World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா பிரிட்டன்: இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் போரை எதிர்த்து பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் By Robert Stevens சனிக்கிழமையன்று லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100,000 க்கும் மேலானவர் பங்கு பெற்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகாரப் போருக்கு முற்றுப் புள்ளி வைத்து உடனடியாக போரை நிறுத்தத்தை செயல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற தொடர்ச்சியான எதிர்ப்புக்களின் ஒரு பகுதிதான் இந்த அணிதிரளலாகும். இதில் முக்கியமாக தமிழ் புலம்பெயர்ந்தோர் கலந்துகொண்துடன், எதிர்ப்புக்களில் பாராளுமன்ற முற்றுகை, உண்ணாவிரதம் ஆகியவையும் இருந்தன. ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கொடுத்த அமைப்புக்களில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பும் (SAGT) மற்றும் பிரித்தானிய தமிழர் அமைப்பும் (British Tamil Forum) இருந்தன. ஏப்ரல் 6ம் தேதி லண்டன் எதிர்ப்புக்கள் தொடங்கின. பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே முன்னறிவிப்பு இல்லாத ஆர்ப்பாட்டத்தில் "இனப்படுகொலையை நிறுத்துக", "போரை நிறுத்துக" என்ற கோஷங்களுடன் கூடி, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தனர். மெட்ரோபோலிடன் போலீஸ் இவ்வார்ப்பாட்டம் சட்டவிரோதம் என்று அறிவித்து கூட்டத்தை சுற்றிவளைத்தது. ஒரு ஆர்ப்பாட்டக்காரர் தேம்ஸ் நதியில் குதித்தார்; அவரை அவசரப் பணிகள் பிரிவு காப்பாற்றியது. அன்று மாலை குழந்தைகள், குடும்பங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் பாராளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்துவிட்டனர். மறுநாள் காலை 6.30 மணிக்கு போலீஸ், ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற சதுக்கத்தில் அகற்றப்பட்டுவிடும் என்று கூறியது. பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கை கால்கள் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். போலீசார் பல முறை சதுக்கத்திற்கு சென்று கொண்டிருப்பவர்கள் மீதும் தடியடி நடத்தினர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தாக்குதலில் தீவிரமாகக் காயமடைந்தனர். ஒரு 18 வயது ஆர்ப்பாட்டக்காரரான கவிதா சத்யமூர்த்தி கார்டியன் செய்தித்தாளிடம் போலீஸ் ஆர்ப்பாட்டத்தின்மீது நடத்திய தாக்குதலில் தான் கூட்டத்திற்குள் விழ நேரிட்டது என்று கூறினார். "நான் கீழே தள்ளப்பட்டிருந்தபோது, இருவர் என்மீது விழுந்ததில் எனக்கு மூச்சுத் திணறியது. என்னால் மூச்சு விடமுடியவில்லை. ஒரு சில வினாடிகளுக்கு பின்னர் போலீஸார் என்னை இழுத்துசென்றர். என்னுடைய பாதங்களைப் பற்றி நான் இழுக்கப்பட்டேன். என்னுடைய முதுகில் உராய்வுகள் ஏற்பட்டு, என்னுடைய பின்தலையும் வீங்கியது. அவர்கள் அதைப்பற்றிப் பொருட்படுத்தவில்லை. விரைவில் இரு போலீசார் என்னுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக திருப்பி அதிக வன்முறையுடன் முதுகுப்பக்கம் வளைத்தனர்." "சிறிது நேரத்தில் நான் மயங்கித் தரையில் விழுந்துவிட்டேன்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்; அதன் பின் போலீசார் முதலுதவி வண்டி ஒன்றை வரவழைத்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பினர். தான் போக மறுத்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில்தான் தொடர்ந்து இருக்க விரும்பியதாகவும் அவர் கூறினார். போலீசாரால் காயமுற்ற இந்து ரூபராஜா என்னும் மற்றொரு பெண்மணி ஒரு மருத்துவ மாணவி ஆவார். அவர் ''போலீஸ் கலகப் பிரிவு வரும் வரை ஆர்ப்பாட்டம் அமைதியாக இருந்தது" என்றார். "நான் உடல்ரீதியாக காயப்படுத்தப்பட்டேன். ஒரு ஆண் அதிகாரி என்னைத் தரையில் தூக்கி எறிந்தார். நான் தரையில் விழுந்தேன். இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. அங்கிருந்த பலருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது" என்று அவர் கூறினார். மேலும் ஒரு எதிர்ப்பாளர் "இதய நோய்வாய்ப்பட்டார்; மற்றொருவர் முதுகெலும்பு முறிந்தது, ஒரு குழந்தை பெரும் காயமுற்றது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது" என்று அவர் கூறினார். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த மருத்துவ உதவிக்காக ஸ்ட்ரெச்சர்களில் எடுத்துச் செல்லப்பட்டதை BBC உறுதிபடுத்தியது. செவ்வாய் மாலைக்குள் போலீசார் 6 பேரைக் கைது செய்தனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தியதற்காக காவலில் வைக்கப்பட்ட இருவரும் அடங்குவர். பிரிட்டனின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு ஆகும். இப்படி வாரம் முழுவதும் நடைபெற்ற செயற்பாடுகள் சனியன்று பெரும் ஆர்ப்பாட்டத்தில் உச்சக்கட்டம் அடைந்தன. இங்கிலாந்தில் வாழும் 250,000 தமிழ் மக்களால் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் போருக்கு எதிரான நியாயமான சீற்றம் எடுத்துக்காட்டப்பட்டது. கடந்த வாரம், புதுக்குடியிருப்பு என்னும் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கடைசி சிறுநகரத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. கிட்டத்தட்ட 100,000 குடிமக்கள் இங்கு அரசாங்கம் அறிவித்துள்ள "யுத்த சூனியப் பகுதியில்" அகப்பட்டுள்ளனர். உதவி அளிக்கும் நிறுவங்கள் இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர் என்றும் இந்த இடம் 20 சதுர கி.மீ.தான் உள்ளது என்றும், இறப்பிற்குக் காரணம் குண்டுவீச்சு மற்றும் மிகக் கடுமையான வகையில் உணவு, உறைவிடம், மருந்துகள் பற்றாக்குறை இருப்பதுதான் என்றும் கூறப்படுகிறது. தங்கள் பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு இராணுவ நடவடிக்கையினால் இறந்தனர் என்பது பற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்; இப்பொழுது அங்கு அகப்பட்டுக் கொண்டுள்ளவர்கள் பற்றியும் கவலைப்படுகின்றனர். இந்தவார ஆரம்பத்தில், இரு மாணவ எதிர்ப்பாளர்களான சிவதரசன் சிவகுமாரவேல் மற்றும் பரமேஸ்வரன் சுப்பிரமணியன் ஆகியோர் இலங்கை இராணுவ அட்டூழியங்களை எடுத்துக்காட்டும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். வார இறுதிக்குள் இலங்கை மோதல் பற்றி வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் சிவகுமாரவேல் பங்கு பெற முடியும் என்ற உறுதிமொழி வந்த பின்னர் இந்த இருவரும் நீர் அருந்த உடன்பட்டனர் என்று கூறப்படுகிறது. இந்த உடன்பாடு எதிர்க்கட்சி லிபரல் ஜனநாயக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சைமன் ஹ்யூஜேஸ் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் வந்துள்ளது. அவர் தான் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிக்குழு ஒன்றை ஐக்கிய நாடுகளுக்கு செல்லுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். இப்பேச்சுக்களில் தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதப்படுபவரில் Des Browne என்னும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியும் இலங்கைக்கான பிரதம மந்திரியின் சிறப்பு தூதரும் உள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டைக் காணத் தலையிட வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் கொடுப்பதே பிரித்தானிய தமிழர் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற குழுவுடன் சேர்ந்து இது சமீபத்தில் லண்டனில் ஒரு மாநாட்டை "சர்வதேசப் பங்கு பெறுபவர்களின் செயற்பாடு" பற்றி நடத்தியது. அதில் பலரும் உடன்பாட்டை காண்பதற்கு செய்யவேண்டிய பணி பற்றி, Browne மற்றும் முன்னாள் லார்ட் சான்ஸ்லரான Lord Falconer உம் பேசினர். இருவரும் ஈராக்கின் மீது அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பில் இணைந்துகொள்வதற்கு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். இருந்தபோதிலும்கூட, இலங்கையில் இரு நாடுகள் தீர்வு வேண்டும் என்று கோரும் பிரித்தானிய தமிழ் அமைப்பு பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளும், குறிப்பாக இலங்கையின் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரிட்டன் ஊடாக "சமாதானமும் கெளரவம் உடைய நீதியும்" அடையப்பட முடியும் என்ற கட்டுக்கதையையே தொடருகின்றது. தன்னுடைய பங்கிற்கு பிரெளன் போர்நிறுத்தத்திற்கு ஆதரவு மற்றும் வடங்கு இலங்கையில் மனிதாபிமான சீர்குலைவான நிகழ்வுகள் பற்றி வெற்றுத்தன அறிக்கைகள் விடுவதுடன் நிறுத்திக் கொண்டார். அதே நேரத்தில் வார இறுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ''மனிதாபிமான நடவடிக்கைக்கான'' கப்பல் ஒன்றில் மனிதாபிமான உதவிகள் பிரித்தானிய கரையில் இருந்து வட இலங்கைக்கு அனுப்பப்படுவதை நிறுத்திவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது. பல நன்கொடை நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள், மருந்துகள் என்ற வழங்கியவற்றை எடுத்துச் செல்லவிருந்த கப்பல் இலங்கை அரசாங்கம் எதிர்ப்புக்களை தெரிவித்தை அடுத்து பயணிப்பது தடுக்கப்பட்டுவிட்டது. |