World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Support D'Artagnan Collier, Socialist Equality Party candidate for Detroit mayor

டெட்ரோயிட் மேயர் பதவிக்கு,சோசலிசச் சமத்துவக் கட்சி வேட்பாளர் D'Artagnan Collier க்கு ஆதரவு தருக

17 April 2009

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (US) இன்று ஆகஸ்ட் 4 ஆரம்பத் தேர்தல்களில் மிச்சிகனில் உள்ள டெட்ரோயிட் மேயர் பதவிக்கு அதன் வேட்பாளராக D'Artagnan Collier ஐ நிறுத்திவைத்துள்ளதை இன்று அறிவிக்கிறது. மே 12 க்குள் வாக்குச்சீட்டில் பெயர் பதிவிற்கு கொடுக்க வேண்டிய கையெழுத்துக்களை கொலியர் சேகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிரச்சாரத்தில் பங்கு பெறவும் அதைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ளவும், இங்கே அழுத்தவும்.

ஒரு நகரசபை பணியாளரான 40 வயதான கொலியர் வாழ்நாள் முழுவதும் டெட்ரோயிட்டில் வாழ்ந்துவருகின்றார். இவர் 1984ல் சோசலிசச் சமத்துவக் கட்சியின் முன்னோடியான Workers League இல் 16 வயதாக இருக்கும்போது சேர்ந்தார். அவர் முழு வாழ்வையும் சோசலிச இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக கழித்து தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடி வருகிறார். பிரச்சாரத்தை அறிவிக்கும் அவருடைய அறிக்கை பின்வருமாறு:

சோசலிச சமத்துவக் கட்சியின் டெட்ரோயிட் மேயர் பதவிக்கான வேட்பாளர் என்ற முறையில், அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள தேர்தலில் என்னுடைய பெயர் வாக்குச்சீட்டில் பதிவு செய்வதற்கும் உதவுமாறு வலியுறுத்துகிறேன்.

இத்தேர்தல் உலகப் பொருளாதாரம் 1930 பாரிய மந்தநிலைக்கு பின்னரான மிக ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் நுழைந்துள்ள நேரத்தில் நடைபெறுகிறது. உலகத்தில் வேலையின்மை மிக உயர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 600,000த்திற்கு மேற்பட்ட வேலைகள் ஒவ்வொரு மாதமும் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நெருக்கடி ஒன்றும் எங்கிருந்தோ வந்துவிடவில்லை! பல தசாப்தங்கள் நீடித்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைகளின் விளைவுதான் இது. அமெரிக்க நிதிய பிரபுத்துவம் தொழில்துறையை தகர்த்து, வேலைகளையும் ஊதியங்களையும் தாக்கி, அதே நேரத்தில் வெறிபிடித்த ஊகமுறை மூலம் பெரும் செல்வங்களை ஈட்டியுள்ளது. இப்பொழுது இந்த குமிழ்கள் சரிந்துவிட்டன. இதே ஆளும் உயரடுக்கு தனக்கு பிணை எடுப்பதற்கு பொதுப்பணத்தை பயன்படுத்தி, தொழிலாளர்கள் இதற்குக் விலைசெலுத்தவேணடும் என்று கட்டாயப்படுத்துகிறது.

ஒபாமாவின் பிரச்சாரத்தின்போது ஒரு தொடர் வாக்குறுதிகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இவை எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்புவிட்டு "மாற்றத்திற்கான" விருப்பத்தையும் தூண்டின. ஆனால் நிதிய உயரடுக்கின் விசுவாசமான ஊழியர் என்னும் முறையில் ஜனநாயகக் கட்சியும் ஒபாமா நிர்வாகமும் இப்பொழுது வங்கிகளைப் பிணை எடுத்தல், ஊதியக் குறைப்புக்கள், போரில் ஈடுபடுதல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. வோல் ஸ்ட்ரீட்டிற்காக பேசும் ஒபாமா கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் புதிய சுற்று பாரிய ஊதிய, வேலைக் குறைப்புக்களை ஏற்க வேண்டும், அதையொட்டி நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் கோடீஸ்வர்களான தனியார் முதலீட்டாளர்களும் பெரும் இலாபம் அடைய வேண்டும் எனக் கூறுகிறார்.

தொழிலாள வர்க்கம் இதில் தலையிட்டு நெருக்கடிக்கு தன்னுடைய தீர்வைக் முன்வைக்கவேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கில் அடங்கியுள்ளவை பின்வருமாறு:

* டெட்ரோயிட்டை மறுக்கட்டமைக்கவும்! வேலைகளுக்கும் பொதுப் பணிகளுக்கும் பில்லியன்களை ஒதுக்கவும்! பல தசாப்தங்களாக நீடித்த தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்தான் டெட்ரோயிட்டையும், மிச்சிகன் மாநிலத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இப்பொழுது நாட்டின் மிக வறிய, பெருநகரமாக டெட்ரோயிட் உள்ளது. இங்கு உத்தியோகபூர்வ வேலையின்மை 22 சதவிகிதம் என்று உள்ளது. இதற்குக் காரணம் பல தசாப்தங்களாக கார் மற்றும் பிற உற்பத்திப் பிரிவுகளில் வேலைக் குறைப்புக்களாகும். நகரம் திவாலாகிவிட்டது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மேயர் கென்னத் காக்ரெல் ஜூனியர் 1000 நகரசபை ஊழியர்களினை வேலைகளையும் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதுடன், 10 சதவிகித ஊதியக் குறைப்பைச் சுமத்த விரும்புகிறார். பள்ளிக்குழு மற்றும் 53 பள்ளிகளை மூட விரும்புகிறது. கடந்த ஆண்டில் நாட்டில் மிக அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்ட மிச்சிகன் 250,000 வேலைகளை இழந்துவிட்டது.

