World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காTorture and the crisis of American democracy சித்திரவதையும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும் By Barry Grey புஷ்ஷின் நீதித்துறையால் முன்பு இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சித்திரவதைகளை பற்றியும் அவற்றை நியாயப்படுத்தியதுமான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதானது அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை காட்டக் கூடிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இக்குறிப்புக்கள் வெளியிடப்பட்டதும் மற்றும் CIA இன் சித்திரவதை செய்தவர்கள், மற்றும் முன்னாள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தொடங்கி அந்நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு கொடுத்த புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது குற்ற விசாரணை இல்லை என்ற ஒபாமா நிர்வாகத்தின் நிராகரிப்பு ஆகியவை தற்போதைய நிர்வாகத்திற்கும் மற்றும் அமெரிக்காவின் எதிர்கால அரசியல் போக்கிலும் நீண்டகால விளைவுகளைக் கொடுக்கக்கூடும். இக்குறிப்புக்களை வெளியிடுவது பற்றிய பிரச்சினை அரசாங்கத்திற்குள் கடுமையான முரண்பாடுகளை ஏற்படுத்தியது. நிர்வாகமே பிளவுபட்டு, CIA இயக்குனர் லோன் பனேட்டா இதனை கடுமையாக எதிர்த்தார், தலைமை அரச வக்கீல் எரிக் ஹோல்டர் இதற்கு ஆதரவு கொடுத்தார். தனது வழமையான நடைமுறையின்படி ஒபாமா போட்டிப் பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தீர்க்கமுயன்றார், ஆனால் மிக அதிக வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவான முறையில். இக்குறிப்புக்கள் வெளியிடுவது பற்றி தனக்கு முன்பு பதவியில் இருந்தவருடைய கொள்கையில் இருந்து முறிவு என்ற தோற்றத்தை ஒபாமா இயல்பாக கொடுக்க முற்பட்டார். அதே நேரத்தில் முழு அரசியல் மற்றும் செய்தி ஊடகம் உடந்தையாக இருந்ததை மறைக்கவும் முற்பட்டு, தன்னுடைய நிர்வாகமும் புஷ்ஷின் ஜனநாயக விரோத கொள்கைகளை உறுதியாக தொடரும் என்றும் CIA க்கும் இராணுவத்திற்கும் உத்தரவாதம் அளிக்க முற்பட்டார். ஒபாமாவும் அவருடைய அரசியல் ஆலோசகர்கள் இத்தீர்வு சித்திரவதை பற்றிய விவாதத்திற்கு முடிவு கட்டும் என்று நம்பினர். ஆனால் உண்மையில் முற்றிலும் எதிரிடையான விளைவைத்தான் கொடுத்துள்ளது. இது இன்னும் கூடுதலான வகையில் தவறுகளின் அளவு, கடுமை பற்றி வெளிப்படுத்தியுள்ளதுடன், உள்நாட்டு, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்று ஒப்புக்கொள்ளும் சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்லாத நிலைமையில் நிர்வாகத்தை இருத்தியதுடன் சட்டத்தை மீறியவர்கள்மீது குற்றவிசாரணை இல்லாமல் தடுத்தது. இதுவே, சித்திரவதையுடன் தொடர்பு உடைய அதிகாரியை ஒரு அரசாங்கம் குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் முனைவர் அறிவித்துள்ளபடி சர்வதேச சட்டங்களை மீறல் ஆகும். இது இன்னும் கடுமையாக வகையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. புஷ் நிர்வாக CIA இயக்குனரும், ஓய்வு பெற்ற விமானப்பிரிவு தளபதியான மைக்கேல் ஹேடன் வெளிப்படையாக குறிப்புக்கள் வெளியிடப்பட்டது பற்றி பிரச்சாரம் நடத்தியுள்ளார். Fox News Sunday நிகழ்ச்சியின் வார இறுதியில் தோன்றி விசாரணை முறைகளை பாதுகாத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு முறையை ஆபத்திற்கு உட்படுத்தியதற்காக ஒபாமாவை கண்டித்து, இக்குறிப்புக்கள் வெளியிடப்படுதல் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாகும் என்றும் கூறியுள்ளார். திங்களன்று வேர்ஜீனியா, லாங்க்லியில் உள்ள CIA தலைமையகத்திற்கு ஒபாமா சென்று அதனுள் கிளர்ந்துள்ள விமர்சனத்தை அடக்கும் முயற்சியில் ஈடுபடும் கட்டாயத்திற்கு உட்பட நேரிட்டது. வெள்ளை மாளிகை சித்திரவதை