World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australia: Racism and the 47 Afghan asylum seekers ஆஸ்திரேலியா: இனவெறியும் 47 ஆப்கானிய புகலிடம் கோருவோரும் By Patrick O'Connor ஒரு படகில் 47 ஆப்கானிஸ்தான் நாட்டு புகலிடம் கோருவோர் வந்ததும், அவர்களில் ஐந்து பேர் சோகம் ததும்பும் வகையில் ஆஸ்திரேலியாவின் வடக்கு கடலோரப் பகுதியின் ஒரு வெடிப்பில் இறந்ததும் ஒரு தீவிர தேசிய பாதுகாப்பு மற்றும் புகலிடம் நாடுவோருக்கு எதிரான பிரச்சாரத்தில் அரசியல்வாதிகளையும் செய்தி ஊடகத்தையும் ஈடுபட வைத்துள்ளது. வெளியில் இருந்து அவதானிப்போர் எவரும் நாடு ஒரு பெரிய அந்நியர்களின் படையெடுப்பினால் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலில் உள்ளது, நாட்டின் மதிப்புமிக்க வளங்களை அவர்கள் கைப்பற்ற முற்படுகின்றனர், "ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை" அழித்துவிடும் முயற்சி நடைபெறுகிறது என நினைத்தால் அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களாகும். ஏப்ரல் 16 படகு வெடிப்பு நடந்த சில மணி நேரத்திற்குள் எந்த விசாரணையும் நடைபெறுவதற்கு முன்பே, மேற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வறிய நிலையில் உள்ள ஆப்கானியர்களை அவர்கள் வேண்டுமென்றே தங்கள் படகில் பெட்ரோல் தெளித்து நெருப்பு வைத்தனர் என்று இழிவுபடுத்திக் கூறினார். கூட்டாட்சி எதிர்க்கட்சி தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட்டை ஆஸ்திரேலியாவின் "எல்லைப் பாதுகாப்பை" வலுவற்றதாகச் செய்ததற்கு குறைகூறியது. அதாவது கட்றபடை மற்றும் கடலோரக் காவல் மையங்களை பயன்படுத்தி தஞ்சம் கோருவோர் ஆஸ்திரேலிய கரையை அடைய முடியாமல் செய்ததற்காக. தொழிற்கட்சி "எல்லைப் பாதுகாப்பு" பற்றி கடுமையாக இருப்பதாகவும் "மக்களை கடத்துபவர்கள்" "தீமை புரிபவர்கள்" என்றும் "மனித குலத்தில் இழிந்தவர்கள்" என்றும் கண்டித்த வகையில் அதற்கு விடையிறுத்தார். இத்தகைய நிலைப்பாடுகளுக்கு பின்னணியில் முதலும் முக்கியமானதும் ஆக பெரும் கஷ்டங்களினால் உந்தப்பெற்று மற்ற நாடுகளில் புகலிடம் நாடும் மில்லியன் கணக்கான சாதாரண மக்களின் நிலைமை உள்ளது. தஞ்சம் கோருவோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் கொடுத்துள்ள சமீபத்திய உலக அறிக்கை இப்பொழுது 11.4 மில்லியன் அகிதகள் இருப்பதாகவும், இவர்களுள் பெரும்பாலானவர்கள் வறிய, போரின் சீற்றத்திற்குள் இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து வெள்ளமென தஞ்சம் கோருவோர் வருவது, உதாரணத்திற்கு, ஆஸ்திரேலிய அரசாங்கம் முழுமையாக ஆதரித்துள்ள அமெரிக்க தலைமையிலான புதிய காலனித்துவவகை ஆக்கிரமிப்புக்களின் விளைவு ஆகும். ஆஸ்திரேலியாவின் தஞ்சம் கோரியவர் எண்ணிக்கை கடந்த ஆண்டு உலகெங்கிலும் தொழில்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கு வந்த 383,000 விண்ணப்பங்களில் மிகச் சிறியளவான மொத்தம் 4,750 ஆகும். உடல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் ஒரு நல்வாழ்வை விரும்பவர்கள்மீது தடைகளைச் சுமத்துவதில் ஆஸ்திரேலிய தனியாக இல்லை. அதேபோல் நெருக்கடி காலத்தில் தங்கள் தோல்வியால் வேலைகள் அளித்தல், நல்ல வீடுகள் கொடுத்தல், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு கொடுத்தல் என்று மக்களுக்கு செய்ய முடியாமல் இருப்பவர்கள் கவனத்தை திசை திருப்பவதற்கு இனவெறியைத் தூண்டுதவதில் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் மட்டும் தனித்திருக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் குடியேறுவோருக்கு எதிரான உணர்வு குறிப்பிடத்தக்க வகையில் இழிந்த, முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. இது 1901ம் ஆண்டு தேசிய நாடாக ஒருங்கிணைக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய முதலாளித்துவ முறையின் அமைப்பில் வேர்களைக் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வமாக ஐரோப்பியரல்லாத குடியேறுபவர்களை ஒதுக்கிய இனவெறி மிகுந்த "வெள்ளை ஆஸ்திரேலிய" குடியேற்றக் கொள்கை புதிய-ஆஸ்திரேலிய பாராளுமன்றம் நிறுவிய முதல் சட்டங்களில் ஒன்றாகும். கற்பனைக்கு முற்றிலும் மாறாக, இதன் வேர்கள் ஆஸ்திரேலிய மக்களிடையே இல்லை. ஆசிய பசிபிக் பகுதியில் ஒரு உறுதியாக காலனித்துவ காவல்நிலையமாக அதனை உருவாக்க விரும்பிய பிரிட்டிஷ் அதிகாரிகளின் செயல் ஆகும். அதன் நோக்கம் எழுச்சி பெற விரும்பும் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தை காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிரித்து வைத்தல் என்று இருந்தது. தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் நாட்டின் சிந்தனையாக வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கைக்கு மிக ஆர்வத்துடன் வரவேற்பு கொடுத்த அமைப்புக்களாக இருந்தன. நாட்டிற்குள் வர்க்கப் போராட்டத்தை தகர்க்க விரும்பி, ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தின் உருவாக்கத்தையும் தடுக்க விரும்பிய அவை "தொழிலாளரின் சுவர்க்கம்" என்பது வெளியில் இருந்து வரும் பொது விரோதியை ஒதுக்குவதின்மூலம்தான் பாதுகாக்க முடியும் என்ற இந்த பிற்போக்குத்தன கற்பனை கருத்தை வலியுறுத்தினர். வெளிப்படையான வெள்ளை ஆஸ்திரேலிய கொள்கை 1960களில் நடைமுறைக்கு ஒவ்வாததானபின், ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் ஆசியாவுடன் பொருளாதார உறவுகளை நம்ப வேண்டியிருந்த நிலையில், ஆசியாவின் வறிய மக்கள் ஒரு "அச்சுறுத்தல்" மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் நாட்டில் எல்லைகளை மூடிவைப்பதின் மூலமும் வெளியாரை ஒதுக்குவதின் மூலம்தான்முடியும் என்பது பின்னர் வந்த ஒவ்வொரு அரசாங்கத்தின் குடிவரவு கொள்கைக்கும் அடித்தளமாக இருந்தன. ஆப்கானிஸ்தான் படகு கடற்படையினால் பிடிக்கப்பட்டதில் இருந்து இரு முக்கிய கட்சிகளின் அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொன்றின் உட்கருத்திலும், அதன் வருகை ஆஸ்திரேலியாவின் "எல்லைப் பாதுகாப்பிற்கு" மட்டும் இல்லாமல், வாழ்க்கை தரங்கள்,வேலைகள், சமூக சேவைகள் என்று மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என்று கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆட்சி அமைக்கப்பட்டபோது எந்த அளவிற்கு தவறும் பிற்போக்குத்தனமாகவும் இந்நிலைப்பாடுகள் இருந்தனவோ, அதேபோல்தான் இன்றளவும் உள்ளன. பெருகிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நலன்கள் இல்லாத நிலைமை "வெளிநாட்டுக்காரர்களால்" தோற்றுவிக்கப்படுபவை அல்ல. மாறாக இலாபமுறையின் ஒட்டுண்ணித்தனத்தால் ஏற்படுபவை. உலகத்தில் ஏராளமான வளங்கள் உள்ளன. இவை பகுத்தறிவார்ந்த, ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டால், எல்லா மனிதர்களுக்கும் போதுமான பாதுகாப்பான வேலைகள் மற்றும் கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் உலகில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். இப்பொழுதுள்ள சமூக பொருளாதார ஒழுங்கில் இந்த வளங்கள் ஒரு சிறிய பெரும் செல்வக் கொழிப்புடைய உயரடுக்கின்கீழ் உள்ளன. தற்போதைய அகதிகள்-எதிர்ப்பு பிரச்சாரம் மந்தநிலை ஆரம்பத்துடன் இணைந்து வருகிறது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. வெள்ளை ஆஸ்திரேலிய கொள்கையை ஆளும் உயரடுக்கு பயன்படுத்தி 1890 களில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை தகர்த்தது போல், இப்பொழுதும் அதே போன்ற அரசியல்திசை திருப்பத்திற்கு முரசு கொட்டப்படுகிறது. இதன் அடிப்படை நோக்கம் 1930களுக்கு பின்னர் உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக் காலத்தில் தங்கள் சொந்த வர்க்கத்தின் சுயாதீன நலன்களை பாதுகாக்க ஆஸ்திரேலியாவிலும் மற்றும் இப்பகுதி முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதை திசை திருப்ப வேண்டும் என்பதே. ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு மீண்டும் வெள்ளை ஆஸ்திரேலிய இழிந்த மரபுகளை புதுப்பிக்க பார்க்கிறது என்பது ஒவ்வொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும் ஐயத்திற்கு இடமின்றி தோன்றக்கூடிய நிகழ்வு என்பதற்கான எச்சரிக்கையாகும். முந்தைய ஹவார்ட் அரசாங்கத்தின் மிக இழிந்த மிருகத்தனமான கட்டுப்பாடுகளை கொண்ட குடியேற்ற சட்டம் மிக நெருக்கமாக பல நாடுகளில் இருக்கும் அரசாங்கங்களால், குறிப்பாக பிரிட்டனில் பின்பற்றப்பட்டன. பொருளாதார நெருக்கடி மோசமாகையில், இனவெறி மற்றும் தஞ்சம் கோருவோரை பலிகடாக்களாக ஆக்குதல் என்பது அதிகப்படுத்தப்படும். இலாபமுறையின்கீழ் மூலதனம் உலகம் முழுவதும் மிக அதிக இலாபம் கிடைக்கும் சூழ்நிலைக்கு செல்ல முடிகிறது. ஆனால் சாதாரண மக்கள், ஒரு பாதுகாப்பான வாழ்வை, வன்முறை பட்டினி ஆகியவற்றில் இருந்து சுதந்திரமாக இருத்தலை நிறுவ விரும்புவர்கள் துன்புறுத்தப்பட்டு குற்றவாளிகள் போல் தண்டனைக்கு உட்படுகின்றனர். இந்த நச்சுப் பிரச்சாரத்தை எதிர்க்க அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கமும் எல்லா மக்களுக்கும் எங்கும் சென்று வாழும் உரிமை, உழைக்கும் உரிமை, முழுக் குடியுரிமைகள் ஆகியவற்றிற்காக போராட வேண்டும். தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த நெருக்கடிக்கு தேசியத் தீர்வுகள் ஏதும் கிடையாது. தொழிலாள வர்க்கத்தை உலகளாவிய முறையில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய இயக்கம் ஒன்று வளர வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை. இது ஒரு சர்வதேச, சோசலிச முன்னோக்கை கொண்டு முதலாளித்துவ முறையை அகற்றுதல், அது அடித்தளமாக கொண்டிருக்கும் காலம் கடந்துவிட்ட தேசிய அரசு முறையை அகற்றுதல், மற்றும் எல்லா மக்களுடைய பொருளாதார, சமூக, கலாச்சார தேவைகளை திருப்தி செய்யும் திட்டமிட்ட உலகப் பொருளாதாரத்தை நிறுவதல் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். |