World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை இலங்கை சோ.ச.க. கொழும்பின் வறிய புறநகர் பகுதியில் பிரச்சாரம் செய்தது By Vilani Peiris ஏப்பிரல் 25 இல் நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) குழுவொன்று, கடந்த வாரம் கொழும்பு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியான ஜிந்துப்பிட்டிக்கு சென்றது. இந்தப் பிரதேசம் நூற்றுக்கணக்கான சிறிய, ஒற்றை அறை கொண்ட வீடுகளால் சூழப்பட்டிருந்தது. அவற்றில் பல 1948ல் சுதந்திரத்துக்கு முன்னர் கட்டப்பட்டிருந்ததோடு அதன் பின்னர் அபிவிருத்தி செய்யப்படாதவையாக இருந்தன. பல குடியிருப்பாளர்கள் தமிழ் பேசுபவர்களாவர். இந்தப் பிரதேசத்தில் நகரசபை தொழிலாளர்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவின் நிர்வாக மற்றும் வர்த்தக மையமாக பலப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் ஜனத்தொகை துரிதமாக அதிகரித்தது. தீவின் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டது போல், கொழும்பில் தெரு சுத்தப்படுத்தல் மற்றும் சுகாதார வேலைகள் போன்ற கீழ்நிலை பணிகளை செய்வதற்காக தொழிற்திறனற்ற இந்திய புலம்பெயர்ந்தவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். கடந்த நூற்றாண்டு பூராவும், வானளவு உயர்ந்த அலுவலகக் கட்டிடங்களும் பணக்காரர்களுக்கு வீட்டுத் தொகுதிகளும் கட்டப்பட்ட அதே வேளை, ஜிந்துப்பிட்டியில் உள்ள குறுகலான குடிசைகள் பழுதடைந்து வந்துள்ளன. தேசிய முதலாளித்துவத்தின் கீழான சுதந்திரமானது "உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு சதியாகவே" இருக்கும் என 60 ஆண்டுகளுக்கு முன்னரே ட்ரொட்ஸ்கிச இயக்கம் விடுத்த எச்சரிக்கையை இந்த உறுதியான வேறுபாடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஜிந்துப்பிட்டியில் உள்ள ஒற்றை அறை கொண்ட வீடுகளை அடிக்கடி பெரிய குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. குடியிருப்பாளர்கள் பொது மலசலகூடத்தையும் பொது தண்ணீர் குழாய்களையும் பயன்படுத்த வேண்டும். பிரதான வீதிக்கு அருகில் நடைபாதையின் அகலம் ஒரு மீட்டர் மட்டுமே. கொழும்பில் உள்ள உழைக்கும் மக்களுக்கு வீடு மற்றும் வசதிகள் பற்றாக்குறை பொதுவானதாக இருக்கும் அதே வேளை, இந்த வீடுகள் தரமிழந்து போயிருப்பது கூட தெளிவாகவே தமிழர் விரோத பாரபட்சத்தின் உற்பத்தியாகும். 2004 மாநகரசபை ஆய்வறிக்கை ஒன்று, கொழும்பில் வறிய நகர்ப்புற குடியிருப்புப் பகுதிகள் 1,614 இருப்பதாகவும் இங்கு 72,612 குடும்பங்கள் பொது மலசல கூடங்களையும் பொதுத் தண்ணீர் குழாய்களையும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றது. 2007 நவம்பரில் வெளியான அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரை தெரிவிப்பதாவது: "கொழும்பு நகரின் தரம் எச்சரிக்கை செய்கின்றது. இங்கு நகரில் குடியிருக்கும் ஜனத்தொகையில் 51 வீதமானவர்கள் பொருத்தமற்ற குடியிருப்புகளில் வாழ்வதோடு, மரபு ரீதியான பதத்தில் அவை குடிசைகள் அல்லது சேரிகள் என்று அழைக்கப்படுகின்றன." மாதம் 8,000 ரூபா (70 அமெரிக்க டொலர்) வருமானம் பெறும் ஒரு வியாபாரியான ஆர். சரவணன் விளக்கியதாவது: "இந்த வீட்டில் நான் நான்காவது பரம்பரையாக வாழ்கிறேன். இந்த வீட்டின் அளவைப் பாருங்கள் (8க்கு10 அடி). இதுதான் எங்களது படுக்கையறை, வரவேற்பறை மற்றும் சமயலறையும் கூட. இந்த அறையையே நாங்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். எனது அம்மா, பிள்ளைகள் உட்பட எனது குடும்பத்தில் ஆறு பேர் உள்ளோம். இங்கு எப்போதும் காற்றோட்டம் கிடையாது. இந்த நடைபாதையின் இரு பக்கமும் உள்ள வீடுகளும் இதே போன்றவையே. "ஒவ்வொரு தேர்தலின் போதும், பல அரசியல்வாதிகள் வந்து பொருத்தமான வீடு தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். இது எனது தாத்தாவின் காலத்தில் இருந்து