ரேலிய தூதரையும் விலக்கிக் கொண்டுவிட்டார். மற்ற இஸ்ரேலிய அரசியல்வாதிகள் ஈரானிய ஜனாதிபதியை ஹிட்லருடன் ஒப்பிட்டு, அவரை வரவழைத்ததற்காக ஐ.நா.வைத் தாக்கிப் பேசினர். ஐ.நா. அதன் உறுப்பு நாடுகள் அனைத்தின் தலைவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து பேச அழைத்திருந்தது; ஆனால் அஹ்மதிநெஜாட் ஒருவர்தான் பேச ஒப்புக்கொண்டவர் ஆவார். மாநாட்டிற்கு முன்னதாக, ஐ.நா.அதிகாரிகள் மாநாட்டு வரைவு தீர்மானத்தை திருத்தி இஸ்ரேல், சியோனிசம் பற்றிய குறிப்புக்களையும் அகற்றினர்; இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் பங்கு பெறுவதற்கு வசதியாக செய்யப்பட்டது. அதேபோல் இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனிய நாடுகள் பற்றி வேறு நிகழ்வுகள் அனைத்தையும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் இருந்து தடை செய்தனர். அதே நேரத்தில் இனவெறி எதிர்ப்பு அரசுசாரா அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு அமெரிக்கா பங்கு பெறுவதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்றும், முதல் கறுப்பு அமெரிக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொது உறவுகளை வளர்க்கும் தன்மையை அது கொண்டிருக்கும் என்றும் கோரியிருந்தன. இவை அனைத்தும் எந்தப் பயனையும் தரவில்லை. ஏப்ரல் 19ம் தேதி ஒபாமா வரைவு அறிக்கை "மறுக்கத்தக்க விதிகளை" கொண்டிருப்பதாகவும், இஸ்ரேலுக்கு எதிராக "விரோதப்போக்கை வெளிப்படுத்த அது பயன்படுத்தப்படலாம்" என்றும் கூறி நிகழ்ச்சியை அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கனடா, இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து, போலந்து மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கூட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவையும் அவ்வாறே அறிவித்தன. எப்படியும் திங்களன்று அஹ்மதிநெஜாட்டின் உரை, ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூனுடன் விவாதத்திற்கு பின்னர் காட்டம் குறைந்த தன்மையை பெற்றாலும், குறிப்பிடதக்க வகையில் எதையும் உள்ளடக்கவில்லை. ஈரானிய ஜனாதிபதி முந்தைய சியோனிச நாட்டின் தோற்றங்கள், அது பாலஸ்தீனிய மக்களை இடம் பெயரச் செய்தது ஆகியவை பற்றிக் கூறினார்: "இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மனித இன ஒழிப்பைப் பயன்படுத்தி, யூதர்களை காத்தல் என்ற பெயரில் சியோனிஸ்ட்டுக்கள் இராணுவ ஆக்கிரமிப்பு, படையெடுப்பு மூலம் ஒரு நாட்டின் மக்களை நாடற்றவராக்கினர். அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பல நாடுகளில் இருந்து இத்தப் பகுதிக்குள் பல குழு மக்களை மாற்றிக் கொண்டுவந்தனர்.அவர்கள் முற்றிலும் இனவெறி பிடித்த அரசாங்கத்தை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குள் கொண்டுவந்தனர்; ஐரோப்பிய இனவெறியின் சேதங்களுக்கு ஈடு கட்டுவதாக போலிக் காரணம் கூறி மிக ஆக்கிரமிப்பு மிகுந்த, இனவெறி பிடித்த ஒரு நாட்டை மற்றவர் பகுதியில், அதாவாது பாலஸ்தீனத்தில் கொண்டுவந்தனர். இந்த பிறர் நிலத்தை அபகரித்த ஆட்சிக்கு பாதுகாப்புக் குழு ஒப்புதல் கொடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் அதைக் காத்து, அது என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் பேசாமல் உள்ளது." அஹ்மதிநெஜாட் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும் குறை கூறினார்; இது அந்நாட்டின் ஆற்றல் வளங்களை "கொள்ளையடிக்க" நடத்தப்பட்டது என்றார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, ஐரோப்பிய ஆக்கிரமிப்பு நடத்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர் கேட்டார்: "சமாதானம், பாதுகாப்பு, செழிப்பு ஆகியவை இராணுவ குறுக்கீட்டிற்கு பின் ஆப்கானிஸ்தானிற்கு திரும்பிவிட்டனவா? அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போதைப்பொருள் உற்பத்தியை கூடத் தடுக்க முடியவில்லை; அவர்கள் அங்கிருக்கும்போது இது பல மடங்கு அதிகமாகிவிட்டது." இந்த உரை பார்வையாளர் இருப்பிடத்தில் இருந்து இடைவிடா கூச்சலுக்கு ஆளானது. கோமாளி தலைப்பாகையை அணிந்த, இரு சியோனிச ஆதரவு மாணவ எதிர்ப்பாளர்கள், பேச்சை பிறர் கேட்கமுடியாமல் உரக்கக்கூவினர்; 27 ஐரோப்பிய பிரதிநிதிகளில் 23 பேர் ஈரானிய ஜனாதிபதி இஸ்ரேல் பற்றிக் குறிப்பிட்ட உடன் வெளிநடப்பு செய்தனர். ஐ.நா.வில் அமெரிக்க துணை தூதராக இருக்கும் Alejandro Wolff பின்னர் ஈரானிய ஜனாதிபதியின் கருத்துக்கள், "தீமை நிறைந்தவை, வெறுப்பூட்டுபவை, தூண்டும் தன்மை வாய்ந்தவை" என்று கூறினார்; ஐரோப்பிய ஒன்றிய தலைமையை தற்பொழுது கொண்டுள்ள செக் அரசாங்கம் இந்த உரையைத் தொடர்ந்து தான் மாநாட்டைப் புறக்கணிப்பதாகக் கூறிவிட்டது. எந்த அரசியல் நம்பகத்தன்மையும் அஹ்மதிநெஜாட்டின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டியதில்லை. அவர் ஜனநாயக விரோத அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார்; சில நேரங்களில் வேண்டும் என்றே செமிடிச எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் வகையில் இன அழிப்பு நடந்ததா இல்லையா என்று கேள்விக்கு உட்படுத்துவார். ஆனால் இஸ்ரேல் தோற்றம் பற்றிய சுருக்கமான வரலாற்று பின்னணியை அவர் கொடுத்தது இத்தகைய விடையிறுப்பை கொடுத்தது என்பது மத்திய கிழக்கில் இருக்கும் அரசியல் பதட்டங்களின் ஆழம் பற்றிய குறிப்பைக் காட்டுகிறது. இஸ்ரேலோ அதற்கு ஆதரவான அமெரிக்காவோ இந்தப் பிரச்சினைகள் பற்றி எந்தப் பொதுவிவாதத்தையும் அனுமதிக்காது. அஹ்மதிநெஜாட்டின் அலங்காரச் சொற்கள் ஒருபுறம் இருக்க, அவருடைய கருத்துக்கள் ஒன்றும் பாலஸ்தீனிய மக்கள் பற்றி உண்மையாக கவலையினால் உந்துதல் பெறவில்லை; ஈரானிய அரசாங்கத்தின் நடவடிக்கை சியோனிசம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிராக உண்மையான போராட்டம் எதையும் நடத்தாது. அஹ்மதிநெஜாட் ஜூன் மாதம் தேசியத் தேர்தல்களை எதிர்கொள்ளுகிறார்; எண்ணெய் விலை குறைவு மற்றும் பெருகிய வேலையின்மை உள்ள நிலையில் அவருடைய உரை ஈரானில் உள்ள மக்களுக்காக வழங்கப்பட்டது. இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான், செளதி அரேபியா, பிற மத்திய கிழக்கு அரசாங்கங்கள் இவற்றிற்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்புகள் பற்றி அரேபிய மக்களிடையே உள்ள ஆழ்ந்த விரோதப் போக்கு, இவரை மக்களின் பிரதிநிதிகளாக இப்பகுதியில் காட்டிக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்கிறது என்பதையும் இவர் நன்கு அறிவார், அதே நேரத்தில் அஹ்மதிநெஜாட்டும் ஈரானிய முதலாளித்துவமும் ஒபாமா நிர்வாகத்துடன் மீண்டும் அரசியல் உறவுகளை நிறுவ உத்திகளைக் கையாண்டு வருகின்றன. உரை முடிந்த பின் ஈரானிய ஜனாதிபதி சுவிஸ் வணிகக் குழுமத்திடம் வாஷிங்டன் மீண்டும் ஈரானுடன் உறவுகளை நிறுவும் முயற்சிகள் பற்றித் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார். "அமெரிக்க கொள்கை மாறுதலை நாங்கள் வரவேற்கிறோம்; இவை அடிப்படையாகவும் தேவையாகவும் இருக்கும் என்றால். 