World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம் IMF issues grim forecasts for 2009 2009ம் ஆண்டு பற்றி கவலை தரும் கணிப்புக்களை சர்வதேச நாணய நிதியம் வெளியிடுகிறது By Patrick O'Connor உலகின் பொருளாதாரப் பார்வையை நடப்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் புதனன்று உலகப் பொருளாதார வளர்ச்சி 1.3 சதவிகிதம் எதிர்மறையாக இருக்கும் என்று கணித்துள்ளது; "இது பெருமந்த நிலைக்கு பின்னரான மிக ஆழமான உலக மந்தநிலையாகும்". 1930களுக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் மொத்தத்தில் இத்தனை சுருக்கத்தை அடைந்தது கிடையாது. கொள்கை இயற்றுபவர்களிடையே உடன்பாடற்ற தன்மை அதிகரித்துருவதன் மத்தியில் உலகச் சரிவு மிகவிரைவாக இருப்பதற்கான சமீபத்திய சான்றுகள் வந்துள்ளது. G7 முன்னேற்றமடைந்துள்ள பொருளாதார நாடுகளின் நிதி மந்திரிகளும் மத்திய வங்கியாளர்களும் வாஷிங்டனில் இன்று சந்திக்கிறார்கள். இதைத் தொடர்ந்து G20 நாட்டுப் பிரதிநிதிகளுடன் சேர்ந்த ஒரு கூட்டம் உடனடியாக நடக்க இருக்கிறது. அங்கத்துவ நாடுகள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளுவது பற்றி தீவிர கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் அதன் தேசிய வணிக நலன்களை அதன் போட்டியாளர்களின் இழப்பில் வளர்க்கத்தான் விரும்புகிறது. எனவே உருப்படியான முடிவுகள் வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டனில் நடைபெற்ற G20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஏற்பட்ட குறைந்த பட்ச முடிவுகளையேனும் எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது பற்றித்தான் கவனம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு பிறருக்கு கொடுப்பதற்கு $500 பில்லியன் திட்டமிட்ட அவசரகால நிதியை எவர் அளிப்பது என்பதும் அடங்கும். இந்த மாதத்தின் உலகப் பொருளாதாரப் பார்வை இதழ் 2009இற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின் மற்றொரு கீழ்நோக்கு திருத்தத்தை குறிப்பிட்டது. அக்டோபர் 2008ல் நிதியம் ஆண்டு வளர்ச்சி 3 சதவிகிதம் இருக்கும் என்று கணித்தது. பின் நவம்பரில் இது 2.2 சதவிகிதம் எனக் குறைக்கப்பட்டது, ஜனவரி மாதம் 0.5 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டு, இப்பொழுது -1.35 சதவிகிதமாக இருக்கும் என்று கூறுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தின்படி முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்கள் "முன்னோடியில்லாத வகையில்" 2008 நான்காம் காலாண்டுக் காலத்தில் 7.5 சதவிகிதம் உண்மையான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சரிவைக் கண்டுள்ளன. 2009ல் இந்நாடுகளின் குழுவிற்கு சுருக்கம் 3.8 சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் நெருக்கடியின் மையம் என்று விவரிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரம் 2.8 சதவிகிதம் சுருங்கக்கூடும். உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்கள் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் 2010 இறுதியை ஒட்டி சராசரியாக 9.2 சதவிகிதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2009 ல் யூரோப்பகுதி 4.2 சதவகிதம் சுருக்கம் அடையும் என்றும், ஜேர்மனியில் -5.6 சதவிகிதம், அயர்லாந்தில் -8 சதவிகிதம் என்று குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பு இருக்கும். பிரிட்டனில் சரிவு 4.1 சதவிகிதத்தால் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், ஜப்பானியப் பொருளாதாரம் 6.2 சதவிகிதம் சுருங்கும் என்றும் ரஷியா 6 சதவிகித சுருக்கத்தை அடையும் என்றும் ஏற்றுமதியை நம்பியுள்ள "புதிய தொழில்துறை வளர்ச்சி பெற்றுள்ள ஆசியப் பொருளாதாரஙக்கள்" சராசரியாக 5.6 சதவிகிதச் சுருக்கம் பெறும் என்றும், சிங்கப்பூரில் இது -10 சதவிகிதமாக இருக்கும் என்றும் தைவானில் -7.5 சதவிகிதமாக மிக மோசமான பாதிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சீனாவும் இந்தியாவும் முறையே 6.5, 4.5 சதவிகித வளர்ச்சி அடையும் என்றும் சாதகமான வளர்ச்சி இருக்கக்கூடி ஒரு சில முக்கிய பொருளாதாரங்களில் இவையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த புள்ளிவிவரங்கள் இரு நாடுகளிலும் வளர்ச்சியில் முக்கிய குறைப்பு என்பதைக் குறிப்பதுடன் அந்நாடுகளில் வேலையின்மை தீவிரமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் 2010ல் 1.9 சதவகிதம் வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. முன்னேற்றமடைந்துள்ள பொருளாதாரங்கள் தேக்க நிலையை அடையும். சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சரியாக பூஜ்ஜியமாக உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் பலமுறை 2009 புள்ளிவிவரங்களை பலமுறை திருத்தங்கள் செய்திருப்பதை அடுத்து இந்த மதிப்பீடுகள் மிகவும் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கும் என்று கருதப்படலாம். எப்படிப்பார்த்தாலும் சர்வதேச நாணய நிதிய தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியர் பிளான்சர்ட் தற்பொழுதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவான மீட்பு இருக்காது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். வரலாற்றளவில் மந்த நிலைகள் நிதிய நெருக்கடிக்கு கட்டியம் கூறுவதால் அவை கடுமையாகவும் நீடித்தும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு தனியான சர்வதேச நாணய நிதிய வெளியீடான செவ்வாயன்று வெளியிடப்பட்ட உலக நிதிய ஸ்திரப்பாடு பற்றிய அறிக்கை அமெரிக்காவில் தோன்றிய சொத்துக்களில் இழப்பு என்பது --அதிகமாக குறைந்த பிணையுள்ள "நச்சு" கடன்கள்" என்பது US$2.2 டிரில்லியனில் இருந்து $2.7 டிரில்லியனாகக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. உலக இழப்புக்கள், "பிற முதிர்ந்த சந்தையில் துவங்கும் சொத்துக்களும் அடங்கியவை" $4 டிரில்லியனுக்கும் மேற்பட்டு இருக்கலாம் என்றும் இதில் மூன்றில் இரு பங்கு வங்கிளால் பெறப்பட்டவை என்றும் எஞ்சியவை காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வுதிய நிதிகள், தனியார் முதலீட்டு நிதிகளால் பெறப்பட்டவை என்றும் கூறப்பட்டுள்ளது. உலகின் வங்கி முறை திவால்தன்மை விளிம்பில் உள்ளது என்பதை அறிக்கை சரியாக ஒப்புக் கொண்டுள்ளது. "எதிர்பார்க்கப்படும் வருமானங்கள் வருவதற்கு முன்னதாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இழப்பு விதிகளை வங்கிகள் இன்று கொண்டுவந்தால், ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் மொத்தத்தில் பூஜ்ஜியத்தை ஒட்டித்தான் பங்கு மதிப்பைக் கொண்டிருக்கும்" என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இந்த மதிப்பீடு அமெரிக்க நிதி மந்திரியான டிமோதி கீத்னரால் நிராகரிக்கப்பட்டது; காங்கிரஸ் முன்பு இந்தவார தொடக்கத்தில் அமெரிக்க வங்கிகளில் "பெரும்பாலானவை" போதுமான மூலதனத்தை கொண்டிருப்பதாக வலியுறுத்தினார். ஒபாமா நிர்வாகம் நிதியமுறையை பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ள மோசமான கடன்கள் தரத்தைப் பற்றிய பொது விவாதத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை. மாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து மறைத்த விதத்தில்தான் அது நூற்றுக்கணக்கான பில்லியன்களை வங்கிகளிடம் அளிக்க முன்வருகிறது. முன்பு அறிவிக்கப்பட்ட பிணை எடுப்புக்கள் நீடித்த காலம பொது நிதியைக் கொள்ளையடிப்பதின் ஆரம்பந்தான். வங்கி முறையை மீண்டும் உறுதிபடுத்துவதற்கு மூலதன உட்செலுத்துதல்கள் அமெரிக்க வங்கிகளுக்கு $500 பில்லியன் என்றும் யூரோப்பகுதிகளில் இருக்கும் வங்கிகளுக்கு $725 பில்லியன் என்றும் "முதிர்ச்சி அடைந்துள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு $225 பில்லியன் என்றும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அது கலக்கத்துடன் ஒப்புக் கொண்டுள்ளதாவது: "இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் ஆதரவு குறைந்து வருகிறது; ஏனெனில் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்." இதே போன்ற கவலை பெருகும் மக்கள் எதிர்ப்பைப் பற்றி என சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார பார்வையிலும் வெளிப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கையை உடனடியாக உயர்த்த ஊக்க நடவடிக்கைகள் தேவை என்று நிதியம் ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் நிதிப்பற்றாக்குறைகள் காலவரையற்று தொடர முடியாது என்றும் அரசாங்கங்கள் நீண்டகால அடிப்படையில் செலவுகளைத் தீவிரமாகக் குறைக்க வேணடும் என்று கூறியுள்ளது. "சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு என வயோதிபர்களுக்கு பெருகும் செலவினங்கள் பற்றிய "நம்பகத்தன்மை உடைய கொள்கை சீர்திருத்தங்கள்" சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை கொடுக்க தேவை என்று கூறப்பட்டுள்ளது. உலக நிதிய ஸ்திரப்பாடு பற்றிய அறிக்கை விவரித்துள்ள "நிதிய முறைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள கீழ்நோக்குச் சரிவு" உலகப் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. உலகச் சரிவு தொடக்கத்தில் அமெரிக்க கடன் நெருக்கடியால் வெளிப்பட்டாலும் இப்பொழுது சரிந்த பொருளாதார நடவடிக்கை வங்கிகளின் ஆபத்தான நிலையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன, இதையொட்டி செலவினங்கள் பெருக்கம் ஏற்பட்டுள்ளது, கடன் கொடுக்க போதிய நிதி இல்லை. புதனன்று பைனான்சியல் டைம்ஸில் "பெரும் பள்ளத்தை எதிர்நோக்கி" என்ற தலைப்பில் வந்த தலையங்கம் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்தின் $4 டிரில்லியன் இழப்பீடுகள் பற்றிய மதிப்பீடு "அதிர்ச்சி தருகிறது" எனக் கூறியுள்ளது. இப்புள்ளிவிவரங்கள் இரு முக்கிய உண்மையை பிரதிபலிக்கின்றன என தலையங்கம் தொடர்ந்து கூறியுள்ளது. முதலில், "இறுதியில் உண்மையான இழப்புக்கள் எவ்வளவு இருக்கக்கூடும் என்பது பற்றி நமக்கு உறுதியாகத் தெரியாது--ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கும்போது மோசமாக உள்ளது என்பதைத் தவிர. இரண்டாவதாக, உண்மைப் பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலை இழப்புக்களை மிகப் பெரிய பாதுகாப்புப் பத்திரங்களில் அல்லாது மரபார்ந்த நிதியக் கடன்களில் கூடுதலாக்குகிறது. அது மதிக்கப்பட்ட இழப்புக்களில் பாதிக்கும் மேலாக இருக்கின்றது. இரு சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளும் ஒபாமா நிர்வாக அதிகாரிகள் வோல் ஸ்ட்ரீட் சமீபத்தில் ஏற்றம் காட்டியது தவிர்க்க முடியாத பொருளாதாரப் புத்துயிர்ப்பிற்கு அடையாளம் என்று நம்பிக்கையுடன் கொடுத்த அறிக்கைகளை மறுக்கின்றன. பொருளாதார அதிகாரிகளும் பண்டிதர்களும் மீட்பின் துவக்கங்கள் என முற்கூறுதலுக்காக மற்ற துரும்புகளான ஜப்பானிய ஏற்றுமதிகள் ஓரளவு முன்னேறும் என்றும் சீனாவில் மூலதன செலவு அதிகரிக்கும் என்பதையும் உறுதியாகப் பிடிக்கின்றனர். பைனான்சியில் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் செவ்வாயன்று எழுதிய கட்டுரையில் "நம்பிக்கையின் அடையாளங்கள்", "பசுமை காட்சிகள்" ஆகிய கூற்றுக்களை மறுக்கும் வகையில் வெளியிட்டுள்ளார். "மிக மோசமாக நிலையை நாம் கடந்து விட்டோமா?" என்று வொல்ப் வினவுகிறார். "ஒரு சொல்லில், இல்லை. அமெரிக்காவில் உற்பத்தி விளைவு, பெருமந்த நிலையோடு ஒப்பிடும்போது சரிவு விகிதத்தில்தான் உள்ளது. ஜப்பானின் உற்பத்தி ஏற்கனவே 1930 களில் அமெரிக்காவில் இருந்தது போல் விழுந்துவிட்டன. நிதிய முறைச் சரிவு, விவாதிக்கக் கூடியவகையில், முன்பு இருந்ததைவிட மோசமாகத்தான் உள்ளது." வொல்ப் முடிவாக கூறுகிறார்: "கடுமையான உண்மை மிக அதிக கடன் வாங்கியுள்ள நாடுகளில் தனியார் பிரிவுகளில் வெளிமுதலீடுகளுக்கு ஊக்கம் கொடுப்பது இன்னும் தொடங்கவில்லை, தேவைப்படும் உலகத் தேவை மறுசமப்படுத்தும் தன்மை இன்னும் தொடங்கக்கூட இல்லை, இக்காரணங்களால் தொடர்ச்சியான, தனியார் பிரிவு வழிநடத்தும் வளர்ச்சி என்பது இன்னும் தொலைதூரத்திலுள்ளது." |