World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWhite House bars prosecution of Bush officials who authorized torture சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுத்த புஷ்ஷின் அதிகாரிகள் மீது குற்ற விசாரணை நடத்த வெள்ளை மாளிகை தடை By Patrick Martin கடந்த வாரத்தில் புஷ் நிர்வாகத்தின் சித்திரவதையை சட்ட நியாயப்படுத்தி எழுதப்பட்ட மிக இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டமை ஒபாமா நிர்வாத்தை பேரழிவிற்கு உட்படுத்தும் அரசியல் முரண்பாட்டில் சிக்க வைத்துள்ளது. அமெரிக்க நீதித்துறையால் 2002, 2005 ஆண்டுகளில் வரையப்பட்ட இந்த ஆவணங்கள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்தின்கீழ் சித்திரவதை நடவடிக்கைகள் குற்றம் சார்ந்தவை என்பதை தெளிவுபடுத்துகின்றன. இச்செயல்கள் புஷ் நிர்வாகத்தின் மிக உயர்மட்ட அதிகாரிகளால் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் ஆவணத்தை பகிரங்கப்படுத்தியிருக்கையில், ஒபாமா நிர்வாகம் சித்தரவதைக் கொள்கையை இயற்றியவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்று உறுதியாக கூறிவிட்டது. இது தற்போதைய நிர்வாகத்தை இதற்கு முந்தைய நிர்வாகம் செய்த குற்றங்களை மூடிமறைப்பதில் நேரடியாக தொடர்புபடுத்துகிறது. இதில் ஒபாமா தொடங்கி தற்போதைய அமெரிக்க அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் சித்திரவதை செய்த குற்றத்திற்கு ஆளானவர்களை குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயத்தை நிர்ணயித்துள்ள சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறலில் அடங்குவர். ஞாயிறன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தலைவரான Rahm Emanuel குற்ற விசாரணைக்கு ஒபாமாவின் எதிர்ப்பு என்பது நேரடியாக அதில் பங்கு பெற்ற CIA முகவர்களுக்கு மட்டும் இல்லாமல் புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இதற்கு ஒப்புதல், நியாயம் கொடுத்தவர்களுக்கும் பொருந்தும் என்று உறுதியாகக் கூறினார். ABC News , "This Week with Georgbe Stephanopoulos" என்ற நிகழ்ச்சியில் எமானுவல் பங்கு பெற்றார். ஸ்டீபனோபோலஸ் உலகெங்கிலும் உள்ள இரகசிய சிறைகளில் சித்திரவதை நடத்திய CIA முகவர்கள்மீது விசாரணையை ஒபாமா தடுத்த முடிவு பற்றி கேட்கப்பட்டதற்கு விடையிறுக்கையில், எமானுவல் புதிய நிர்வாகம் CIA அரை டஜன் "இருண்ட தளங்களில்" நடைபெற்று வந்த முறைகளை தடைசெய்துவிட்டாகவும் அவற்றில் நீரில் மூழ்கடித்தல், கைதிகள் தலைகளை சுவரில் அடித்தல், மிக அதிகமாக தூக்கம் இல்லாமல் செய்தல், குளிரில் அம்பலப்படுத்தப்படுதல் ஆகியவையும் அடங்கும் என்றார். அவர்கள் பயன்படுத்திய இந்த வழிவகைகள் ஏற்கத்தகாதவை மட்டுமல்ல சட்டவிரோதமானவையும் என்பதை ஒப்புக்கொண்டார்.