World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama claims credit for killing Somalis சோமாலியர்களை கொலை செய்ததற்கு ஒபாமா பெருமிதம் அடைகிறார் By Bill Van Auken அமெரிக்க கடற்படை துப்பாக்கிதாரிகளால் ஞாயிறன்று மூன்று சோமாலிய கடற்கொள்ளையரை கொன்றது அமெரிக்க செய்தி ஊடகத்தால் "ஒரு தீர மீட்புச் செயல்", "ஒரு வீர சாகசச் செயல்" என்று பாராட்டப்பட்டுள்ளது. வாடிக்கையான முட்டாள்தனம், மிருகத்தனம் ஆகியவற்றுடன் செய்தி ஊடகம் வன்முறைக்காக இந்த விளைவை பாராட்டி, நீண்ட கால விளைவுகளை பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. இன்னும் முக்கியமாக, ஐந்து நாட்களாக இந்து சமுத்திரத்தில் நடந்த பணய நாடகத்தின் முடிவு ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு ஒரு முக்கியமான கணமாக கருதப்படுவதுதான். ஒரு நெருக்கடியினால் அவர் சோதனைக்கு உட்பட்டார், அவர் தயக்கமின்றி கொல்லத்தயாராக இருப்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று செய்தி ஊடகம் வாதிட்டுள்ளது. இதில் இலக்கானவர்கள் அமெரிக்க கொடியுடைய சரக்குக் கப்பலான Maersk Alabama வைக் கைப்பற்றி பின் கப்பலுடைய தலைமை மாலுமியான ரிச்சர்ட் பிலிப்ஸை கப்பலின் உயிர்காக்கும் படகில் பிணைக்கைதியாக வைக்கும் முயற்சியில் தோல்வியுற்ற பரிதாபத்திற்கு உரிய 16 முதல் 19 வயதான மூன்று சோமாலி கடத்தல்காரர்களாவர். நிகழ்ச்சியின் தன்மை எப்படி இருந்தாலும், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், இது "குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கொலைத்தனமான சக்தியை பயன்படுத்தும்படி புதிய ஜனாதிபதி அளித்துள்ள முதல் உத்தரவு" ஆகும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முடிவின் அரசியல் தன்மை, இந்நிலைமை பற்றி அவர் 17 முறை கலந்து ஆலோசிக்கப்பட்டார் என்றும் இரு முறை இராணுவத்திற்கு கொலை செய்வதற்கான இசைவை கொடுத்தார் என்று இந்நிகழ்விற்கு பின்னர் வெள்ளை மாளிகை உதவியாளர்கள் அறிவித்ததனூடாக கடத்தல் பற்றிய இராணுவத்தின் பதிலளிப்பில் ஜனாதிபதியின் நேரடிப் பங்கினை மிகவும் தெளிவாகின்றது. நிகழ்வுகளைப் பற்றிய இவ்விதக் குறிப்பைத்தான் செய்தி ஊடகம் எதிரொலித்து கடத்தல் முடிவை வன்முறை மூலம் கொண்டு வந்தது வெள்ளை மாளிகைக்கு அரசியல் வெற்றி என்பது போல் காட்டியுள்ளது. அசோசியேட்டட் பிரெஸ், "இந்த நெருக்கடியை ஒபாமா கையாண்டது இவருக்கு முன் பதவியில் இருந்து ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இராணுவத்தை நம்பியதில் எந்த அளவு ஆக்கமாக இருந்தாரோ, அதேபோல்தான் இவரும் இருப்பார் என்பதைக் காட்டுள்ளது." எனக்கூறியது US News & World Report , இந்த நிகழ்வை ஒபாமாவிற்கு "ஒரு வரையறுக்கும் கணம்" என்றும் "புதிய தலைமைத் தளபதி ஒரு நெருக்கடியில் அமெரிக்க வலிமையை நன்கு பயன்படுத்துவார் என்பதைக்காட்டுகிறது" என எழுதியுள்ளது.இந்த நிகழ்ச்சி "ஒபாமாவிற்கு ஒரு ஆரம்ப வெற்றியைக் கொடுத்துள்ளது, இது வெளிநாட்டில் இராணுவ நடவடிக்கைகளை இயக்கும் அவருடைய நம்பிக்கையையும் திறனையும் வலுப்படுத்தும்" என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. "இந்த இரத்தம் சிந்தலானது, ஒரு ஜனநாயகக் கட்சி போர் எதிர்ப்பு வேட்பாளராக பதவிக்கு வந்தவர், தேவையானால் இராணுவ வலிமையைப் பயன்படுத்த விரும்பாமல் அல்லது இயலாமல் இருக்கக்கூடும் என்ற விமர்சனத்தை அடக்கும்." என வாஷிங்கட் போஸ்ட் எழுதியது. மிக மிருகத்தனமாள விடையிறுப்புக்கள் வலதுசாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கப் பக்கத்தில் இருந்தும் வந்துள்ளது. அது