நடக்கிறது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை. சுமார் 30 குடும்பங்களுக்கு மூன்று மலசலகூடங்களும் இரு குடி தண்ணீர்க் குழாய்களும் மட்டுமே உள்ளன. நீங்கள் காலையில் வந்தீர்கள் என்றால் மலசலகூடத்தின் முன்னால் நீண்ட வரிசையைக் காண முடியும். வேலைக்குச் செல்ல தயாராவதற்கு நீங்கள் விடியற்காலை சுமார் 4 மணிக்கே எழும்ப வேண்டும." குடியிருப்பாளர்கள் மீதான தொடர்ச்சியான பொலிஸ் அடக்குமுறையை அவர் விளக்கினார். "சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு மாதத்துக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் இராணுவச் சோதனைகளுக்கு உள்ளாகும் காலமாக இருந்தது. பெரும்பாலும் நடு இரவில் எங்களை எழுப்பி வெளியில் எடுத்து வீட்டை சோதனையிடுவார்கள். இப்போதும் கூட அத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன. வடக்கில் யுத்தம் உக்கிரமடையும் நிலையில் இவையும் அதிகரிக்கும். யுத்தத்துக்காக இராணுவம் எப்போதும் எங்கள் மீதே குற்றஞ்சாட்டுகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்தப் பிரேதசத்தில் உள்ள மக்கள் இராணுவத்தால் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் விடுதலையாவதற்கு சிலர் பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டும்," என அவர் கூறினார். சோ.ச.க. குழு, யுத்தம், அதன் வரலாற்று வேர்கள் மற்றும் தீவின் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமையை காக்க எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் இலாயக்கற்றிருப்பது தொடர்பாகவும் சரவணனுடன் நீண்ட கலந்துரையாடலை செய்தது. "நீங்கள் பேசிய பின்னர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அரசாங்கம் யுத்தத்தை முடித்தால், நாட்டில் சுபீட்சம் ஏற்படும், மக்களுக்கு நன்மை ஏற்படும் என பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க முடியாமல் இருக்கும் போது மற்றும் அது அளவு கடந்த செலவில் இராணுவத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் போது அது எப்படி நடக்கும்? இப்போது எங்களுக்குள்ள அற்ப சமூக சலுகைகள் கூட வெட்டித்தள்ளப்படுவதையே இது அர்த்தப்படுத்துகிறது. நாங்கள் எதிர்த்தால் துப்பாக்கிகள் எங்களை நோக்கி திருப்பப்படும். நாங்கள் அதற்குத் தயாராக வேண்டும் மற்றும் இதைத் தீர்ப்பதற்கு ஒரு அரசியல் இயக்கம் தேவை," என அவர் கூறினார். ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளியான எஸ். டீன் தெரிவித்தாவது: "இந்த ஒற்றை அறை வீட்டில் எனது பெற்றோர் 45 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளனர். பெரும் சிரமத்துடன் என்னை அவர்கள் உயர் தரம் வரை படிக்க வைத்தனர். பின்னர் என்னால் அவர்களை கவனிக்க முடியும் என அவர்கள் நினைத்தனர். அவர்களுக்கு இப்போது வயது போய்விட்டது. எனது அப்பாவால் தொடர்ந்தும் வேலை செய்ய முடியாது. அவர்கள் இருவரையும் நான் கவணிக்க வேண்டியிருப்பதோடு எனது தம்பியையும் படிக்க வைக்க வேண்டும். மாதம் 14,000 ரூபா சம்பாதிக்க நான் 12 மணித்தியாலம் வேலை செய்து சமாளிக்கின்றேன். அடிப்படை பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண அதிகரிப்போடு சமாளிப்பது மேலும் மேலும் கடினமாக இருக்கிறது. நான் இன்னும் மணம் முடிக்கவில்லை. நான் தனியான குடும்பமானால் இப்போது நான் செய்வதை என்னால் தொடர்ந்தும் செய்ய முடியாது என்பதை சிந்திக்கிறேன்." யுத்தத்தைப் பற்றி கேட்டபோது, "நீண்ட காலமாக இந்தக் கொழும்பு பிரதேசத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் எந்த மோதலும் இன்றி ஒன்றாக வாழ்கின்றனர். உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாங்கள் எல்லோரும் ஒரே பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். சிங்கள அரசியல்வாதிகளைப் போல் தமிழ் அரசியல்வாதிகளும் ஒரே கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் எங்களை பிரிக்க முனைகின்றனர். "[மேலக மக்கள் முன்னணி தலைவர்] மனோ கனேசன், 'தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என கூறுகிறார். ஆனால் அவர் சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியில் [யூ.