ஒபாமா மற்றும் அரச தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர் இருவரும் கடந்த வாரம் சித்திரவதை செய்தவர்கள் புஷ் நிர்வாகத்தின் வக்கீல்களின் ஆலோசனையான தவறான விசாரணைமுறைகள் சட்டபூர்வமானவை என நம்பியதால் அவர்கள்மீது குற்ற விசாரணைக்கு இடமில்லை என்று கூறியிருந்ததை எமானுவல் மீண்டும் வலியுறுத்தினார். ஸ்டீபனோபோலஸ் தொடர்ந்தார்: "சட்டத்தைப் பின்பற்றியதாக கருதிய CIA அதிகாரிகள் மீது விசாரணை இல்லை என்று ஜனாதிபதி கூறிவிட்டார். இக்கொள்கைகளை கொள்கைகள் என இயற்றியவர்களுக்கும் விசாரணையில் இருந்து மன்னிப்பு வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?" சித்திரவதை பற்றிய குறிப்புக்களை வெளியிட்ட நேரத்தில் ஜனாதிபதி அதை செய்தவர்கள் மீது விசாரணை கூடாது என்று விதித்த தடை பற்றிய முடிவு எளிதல்ல என்பது போல் வெள்ளை மாளிகை உதவியாளர் ஆரம்பத்தில் விடையிறுக்க தயங்கினார். "தங்களுக்கு கிடைத்த அறிவுரைப்படி தாங்கள் சரியெனப்பட்டதைத்தான் அவர்கள் செய்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி நம்பினார்" என்றார் அவர். "கொள்கை இயற்றியவர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்" என்று ஸ்டீபனோபோலஸ் மீண்டும் வினவினார். எமானுவல் விடையிருத்தார்: "ஆம். கொள்கையை இயற்றியவர்கள், அவர்களும் விசாரணைக்கு உட்படவேண்டியதில்லை என்று அவர் நம்புகிறார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளபடி அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாம்; மக்கள் முழு அறிக்கையையும் பார்க்க வேணடும், கடிதம், அறிக்கை மட்டும் இல்லை, அந்த இரண்டாம் பத்தியையும். "இது ஒன்றும் பழிவாங்குதலுக்கான நேரம் இல்லை. இது சிந்தனைக்கான நேரம். நம்முடைய ஆற்றலையும் நேரத்தையும் முன்பு நடந்ததை கோபத்துடனும், பழிவாங்குதலுடனும் பார்க்கக்கூடாது." அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் பாரிய அழுத்தத்திற்கு ஒபாமா கீழ்ப்பணிந்தார் என்பதைத்தான் எமானுவலின் கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. பிரிட்டிஷ் செய்தித்தாளான Independent நான்கு கடந்தகால CIA இயக்குனர்கள், ஜனநாயகக் கட்சியினரான ஜோன் டொச், ஜோர்ஜ் ரெனட் உட்பட, குடியரசுக் கட்சி போர்ட்டர் கோஸ், தளபதி மைக்கல் ஹேடன் ஆகியோர் சித்திரவதை பற்றி எவ்வித குற்ற விசாரணையும் கூடாது என்றும் சித்திரவதைக் குறிப்புக்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் வெள்ளை மாளிகைமீது கடுமையான அழுத்தம் கொடுத்ததாக எழுதியுள்ளது. இக்குறிப்புக்கள் வெளியிடப்படுவது பற்றியும் ஹேடன் தொடர்ந்து எதிர்த்தார். ஒரு முன்னாள் CIA தலைவர், ஓய்வு பெற்ற தளபதியாக இருந்தாலும், முன்னோடியில்லாத வகையில் இதற்காக அவர் பொதுப் பிரச்சாரம் செய்தார். அவரும் முன்னாள் தலைமை அரச வக்கீலான மைக்கேல் முகசேயும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெள்ளியன்று தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் கட்டுரை எழுதினர்; ஹேடன் "Fox News Sunday"ல் தோன்றி அமெரிக்கத் தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஒபாமா நடந்து கொண்டார் என்று கண்டித்து, குறிப்புக்கள் பகிரங்கமாவது பயங்கரவாதிகளுக்கு உதவும் என்றும் கூறினார். CIA முகவர்களை பொறுப்பில் இருந்து அகற்றிய தன் அறிக்கையில் ஒபாமா இரகசிய விசாரணைகள் பற்றி அமெரிக்காவில் "குழப்பமான ஒற்றுமையின்மை" உள்ளது பற்றி