நான் நகரத்தை மறுகட்டமைப்பதற்காக மகத்தான பொதுப் பணித் திட்டத்திற்கு அழைப்பு விடுகிறேன். வேலை தேவையானவர் அனைவருக்கும் வேலைகள் அளிக்கப்படும். பில்லியன் கணக்கில் ஆலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், புதிய மக்கள் போக்குவரத்து வசதி கட்டுதல் ஆகியவை இப்பகுதி முழுவதும் பயன்பட கட்டமைப்பதற்கு செலவழிக்கப்பட வேண்டும்.

*வீடுகள் ஏலத்திற்கு விடப்படுவதை நிறுத்துக! ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியோ வீடுகள் நெருக்கடிக்கு தீர்வு ஏதும் கொடுக்கவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து ஏலத்திற்கு விடப்படுவதும் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் வீடுகள் அடைமானத்தில் நிகரதொகைக் குறைப்பு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேண்டும் என்றும் கோருகிறது. அதே நேரத்தில் எந்தத் தொழிலாளரும் போதிய வெப்பம், மின்விசை, நீர் இல்லாமல் இருக்கக் கூடாது அல்லது அவர்களால் அதற்கான செலவுகளை சமாளிக்கமுடியாததால் ஆபத்தான வழிவகைகள் பயன்படுத்தப்படக்கூடாது. அனைத்து பாவனைவசதிகள் குறைப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுகிறேன். மின்விசை நிறுவனங்களின் பேராசை ஏற்கனவே பல சோகம் ததும்பிய தேவையற்ற மரணங்களைக் கொடுத்துள்ளது.

*வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புக்கள் கொடுத்தது போதும். கிறைஸ்லர், ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களை அச்சுறுத்துதலை நிராகரியுங்கள்! அனைத்து கார்த் தொழிலாளர்களின் ஊதியங்கள், வேலைகளை பாதுகாக்கவும்! வாஷிங்டன் அரசியல்வாதிகளும் அவர்களுடைய செய்தி ஊடக உடந்தையாளர்களும் சமூக நலத்திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல், கார்த்தொழிலாளர்கள் வேலைகுறைப்புக்கள் மற்ற இழப்புக்களை கட்டாயமாக எதிர்கொள்கையில் வங்கி பிணை எடுப்புக்கள் வந்துள்ளன. அனைத்துத் தொழிலாளர்களினதும் வேலை மற்றும் ஊதியங்கள் பாதுகாக்கப்படுவதற்காக ஒரு பரந்த பிரச்சாரத்தை டெட்ரோயிட் மற்றும் நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் ஆரம்பிக்கவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுகின்றது.

* சமூக சமத்துவத்திற்கும் செல்வ மறுபங்கீட்டிற்கும் சோசலிச சமத்துவக் கட்சி குரல் கொடுக்கிறது! நிதிய ஊக முறையில் பில்லியன்களைச் சேகரித்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட அவசர சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எங்கு மோசடியும் குற்றமும் இருந்தனவோ, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

* வங்கிகளையும் பெரு நிறுவனங்களையும் பொது பயன்பாட்டு நிறுவனங்களாக மாற்றவும்! இந்த நிறுவனங்கள், இலாப நோக்கில் நடைபெறுகின்றன. இவை பொருளாதாரத்தை அழித்து அதேநேரத்தில் பில்லியன் கணக்கான பணத்தை செல்வந்தர்களிடம் கொடுத்துள்ளன. இவை தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தொழிலாளர்கள் கார் மற்றும் பிற தொழில் நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூக தேவைக்காக நடத்த வேண்டும்.

* சோசலிசத்திற்கும் தொழிலாள வர்க்க அரசியல் சுதந்திரத்திற்கும்! ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுடன் முறித்துக் கொள்ளவும்! ஒபாமா நிர்வாகத்தை பல தொழிலாளர்களும் மாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் மூன்று மாதங்கள் பதவியில் இருந்தபின், ஒபாமா நிதிய உயரடுக்கிற்குத் தான் முற்றிலும் தாழ்ந்து நிற்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். புஷ்ஷின் வங்கி பிணை எடுப்புக்களை புதிய நிர்வாகம் தொடர்கிறது. ஒபாமா கார்த் தொழிலாளர்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளார். அரசாங்கத்தின் முழு சக்தியையும் தொழிலாளர்களிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளை பெற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார். அதே நேரத்தில் ஈராக் போர் தொடர்வதுடன், ஒபாமா ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானுக்கு எதிராக இராணுவ வன்முறை விரிவாக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