கூறியதாவது: "உலகம் முழுவதும் பார்க்கையில், அமெரிக்க கடற்படை கடலில் களிக்கும் கடத்தல்காரர்களால் இழிவடைய முடியாது. கடற்கொள்ளையரை கொல்லுவதற்கு உத்தரவு கொடுத்தபின் காப்டன் பிலிப்ஸ் கொல்லப்பட்டிருந்தால் என சிலரால் திரு. ஒபாமா குறைகூறப்பட்டிருப்பார் (எங்களால் இல்லாவிட்டாலும்)''. வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க நலன்களுக்கு எதிராக எந்த அறைகூவல் வந்தாலும் அவை வன்முறைரீதியாக பதிலளிக்கப்படும் என்ற அரசியல் கட்டாயத்தை மையமாகக் கொண்டிருக்கையில் காப்டனின் உயிர் வெள்ளை மாளிகையினதும் பென்டகனினதும் கணிப்பில் முற்றிலும் இரண்டாம் பட்ச கவனத்தைத்தான் கொண்டிருந்தது. இறுதியில், பூசலை முடிக்க குறிவைத்து சுடுதலைப் பயன்படுத்துதல் என்பது ஒபாமாவின் இரக்கமற்ற தன்மையை பிரதிபலித்தது மட்டும் இன்றி, மிக முக்கியமான வகையில் மிகப் பிற்போக்குத்தன சக்திகளுக்கு அவரை அடிபணிந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவத்திற்கு என்பதையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பொறுப்பற்ற முடிவு இன்னும் பெரும் சோகங்களைத்தான் தொடக்கி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை சோமாலி கடற்கொள்ளையரால் எவரும் கொல்லப்படவில்லை. அவர்கள் தாங்கள் கைப்பற்றிய கப்பல்களில் இருந்து பிணைத் தொகையைத்தான் எதிர்பார்த்திருந்தனர். கொள்ளையர்களே அச்சுறுத்தியபடி அது விரைவில் மாறக்கூடும், அடுத்த அமெரிக்க கப்பலின் இயக்கக் குழு காப்டன் பிலிப்ஸ் போல் அதிருஷ்டத்தை பெறாமல் போகக்கூடும். மேலும் 250 கப்பல் பணியாளர்கள் கொள்ளையர்களால் பணயம்வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஆசியாவில் இருந்து வருபவர்கள். ஒபாமா உத்தரவிட்ட "முடிவான நடவடிக்கை" மூலம் அவர்கள் விதிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்? ஞாயிறு நடவடிக்கையின் தவிர்க்க முடியாத விளைவு இன்னும் பலரின் இறப்புக்களாகத்தான் இருக்கும். திங்களன்று ஒபாமா வெள்ளை மாளிகை சோமாலி கொள்ளைத் திட்டத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கத்தயார் என்று குறிப்பு காட்டியிருந்தார். "இப்பகுதியில் கடற்கொள்ளை அதிகமாவதை நிறுத்த, அந்த இலக்கை அடைய நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்பது பற்றி நான் மிகத் தெளிவாக உள்ளேன்... அவை எழும்போதெல்லாம் அதை எதிர்கொள்ள நாம் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும்." செய்தி ஊடகத் தகவல்கள்படி, சோமாலியாவில் தலையீடு செய்வதற்கு ஏற்கனவே பல காரணங்கள் உள்ளன. பென்டகன் அதிகாரிகளை மேற்கோளிட்டு Bloomberg news திங்களன்று, "அமெரிக்க இராணுவம் கடற்கொள்ளையர்களின் தளங்களின் மீது தாக்குதலை நடத்தப் பரிசீலித்துவருகிறது", "புதிய சோமாலிய அரசாங்கத்திற்கு நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகள் பயிற்சி, அதன் கடற்கரையோர படை இவற்றை வளர்க்க உதவும் திட்டங்களையும் ஆராய்ந்து வருகிறது" என்று எழுதியுள்ளது. மற்றும் ஒரு தலையீட்டு திட்டம் வாஷிங்டன் போஸ்ட்டினால் திங்களன்று வெளிப்படுத்தப்பட்டது. அலபாமா கப்பல் கைப்பற்றப்படுவதற்கு சற்று முன்னதாக வெள்ளை மாளிகை அல்-ஷபாப் அமைப்பின் முகாம்களுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி விவாதித்தது. அந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய போராளி அமைப்பும், 2006ல் இருந்து நாட்டை ஆக்கிரமித்து சமீபத்தில் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட எதியோப்பிய படைகளுடன் மோதுவதில் முக்கிய பங்கை வகித்தன. எத்தியோப்பிய படையெடுப்பும் அதற்கு பிந்தைய மிருகத்தனமான ஆக்கிரமிப்பும் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதுடன், அதில் பங்குகொண்ட அமெரிக்க சிறப்புப் படைகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரின்" ஒரு பகுதியாக சித்தரித்துக் காட்டப்பட்டது. தற்போதைய அமெரிக்க நேரடித்தலையீட்டிற்கான முன்மொழிவுகளை போலவே இந்தப் படையெடுப்பும், சோமாலியாவில் அமெரிக்க நலன்களை நீடித்து, நிலைத்து இருக்கும் என்பதற்கான அடையாளங்களாகும். டிசம்பர் 1992ல் ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ் நிர்வாகம் கிட்டத்தட்ட 30,000 அமெரிக்க துருப்புக்களை சோமாலியாவிற்கு "மனிதாபிமான தலையீடு" என்ற போலிக்காரணத்தை காட்டி அனுப்பி வைத்தது. அதற்கு முன்பு 1970 களில் கடைசிப்பகுதி, 1980கள் வரை தளபதி முகம்மது சியத் பாரேயின் ஊழல் மிகுந்த சர்வாதிகாரத்திற்கு வாஷிங்டன் ஆதரவு கொடுத்தது. இது சோமாலியாவை பனிப்போர் கைப்பொம்மை நாடாக மாற்றி அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு தளத்தையும் அனுமதிக்கச் செய்தது. பனிப்போர் முடிவடைந்த பின், Barre யின் முக்கியத்துவம் வாஷிங்டனுக்கு குறைந்துவிட்டது. அவருடைய ஆட்சி வீழ்ச்சியடைந்துவிட அனுமதிக்கப்பட்டு, நாடு ஒரு பெரும் சமூக பேரழிவு என்று முந்தைய அமெரிக்க கொள்கையால் தயார் செய்யப்பட்ட நிலைக்கு சரிந்தது. இதன் விளைவு சோமாலி மக்கள் பெரும் திகைப்பிற்குட்பட்ட வறுமையில் தள்ளப்பட்டது ஆகும். இதற்கிடையில் ஒரு செயல்படும் அரசாங்கம் இல்லாத நிலையால் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டின் கடலோரப் பகுதியைப் பயன்படுத்த தொடங்கி, சோமாலியின் கடலோர நீர்ப்பகுதி நச்சுப் பொருட்களை கொட்டும் இடமாகவும், கதிரியக்க எச்சங்களைத் தள்ளும் இடமாகவும் மாறின. அதே நேரத்தில் வெளிநாட்டு மீன்பிடிக்கும் அமைப்புக்கள் அதன் நீர்ப்பகுதியில் ஆக்கிரமிப்பை கொண்டன. இந்தச் சூழ்நிலையில்தான் கடற்கொள்ளை செழிப்பு அடைந்தது. சோமாலியாவின் மூலோபாய முக்கியத்துவம் வெளிப்படையானது. ஆபிரிக்க கண்டத்திலேயே மிக நீளமான கடலோரைப் பகுதியை இந்நாடு கொண்டுள்ளதுடன், உலகின் கடல்வழி எண்ணெய் பாதைகளில் கிட்டத்தட்ட 12 சதவிகித பாதைகள் இதன் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. இந்த நீரில் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாடு என்பது அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அதன் முக்கிய போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கருவியைக் கொடுக்கும். மேலும் சோமாலியாவே புதிய எண்ணெய் இருப்புக்கள் உள்ள நாடாக கருதப்படுகின்றது. Barre ன் கீழ் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்கள் நாட்டில் பெரும் சலுகைகளை பெற்றவிதத்தில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை இப்பொழுது சீனாவில் இருந்து போட்டியை எதிர்நோக்குகின்றன; அந்நாடு தன்னுடைய பெருகிவரும் எரிபொருள் தேவைகளை ஆபிரிக்க எண்ணெய் மூலம் தீர்க்கப் பார்க்கிறது. இந்த பிணை எடுப்பு நாடகத்தின் அடித்தளத்தில் மற்றொரு அமெரிக்க ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தல் உள்ளது. ஒபாமாவிற்கு அரசியல் வெற்றி எனப் பாராட்டப்படுவது, உண்மையில் வலதுபக்கத்திற்கான ஒரு வன்முறை திருப்பத்தின் ஒரு பகுதியாகும். அது இறுதியில் கூடுதலான புதிய இறப்புக்கள், அழிவுகளைத்தான் ஏற்படுத்தும். |