தான் அறிந்துள்ளதாகக் கூறினார். சித்திரவதைக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த இகழ்ச்சியை பற்றி அவர் குறிப்பிடவில்லை. மாறாக CIA மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தங்கள் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவது பற்றி வெளியிட்ட கசப்பான கருத்துக்களையும் பொறுப்பு கூற வேண்டும் என்பதற்கு அவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பையும்தான் குறிப்பிட்டார்.ஒபாமாவின் முடிவான சித்திரவதைக்கான பொறுப்பு உடையவர்கள்மீது விசாரணை அல்லது குற்றச் சாட்டு தேவையில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அத்தகைய நடவடிக்கை அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை பெரிதுபடுத்தி அரசியல் உறுதித்தன்மையையும் அச்சுறுத்தக்கூடும், அவருடைய அரசாங்கத்தின் பாதுகாப்பையை குலைக்கக்கூடும் என்ற அச்சத்தைக் கொண்டிருந்தது. பாதுகாப்பு அமைப்புகளை பொறுத்தவரையில் ஒபாமா மிகவும் நிதானத்துடன் செயல்பட்டுள்ளார். ரோபர்ட் கேட்ஸை பாதுகாப்பு மந்திரியாக தக்க வைத்துக் கொண்டதுடன், புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நியமித்த தளபதிகளையும் தக்க வைத்துக்கொண்டு, இராணுவ அதிகாரிகள், நிலைத்த உளவுத்துறை முகவர்களை முக்கிய பாதுகாப்பு பதவிகளில் இருத்தினார் (CIA இயக்குனராக இருந்த, முன்னாள் ஜனநாயகக் கட்சி சார்பில் காங்கிரசில் இருந்த Leon Panetta பாதுகாப்புநிறுவனத்தின் அரசியல் தன்மையைக் கட்டமைக்க முற்படுகிறார் எனக் கூறப்படும் விதத்தில் பெயரளவிலான தலைவராக இருக்கிறார்; அதே நேரத்தில் 30 ஆண்டுகள் CIA அனுபவம் உடைய துணை இயக்குனரான Stephen Kappes அன்றாட நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளுகிறார்.) வெள்ளை மாளிகையின் இறுதி முடிவு போர்க் குற்றங்கள் பற்றிய சான்றுகளை பகிரங்கமாக்கி அதே நேரத்தில் குற்றங்களை செய்தவர்கள் அல்லது அவற்றிற்கு உத்தரவிட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது எனக் கூறுதலாகும். இது சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறுதல் என்பதே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சித்திரவதை பற்றிய சிறப்பு அலுவலர் மன்பிரட் நோவாக் உடைய கருத்து ஆகும். ஆஸ்திரிய செய்தித்தாள் Der Standard க்கு கொடுத்த பேட்டியில் நேவாக் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் படி நீரில்மூழ்கடித்தல் போன்றவற்றை செய்பவர்கள் சித்திரவதை செய்வதாகத்தான் எங்கும் கருதப்படுகின்றனர் என்று சுட்டிக் காட்டினார். "சித்திரவதைக்கு எதிராக உள்ள ஐ.நா. சாசனத்தின் பகுதியாக மற்ற நாடுகளைப் போல் அமெரிக்காவும் உள்ளது; நீதிமன்றத்தில் உறுதியான சான்றுகள் இருக்குமானால் சித்திரவதை செய்தவர்கள் அனைவர் மீதும் குற்ற நடவடிக்கைகள் எடுக்க கடமைப்பட்டுள்ளது." என்று செய்தித் தாளிடம் அவர் கூறினார். CIA சித்திரவதை செய்தவர்கள் அமெரிக்க அரசாங்கத்தில் சட்ட ஆலோசனை, உத்தரவுகளை நம்பியிருந்தனர் என்ற ஒபாமாவின் மன்னிப்பு, ஒரு குறைப்புக் காரணியே அன்றி முற்றிலும் ஒதுக்கிவிடும் அடிப்படையை கொண்டிருக்கவில்லை என்று நோவாக் கூறினார். "ஒரு உத்தரவை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதால் உங்களுக்கு பொறுப்பு இல்லை என்று போய்விடாது." என்றார் அவர். ஒரு முறையான ஜனாதிபதி மன்னிப்புக் கொடுத்தல் அல்லது காங்கிரசில் சட்டபூர்வ பொதுமன்னிப்பு இயற்றல் என்பதுதான் ஒபாமாவால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.