டெட்ரோயிட்டில் ஜனநாயகக் கட்சியினர் தொழிலாளை பிரிப்பதற்கான இனவாத அரசியலை பல தசாப்தங்களாக நடத்தி முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கத்தை தடுக்கின்றனர். இதன் விளைவு என்ன? ஒரு சிறிய கறுப்பின உயரடுக்கு செழித்துள்ளது, அதே நேரத்தில் பெரும்பாலான கறுப்பின தொழிலாளர்களின் சமூகநிலை பெரிதும் வீழ்ச்சியடைந்துவிட்டது. அதே நேரத்தில் புறநகர்ப்பகுதி தொழிலாளர்கள் அதிகரித்துவரும் வீடுகள் ஏல விற்பனையை எதிர்கொண்டு தங்கள் வேலைகளையும் கார்த் தொழிலில் இழக்கின்றனர். டெட்ரோயிட்டின் அனுபவம் இனவாத அரசியலின் திவால்தன்மையை அம்பலப்படுத்தி, கறுப்பினத்தவர், வெள்ளையர், ஹிஸ்பானிக் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் என்று அனைவரும் ஒன்றுபடும் தேவையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்கு போராட வேண்டும் என்றால், அது உறுதியாள தொழிற்சங்கங்களில் இருந்து, ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் உட்பட,

முறித்துக் கொள்ள வேண்டும்; அதன் தலைமை அலுவலகம் டெட்ரோயிட்டில்தான் உள்ளது. பெயருக்கு தொழிற்சங்கங்களாக இருக்கும் இந்த அமைப்புக்கள் பல தசாப்தங்களாக வேலை தகர்ப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு பெருநிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகின்றன. ஜனநாயகக் கட்சியுடன் அவை இணைந்திருப்பது மற்றும் முதலாளித்துவ முறையைக் காப்பது என்பது கார்த் தொழிலாளர்களுக்கும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் பேரழிவைக் கொடுத்துள்ளது. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு சுயாதீனமான முறையில் அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது.

பொருளாதார நெருக்கடி ஒரு தொகை கொள்கைகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இது முழு பொருளாதார, சமூக முறையையே அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது உற்பத்தி சக்திகள் தனியார் உடமையாக இருக்கும் என்பதையும் இலாப நோக்கையும் அடித்தளமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ முறையை அம்பலப்படுத்தியுள்ளது.

டெட்ரோயிட்டை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு தேசிய, சர்வதேச அளவில் முதலாளித்துவ முறைக்கு எதிராக திரட்டாமல் தீர்வு காணப்பட முடியாது. முதலாளித்துவம் ஒரு உலக முறையாகும். அது ஒரு உலக நெருக்கடியின் நடுவே உள்ளது. தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு தங்கள் பொது நலனுக்குப் போராட வேண்டும்.

முதலாளித்துவத்திற்கு மாற்றீடு சோசலிசம் ஆகும்; அதாவது சமூகத் தேவைகளின் நலன்களுக்காக உற்பத்தி சக்திகள் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என்றால் அது சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் அதன் அரசியல் கட்சியை முதலில் கட்டமைக்க வேண்டும்.

என்னுடைய பிரச்சாரம் வாக்குகளை சேகரிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக சமூக சமத்துவமின்மையை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ முறை மற்றும் அதற்காக வாதிடும் தங்களுக்கு மட்டும் என்றில்லாமல் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதிகரித்துவரும் தொழிலாளர் வர்க்கத்தின் சமூகசீற்றத்திற்கு ஒரு உணர்மையான அரசியல் வெளிப்பாட்டைக் காண்பதற்குத்தான்.

தொழிலாள வர்க்கத்தை, தொழிலாளர்களைத் தவிர வேறு எவரும் காப்பாற்றப் போவது இல்லை. ஆலைகள் மூடல், பணி நீக்கங்கள், பள்ளிகள் மூடல், வீடுகள் ஏலத்திற்கு விடப்படல் ஆகிய அனைத்திற்கும் மக்கள் எதிர்ப்பின் ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் நான் ஊக்கும் தருவேன். வர்க்கப் போராட்ட மரபுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். இவற்றில் வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் மற்றும் மகத்தான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை உள்ளன. ஆனால் இப்போராட்டம் ஒரு புதிய அரசியல் பார்வையில் உந்துதல் பெற வேண்டும்; அதன் இலக்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் கட்சியைக் கட்டமைத்தலாகும். அதன் நோக்கம் உலகின் பொருளாதாரத்தை இலாபத்திற்கு என்று இல்லாமல் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிச அடித்தளத்தில் மறுகட்டமைத்திடும் தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்திடல் ஆகும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் சேர்ந்திடுக! சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்திடுக!

சோசலிச சமத்துவக் கட்சியைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுவதற்கு அல்லது டெட்ரோயின் மேயர் பதவி பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு இங்கு அழுத்தவும் செய்யவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved