இலங்கை அரசாங்கம் மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றது
By K. Ratnayake
27 April 2009
Use this version to
print | Send
feedback
இலங்கை ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த சனிக்கிழமை
நடந்த மேல் மாகாண சபைக்கான தேர்தலில் 64.7 வீத வாக்குகளையும் பெற்று 68 ஆசனங்களையும் வென்று,
104 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இரு பிரதான எதிர்க் கட்சிகளான
ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) முறையே 30 ஆசனங்களையும்
மற்றும் 3 ஆசனங்களையும் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் யுத்தத்தை நியாயப்படுத்த இந்த தேர்தல் முடிவுகளை உடனடியாகப் பற்றிக்கொண்டார்.
நேற்றிரவு அவர் விடுத்த அறிக்கையொன்றில், சர்வதேச ரீதியில் யுத்த நிறுத்தத்துக்காக விடுக்கப்படும் அழைப்பை
மறுப்பது உட்பட தனது கொள்கைகளை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறிக்கொண்டார். "பயங்கரவாதத்திடம்
இருந்து நாட்டை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தடுக்க எந்த சக்திக்கும் உரிமை கிடையாது," என
ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த சிறிய பிரதேசத்தின் மீது "இறுதித்
தாக்குதலை" நடத்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழர்-விரோத இனவாதம் மற்றும் இராணுவவாதம்
போன்ற நச்சுத்தனமான சூழ்நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றது. யுத்தப் பிராந்தியத்தில் இருந்து சுயாதீனமாக
செய்தி வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனிதப் பேரழிவை சுருக்கிக்
காட்டுவதற்காக திட்டமிடப்பட்ட இராணுவத்தின் பிரச்சாரத்துக்குள் ஊடக செய்திகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த
மனிதப்பேரழிவின் விளைவாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதோடு இலட்சக்கணக்கான தமிழர்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்திடம் இருந்து எதிர்ப்புக்கள்
இருக்காததினாலேயே இராஜபக்ஷவால் தேர்தல் பிரச்சாரத்தின் போது யுத்தத்தை பயன்படுத்திக்கொள்ள
முடிந்தது. "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற அரசாங்கத்தின் போலி யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கும்
யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி., தமது விமர்சனங்களை வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரம் மற்றும் மோசடிகள்
பற்றிய விடயங்களோடு மட்டுப்படுத்திக்கொண்டன. எவ்வாறெனினும், நாட்டின் பொருளாதார நெருக்கடியானது
பிரமாண்டமான யுத்த செலவின் உற்பத்தியாகும். இந்த நெருக்கடி இப்போது பூகோள பொருளாதார
பின்னடைவால் மேலும் குவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகள் அனைத்தும் மீதான வாக்காளர்களின் அதிருப்தியும் சீற்றமும்
குறைவான வாக்களிப்பின் மூலம் வெளிப்பட்டது. பதிவுசெய்யப்பட்டுள்ள 3.8 மில்லியன் வாக்காளர்களில், 1.4
மில்லியன் அல்லது 37 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர். குறிப்பாக தமிழ் வாக்காளர்களுக்கு எதிரான
அச்சுறுத்தல்கள் மற்றும் பாரபட்சங்களால் பரந்தளவிலான அந்நியப்படுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பொலிசாரும் அரசாங்க சார்பு
குண்டர்களும் வாக்காளர்களை எச்சரித்ததாக சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தேர்தல்
பிரச்சாரத்தின் போது பலர் தெரிவித்தனர்.
வாக்காளர்களை ஆயுதக் குண்டர்கள் அச்சுறுத்தியதாக கடந்த வாரம் செய்தி
வெளியிட்ட டெயிலி மிரர் பத்திரிகை தெரிவித்ததாவது: "இந்த தடுக்கப்படாத வன்முறைகள்
தொடர்பாக சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மரண அமைதி காப்பதானது, தலைவர்களின் பக்கம்
அவற்றில் தலையிடுவது சம்பந்தமான தயக்கத்தை காட்டுகிறது, அல்லது, மோசமான சகலதும் அவர்களின்
ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதை காட்டுகிறது."
சுதந்திர முன்னணி தலைவர்களின் ஒப்புதல் இன்றியும் பாதுகாப்பு படையினரின்
ஒத்துழைப்பு இன்றியும் இத்தகைய குண்டர்களால் செயற்பட முடியாது என்பதே யதார்த்தமாகும். பிரதான வீதிகளின்
ஒவ்வொரு சந்திகளிலும் சோதனைச் சாவடிகள் உள்ள, பொலிஸ் மற்றும் இராணுவம் ரோந்து செல்லும் ஒரு
பாதுகாப்பு கோட்டையே கொழும்பு நகராகும்.
நேற்று, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்களின் நடவடிக்கை
(பெஃபரல்) என்ற அமைப்பு தேர்தலுக்கு முந்திய வன்முறைகள் பற்றி கவனம் செலுத்தியது. இந்த வன்முறைகளில்
கட்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது அச்சுறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் கட்சி பிரச்சார அலுவலகங்கள்
தாக்கப்பட்டுள்ளன. உப நிர்வாக ஆணையாளர் ரோஹண ஹெட்டியாராச்சி டெயிலி மிரருக்குத்
தெரிவித்தாவது: "இந்த சம்பவங்களை கணக்கில் எடுக்கும் போது, இந்த தேர்தலை சுதந்திரமானதும்
நீதியானதுமான தேர்தலாகக் கணிக்க முடியாது."
தேர்தல் அதிகாரிகளுக்கு தமது அடையாள அட்டையை காட்டும் பொதுவான
கண்காணிப்பு முறை பல வாக்காளர்களுக்கு சிரமமானது என ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார். வாக்களிக்கத்
தகுதியற்றவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே என்பதில்
சந்தேகம் இருக்க முடியாது. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 50 முதல் 59 வீதம் வரை குறைவாக இருந்தது
குறிப்பாக கொழும்பின் ஐந்து தேர்தல் தொகுதிகளிலேயே ஆகும்.
வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு
மற்றும் பொரளை ஆகிய கொழும்பு நகரின் பிரதேசங்களிலேயே எதிர்க் கட்சியான யூ.என்.பி. சுதந்திர
முன்னணியை தோற்கடித்துள்ளது. இலங்கை முதலாளித்துவத்தின் வலதுசாரிக் கட்சியான யூ.என்.பி. க்கு
வாக்களித்தவர்களில் பலர் அதை ஆதரிப்பதால் அதற்கு வாக்களிக்கவில்லை. மாறாக, இராஜபக்ஷ
அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டவே வாக்களித்தனர். 2004ல் நடந்த முன்னைய தேர்தலுடன்
ஒப்பிடும் போது மொத்தத்தில் யூ.என்.பி. வாக்குகள் சரிந்துள்ளதோடு கட்சிக்கு இருந்த ஆசனங்களும் 39ல்
இருந்து 30 ஆகக் குறைந்து போனது.
2002 யுத்த நிறுத்தத்தையும் மற்றும் சர்வதேச ரீதியில் அனுசரணை செய்யப்பட்ட
புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களையும் யூ.என்.பி. ஆதரிப்பதை, "பயங்கரவாதத்தின்" ஆதரவாளர் என
எதிர்க் கட்சியை முத்திரை குத்த சுதந்திர முன்னணி பயன்படுத்திக்கொண்டது. எவ்வாறெனினும், 1983ல் யுத்தத்தை
ஆரம்பித்தமைக்கு பொறுப்பாளியான யூ.என்.பி, தோல்வி கண்ட "சமாதான முன்னெடுப்புக்கு" அது முன்னர்
வழங்கிய ஆதரவை பகிரங்கமாக கைவிட்டுவிட்டு, பின்னால் வளைந்து இராணுவத்துக்கு தனது ஆதரவை
வெளிப்படுத்தியது.
கோஷ்டி மோதல்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீதான
அதிருப்தியின் மத்தியில் யூ.என்.பி. கணிசமானளவு அரசியல் நெருக்கடியில் உள்ளது. 2005 கடைப்பகுதியில்
இராஜபக்ஷ ஜனாதிபதியானதில் இருந்து, யூ.என்.பி. பல பிளவுகளை சந்தித்தது. யூ.என்.பி. யின் பல சிரேஷ்ட
உறுப்பினர்கள் இப்போது இராஜபக்ஷவின் அமைச்சரவையில் சேவையாற்றுகின்றனர். பல இரண்டாந்தர தலைவர்கள்
தேர்தலுக்கு சற்றே முன்னதாக கட்சி மாறி சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்டனர்.
யூ.என்.பி. உடன் கூட்டணியில் இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
(எஸ்.எல்.எம்.சி.) தேர்தலுக்கு முன்னதாக பிரிந்து சென்ற போதிலும், 2.1 வீதமான வாக்குகளையும் இரண்டு
ஆசணங்களையும் மட்டுமே பெறுவதில் சமாளித்துக்கொண்டது.
ஜே.வி.பி. மேலும் அழிவுகரமான தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது சுதந்திர
முன்னணியின் பங்காளியாக இருந்து ஜே.வி.பி. 2004 தேர்தலில், 23 மாகாண சபை ஆசனங்களை வென்றது.
சனிக்கிழமை நடந்த தேர்தலில் அது 2.4 வீதமான வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை மட்டுமே வென்றது.
சிங்கள கிராமப் புற இளைஞர்கள் மத்தியில் 1960களில் ஒரு ஆயுத கொரில்லா
இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி, 1990களின் நடுப்பகுதியில் இருந்து கொழும்பு ஸ்தாபனத்தின் இணைபிரியா
பங்காளியாக இருந்து வருகிறது. சிங்களப் பேரினவாதத்தின் கடும் பரிந்துரையாளர் என்ற வகையில், யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியையும் தேசத்தை காட்டிக்கொடுக்கும் செயல் எனக் கண்டனம்
செய்தது.
2004 கணிசமானளவு கண்டன வாக்குகளைப் பெறுவதற்காக யூ.என்.பி.,
இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய இரு பிரதான கட்சிகள் மீது வளர்ச்சி கண்டுவந்த
அதிருப்தியை ஜே.வி.பி. யால் சுரண்டிக்கொள்ள முடிந்தது. ஆயினும், அது 2004 ஏப்பிரலில் சுதந்திர முன்னணி
அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை
சீரழித்த சுதந்திர சந்தை கொள்கைகளை ஆதரித்ததை அடுத்து, ஜே.வி.பி.யின் ஆதரவு வற்றிப் போனது.
யுத்தத்திற்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் 2005ல் இராஜபக்ஷவை
ஆட்சிக்குக் கொண்டுவர ஜே.வி.பி. ஆதரவளித்த போதிலும், அது எதிர்க் கட்சி ஆசனங்களிலேயே அமர்ந்திருந்தது.
அவ்வாறு செய்ததன் மூலம், அதன் சிங்கள அதிதீவிரவாத வாய்வீச்சை விளைபயனுள்ள விதத்தில் அரசாங்கம் எடுத்துக்
கொண்டதை ஜே.வி.பி. கண்டது. கடந்த ஆண்டு 10 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜே.வி.பி. யில் இருந்து பிரிந்து
சென்று தேசிய சுதந்தி முன்னணியை அமைத்த அதன் பாராளுமன்ற குழு தலைவர் விமல் வீரவன்ச, பின்னர் சுதந்திர
முன்னணியில் இணைந்துகொண்டார்.
சோ.ச.க. கொழும்பு மாவட்டத்தில் நீண்ட கால அரசியல் குழு உறுப்பினரான விலானி
பீரிஸ் தலைமையில் 46 வேட்பாளர்களை களமிறக்கியது. சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின்
இனவாத யுத்தத்தை எதிர்த்த ஒரே கட்சியும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும்
திருப்பியழைக்கக் கோரும் ஒரே கட்சியும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். அதன் உறுப்பினர்கள், தெற்காசியாவிலும்
மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை கட்டியெழுப்புவதன் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம்
சோசலிச குடியரசு என்ற கட்சியின் அனைத்துலக முன்நோக்குக்காக போராடுகின்றனர்.
சோ.ச.க. தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், புலிகளின் தமிழ் பிரிவினைவாதம்
அதே போல் சிங்களப் பேரினவாதம் உட்பட சகலவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதங்களை எதிர்த்தும்
தொழிலாளர் வர்க்க பிரதேசங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் உத்வேகத்துடன் பிரச்சாரம் செய்தது. அதன் பிரச்சாரம்
பற்றி ஊடகங்கள் பாராமுகம் காட்டிய போதிலும், சோ.ச.க. 181 வாக்குகளைப் பெற்றுள்ளது. அவை
ஒவ்வொன்றும், அரசாங்கத்தாலும் ஊடகங்களாலும் கிளறிவிடப்படும் இராணுவவாத சூழ்நிலைக்கு எதிரான வர்க்க நனவுடனான
நிலைப்பாடாகும்.
புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் முன்னேற்றம் வர்க்கப் போராட்டத்தின்
வெடிப்புக்கான முன்னோடியாகும் என சோ.ச.க. அடிக்கடி கூட்டங்களில் எச்சரித்து வந்துள்ளது. தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது மற்றும் எந்தவொரு எதிர்ப்பின் மீதும்
அரச அடக்குமுறையை பயன்படுத்துவதைத் தவிர, ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இராஜபக்ஷவிடம்
வேறு தீர்வுகள் கிடையாது. எங்களது வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் படிக்குமாறும் அடுத்து வரவுள்ள
போராட்டங்களுக்கான தயாரிப்பில் சோ.ச.க. யை கட்சியெழுப்ப அதில் இணையுமாறும் நாம் எமது
பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த மற்றும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் வேண்டுகோள்
விடுக்கின்றோம். |