செய்தவர்களை பாதுகாத்திருப்பது இராணுவ-உளவுத்துறை அமைப்பின் அதிகரித்துவரும் அதிகாரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த அரசாங்கத்திற்குள் அரசாங்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் நடைமுறையில் எந்தவித ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கும் அப்பால் உள்ளது. காங்கிரஸும் வெள்ளை மாளிகையும் பொதுவாக அதற்கு கூடிய மரியாதை கொடுத்துவிடும். ஏனெனில் அவையே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளிப்படையாக மீறும் நிலை வந்துவிடுமோ என அஞ்சுகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் ஆபத்து நிறைந்த நிலை உண்மையில் சர்வாதிகார அரசாங்கங்களுடன் மரபார்ந்த முறையில் இணைந்துள்ள வழிவகைகளுக்கு ஒத்ததாக காணப்படுகிறது. இது நீடித்த கால வீழ்ச்சியின் விளைவு ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களாக தடையற்ற சந்தைப் பொருளாதாரம், மற்றும் நிதிய ஒட்டுண்ணித்தனம் ஆகியவற்றைத் தளம் கொண்டு ஒரு நிதிய பிரபுத்துவம் எழுச்சியுற்றதற்கும் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்கும் இடையே ஒரு வெளிப்படையான சமாந்தரத்தன்மை உள்ளது. இராணுவ-உளவுத்துறை அமைப்பு அதிகாரத்திலும் அரசியல் செல்வாக்கிலும் பெருகியுள்ளபோது, அகன்றுவரும் பொருளாதார பிளவு நிதிய உயரடுக்கை பரந்த அமெரிக்க மக்களிடம் இருந்து பிரித்துவிடும் நிலை ஜனநாயக வழியிலான ஆட்சி முறைகளின் சமூகப் பொருளாதார அடித்தளங்களை இல்லாதொழிக்கின்றது. அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சி கடந்த 30 ஆண்டுகளில் கொண்ட முக்கிய அடையாளங்களை இங்கு சுட்டிக் காட்டலாம். 1980களில் ஈரான்-கொன்ட்ரா விவகாரம் நடந்தது. ரேகன் நிர்வாகம், 1980களின் தொடக்கத்தில் காங்கிரஸ் இயற்றியிருந்த போலான்ட் திருத்தத்தை (Boland Amendment) நேரடியாக மீறிய முறையில் நிக்காரகுவாவில் இரகசிய கறைபடிந்த போரை நடத்தியது. அதில் பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் உயிரிழந்தனர். ஆனால் வாட்டர்கேட் ஊழல் போல் இல்லாமல், காங்கிரஸ் குறுக்கிட்டு ரேகன் மற்றும் அவருடைய துணை அதிகாரிகள் செய்த குற்றங்களை மூடி மறைத்து ரேகன்மீது குற்ற விசாரணை நடத்துதல் அல்லது அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள்மீது குற்றப் பொறுப்பு இல்லாமல் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டது. 1990கள் வலதுசாரி சக்திகள் இடைவிடாமல் நடத்தும் சதியைப் பார்த்தன. இதற்கு குடியரசுக் கட்சி, நீதிமன்றங்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவு இருந்தது. இது கிளின்டன் நிர்வாகத்தை குலைக்க முற்பட்டது, இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீது முதல் முதலாக பெரிய குற்ற விசாரணை என்ற விதத்தில் டிசம்பர் 1998ல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து 2000 தேர்தல் திருடப்பட்டது. அப்பொழுது ஒரு வலதுசாரி பெரும்பான்மை தலைமை நீதிமன்றத்தில் இருந்து வாக்குகள் அடக்கப்படுவதற்கு ஒப்புதல் கொடுத்து வெள்ளை மாளிகையில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை இருத்தியது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. அவை போலிக் காரணமாக கொள்ளப்பட்டு நீண்ட கால வலதுசாரித் தயாரிப்பான வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டு அடக்குமுறை ஆகியவை ஆரம்பமாகின. இத்தாக்குதல்களுக்கு உளவுத்துறை அனுமதித்திருக்கக்கூடும், வசதியும் அளித்திருக்கக்கூடும் என்பது தொடர்ச்சியான போலித்தன காங்கிரஸ் விசாரணைகளில் மூடிமறைக்கப்பட்டது. அதன் உச்சக்கட்டம்தான் 9/11 ஆணைக்குழுவின் மூடிமறைப்பாகும். 9/11 "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை கொண்டுவந்தது. இது காரணமற்ற, காலவரையறையற்ற போலிப் போர் ஆகும். ஆனால் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்புமுறைக்கு இரு கட்சி ஆதரவுகளும் கொடுக்கப்பட்டு, முதலில் ஆப்கானிஸ்தானிலும் பின்னர் அப்பட்டமான பொய்களின் தளத்தில் ஈராக்கிலும் தொடக்கப்பட்டது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது ஒரு போலீஸ் அரசாங்கத்தின் வடிவமைப்பை அமைப்பதற்கும் போலிக்காரணமாயிற்று. தேசப்பற்று சட்டம், உள்நாட்டு பாதுகாப்புத்துறை, வடக்கு கட்டளையகம், மிகப் பரந்த அளவில் நடைபெற்ற உள்நாட்டு ஒற்று வேலைகள், குவாண்டானமோ வளைகுடா, ஈராக், ஆப்கானிஸ்தானில் சித்திரவதை முகாம்கள் நிறுவப்பட்டது, உலகின் பல இடங்களில் இருந்த CIA இன் இரகசிய சிறைகள், ஆட்கொணர்தல் உரிமை மறுக்கப்படல், காலவரையற்ற தடுப்புக்காவல், ஆட்கடத்தல்கள், சித்திரவதை ஆகியவையும் வந்தன. இவை அனைத்தும் காங்கிரஸின் உடந்தையுடனும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெற்றன. மிகப் பரந்த, பிற்போக்குத்தன மாறுதல்கள் அமெரிக்க சமூகத்தில் நடைபெற்றது அடிப்படையில் சமூக உடற்கூற்றையே மாற்றி, ஆளும் வர்க்கத்தின் தாராளவாதப்பிரிவின் அரசியல் பார்வையையும் மாற்றி, சமூகசீர்திருத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முன்பு காட்டப்பட்ட தொடர்பும் அழிக்கப்பட்டுவிட்டது. தாராளவாத தளத்தின் பெரும் பிரிவுகள் உள்நாட்டில் சமூக பிற்போக்குத்தனமான கொள்கை மற்றும் வெளியில் ஏகாதிபத்திய ஆக்கிரோஷம் ஆகியவற்றால் ஆதாயம் அடைந்து கொண்டுள்ளது. இது அமெரிக்க சமூகத்தின் மிக அதிக சலுகை பெற்ற அடுக்குகளுக்களின் செல்வக் கொழிப்பில் பங்கு பெறுகிறது. இவை நிதிய தன்னலக்குழு மற்றும் உளவுத்துறை-இராணுவ நடைமுறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டியதில்லை; இப்பொழுதும் காட்டுவதில்லை. இவர்களுடைய மிகப் பெரிய அச்சம் வர்க்கப் போராட்டம் வெடித்துவிடுமோ என்பதும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தமது இருப்புநிலைக்கு சவால் வந்துவிடுமோ என்பதும் ஆகும். அமெரிக்க ஜனநாயகத்தின் மரண வேதனை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ முறையின் தோல்வியில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். சர்வாதிகாரப்போக்குகளின் வளர்ச்சி ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் இன்னும் அதிகமாகத்தான் பெருகும். வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிப்பிற்கு மக்களின் எதிர்ப்பு பெருகும்போது தேசிய பாதுகாப்பு அமைப்புகள் கூடுதலான வகையில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெளிப்படையாக பயன்படுத்தப்படும் என்பதாகும். ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதற்கு ஒருபரந்த மக்கள் இயக்கத்திற்கான ஒரே அடித்தளம் தொழிலாளர்களின் பரந்த பிரிவு சோசலிச, சர்வதேச முன்னோக்கால் வழிநடத்தப்படுவதாகும். அத்தகைய இயக்கம் உறுதியாக சித்திரவதை மற்றும் பிற போர்க் குற்றங்கள் அவற்றுடன் தொடர்புடைய பிற குற்றங்கள் ஆகிவற்றிற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற விசாரணை, வழக்குப் பதிவு ஆகியவற்றை செய்ய கோரிக்கைவிடும். இந்த இயக்கத்தின் அபிவிருத்தி பற்றியும், அது அடித்தளமாக கொள்ளவேண்டிய முன்னோக்கு பற்றியும் சோசலிச சமத்துவக் கட்சியாலும், சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பினாலும், உலக சோசலிச வலைத் தளத்தினாலும் ஏப்பிரல் 25 ஆன் ஆபர் மிச்சிக்கனில் நடாத்த அழைப்புவிடப்பட்டிருக்கும் பிராந்திய மாநாடுகளில் விவாதிக்கப்படவுள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தம்மை அர்ப்பணிக்க விரும்புவர்களையும் மற்றும் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை தேடுபவர்களையும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம். மாநாடுகள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் |