30 அல்லது 60 ஆண்டு காலமாக ஆழ்ந்திருக்கும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு விட முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; ஆனால் இச்செயல் அனைத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்லும்." இந்த முயற்சிகள் அனைத்தும் இஸ்ரேலின் அக்கறை உடையவை; நாளேடான Haaretz இந்த வாரம், ஈரானுடன் உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கும் நாடுகள் இடையே அதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் கூடுதலான நிதியை ஒதுக்கியிருப்பதாக தகவல் கொடுத்துள்ளது. சியோனிச ஆட்சி ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னேற்றமான தயாரிப்புக்களை நடத்தியுள்ளது என்பது பரந்த அளவில் தெரிந்ததே; இதை புதிய அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் இந்த ஆண்டில் நடத்த உறுதியாக உள்ளனர். அஹ்மதிநெஜாட்டைப் போலவே ஐ.நா.மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் அரசியல் தலைவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கெடுதல் செய்யாத ஏகாதிபத்திய எதிர்ப்பு வனப்புரையை கையாண்டனர்; அவை தங்கள் மக்களிடம் இருந்து உள்நாட்டு அரசியல் எதிர்ப்பைத் திசை திருப்பும் முயற்சியாகும். ஏப்ரல் 21ம் தேதி பிரதிநிதிகள் ஒரு 143 அம்ச தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்; அதில் இனவெறிக்கு எதிரான போராட்டம், சிறுபான்மையினர் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம், சமய அடிப்படையில் மக்களை தலையாட்டவைத்தல் கூடாது என்பது (இஸ்லாமிய நாடுகளின் அடிப்படைக் கோரிக்கை) மற்றும் 2001ல் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகள் மீண்டும் வலியுறுத்தப்படல் ஆகியவை இருந்தன. ஐ.நா. அதிகாரிகள் புதிய தீர்மானத்தை ஒரு வரலாற்று மைல்கல் என்று பாராட்டுகையில், இக்கூட்டத்தில் இருந்து வெளிப்படுவது எதுவும் பாலஸ்தீனிய மக்களை எதிர்கொண்டுள்ள நிலைமையையோ மத்திய கிழக்கு இன்னும் பல இடங்களில் அடக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நிலைமையையோ மாற்றப் போவதில்லை. இனவெறிக்கு ஆதாரம் முதலாளித்துவ இலாப முறையிலேயே உள்ளது--அந்த முறைதான் ஐ.நா.வினாலேயே ஆதரிக்கப்பட்டு கூடியிருந்த அனைத்துப் பிரதிநிதிகளாலும் காக்கப்படுகிறது. 2001 டர்பன் மாநாடு நடந்த சில வாரங்களுக்குள் அமெரிக்க அரசாங்கம் அதன் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதை கட்டவிழ்த்து ஆப்கானிஸ்தான் மீதும் பின்னர் ஈராக் மீதும் படையெடுத்து, அரசாங்கம் ஊக்குவிக்கும் "இனவெறி, தீவிர நாட்டு வெறி மற்றும் தொடர்புடைய சகிப்பற்ற தன்மை இவற்றை மாபெரும் அளவில் ஊக்குவித்தது. இவை அனைத்தும் ஐ.நா.வின் ஒப்புதலைப் பெற்றன. இதைத் தொடர்ந்து 2003, 2006 ஆண்டுகளில் சிரியாவில் இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல்கள் நடந்தன; தெற்கு லெபனான் மீது 2006 மற்றும் 2008-09 ல் காசாவில் வாழ்பவர்கள் மீது குருதி கொட்டிய தாக்குதல் நடந்ததது, நிரபராதியான 1,400 குடிமக்கள் கொல்லப்பட்டனர்; இவர்களில் பெரும்பாலானவர்கள் மகளிரும் குழந்தைகளும் ஆவர். அஹ்மதிநெஜாட்டின் ஆப்கானிஸ்தான், ஈராக் பற்றிய ஜனரஞ்சக குறிப்புக்களைப் போலவே, இனவெறி எதிர்ப்பு மாநாடு ஐ.நா.வால் நடத்தப்படுவதும் இக்குற்றங்களில் ஐ.நா. பங்கு கொண்டிருப்பதை மூடி மறைக்கத்தான் பயன்படுகிறது. |