கடந்த மாதம் ஆஸ்திரிய சட்டப் பேராசிரியரான நோவாக் ஒபாமா நிர்வாகம் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் மீது சித்திரவதை மற்றும் குவாந்தநாமோ, வளைகுடா மற்றும் அபு கிரைப் கைதிகளை கொடுமைப்படுத்தியதற்கு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கைதிகளை சித்திரவதை செய்வதற்கு ரம்ஸ்பெல்ட் உத்தரவிட்டார் என்பதை நிருபிக்க ஐ.நா.விடம் போதுமான ஆவணங்கள் இருப்பதாகவும், இந்தத் தவறு ஒன்றும் தாங்களே நினைத்ததை செய்த ஒரு சில படையினரின் செயல் அல்ல என்றும் அவர் கூறினார். மனித உரிமைகள் குழுக்களின் விமர்சனங்கள் குடியியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் CIA சித்திரவதைக்காரர்களை ஒபாமா மன்னித்துவிட்டது பற்றி கண்டித்துள்ளன. சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International) பிரதிநிதியான ரொம் பார்க்கர் BBC இடம் "இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, குற்றங்கள் செய்யப்பட்டன என்பதாகும்'', "இவை குற்றம் சார்ந்த செயல்கள் ஆகும். அமெரிக்க சட்டத்தின்படி சித்திரவதை சட்டவிரோதமானது. சர்வதேச சட்டத்தின்படியும் அது சட்டவிரோதமானது. இத்தகைய செயல்களைப் புரிந்த நபர்கள் மீது குற்ற விசாரணை நடத்தவேண்டியது அமெரிக்காவின் சர்வதேசக் கடமை ஆகும்." என கூறினார். சர்வதேச மன்னிப்புச்சபையின் அமெரிக்கக் கிளை ஒபாமாவின் முடிவை "அமெரிக்கத் தலைமை அரச வக்கீல் எரிக் ஹோல்டரே ஒப்புக் கொண்டபடி சித்திரவதையில் தொடர்புடைய தனி நபர்களுக்கு 'சிறையில் இருந்து வெளியேறுக' என்ற தடையற்ற முடிவைக் கொடுத்துள்ளதாக" கண்டித்துள்ளது. அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையத்தின் (Center for Constitutional Rights) அறிக்கை ஒன்று கூறுகிறது: "நீரில் மூழ்கடித்தல் போன்றவற்றை செய்த CIA முகவர்கள் மன்னிப்பை உத்தரவாதமாக பெற்றாலும், பெறாவிட்டாலும், உயர்மட்ட அதிகாரிகள்தான் இக்கொள்கையை இயற்றி, நியாயப்படுத்தி சித்திரவதைத் திட்டத்திற்கு உத்தரவிட்டனர். இவர்கள்தான் உள்நாட்டு, சர்வதேசச் சட்டங்களை முறித்ததற்குப் பொறுப்பு ஆவர். அவர்கள்தான் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்." அமெரிக்க குடியுரிமை சுதந்திர இயக்கத்தின் (American Civil Liberties Union) நிர்வாக இயக்குனரான அன்டனி ரோமேரோ (இவர் பதிவு செய்த வழக்குத்தான் ஒபாமாவை சித்திரவதை குறிப்புக்களை வெளியிடும் முடிவை மேற்கொள்ளச் செய்தது) CIA சித்திரவதை செய்தவர்களுக்கு விசாரணைத் தடை என்பது "இருகட்சி கருத்துக்கள், அரசியல் நோக்கங்கள்" ஆகியவற்றின் விடையிறுப்பு ஆகும் என்றார். "முன்னோக்கி பார்ப்போம்" என்ற ஒபாமா வார்த்தைகளை மறுத்து அவர் "ஒரு நாடு என்ற முறையில் முன்னேற்றத்தை காண்பதற்கு சற்று பின்னோக்கியும் பார்க்கவேண்டும். குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்றால் அமெரிக்க சட்ட முறை அவற்றிற்கு பொறுப்பு கூறவேண்டும் என்று கூறியுள்ளது." எனக்கூறினார் இத்தகைய விமர்சனங்கள் அமெரிக்க செய்தி ஊடகத்தில் மிகக்குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. நான்கு தொலைக்காட்சி இணையங்களிலும் ஞாயிறு உரையாடல்கள் சித்திரவதை குறிப்புக்களை ஒபாமா வெளியிட்டது புத்திசாதுரியமானதா என்ற விவாதத்தைத்தான் வரம்பாகக் கொண்டிருந்தன. முன்னாள் புஷ் நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடியரசு சட்டமன்றத் தலைவர்கள் கருத்தான வலதுசாரித் தாக்குதல்களாத்தான் இது எடுத்துக்காட்டியது. ஒபாமாவின் கொள்கையான சித்திரவதை செய்தவர்களுக்கு பொது மன்னிப்பு என்பதை எதிர்த்த ஒரு பேச்சாளர் கூட நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. ஒபாமா முடிவு பற்றி ஆரம்ப செய்தித் தகவல் கொடுத்தது போல், CIA கைதிகள் நடத்தப்பட்ட முறை பற்றி "சித்தரவதை" என்ற சொல் பயன்படுத்தப்படுதல்கூட பகுதி உத்தியோகபூர்வ தடைக்கு உட்பட்டிருந்தது போல் தோன்றியது. ஆனால் சித்திரவதைத் திட்டத்திற்கு மக்கள் ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது; அதே போல் ஒபாமாவின் முடிவான அவற்றிற்குப் பொறுப்பானவர்களுக்கு பாதுகாப்பு என்பது பற்றியும் எதிர்ப்பு உள்ளது. பல முக்கியமான தனி நபர்கள் நியூ யோர்க் டைம்ஸில் வெள்ளியன்று ஒபாமா முடிவு பற்றி விமர்சித்து கடிதம் எழுதியுள்ளனர். 9/11 தாக்குதல்கள் தயாரிப்பு மூடி மறைத்தலை FBI செய்தது பற்றி அம்பலப்படுத்த உதவிய ஒரு ஓய்வுபெற்ற FBI முகவரான கொலீன் ரோலே: "CIA செயலர்களை கூட்டாட்சி அல்லது சர்வதேச சட்டங்களை மீறியதற்கு பொறுப்பு கூற வைத்தல் என்பது பழிவாங்குதல் என்றால் சாதாரண குற்றங்களுக்கு குடிமக்கள்மீது விசாரணை நடத்துவதும் பழிவாங்குதல்தான். ஒரு குற்றச் சாட்டு எவர்மீது வைக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி விருப்புரிமையுடன் செயல்படும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது...." என எழுதினார். நீதித்துறையில் குடியுரிமை வக்கீலாக பல காலமாக இருக்கும் ஜோன் எஸ். கொப்பெல், "என்னுடைய சொந்தக் கருத்து ஒபாமா சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுத்த அல்லது வசதியளித்த உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு கொடுத்திருக்கக்கூடாது. சித்திரவதையை பயன்படுத்துதல் என்பது வெறும் அறநெறிக் கோட்பாடு மீறல் மட்டும் அல்ல. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றமும் ஆகும்..." என்றார். அமெரிக்க மருத்துவ அமைப்பின் (American Medical Association) அறக்கட்டளையாளர்கள் குழுவிற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெபக்கா ஜே. பாட்சின், CIA "சுகாதார அதிகாரிகளை சித்திரவதைக்குப் பயன்படுத்தியது" அமெரிக்க மருத்துவ அமைப்பின் மருத்துவ நெறிகளைத் தெளிவாக மீறிய செயல் என்றார். "இதைத்தவிர, மருத்துவர்கள் சித்திரவதை பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு உதவ, ஆதரவளிக்க வேண்டும், சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க முயல வேண்டும் மற்றும் எவ்வித சித்திரவதை, கட்டாய விசாரணையைப் பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும்." என எழுதினார். இவை அனைத்தும் டைம்ஸும் மற்ற செய்தித்தாள்களும் பெறும் வெள்ளமென வந்துள்ள கடிதங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் தெளிவான உதாரணங்கள்; அவை புஷ் நிர்வாகத்தின் சித்திரவதைக் கொள்கைகளை மூடிமறைக்க முற்பட்டுள்ள ஒபாமாவின் முடிவை எதிர்க்கின்றன. டைம்ஸே ஞாயிறன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது; அதில் புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், துணை ஜனாதிபதி டிக் சென்னி, முன்னாள் பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரெம்ஸ்பெல்ட் மற்றும் முன்னாள் தலைமை அரச வக்கீல் ஆல்பெர்ட்டோ கோன்ஸேல்ஸ் ஆகியோர் உறுதிப் பிரமாணத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சித்திரவதை குறிப்புக்கள் தயாரித்தவர்களில் ஒருவரும் இப்பொழுது கூட்டாட்சி முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜே பைபியை குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் தலையங்கம் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பற்றி மெளனமாக உள்ளது. நிர்வாகப் பிரிவின் தலைவர், தலைமைத் தளபதி என்ற முறையில் அவர்தான் இறுதி சட்டப் பொறுப்பை அவர் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் ஏற்கிறார். இந்த தவிர்ப்பு அமெரிக்க தாராளவாதத்தின் அரசியல் கோழைத்தனத்தைத்தான் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதில் அமெரிக்க இராணுவம்/உளவுத்துறை ஆகியவற்றின் அதிகாரத்தைக் கண்டு நடுங்கும் ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் செய்தி ஊடகமும் அடங்கும். ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவுடனும், செய்தி ஊடகத்தின் ஒப்புதல் உடந்தையுடனும் நடத்த ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஒரு முக்கிய அரசியல் உண்மையை நிரூபிக்கின்றன. அதாவது அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவிலும் ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டவில்லை என்பதே அது. ஒபாமா நிர்வாகம் அமெரிக்க சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் இருக்கும் பில்லியனர்கள் இன்னும் பல மில்லியனர்கள் அடுக்கின் பாதுகாப்பு பற்றித்தான் கவனம் காட்டுகிறது. இந்த சமூகத் திட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் பொருந்தி வராது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, தலைமை பங்கை அடித்தளமாகக் கொண்டுதான் வளர்ச்சி அடையமுடியும். அவர்கள்தான் ஒருநேரத்தில் சர்வாதிகாரங்களுடனும் பாசிசத்துடனம் தொடர்பு கொண்ட சித்திரவதை, இரகசிய சிறைகள் மற்றும் ஏராளமான குற்றங்கள் இப்பொழுது அமெரிக்காவுடன் அடையாளம் காணப்படுவதைக் கண்டு கொதித்துப் போயிருக்கும் பல மில்லியன் கணக்கான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளைத் திரட்டி வெளிப்படுத்த முடியும். |