என்.பி.] யில் இருக்கின்றார். நான் வாசித்த பத்திரிகை செய்திகளின்படி, அவர் ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் மட்டுமன்றி அவரது சகோதரரும் அமைச்சருமான பெசில் இராஜபக்ஷவுடனும் கூட நல்ல உறவு வைத்துள்ளார். மறு பக்கம் ஹெல உறுமய கட்சி [அதி தீவிரவாத சிங்கள கட்சி] 'சிங்களவர்கள் சிங்கள பெளத்தர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என கூறுகிறது. ஆனால் அவர்கள் தொண்டமான், சந்திரசேகரன், தேவானந்தா மற்றும் புலிகளில் இருந்து பிரிந்து வந்த விநாயகமூர்த்தி முரளீதரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளுடன் அரசாங்கத்தில் உள்ளனர். நீங்கள் கூறியது போல், தொழிலாளர்களும் வறியவர்களும் அவர்களுக்கு எதிராக ஐக்கியப்பட்டுவிடுவோம் என்பதையிட்டு அவர்கள் பீதியடைந்துள்ளனர்," என்றார். இந்தக் கலந்துரையாடலில் ஒரு ஓய்வுபெற்ற தொழிலாளியும் இணைந்துகொண்டார்: "இது ஒரு ஜனநாயகத் தேர்தல் அல்ல. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பொலிஸ் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அண்மையில் ஒரு ஜீப்பில் சாதாரண உடையில் வந்த சிலர், மனோ கனேசனின் பதாகையை கழற்றுமாறு ஒரு கடைக்காரருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். நாங்கள் திரும்பி வரும்போது அந்தப் பதாகை கழற்றப்படாமல் இருந்தால் வாயால் பேச மாட்டோம் என கூறிய அவர்கள் கடைக்காரரைப் பார்த்து ஒரு கைத்துப்பாக்கியை காட்டினார்." அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிமுறைகள் பற்றி அந்த தொழிலாளியிடம் கேட்ட போது, "வடக்கு கிழக்கில் இருந்து வந்த மக்கள் கொழும்பில் வாழ்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பாதுகாப்பு அமைச்சு கோரும் ஆவணங்களை அவர்கள் வைத்திருந்தாலும், தொடர்ந்தும் அவர்களை பொலிசார் தொந்தரவு செய்கின்றனர். அண்மையில் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஒரு யுவதி, தற்காலிகமாக எங்களது பிரதேசத்தில் தங்கியிருந்தார். அவரிடம் கடவுச் சீட்டும் ஏனைய ஆவணங்களும் இருந்த போதும் அவர் கைதுசெய்யப்பட்டார். "அரசியல்வாதிகளதும் பொலிசாரதும் உடந்தையுடன் செயற்படும் சில குண்டர்கள், பணம் கறப்பதற்காக இத்தகைய வேலைகளை செய்கின்றனர். அவர்கள் பணம் கொடுக்க மறுத்தால், அவர்கள் புலி பயங்கரவாதிகள் என இந்தக் குண்டர்கள் பொலிசுக்கு சொல்வார்கள். புலிகளுக்கு முடிவுகட்டினாலும் இது முடிவுக்கு வரும் என நான் நினைக்கவில்லை," எனத் தெரிவித்தார். பெனிட்டா மாரியப்பன் தெரிவித்ததாவது: "எனது கனவர் ஒரு மீன் கடையில் வேலை செய்கின்றார். அவர் ஒரு நாளைக்கு 600 ரூபா சம்பாதிப்பார். ஆனால் மீன் அன்றாடம் வராத நிலையில் அந்தத் தொழில் நிச்சயமற்றது. எனது அப்பாவும் ஒரு தொழிலாளி, மற்றும் எனது தாத்தாவும் ஒரு தொழிலாளி. பல பரம்பரைகளாக இந்தப் பிரதேசத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தாலும், எங்களது வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு முன்றேத்தையும் காணவில்லை. வாழ்க்கை மேலும் தாங்கமுடியாததாகியுள்ளது.'' "அண்மையில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் யுத்தத்துக்காக பெருந்தொகையான பணத்தை செலவிட்டாலும், எங்களது அடிப்படை வசதிகளுக்காக அவர்கள் எந்தவொரு தொகையையும் ஒதுக்குவதிலலை. எனது அனுபவங்கள் நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்துகின்றன. யுத்தத்தை நிறுத்தவும் எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஒரு தொழிலாளர் அரசாங்கம் தேவை." |